TNPSC Thervupettagam

"நிதி'களுக்கு வேண்டும் நீதி!

November 4 , 2019 1899 days 1114 0
  • நம் நாட்டில் பல வகையான நிதி நிறுவனங்கள் செயல்படுகின்றன. வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (என்.பி.எப்.சி.), "நிதிகள்', சிட் ஃபண்டுகள், குறும் நிதி நிறுவனங்கள் (மைக்ரோ ஃபைனான்ஸ் கம்பெனிகள்), தனி நபர்கள் தனியாகவோ, கூட்டு சேர்ந்தோ நடத்தும் நிதி நிறுவனங்கள் (பிரைவேட் ஃபைனான்ஸ் கம்பெனிகள்) ஆகியவை அவற்றில் அடங்கும்.

வங்கிகள் – வகை

  • இன்னும் சொல்லப் போனால், வங்கிகளும் பல வகைப்படும். உதாரணமாக, பாரத ஸ்டேட் வங்கி போன்ற பொதுத் துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், புதிய தலைமுறை தனியார் வங்கிகள் (ஐ.சி.ஐ.சி.ஐ; ஆக்ஸிஸ் வங்கி), வெளிநாட்டு வங்கிகள், அண்மையில் அறிமுகமான "பேமென்ட்' வங்கிகள், "ஸ்மால்' வங்கிகள், அஞ்சல் வங்கி ஆகியவை ஆகும்.
     மேற்கூறிய நிதி அமைப்புகளில், "நிதி'கள்தான் தொன்மையானவை.
  • தமிழ்நாட்டில் இயங்கும் "நிதிகள்' சுமார் 150 ஆண்டுகளாகச் செயல்படுகின்றன. முன்னணி வங்கிகள் தோன்றுவதற்கு முன்பாகவே "நிதி'கள் தோன்றிவிட்டன.
     சாதாரண மக்களுக்கு சிறு கடன்கள் கொடுப்பதற்கும், அவர்களது சேமிப்பைச் சிதறவிடாமல் வைப்புத் தொகையாகப் பெற்று, வங்கி வட்டியைவிட சற்று கூடுதல் வட்டி கொடுப்பதே "நிதி'களின் நோக்கம். தற்போதைய விதிகளின்படி, அதிகபட்சமாக 12.5 சதவீதம் வரை வைப்புத் தொகைக்கு வட்டி கொடுக்கலாம்; காலத்துக்கேற்ப இது சிறிதளவு குறையக் கூடும்.

நிதித் தேவை

  • சாதாரண மக்களின் அவசரமான பணத் தேவையை "நிதி'கள் பூர்த்தி செய்கின்றன என்பதை மத்திய அரசு கருத்தில்கொண்டுதான், இந்திய கம்பெனிகளின் சட்டத்தின் கீழ் (1956) பரஸ்பர சகாய நிதிகள், பப்ளிக் லிமிட்டெட் கம்பெனிகளாக 1960-இல் அங்கீகரிக்கப்பட்டன. இதற்காக மேற்கூறிய சட்டத்தில் 620அ என்னும் பிரிவு சேர்க்கப்பட்டது. ஒரு "நிதி'-க்கு உரிய நியதிகளுக்கு இணங்கச் செயல்படும் நிறுவனத்துக்கு "நிதி' என்ற அங்கீகாரம் வழங்கும் அதிகாரம் மத்திய அரசின் கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்துக்கு மட்டுமே உண்டு.
  • மேற்கூறிய சட்டம், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கம்பெனிகள் திருத்தச் சட்டம் 2013-ஆக மாற்றப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்திலும், பிரிவு 406-லும் "நிதி'களுக்கான சிறப்பு அங்கீகாரம் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  • இன்று இந்தியாவில் செயல்படும் ஏறக்குறைய 400 "நிதி'களில் சுமார் 300 "நிதி'கள் தமிழகத்தில்தான் செயல்படுகின்றன. "நிதி'களிடம் ஒருவர் சேமிப்பை "டெபாசிட்' செய்ய வேண்டும் என்றாலோ, கடன் பெற வேண்டும் என்றாலோ, அந்த நபர், "நிதி'களிடம் ஒரு பங்கு (ஷேர்) வாங்கி உறுப்பினராக வேண்டும்.
  • பங்கின் விலை நீண்டகாலம் ரூ.1-ஆக மட்டுமே இருந்தது. 2001-ஆம் ஆண்டுதான் ரூ.10-ஆக உயர்த்தப்பட்டது. நிதியின் பங்குகளை பங்குச் சந்தையில் விற்கவோ, வாங்கவோ முடியாது. ஒரு நிதியின் பங்குகளைஅந்த நிதியின் அலுவலகத்திலிருந்துதான் வாங்க முடியும்.

நிதிகளின் செயல்பாடுகள்

  • பொதுவாக, ஒரு "நிதி'யில் அங்கத்தினர்களாக உள்ளவர்கள், அந்த "நிதி' செயல்படும் பகுதியில் வசிப்பவர்களாகவே இருப்பார்கள். ஆகவே, இது உள்ளூர்வாசிகளின் நிறுவனமாகவே திகழ்கிறது. இதனால்தான் நிதிகள் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது.
  • "நிதி'களின் செயல்பாடுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, அங்கத்தினர்களின் சேமிப்பைத் திரட்டி, அதற்கு நியாயமான வட்டி வழங்குதல், இரண்டாவது, தங்க நகை, வீட்டு அடமானம் அல்லது தொடர்புடைய நிதிகளில் ஒருவர் டெபாசிட் செய்துள்ள வைப்புத் தொகை மீது நியாயமான வட்டிக்கு கடன் வழங்குவதாகும்.
  • துரித சேவை, எளிமையான நடைமுறைகள், கனிவான அணுகுமுறை ஆகியவை உறுப்பினர்களை நிதிகளின்பால் ஈர்க்கின்றன.
     மத்திய அரசால் 1960-இல் நியமிக்கப்பட்ட நீதிபதி ஏ.வி.விஸ்வநாத சாஸ்திரி குழுவின் பரிந்துரையின்படி, நிதிகள் பொதுக் குழு (ஏ.ஜி.எம்.) நடத்துவதில் உள்ள வழக்கமான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டன. பங்கு பத்திரங்கள் வழங்குவதற்கான வழிமுறைகள் தளர்த்தப்பட்டன.
  • அனைத்தும் நன்றாகப் போய்க்கொண்டிருந்த நிலையில் 1990-ஆம் ஆண்டின் இறுதியில் "நிதி'கள் ஓர் அதிர்ச்சியை எதிர்கொண்டன. சிறப்பாகச் செயல்பட்டு மத்திய தர மக்களுக்கும் எளிய மக்களுக்கும் அரும் தொண்டு செய்து கொண்டிருந்த "நிதி'களுக்கு மத்தியில் ஒருசில "கருப்பு ஆடுகள்' இருந்துள்ளன. ஒரு சில "நிதி'கள் துரதிர்ஷ்டவசமாக தோல்வி அடைந்தன.
  • அதாவது, "நிதி'கள் பெரும்பாலும் மேற்கொள்ளும் நேர்மையான பாதையிலிருந்து மேலே குறிப்பிட்ட ஒருசில "நிதி'கள் வழுவின. இந்த ஒருசில நிதிகள் வைப்புத் தொகையாளர்களுக்கு வைப்புத் தொகை முதிர்வடைந்தவுடன் பணத்தைத் திரும்பக் கொடுக்கத் தவறி விட்டன. இதனால், அவற்றில் முதலீடு செய்திருந்தோர் இழப்புக்கும் அவதிக்கும் உள்ளானார்கள்.
  • மற்ற நிதிகள் எப்போதும்போல் சேவை உணர்வுடனும், சுய கட்டுப்பாடுடனும் செம்மையாகச் செயல்பட்டு வருகின்றன என்பது ஆறுதல் தருகிறது. மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பொதுமக்களின் வைப்புத் தொகையைக் காப்பாற்றும் வகையில் உரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.

விதிமுறைகள்

  • "நிதி'களுக்கு புதிய விதிமுறைகளை உருவாக்குவதற்காக 2000-ஆம் ஆண்டில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் பி.சபாநாயகம், ஐ.ஏ.எஸ் தலைமையில் ஒரு குழு 2002-இல் அமைக்கப்பட்டது.
  • ஆனால், சபாநாயகம் குழுவின் சில பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை என்றும், பல பரிந்துரைகள் மிகவும் கடுமையானவை என்றும், அவை நன்கு செயல்படும் நிதிகளையும் பாதிக்கக் கூடியவை என்றும், சேம்பர் ஆஃப் நிதிகளின் பிரதிநிதிகள் புள்ளிவிவரங்களுடன் அரசுக்கு எடுத்துரைத்தனர். நடுநிலையாளர்களும் இந்தக் கருத்தை வழிமொழிந்தனர்.

நிபுணர் குழு

  • இதைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற வருமானவரி ஆணையர் ஏ.ஆர்.ராவ் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்தது. அரசு, ரிசர்வ் வங்கி பிரதிநிதிகளைத் தவிர நிதி சேம்பர் மற்றும் பெனிஃபிட் பண்டு சேம்பர் பிரதிநிதிகளும் இந்தக் குழுவில் இடம்பெற்றனர்.
  • இந்தக் குழுவில் நான் (எஸ்.கோபாலகிருஷ்ணன்), மறைந்த வழக்குரைஞர் டி.எஸ்.கோகிலன் ஆகியோர் இடம்பெற்றோம்.
  • மேற்கூறிய குழுவின் பரிந்துரைகள் "நிதி'களை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், நிதிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையிலும் அமைந்தன. எனவே, பரிந்துரைகளை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக் கொண்டது.
  • மத்திய அரசின் "டிஜிட்டல் இந்தியா' கோட்பாட்டுக்கு இணங்க இரண்டு முக்கியமான மாற்றங்கள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இரண்டுமே கம்பெனிகளின் பங்குகள் தொடர்புடைய விஷயம். அவை சிறு "நிதி'களுக்குப் பொருந்துமா என்ற கேள்வி எழுகிறது.
     ஒரு பங்குதாரர் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் பங்குகளுக்கான ஈவுத் தொகையைப் பெற்றுக் கொள்ளாத நிலையில் அந்தத் தொகையை மத்திய அரசின் முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஃபண்டு ஆணையத்துக்கு (ஐ.இ.பி.ஏ.) புது தில்லிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது நீண்டகாலமாக கடைப்பிடிக்கப்படும் விதிமுறை.
     புதிதாக வந்துள்ள விதிமுறைப்படி, ஈவுத் தொகை அனுப்பினால் மட்டும் போதாது;
  • பங்குகளையே மேற்கூறிய ஆணையத்துக்கு அனுப்பிவிட வேண்டும். பங்குப் பத்திரங்களை அப்படியே அனுப்பி விடுவதில் எந்த ஒரு நிதிக்கும் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், பங்குதாரரின் பெயர் மாற்றம் செய்வதற்கான அனைத்து வழிமுறைகளையும் முறையாகப் பூர்த்தி செய்து, பிறகு பங்குப் பத்திரத்தை "டிமேட்' செய்து அனுப்ப வேண்டும்.

சம வாய்ப்பு

  • இது மிகவும் கடினமான நடைமுறை. நிதிகளின் அடிப்படை நியதியே, ஒருவர் நிதியில் சேமிப்பு செய்ய வேண்டும் என்றாலோ, கடன் வாங்க வேண்டும் என்றாலோ அந்த நபர் நிதிகளிடம் ஒரு பங்கு வாங்க வேண்டும் என்பது அல்லவா? இரண்டாவது புதிய உத்தரவின்படி பங்குகளை புதிய வாடிக்கையாளர் "டிமெட்' வடிவில் வாங்க வேண்டும். நடுத்தர மக்கள் மற்றும் சதாரண மக்களுக்கு இது அச்சுறுத்தலாக அமையும். செலவு அதிகரிக்கும். இவை தவிர "சம வாய்ப்பு'' மறுக்கப்படுகிறது.
  • நல்ல வேளையாக சேம்பர் ஆஃப் நிதியின் வேண்டுகோளுக்கிணங்க நிதிகளுக்கு இந்த விஷயத்தில் விலக்கு அளித்துள்ளது மத்திய அரசு.
  • ஆனால், முதலாவது கூறிய "ஷேர்' மாற்றத்துக்கு "டிமேட்' தேவை என்பது வலியுறுத்தப்படுகிறது. நிதியில் நுழைவதற்கு (என்ட்ரி) டிமேட் தேவை என்று கூறிய விதி ரத்து செய்யப்பட்ட பிறகு, நிதியிலிருந்து விலகிவிட்ட (எக்ஸிட்) ஒருவரின் பங்குகளை மேற்கூறிய ஆணையத்துக்கு அனுப்பும்போது "டிமேட்' செய்ய வேண்டும் என்ற விதியை விலக்கிக் கொள்வதுதானே நியாயம்?
  • அது தவிர யாரும் சொந்தம் கொண்டாடாத ஒரு ஷேரின் மதிப்பு ரூ.10 என்றால், அதனை ஆணையத்துக்கு அனுப்பும் வழிமுறைகளைப் பூர்த்தி செய்து "டிமேட்' செய்வதற்கான செலவு ரூ.35 ஆகிறது.
  • இதுபோல் பல்லாயிரக்கணக்கான ஷேர்களை அனுப்புவதற்கான பொருட்செலவு, நேரம், மனித உழைப்பு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, மேற்கூறிய உத்தரவையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்பதே நிதிகள் தொடர்புடைய அனைவரது (ஸ்டேக் ஹோல்டர்ஸ்) வேண்டுகோளாகவும் உள்ளது. சாதாரண மக்களுக்கு நிதிகளின் சேவை தொய்வின்றித் தொடர மத்திய அரசின் ஊக்குவிப்பாகவும் அது அமையும்.

நன்றி: தினமணி (04-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories