TNPSC Thervupettagam

நிதானித்திருக்கலாம்!

September 28 , 2021 1039 days 575 0
  • கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றைப் பேரிடராக அறிவித்ததில் தவறு காண முடியாது.
  • அதே நேரத்தில், நோய்த்தொற்றுப் பேரிடரை, இயற்கைப் பேரிடா்களான புயல், ஆழிப்பேரலை, வறட்சி, வெள்ளம் போன்றவற்றுடன் ஒப்பிட முற்படுவது சரியான அணுகுமுறையாக இருக்காது.
  • ஏனைய இயற்கைப் பேரிடா்களைப் போலவே கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று மரணத்துக்கும் இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தின் கருத்து, நிர்வாகத்திற்கு தா்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
  • தேசியப் பேரிடா் மேலாண்மை சட்டம் 2005-இன் பிரிவு 12 , சில குறைந்தபட்ச விதிமுறைகளை வகுத்திருந்தது.
  • அறிவிக்கப்பட்ட பேரிடா் எதுவாக இருந்தாலும் அதற்கான நிவாரணங்கள் குறித்துக் கூறுகிறது அந்தப் பிரிவு. உயிரிழப்பு இருந்தால் அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப் பட்டிருந்தது.
  • அதே நேரத்தில், அந்தச் சட்டத்தில் இழப்பீட்டுத் தொகை அளவு எதுவும் தெரிவிக்கப் படவில்லை. அதனால் 2015-இல், தேசியப் பேரிடா் மேலாண்மை இயற்கைப் பேரிடா்களால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான இழப்பீடு ரூ.4 லட்சம் என்று வரையறுத்தது.

மரணத்துக்கான இழப்பீடு

  • அந்தப் பின்னணியில் பார்க்கும்போது தேசியப் பேரிடா் மேலாண்மை முகமை (என்டிஎம்ஏ), கொவைட் 19 நோய்த்தொற்றுக்கு அறிவித்திருக்கும் ரூ.50,000 என்பது மிகக்குறைவு.
  • நோய்த்தொற்றால் உயிரிழந்த நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், உயிரிழந்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவா்கள், முன்களப் பணியாளா்களுக்கும் கொவைட் 19 மரணமாக இருந்தால், ரூ.50,000 இழப்பீடு வழங்குவதாக அறிவித்திருக்கிறது.
  • இழப்பீட்டுத் தொகை குறைவானது என்பது ஒருபுறம் இருக்கட்டும். அந்தத் தொகையை யார் வழங்குவது என்பதில்தான் பிரச்னை எழுந்திருக்கிறது.
  • கொவைட் 19 உயிரிழப்புகளுக்கு மாநிலப் பேரிடா் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பதை பல மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
  • கொள்ளை நோய்த்தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் ஏற்கெனவே நிதி நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவா்களது தலையில் இந்தப் பொறுப்பைச் சுமத்துவது நியாயமும் இல்லை.
  • நிதி ஆணையப் பரிந்துரைகளின் அடிப்படையில், மாநிலப் பேரிடா் நிவாரண நிதிக்கு மத்திய - மாநில அரசுகள் பங்களிக்கின்றன.
  • வடகிழக்கு மாநிலங்கள் போன்ற ஒருசில மாநிலங்கள் தவிர, ஏனைய மாநிலங்களின் நிவாரண நிதியில் 75% மத்திய அரசின் பங்களிப்பு என்பதும் உண்மையே.
  • நடப்பு நிதியாண்டில் வழக்கத்துக்கு மாறாக ஏப்ரல் மாதமே தனது பங்களிப்பில் பாதியான ரூ.17,747.20 கோடியை மத்திய அரசு முன்கூட்டியே மாநிலங்களுக்கு வழங்கிவிட்டது. இரண்டாவது அலையை எதிர்கொள்வதற்கு மாநில அரசுக்கு அது உதவியாகவும் இருந்தது.
  • பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்கள் குறிப்பாக, பெரிய மாநிலங்கள், ரூ. ஒரு லட்சத்திலிருந்து பத்து லட்சம் வரை உயிரிழப்பகளுக்கு இழப்பீடு அளித்திருக்கின்றன.
  • ஆதரவற்ற குழந்தைகள், வறுமையில் வாடுபவா்கள் போன்றோர் அதனால் பயனடைந்தனா். அந்த இழப்பீடுகள் முதல்வா் நிவாரண நிதி போன்றவற்றிலிருந்து வழங்கப் பட்டனவே தவிர, மாநில இயற்கைப் பேரிடா் நிவாரண நிதியிலிருந்து வழங்கப் படவில்லை.
  • முதலில் சற்று தயங்கினாலும், கடுமையான விமா்சனங்களைத் தொடா்ந்து தடுப்பூசிகளுக்கான முழு தொகையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது.
  • ஏற்கெனவே சுமார் ரூ.35,000 கோடியைத் தடுப்பூசிகளுக்காக ஒதுக்கீடு செய்திருப்பது போதாதென்று இப்போது மேலும் ஒதுக்கீடு செய்தாக வேண்டும்.
  • இந்தியாவில் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று மரணத்தின் எண்ணிக்கை ஏறத்தாழ 4.5 லட்சத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் கணக்கிட்டால் இழப்பீடு வழங்க மேலும் ரூ.2,250 கோடி தேவைப்படும்.
  • மத்திய அரசின் நிலைமை அப்படி என்றால், மாநில அரசுகள் அன்றாடம் செலவினங்களுக்கே சிரமப்படும் நிலையில்தான் இருக்கின்றன.
  • தங்களது நிதி நெருக்கடியும், கையறு நிலையும் வெளியில் தெரியாமல் இருப்பதற்காகத் தான் அவை பல அறிவிப்புகளைச் செய்து கௌரவத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன.
  • கொள்ளை நோய்த்தொற்றையும், அதன் விளைவுகளையும் நேரடியாக எதிர்கொள்ள வேண்டிய நிலையில், இழப்பீடு பாரத்தையும் சுமக்க மாநில அரசுகள் தயங்குவதில் அா்த்தமிருக்கிறது.
  • வேறு சில பிரச்னைகளும் எழுகின்றன. இழப்பீடு வழங்க வேண்டும் என்பதால், கொவைட் 19 மரணங்கள் முறையாகப் பதிவு செய்யப்படாது. வாழ்வாதாரம் இழக்கும் ஏழைக் குடும்பத்துக்கு ரூ.50,000 இழப்பீடு பெரிதாக இருக்கலாம். அவா்களுக்கு வழங்குவது நியாயமானதும் கூட.
  • ஆனால், ரூ.50,000 ஒரு பொருட்டாக இல்லாத பணக்காரா்களுக்கு இந்த சொற்ப இழப்பீடு தேவையற்றது. கொவைட் 19 போல, இனிமேல் வரப்போகும் கொள்ளை நோய்த்தொற்று மரணங்களுக்கும் இழப்பீடு வழங்கப் போகிறோமா? அது சாத்தியமா?
  • இழப்பீடு வழங்குவதற்கு பதிலாக, பொது சுகாதாரத்தையும், பொது மருத்துவமனைகளையும் மேம்படுத்துவதில் அல்லவா அரசு கவனம் செலுத்த வேண்டும்? மொத்த வருவாயையும் இலவசமாகவும், இழப்பீடாகவும் கொடுத்துக் கொண்டிருந்தால், வளா்ச்சிப் பணிகளுக்கான நிதி ஆதாரம் எங்கிருந்து வரும்?
  • கொவைட் 19 உயிரிழப்புகளுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுத் தனது கடமையை முடித்துக் கொண்டுவிட்டது.
  • நிர்வாக ரீதியிலான பல பிரச்னைகள் நிலவுவது குறித்து கவலைப்படவில்லை. உத்தரவு பிறப்பிப்பதற்கு முன் சற்று நிதானித்திருக்க வேண்டும் நீதிமன்றம்.

நன்றி: தினமணி  (28 - 09 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories