நியூட்டனின் விதிகளும் கிணற்றின் ஆழமும்
- கிணற்றின் ஆழத்தை அளவிடுவது எப்படி? - ஒரு சிறிய கல்லைக் கையில் எடுத்து, கிணற்றின் மேலிருந்து அப்படியே கல்லைவிட வேண்டும். கல்லை எறியக் கூடாது. அந்தக் கல் கிணற்றின் தரையைத் தொட எடுத்துக்கொள்ளும் நேரத்தைக் (T) குறித்துக்கொள்ள வேண்டும். நியூட்டனின் விதிப்படி கிணற்றின் ஆழம் (d) = 4.9 X T2. இந்தப் பரிசோதனையில் முக்கியமானது, கல் தரையைத் தொட எடுத்துக்கொள்ளும் நேரத்தைத் துல்லியமாக அளவிட வேண்டும்.
- அலைபேசியில் உள்ள நிறுத்துக் கடிகாரம் அல்லது டிஜிட்டல் கடிகாரத்தைப் பயன்படுத்தலாம். கல்லை விட்ட நொடியில் நிறுத்துக் கடிகாரத்தை இயக்க வேண்டும். கல் தரையைத் தொட்டவுடன் நிறுத்த வேண்டும். கொஞ்சம் தாமதமாக இயக்கினாலோ தாமதமாக நிறுத்தினாலோ கணக்கிடும் ஆழத்தில் பிழை ஏற்படும். அதேபோல் இந்தப் பரிசோதனையை 10 தடவை செய்து வரும் சராசரி நேரத்தைக் கணக்கீட்டில் பயன்படுத்தினால் வரும் விடை இன்னும் துல்லியமாக இருக்கும்.
- இரண்டு மாணவர்கள் சேர்ந்து இந்தப் பரிசோதனையைச் செய்யலாம். கல் தரையைத் தொட 1.37 நொடி எடுத்துக்கொண்டால், கிணற்றின் ஆழம் = 4.9 X 1.37 X 1.37 = 9.19 மீட்டர். கிட்டத்தட்ட ஒன்பது மீட்டர் அல்லது முப்பது அடி. ஒருவேளை கிணற்றில் நீர் இருந்தால் இந்தப் பரிசோதனையைப் பயன்படுத்தி, நீர் இருக்கும் ஆழம் வரை அளவிடலாம்.
- நியூட்டன் விதி கொண்டு அளக்கப்பட்ட ஆழம் எந்த அளவுக்குத் துல்லியமாக இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஒரு நூலையோ அல்லது கயிறையோ எடுத்து கிணற்றின் ஆழத்தை அளந்து, இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டறியலாம். பெற்றோர், ஆசிரியர் உதவியுடன் இதைச் செய்து பார்க்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (25 – 12 – 2024)