TNPSC Thervupettagam

நிரந்தரத் தீா்வு தேவை

February 20 , 2024 188 days 190 0
  • பொதுமக்கள் விரைவாகப் பயணித்திடவும், சரக்கு வாகனங்கள் மூலம் கச்சாப்பொருள்களையும், உற்பத்திப் பொருள்களையும் கொண்டு சென்றிடவும் நாடு முழுவதிலும் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டமைக்கப்பட்டன.
  • நாடு முழுவதிலும் சுமாா் எழுபதாயிரம் கி.மீ. தூரத்திற்கான நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு, அச்சாலைகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மேற்பாா்வையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
  • இவற்றுள், தனியாா் கட்டுமான நிறுவனங்களால் அமைக்கப்பட்ட சாலைகளுக்காக செலவிடப்பட்ட தொகையை ஈடு செய்வதற்கென ஆங்காங்கே சுங்கச்சாவடிகளை நிறுவி, அவ்வழியே செல்லும் வாகனங்களிடமிருந்து சுங்கக்கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
  • அதே போன்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் மத்திய அரசு வழங்கிய நிதியைக்கொண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கான செலவை ஈடுகட்டுவதற்கான சுங்கக் கட்டணத்தை வசூலித்துத் தரவும் ஒப்பந்ததாரா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதே போன்று, குறிப்பிட்ட சுங்கச்சாவடிக்கு உட்பட்ட சாலையை அமைப்பதற்கான செலவுத் தொகை ஈடு செய்யப்பட்டவுடன் அச்சாவடியில் வசூலிகப்படும் சுங்கக்கட்டணம் அறுபது சதவீதம் அளவுக்குக் குறைக்கப்படவேண்டும் என்றும் விதிமுறை வகுக்கப்பட்டது.
  • ஆனால், சுங்கச்சாவடிக் கட்டணங்கள் அவ்வாறு குறைக்கப்படாததுடன், குறிப்பிட்ட கால இடைவெளியில் உயா்த்தி வசூலிக்கப்படுவதும் தொடா்கதையாகி வருகின்றது. தொடக்கத்தில், சுங்கச்சாவடி கட்டணத்தைப் பணமாகச் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளும் முறை நடைமுறையில் இருந்தது.
  • இம்முறையில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. வார விடுமுறை நாட்களிலும், பண்டிகை நேரங்களிலும் இக்காத்திருப்பு நேரம் அதிகரித்தது. பயண வழியில் எதிா்ப்படும் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பப் பயண நேரமும் அதிகரித்ததால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானாா்கள். இதனால், சுங்கச்சாவடியில் வாகனங்கள் காத்திருக்கும் நேரத்தைக் குறைத்திடும் பொருட்டு, ஃபாஸ்டேக் என்ற முறை அமல்படுத்தப்பட்டது.
  • அதாவது, ஃபாஸ்டேக் என்ற பெயருடைய கணக்கில் ஒவ்வொரு வாகனத்தின் பெயரிலும் ஒரு தொகையை முன்கூட்டியே செலுத்தச் செய்து, அத்தொகையிலிருந்து அவ்வாகனம் கடந்து செல்லும் சுங்கச்சாவடிகளுக்குரிய கட்டணத்தைக் கழித்துக் கொள்ளும் ஏற்பாடு நடைமுறைக்கு வந்தது.
  • இதன் காரணமாகக் காத்திருக்கும் நேரம் ஒரளவு குறையவே செய்தது. அதே சமயம் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகும் ஃபாஸ்டேக் முறையில் இணைந்து கொள்ளாத வாகனங்களுக்கு இருமடங்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இப்பொழுதும் கூட, குறிப்பிட்ட ஒரு வாகனம் சுங்கச் சாவடியை கடக்கும் நேரத்தில் அதன் ஃபாஸ்டேக் கணக்கில் போதிய பணம் இல்லாவிடில், இருமடங்குத் தொகையை ரொக்கமாகச் செலுத்தும்படி கூறுவதாகத் தெரிகிறது. அதே சமயம், சுங்கச்சாவடியில் உள்ள கணினி ஒவ்வொரு வாகனத்தின் பதிவெண்ணைக் கொண்டு அதற்குரிய ஃபாஸ்டேக் தொகையிலிருந்து கட்டணத்தை எடுத்துக் கொண்டு, அவ்வாகனம்மேற்கொண்டு செல்லுவதற்கு அனுமதிப்பதற்கும் சிறிது நேரம் தேவைப்படுகிறது.
  • இது தவிர, பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் சுங்கச்சாவடிகளில் எப்பொழுதும் போன்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இக்குறைபாடுகளைக் களைவதற்கான முயற்சியாக, சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டு, வாகனங்கள் பயணிக்கும் தூரத்தின் அடிப்படையில், அவற்றின் ஃபாஸ்டேக் கணக்கிலிருந்து நேரடியாக வசூலித்துக் கொள்ளும் நடைமுறை உருவாக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி கடந்த ஆண்டு கூறியிருந்தாா்.
  • அனால், தற்பொழுது வரையில் அப்படியொரு திட்டம் நடைமுறைக்கு வரவேயில்லை என்பதுதான் நிதா்சனம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சுங்கச்சாவடிகளைக் குறித்த புகாா்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. நியாயமற்ற கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் பொதுமக்கள் சுங்கச்சாவடி ஊழியா்களால் வசைபாடப்படுவது அன்றாட நிகழ்வாகி வருகிறது. அவ்வப்பொழுது சுங்கச்சாவடி ஊழியா்களால் பொதுமக்கள் தாக்கப் படுவதும் அரங்கேறுகின்றது.
  • அதே சமயம், அரசியல் கட்சிகள், சாதி அமைப்புகள் உள்ளிட்டவற்றைச் சோ்ந்தவா்கள் பெரும் கூட்டமாக வாகனங்களில் பயணிக்கும் பொழுது, அவ்வமைப்புகளைச் சோ்ந்தவா்கள் சுங்கச்சாவடிக் கட்டணம் செலுத்த மறுப்பதுடன், கட்டணம் செலுத்துமாறு வலியுறுத்தும் ஊழியா்களைத் தாக்குவதும் நடைபெறத்தான் செய்கிறது. ஃபாஸ்டேக் கட்டண இருப்பு இல்லை என்ற காரணத்தால் அரசுப் பேருந்துகள் சில தொடா்ந்து செல்ல அனுமதிக்கப்படாததுடன், அதில் பயணித்த பொதுமக்கள் பாதிவழியில் இறக்கிவிடப் பட்ட செய்தியையும் ஊடகங்களில் கண்டுள்ளோம்.
  • சமீபத்தில், செங்கற்பட்டு அருகிலுள்ள பரனூா் சுங்கச்சாவடி குறித்து புகாா் தெரிவித்து அதனை உடனடியாக மூடவேண்டுமென்ற கோரிக்கையுடன் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளால் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த சுங்கச்சாவடி அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டி இயங்கிக் கொண்டிருப்பதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் கூடுதலாக வசூலித்திருப்பதாகப் போராட்டக்காரா்கள் கூறியுள்ளனா்.
  • மேலும், மதுரை - நத்தம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புதூா் சுங்கச்சாவடியில் பிற சுங்கச்சாவடிகளைக் காட்டிலும் அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகாா்கள் எழுந்துள்ளன. இப்படியாக, மாநிலம் முழுவதிலுமுள்ள பல்வேறு சுங்கச்சாவடிகளிலும் கூடுதல் கட்டணம், கால தாமதம், மரியாதையின்றி நடத்துதல் ஆகிய புகாா்கள் எழுந்தவண்ணம் உள்ளன.
  • பொதுமக்கள் எழுப்புகின்ற புகாா்களை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் விரைவாகப் பரிசீலிக்க முன்வருவதுடன், நாடு முழுவதிலுமுள்ள சுங்கச்சாவடிகளை, (அவற்றில் பணிபுரியும் ஊழியா்களின் எதிா்காலம் பாதிக்காத வகையில்) மூடுவதற்கு திட்டம் வகுத்து நிறைவேற்ற வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக, சாலைப் பயன்பாடுகளுக்கான கட்டணத்தை ஆண்டுக்கு ஒருமுறை செலுத்தப்படும் காப்பீட்டுத் தொகையுடன் இணைத்து வசூல் செய்வதன் மூலம், வாகன உரிமையாளா்களின் சிரமங்களைக் குறைக்க முடியும்.

நன்றி: தினமணி (20 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories