TNPSC Thervupettagam

நிறுவனம் - தொழிலாளர் இடையேயான உடன்பாடு நிரந்தரமாகட்டும்!

October 18 , 2024 8 hrs 0 min 11 0

நிறுவனம் - தொழிலாளர் இடையேயான உடன்பாடு நிரந்தரமாகட்டும்!

  • ஒரு மாதத்துக்கு மேலாக நீடித்துவந்த சென்னை சாம்சங் நிறுவனத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதும் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பியிருப்பதும் மிகுந்த நம்பிக்கை அளிக்கின்றன. உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் தொழிற்சங்க நடைமுறைகள் இங்கும் செயல்பாட்டுக்கு வரும் என்கிற எதிர்பார்ப்பையும் இந்த உடன்பாடு ஏற்படுத்தியுள்ளது.
  • தென் கொரியாவைச் சேர்ந்த மின்னணுச் சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான சாம்சங்கின் ஓர் ஆலை சென்னை ஸ்ரீபெரும்புதூரில் 2007லிருந்து செயல்பட்டுவருகிறது. இதில் 1,800 தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். வரையறுக்கப்பட்டதைவிட அதிக நேரம் வேலை செய்யும் சூழல், குறைந்த ஊதியம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்துச் சில ஆண்டுகளாகவே இங்குள்ள தொழிலாளர்கள் முறையிட்டு வருகின்றனர்.
  • சிஐடியுவின் வழிகாட்டலில் தங்கள் உரிமைகளை வலியுறுத்திவந்த இவர்கள், ‘சாம்சங் இந்தியத் தொழிலாளர் சங்கம்’ என்னும் பெயரிலான தங்கள் அமைப்பைத் தமிழக அரசு பதிவுசெய்ய வேண்டும் என்கிற உரிமையையும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட 20 கோரிக்கைகளையும் முன்வைத்து செப்டம்பர் 9இல் போராட்டத்தைத் தொடங்கினர்.
  • தொழிற்சங்கத்தின் பெயரில் தனது நிறுவனப் பெயர் இடம்பெறுவதையும் வெளியிலிருந்து சிலர் இச்சங்கத்தின் பிரதிநிதிகளாக வருவதையும் சாம்சங் நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதை முன்வைத்தே தமிழக அரசின் தொழிற்சங்கங்களின் பதிவாளர், தங்களது சங்கத்தைப் பதிவுசெய்ய மறுப்பதாகத் தொழிலாளர் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், சங்கத்தைப் பதிவுசெய்யக் கோரித் தொழிலாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
  • அக்டோபர் 7 அன்று தமிழக அரசு சார்பில், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சிறு, குறு - நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் போராட்டம் தொடர்ந்தது. அடுத்த சில நாள்களில் போராட்டம் நடைபெற்ற பந்தல், காவல் துறையால் கலைக்கப்பட்டதும், தொழிலாளர் பிரதிநிதிகள் கைதுசெய்யப்பட்டதும் விமர்சனத்துக்கு உள்ளாகின.
  • இந்நிலையில், அக்டோபர் 15 அன்று பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பிற அமைச்சர்களும் தொழிலாளர் நலத் துறை அதிகாரிகளும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியதில், இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி, போராட்டத்தை முடித்துக்கொண்டு பணிக்குத் திரும்பவும், முன்புபோலவே உற்பத்தியைத் தொடர்வதற்கான ஒருமித்த கருத்துடன் பணிபுரியவும் தொழிலாளர் தரப்பு ஒப்புக்கொண்டது.
  • போராட்டத்தில் ஈடுபட்டதற்காகத் தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது; தங்களது 20 கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில், அதற்கான பதிலுரையைத் தொழிலாளர் நலத் துறையில் நிர்வாகம் தாக்கல் செய்ய வேண்டும் என்கிற தொழிலாளர் கோரிக்கையை நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.
  • ‘சாம்சங் இந்தியத் தொழிலாளர் சங்கம்’ என்கிற பெயரில் பதிவுசெய்வது குறித்து, நீதிமன்றத்தின் வழிகாட்டலின்படி செயல்படப் போவதாகவும் தொழிலாளர்கள் கூறியுள்ளனர். நிறுவனம், தொழிலாளர் ஆகிய இரு தரப்புக்குமே இழப்பை ஏற்படுத்தி வந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்திருப்பது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.
  • தொழில் வளர்ச்சி மூலம் நிதியையும் வேலைவாய்ப்புகளையும் பெருக்கப் பெருமுயற்சி எடுத்துவரும் தமிழக அரசு, தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதும் அவசியம் என்பதைப் புரிந்துகொண்டு, இந்த விவகாரத்தில் செயல்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. நிறுவனமும் தொழிலாளர்களும் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டியதன் யதார்த்தத்தை இரு தரப்பும் மறந்துவிடக் கூடாது. இந்த உடன்பாடு நிரந்தரமானதாகி, தமிழகத்தின் தொழில் அமைதிக்கு வலுசேர்க்கட்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories