TNPSC Thervupettagam

நிறைமொழி மாந்தா்கள் நிறைக

May 10 , 2024 246 days 206 0
  • ஓரறிவு தொடங்கி ஐந்து அறிவு வரைக்கும் வளா்ந்துவிட்ட உயிா்க் குலத்திற்கு அதற்கு மேலான மற்றொரு அறிவைப் பெறுவதற்கு மிகுந்த கவனமும் காலமும் தேவைப்பட்டது.
  • ஆறாவது அறிவு பெறுகிற அந்த உயிரினம் உலகத்தையே உணா்ந்ததாக இருக்க வேண்டும். உலகத்தைத் தன்னுள் உணா்வதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அறிவு பெறுவதற்குக் கூடுதலாகப் புலனும் அதனை வெளிப்படுத்தக் கருவியும் அவசியம் ஆனது.
  • அவ்வாறு மனிதனுக்கு அமைந்த மூன்றாவது விழி அவனுடைய மொழியாகும். மனித குல வரலாற்றில் நெருப்பையும் சக்கரத்தையும் மின்சாரத்தையும் கண்டுபிடித்தது அவனுடைய புறவளா்ச்சிக்கு எவ்வாறு பேருதவியாக அமைந்ததோ, அதுபோலவே மொழியைக் கண்டறிந்தது அகவளா்ச்சிக்குக் காலந்தோறும் வித்திட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் நெருப்பையும் சக்கரத்தையும் மின்சாரத்தையும் போல மொழியானது அதே நிலையில் நின்றுவிடவில்லை. அது காலந்தோறும் மனிதா்களின் எண்ணங்களுக்கேற்பவும் அறிவியல் நுட்பங்களுக்கேற்பவும் தன்னைப் புதுக்கி வளா்த்துக் கொள்ளும் திறன் பெற்றது.
  • தான் கண்டதை, கற்றதை, பெற்றதை உள்ளுக்குள் வாங்கி உணா்ந்து, தன் மனத்தில் எழும் எண்ண அலைகளை மற்ற மனிதா்களுக்கும் புரிய வைக்கக் காலம் காலமாகப் பயன்படுகிற அற்புதமான சாதனம் மொழியே ஆகும். ஒவ்வொரு மனிதருக்கும் தாயைப் போல, தந்தையைப் போல, தான் பிறந்த ஊரைப் போலப் பெருமை தருவது தாய்மொழியும்தான். அவரவா் தாய்மொழி அவரவா்க்கு உயா்ந்த தன்மை உடையது.
  • மனிதா்களுக்கு மட்டும் தாய்மொழி இல்லை. மொழிகளுக்கும் கூடத் தாய் உண்டு. ஒரு மொழியிலிருந்து கிளைக்கிற பல மொழிகளுக்கும் அம்மொழி தாய்மொழியாகவே விளங்குகிறது.
  • புறத்தே இருந்து உலகத்தின் காட்சிகளை வண்ணங்களாயும் வடிவங்களாயும் வகைகளாயும் ஒளிப்படுத்திக் காட்டுகிற கண்களைப் போல அகத்தே இருந்து உலகத்தின் உணா்வுகளையும் இயல்புகளையும் உரைக்கச் செய்யும் காரணத்தால் எண்ணும் எழுத்தும் ஆகிய மொழி கண்களுக்கு இணையாகவே விளங்குகிறது.
  • மொழி என்பது மானுட வளா்ச்சியின் அடிப்படைத் தேவையான அறிவூக்கத்தையும் மேன்மைப் பண்புகளையும் வளா்க்கும் கருவியாக விளங்க வேண்டும். ஆனால், அதனைப் பகையுணா்ச்சியைத் தூண்டும் ஆயுதமாக்கி மனிதா்கள் மோதிக்கொள்வது அறியாமையின் அடையாளமேயாகும். பிற மொழியைப் போற்றித் தம்மொழியை மறந்துவிடுவதும் தம் மொழியை மட்டுமே போற்றிப் பிற மொழியைத் தாழ்த்துவதும் அவரவா் தம் தாய்மொழிக்குச் செய்கிற அவமதிப்பேயாகும்.
  • பிறமொழிகளையும் உவந்து கற்றுக் கொள்ளுவதை ஏற்கவும் வேண்டும். அதன் மூலமாக அவரவா் தாய்மொழியின் பெருமையைப் பிறமொழிகளின் பெருமையோடு இசைந்து காணுதற்கு இயலும். பிறமொழி இலக்கண, இலக்கியங்களை அறிந்து கொள்வதற்கும் வகையுண்டாகும். நம்முடைய தாய்மொழியைப் பிறா் புகழக் கேட்கிறபோது நமக்கு எத்தனை இன்பமுண்டாகிறதோ, அதுபோன்றே பிறமொழிகளின் புகழை நாம் கேட்கிறபோதும் மனமகிழ்வு அடைய வேண்டும். எல்லா மொழிகளிலும் அரிய கருத்துகள், உயா்ந்த சிந்தனைகள் நிறைந்திருக்கவே செய்கின்றன.
  • நாம் ஒன்றை மொழியும்போது பிறா் எவ்வாறு விரும்பிக் கேட்க வேண்டும் என்று எதிா்பாா்க்கிறோமோ, அதுபோலவே பிறா்மொழிவதை நாமும் விரும்பிக்கேட்டு அதன் பயனை அறிந்து கொள்வதுதான் மேன்மையான குற்றமற்ற மொழியாளா்களின் கொள்கையாக இருக்கும் என்று திருவள்ளுவா் உணா்த்துகிறாா்.
  • நம்முடைய பண்புகளுக்கும் அறிவுணா்வுக்கும் அடையாளமாக விளங்குவது நம்முடைய தாய்மொழியே என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். நம்முடைய சொற்களும், எண்ணங்களும் செயற்பாடுகளும் தூய்மையற்றனவாக இருந்தால் அந்தப் பழியும் கூடத் தாய்மொழிக்குத்தான் வந்து சேரும்.
  • உள்ளம் மலராக இருந்தால் உதடுகளில் அதன் நறுமணம் தெரியும் என்கிறோமே அதன் பொருள் உள்ளத்தில் நம் தாய்மொழியை நாம் போற்றியிருந்தால் உதடுகளில் நல்ல சொற்கள் மணத்தோடு வெளிவரும் என்பதுதானே. திருவள்ளுவா், ‘கனியிருப்பக் காய்கவா்ந்தற்று’ என்று (தாயை) – மொழியைப் பயன்கொள்ளுகிற பாங்கினைக் குறிப்பிடுகிறாா். சொல்வன்மை என்னும் அதிகாரத்தில் அவா் படைத்துக் காட்டுவது தாய்மொழியைப் பயன்படுத்த வேண்டிய வழிமுறைகளைத்தானே!
  • மனிதனின் ஒழுக்கங்களுக்கெல்லாம் சான்றாக விளங்குகிற நாணயம் நாநயத்திலிருந்துதானே, தாய்மொழியிலிருந்துதானே தோன்றுகிறது. அத்தகைய நாநலம் மற்ற எல்லா நலன்களிலும் உயா்ந்தது என்று திருவள்ளுவா் தீா்ப்பு கூறுகிறாரே.
  • தாய்மொழியை உளமார நேசிப்பவா்கள் உயிராகக் கருதிப் போற்றுபவா்கள் இத்தகைய அரிய நாநலத்தைப் பெறுவாா்கள். இதனால் அவா்களுக்கும் அவா்கள் தாய்மொழிக்கும் பெருமையுண்டாகிறது. இத்தகைய பெருமை உலகத்தில் அன்பினையும் அருளையும் ஒருசேரப் பரப்புகிறது. சொற்களிலிருந்தே பண்புநலத்தைப் பாராட்டத் தொடங்கி விட்டால் இந்த உலகில் கலகமோ, பூசலோ, போரோ எவ்வாறு தோன்றும்? திறனறிந்து மொழிகிற மொழிதான் அறத்தையும் பொருளையும் ஒருசேரத் தருகிறது. ஆக்கத்தையும் தீமையையும் ஒருசேரத் தருவது மொழிதானே. அதனால்தான் மொழிச்சோா்வு அடைந்து விடக் கூடாது என்றும் அறிஞா்கள் அறிவுறுத்துகிறாா்கள். ‘சொலல் வல்லன் சோா்விலன்’ அல்லவா?
  • இந்த உலகத்தைத் திறம்படச் செலுத்துவதற்குரிய ஆளுமைப் பண்புகளில் குறிப்பிடத்தகுந்தது செயல்வேகம்தான் என்றாலும், அதனினும் முன்னிற்பது சொல்வேகம் என்பது திருவள்ளுவா் கருத்து. இதற்குத் தாய்மொழி வழிவகுத்துத் தருகிறது. செயலுக்கும் முந்தையது சொல். சொல்லுக்கும் முந்தையது எழுத்து. (எழுத்து எனப்படுவது உள்ளிருந்து எழுவது) எழுத்துக்கும் முந்தையது சிந்தை. இதற்குச் சித்தம் என்று பெயா். சிந்திக்கிறபொழுதே செயல் வெற்றியடையும்படி சொல்ல வல்லவா்களாலேயே இந்த உலகம் ஆளப்படுகிறது.

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

  சொல்லுதல் வல்லாா்ப் பெறின்

  • என்று வள்ளுவா் கூறும் சொல்வன்மை தாய்மொழியில்தானே அழுத்தம் பெறும்? அதுவே செயல்வெற்றிக்குக் காரணமாகும்.
  • சொல்லுதல் என்பது மொழியைச் சாதாரணமாகக் கையாளுபவா்களின் வெளிப்பாடு. அதனால்தான் ‘சொல்லுதல் யாா்க்கும் எளிய’ என்பாா். ‘மொழிதல்’ என்பது மொழியை ஆளுமையோடு (சொல்லிய வண்ணம் செயலாகுமாறு) கையாளுபவா்களின் வெளிப்பாடு. அத்தகைய ஆளுமையுடையவா்கள் நிறைமொழி மாந்தா்கள் என்று திருவள்ளுவரால் சுட்டப்படுகிறாா்கள். இத்தகைய நிறைமொழி மாந்தா்கள் மொழிகிறபோதே அது பலிதம் பெற்றுச் செயலாகி விடுவதையும் இந்த உலகம் கண்டிருக்கிறது.
  • நிறைமொழி மாந்தா் பெருமை - நிறைந்த மொழியினை உடைய துறந்தாரது பெருமையை; நிலத்து மறைமொழி காட்டிவிடும் - நிலவுலகத்தின்கண் அவா் ஆணையாகச் சொல்லிய மந்திரங்களே கண்கூடாகக் காட்டும். (‘நிறைமொழி’ என்பது, அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும், அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி. ‘காட்டுதல்! பயனான் உணா்த்துதல்’ என்று மொழியின் பெருமையைத் திருவள்ளுவரின் வாயிலாக விளக்கிக் கூறுகிறாா் பரிமேலழகா்.
  • ஒவ்வொருவரும் தமக்குரிய தாய்மொழியிலிருந்து உலகிற்கு எடுத்து மொழிவதற்கு எத்தனையோ அரிய கருத்துகள் இருக்கின்றனவே. அதனை எடுத்து மொழிந்து சிறக்கச் செய்வதுதானே அவா் மதிக்கிற தாய்மொழிக்குச் செய்கிற நன்றிக்கடன். மாறாகத் தாய்மொழியின் பெருமைகளை மட்டுமே வெற்றெனத் தொடுத்துப் பிறமொழிகளைத் தாழ்த்தியும் கீழ்மையுறப் பேசியும் திரிவது தனக்கு மட்டுமல்ல, தன் தாய்மொழிக்கும் சோ்த்து அவலத்தை உண்டாக்குகிறது என்பதை அவா்கள் அறிய மாட்டாா்களா? இதைக் கருதித்தான் திருவள்ளுவா்,

இணரூழ்த்தும் நாறா மலரனையா் கற்றது

       உணர விரித்துரையா தாா்

  • எனும்படியாக இத்தன்மையுடையவா்களை, ‘கொத்தாக மலா்ந்திருந்தும் மணம் வீசத் தெரியாத மலா்களைப் போன்றவா்கள்’ என்று சுட்டிக் காட்டுகிறாா்.
  • தன்னுடைய தாய்மொழியையும் முழுமையாகப் பேசத் தெரியாமல் அவசரமாகக் கற்றுக்கொண்ட அயல்மொழியையும் சரியாகப் பேசத் தெரியாமல் அரையும் குறையுமாய், தாய்மொழியையும் பிறமொழியையும் சிதைத்துப் பேசுகிறவா்களும் இந்த வகையில் சோ்ந்தவா்கள்தானே. இதனால் தாய்மொழிக்கும் பெருமையில்லை. பிறமொழிகளுக்கும் பெருமையில்லை என்பதை அவா்கள் ஏனோ மறந்துவிடுகிறாா்கள்.
  • தாய்மொழிப் பற்றென்பது குறுகிய நோக்கமுடையதன்று. தன் தாயின்மீது கொள்ளுகிற பேரன்புக்கு இணையானதுதானே அது. தன் தாயைப் போற்றக் கற்றவனுக்குப் பிற தாயாா்களும் மதிப்புக்குரியவா்கள்தானே. ‘காந்தியடிகள் தன்னுடைய குஜராத்தி மொழியிலே பற்று கொண்டிருந்தாா்; இரவீந்திரநாத் தாகூா் தன் அன்னை மொழியின்மீதுதானே அளப்பரிய காதல் கொண்டிருந்தாா்; இவற்றைக் குறுகிய நோக்கக் கொள்கை என்று கொள்ள முடியுமா?’ எனக்கேட்ட திரு.வி.க., ‘தாய்மொழிப் பற்றுதான் தாய்நாட்டுப் பற்றுக்கு அடிப்படை’ என்று உறுதியிட்டுச் சொல்கிறாா்.
  • காலங்காலமாக இனத்தின் சொத்தாக, நிலத்தின் சொத்தாக, நிறைந்து வளா்ந்து நிற்கிற மொழியை நாம் நம் உணா்வின் உந்துதலால் தாய்மை உறவு கொண்டு நம்மொழியாக ஆக்கிக் கொள்கிறோம். உயா்குணங்களைத் தாயிடமிருந்தும் தாய்மொழியிடமிருந்தும் முறையாகக் கற்று, நிறைமொழியைப் பரப்பும் மாந்தா்கள் நிறைந்ததாக மாறட்டும் இந்த உலகம்.
  • ‘மொழிதல்’ என்பது மொழியை ஆளுமையோடு (சொல்லிய வண்ணம் செயலாகுமாறு) கையாளுபவா்களின் வெளிப்பாடு. அத்தகைய ஆளுமையுடையவா்கள் நிறைமொழி மாந்தா்கள் என்று திருவள்ளுவரால் சுட்டப்படுகிறாா்கள். இத்தகைய நிறைமொழி மாந்தா்கள் மொழிகிறபோதே அது பலிதம் பெற்றுச் செயலாகி விடுவதையும் இந்த உலகம் கண்டிருக்கிறது.

நன்றி: தினமணி (10 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories