TNPSC Thervupettagam

நிஜமும் கற்பனையும்

January 27 , 2024 178 days 191 0
  • ஒருவர் தன்னுடைய நண்பருடன் ரயில்நிலைய நடைமேடையில் நின்று பேசிக் கொண்டிருந்தார். ரயில் கிளம்ப இன்னும் ஐந்து நிமிடங்கள் உள்ளன என அவர் நினைத்துக் கொண்டிருக்க, பச்சை விளக்கு மிளிர்கிறது.
  • சட்டென்று ரயில் கிளம்புகிறது. உடனே பதற்றத்துடன் அவசரமாக ஓடி ரயிலில் ஏறுகிறார். அவருக்குப் படபடப்பாகிவிட்டது. உடலெல்லாம் நடுங்கியது. ரயில் கொஞ்சம் வேகம் பிடித்தவுடன் ஆசுவாசப் படுத்திக்கொண்டார். தான் ரயில் நிலையத்துக்கு வந்தது பயணிக்க அல்ல நண்பரை வழியனுப்ப என்று அவருக்குப் பின்புதான் நினைவுக்கு வருகிறது.
  • பதறாத செயல் சிதறாது’, ‘பதற்றத்தில் அவசர மாகக் கையை விட்டால் அண்டாவுக்குள்கூட விட முடியாதுஎன்கிற சொலவடைகளைக் கேட்டிருப்பீர்கள். பதற்றம் நமது செயல்களைப் பாழ்பண்ணக்கூடியது. சிந்திக்கும் திறனை வெகுவாகப் பாதிக்கிறது.

பதற்றமும் பயமும்

  • எதற்காகப் பதற்றம் வருகிறது என்பதை அறிவதற்கு முன் பதற்றத்தின் தாயான பயத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். பயமும் பதற்றமும் ஒன்றுதானே என நினைக்கலாம். ஆனால், இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது.
  • இந்தக் கட்டுரையை நிதானமாக நாற்காலியில் சாய்ந்து படித்துக்கொண்டிருக்கிறீர்கள். திடீ ரெனக் காலுக்கு அடியில் ஏதோ ஊர்வது போன்ற உணர்வு. என்னவென்று பார்த்தால் ஒரு பாம்பு. உடனே என்ன செய்வீர்கள்? பதறியடித்துத் துள்ளி எழுந்து ஓடுவீர்கள் அல்லவா? அதுதான் பயம்.
  • ஒருவழியாகப் பாம்பை விரட்டியடித்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். மறுநாள் காலை அதே நாற்காலியில் அமர்ந்து நாளிதழ் படிக்கும்போது பாம்பு வந்துவிடுமோ என்று அடிக்கடி காலைத் தரையில் ஊன்றாமலேயே இருப்போம் அல்லவா? உடலெல்லாம் நடுங்கி படபடப்பாக இருக்கும். நாளிதழ் படிப்பதில் கவனம் செல்லாது. அதுதான் பதற்றம்!
  • பயம் நம் அனைவருக்கும் தேவையான உணர்வு. ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற உதவுவது. ‘அஞ்சுவது அஞ்சாமை பேதமைஎன்று குறள் சொல்வது மிகவும் உண்மை. நாம் பயப்பட வேண்டிய விஷயங்களுக்குப் பயப்பட வேண்டும். பயப்படும்போது நம் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுவதைக் கவனித்துள்ளீர்களா? முதலில் இந்த மாற்றங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்குப் பரிணாம வளர்ச்சிக் கொள்கை உதவுகிறது.

உடல் மாறவில்லை

  • நம் உடல் இன்னும் பரிணாம ரீதியாக ஆதி காலத்து வேட்டை மனிதர்களின் இயல்பிலிருந்து மாறிவிடவில்லை. ஆதி மனிதனுக்கு இரண்டே விஷயங்கள்தாம் முக்கியம். இரை தேடுதல், இரையாகாமல் இருத்தல். அவனது ஒரே பயம் இரையாகாமல் இருப்பது மட்டுமே. அதுவும் புலி துரத்தும் கணங்கள் மட்டுமே. ஆகவே, பயப்படும்போது புலியிடமிருந்து தப்பிக்க உதவ அவனது உடல் எதிர்வினை ஆற்றுகிறது.
  • ஓட அவனுக்கு ஆற்றல் வேண்டும். ஆகவே, தசைகளுக்கு அதிக ரத்த ஓட்டம் வேண்டுமென இதயம் வேகமாகத் துடிக்கும். ஆற்றல் வேண்டும் என ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும். ஆக்ஸிஜன் வேண்டுமென மூச்சு வாங்கும். இவையெல்லாம் அவனுக்கு உதவின. அதுதான் பயம்.

நிஜமும் கற்பனையும்

  • பதற்றம் என்பது நமது மனதின் கற்பனை. எதிர்காலத்தில் ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என யோசித்துக் கவலைப்படுவதால் வருவது. முதல் நாள் நாளிதழ் படிக்கும்போது ஏற்பட்டது பயம். அடுத்த நாள் ஏற்பட்டது பதற்றம். முன்னது நிஜம், பின்னது கற்பனை.
  • பதற்றமும் மனிதனுக்குத் தேவைதான். எதிர்காலத்தில் ஏதேனும் பாதிப்பு வருமோ என யோசித்தால்தான் அந்த ஆபத்துகளைத் தவிர்க்க முடியும். கடந்த கால நிகழ்வுகளை வைத்து எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பது மனித இனத்துக்கே உரிய பண்புதான்.
  • ஆனால், அளவுக்கு மீறினால் அமுதமும் விஷமாகும் என்பதுபோல் அளவுக்கு அதிகமாக எதிர்கால ஆபத்துகளைப் பற்றிக் கற்பனை செய்து பதற்றப்படுவது மனப் பதற்றம் என்னும் பாதிப்பை உருவாக்குகிறது.

மனநலப் பாதிப்பு

  • உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய கிருமிகளிலிருந்து நம்மைப் பாதுகாக்க வேண்டிய எதிர்ப்புச் சக்தியானது அன்றாடம் நாம் எதிர் கொள்ளும் சாதாரண விஷயங்களான தூசி, உணவுப் பொருள்கள் போன்றவற்றுக்குக்கூடக் கடுமையாக எதிர்வினை ஆற்றிவிட்டால் அதுவே நமது ஒவ்வாமை (அலர்ஜி).
  • அதுபோன்றே அச்சுறுத்தக்கூடிய விஷயங்களைத் தவிர்ப்பதற்காக நமக்குள் இருக்கும் பண்புகளில் ஒன்றான அன்றாடம் நடக்கும் சிறு சிறு விஷயங்களுக்கும் அதீதமாக எதிர்வினை ஆற்றியும் நடக்கவே வாய்ப்பில்லாத விஷயங்களைக்கூடக் கற்பனை செய்துகொள்வதும் பதற்றத்தை ஒரு மனநலப் பாதிப்பாக (Anxiety Disorder) மாற்றுகிறது.

அறிகுறிகள்

  • மனப்பதற்றப் பாதிப்பு இருப்பவர்கள் சிறு சிறு விஷயங்களுக்கும் அளவுக்கு அதிகமாகக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பார்கள். ஒரு தொலைபேசி அடித்தால் யாராக இருக்கும் எனப் பதறுவார்கள். சரியான நேரத்துக்குப் போய்விடுவோமா, பேருந்து கிடைக்குமா, அப்படியே கிடைத்தாலும் உட்கார இடம் கிடைக்குமா, எதையாவது மறந்துவிட்டோமா, எல்லாம் சரியாக இருக்கிறதா, நல்ல மதிப்பெண் வருமா என்றெல்லாம் பதற்றப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.
  • மனப்பதற்றம் இருப்பதால் இவர்களுக்கு கவனக் குறைவு அதிகமாக இருக்கும். எப்போதும் எதையோ யோசித்துக்கொண்டே இருப்பதால் கவனமின்மை அதிகமாக இருக்கும்.
  • பதற்றப்படும்போது உடலில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. அட்ரீனலின் என்கிற ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அதனால், இதயம் வேகமாகத் துடிப்பது, ரத்த அழுத்தம் அதிகரிப்பது, சர்க்கரை அளவு கூடுவது போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன.
  • பல நேரம் பதற்றத்தால் வரும் மூச்சுத் திணறலை நெஞ்சுவலியால் மாரடைப்பு வந்துவிட்டதாகப் பயந்து மருத்துவமனைக்கு விரைபவர்கள் அதிகம். அவர்களுக்கு இதயப் பரிசோதனைகள் செய்து பார்த்தால் எல்லாம் இயல்பாக இருக்கும். பதற்றத்தைக் குறைப்பதற்கு மட்டும் மருந்துகளைக் கொடுப்பார்கள்.
  • அதே நேரம் நீண்ட நாள் பதற்றம் இருப்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை பாதிப்பால் நிஜமாகவே இதய பாதிப்புகள் ஏற்படும் சாத்தியக்கூறும் அதிகமாக இருக்கிறது.

ஏன் சிலருக்கு மட்டும்

  • மனப்பதற்றத்தால் சிலர் மட்டுமே அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர். மனப்பதற்றத்துக்கு ஒவ்வொருவருடைய உடலில் ஹார்மோன்கள் சுரக்கும் அளவு, அவரது ஆளுமை, சூழல் ஆகிய மூன்றுமே முக்கியப் பங்கு வகிக்கின்றன. இயல்பிலேயே சிலருக்கு உடலில் சில ரசாயன மாற்றங்கள் அதிகமாக இருக்கலாம்.
  • அதேபோல் ஒருவரது ஆளுமை எப்போதும் எதிர்மறையாகச் சிந்திக்கும் வழக்கத்துடன் இருந்தால் அவர்கள் அதிகமாகப் பதற்றத்துக்கு உள்ளாகுவார்கள். ஒருவர் இருக்கும் சூழல் பதற்றமானதாக இருந்தால் (போர்ச் சூழல் , திருமண வாழ்க்கை) மனப்பதற்றப் பாதிப்பு அதிகமாகக் காணப்படும்.

சிகிச்சை முறை

  • மனப்பதற்றத்தின்போது உடலில் ஏற்படும் மாற்றங்களைக் குறைக்கும் மருந்துகள் இருக்கின்றன. ஒருவரது எதிர்மறைச் சிந்தனைகள், செயல்பாடுகளை மாற்றும் உளவியல் சிகிச்சை முறையும் (Cognitive Behaviour Therapy) மனப்பதற்றம் உள்ளவர்களுக்குப் பலனளிக்கும்.
  • மேலும், யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவை மனப்பதற்றத்திலிருந்து விடுபட உதவும். நிஜம் நம்மைக் கொல்வதைவிடக் கற்பனைதான் அதிகமாகக் கொல்லும் எனப் புரிந்துகொண்டாலே மனப்பதற்றம் வெகுவாகக் குறையும்.

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories