- ‘நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்காக பயிரிட்ட நிலத்தில் நெற்பயிர்களை புல்டோசரால் அழித்தத்தைப் பார்த்தபோது எனக்கு அழுகை வந்தது’ என்று வேதனையுடன் கூறினார் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி.
- இருதரப்பு பிரச்னை தொடா்பாக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தடை விதிக்க கோரி என்.எல்.சி. நிர்வாகத்தின் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென முறையிடப்பட்டது.
- ‘‘என்.எல்.சி. நிர்வாகம் நெற்பயிர்களை அறுவடை செய்யும் வரை காத்திருக்க முடியாதா? ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று கூறிய வள்ளலாரின் ஊருக்கு அருகிலேயே இந்த நிலைமையா?
- நிலம் எடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், பயிர்கள் அழிக்கப்படுவதை ஒரு போதும் ஏற்க முடியாது. இழப்பீடு பெற்றாலும்கூட பயிர்கள் அழிக்கப்படும்போது விவசாயிக்கு கோபம் வரத்தான் செய்யும். இப்போது அமெரிக்காவில் அரிசி வாங்க அலை போதுகின்றனா். இங்கும் அதுபோன்ற நிலை வரக்கூடும்.
- நாம் உயிருடன் இருக்கும் காலத்திலேயே மிகப்பெரிய பஞ்சத்தைச் சந்திக்கப் போகிறோம். அரிசிக்கும், காய்கறிக்கும் அடித்துக் கொள்வதை நம் தலைமுறையிலேயே பார்க்கத்தான் போகிறோம். அப்போது நிலக்கரி பயன்படாது. இதற்காக என்.எல்.சி. நிர்வாகம் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை.
- அமரா் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் கதாபாத்திரங்களின் ஊடே பயணிக்கும் நெய்வேலி, அணைக்கரையை ஒட்டி கொள்ளிடம் நோக்கிப் பாய்ந்தோடும் நதியின் அழகை மறக்க முடியாது. அந்த இடங்கள் எல்லாம் இப்போது பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ‘சோழ நாடு சோறுடைத்து’ என்ற பெருமையை என்.எல்.சி. போன்ற நிறுவனங்களால் அந்தப் பகுதிகள் இழந்து வருகின்றன.
- பூமியைத் தோண்டி நிலக்கரி, மீத்தேன் என ஒவ்வொரு வளத்தையும் எடுத்துக் கொண்டே யிருந்தால் அந்த வெற்றிடங்களை நிரப்புவது எப்படி என்பதுதான் இயற்கை ஆா்வலா்களின் கவலையாக உள்ளது. மேற்கு தொடா்ச்சி மலையில் கை வைத்தால் தமிழகத்துக்கான பருவ மழை சுத்தமாக நின்று விடும். மக்கள் பாதிக்கப்படுவதை அரசு அதிகாரிகள் புரிந்து கொள்வது இல்லை. இயந்திரத்தனமாகச் செயல்படுகின்றனா்’ என்று நீதிபதி கூறினார்.
- அப்போது, மின்சாரத்தின் அவசியம் பற்றி என்.எல்.சி. தரப்பு வழக்குரைஞா் ‘நீதிமன்ற அறையில் பயன்படுத்தப்படும் மின் விளக்குகள், ஏ.சி. போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரம், நிலக்கரியில் இருந்துதான் எடுக்கப்படுகிறது’ என்றார். அவருக்கு பதிலளித்த நீதிபதி, ‘பூமியில் இருக்கக் கூடிய அனைவரும் ஏ.சி. காற்றில் வாழ்வது இல்லை. புங்கைமரக் காற்றிலும், வேப்பமரக் காற்றிலும் இளைப்பாறுபவா்கள்தான் அதிகம் உள்ளனா். இதை அதிகாரிகள் உணரும்படி எடுத்துக் கூற வேண்டும்’ என்றார்.
- நமது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 75 விழுக்காடு மின்சாரம் அனல்மின் நிலையம் மூலமே கிடைக்கிறது. அதற்காக ஆண்டுக்கு சராசரியாக 892 மில்லியன் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. அதில் 220 மில்லியன் டன் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மீதமுள்ள 672 மில்லியன் டன் நமது நாட்டில் வெட்டி எடுக்கப்படுகிறது.
- இதில் முக்கிய பங்கு கடலூா் மாவட்டம் நெய்வேலியில் இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. இந்தியா நிறுவனத்துக்கு உண்டு. பழுப்பு நிலக்கரியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதே இதன் முக்கியப் பணி. நிலக்கரி வெட்டி எடுக்க நெய்வேலியில் மூன்று திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கங்கள் அமைந்துள்ளன. மின்சார உற்பத்திக்கு நான்கு அனல் மின் நிலையங்களும் உள்ளன.
- லாபத்தில் இயங்கிவந்த இந்த நிறுவனம் இப்போது மின் உற்பத்தி, நிலக்கரி வெட்டி எடுப்பு போன்ற பணிகளில் சரிவைச் சந்தித்து வருகிறது. இந்தச் சரிவுக்கு நிலக்கரி தட்டுப்பாடுதான் காரணமாகும். அதனால் இந்த நிறுவனம் இரண்டாவது நிலக்கரிச் சுரங்க விரிவாக்கப் பணியை மேற்கொண்டு நிலக்கரி வெட்டி எடுக்கும் அளவை உயா்த்துவதன் மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறது. என்.எல்.சி. எத்தனையோ விரிவாக்கப் பணிகளை ஓசையே இல்லாமல் செய்துள்ளது. அப்போது எல்லாம் சந்தித்திராத எதிர்ப்பை இப்போது சந்தித்துள்ளது.
- எதிர்ப்பை எதிர்கொண்ட போதிலும் அந்நிறுவனம் எதிர்காலத் திட்டமிடலுடன்தான் பயணிக்கிறது என்கிறார்கள். அதில் ஒன்றுதான் இரண்டாவது சுரங்கத்தின் விரிவாக்கம். இந்தச் சுரங்கத்தை ஒட்டியுள்ள கரி வெட்டி, கத்தாழை, மும்முடிச்சோழகன், கரைமேடு, கீழ் வளையமாதேவி கிராமங்களில்தான் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளப் போகிறது. ஏற்கெனவே இதற்காக இந்தப் பகுதியில் மொத்தம் 603 ஹெக்டோ் நிலம் கையகப் படுத்தப் பட்டுள்ளது.
- இவ்வாறு நிலத்தைக் கையகப்படுத்தினாலும் அங்கு உடனடியாக என்.எல்.சி. விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளவில்லை. அதனால் விவசாயிகள் வழக்கம் போல அந்த நிலத்தில் வேளாண்மைப் பணிகளை மேற்கொண்டு வந்தார்கள். என்.எல்.சி.யும் அதனைக் கண்டு கொள்ளவில்லை.
- ஆனால் கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்திற்குப் பிறகு அந்த நிலத்தில் பயிர் செய்ய வேண்டாம் என என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்தது. என்றாலும் விவசாயிகள் எப்போதும் போல பயிர் செய்து வந்ததாகத் தெரிகிறது. அந்தப் பயிர்களை என்.எல்.சி. நிர்வாகம் அழித்ததால்தான் ஒட்டு மொத்த மக்களும் வெகுண்டு எழுந்தனா் எனத் தெரிகிறது.
- அந்த மக்களின் கவலைக்கு என்ன காரணம்? நெய் வயல்களுக்கு இடையே அமைந்திருக்கும் சின்னஞ்சிறு கிராமங்கள். அவை முப்போகம் நெல் விளையும் பூமி. அந்த அப்பாவி மக்களுக்கு விவசாயம் தவிர, வேறு தொழில் தெரியாது.
- விவசாயப் பணிக்கு நீா் ஆதாரம் பரவனாறு. என்.எல்.சி. சுரங்கப் பகுதியிலிருந்து வெளியேறி வரும் தண்ணீரே பரவனாற்றின் நீா் ஆதாரம். சுரங்கத்தை ஆரத் தழுவி பாய்ந்தோடும் பரவனாறு, மும்முடிச் சோழன், கரிவெட்டி, மதுவானை மேடு வழியாக வாலாஜா ஏரிக்கு வந்து அங்கிருந்து கல்குணம், பெருமாள் ஏரி, பூவாளிக்குப்பம் வழியாக ஆனைக்குப்பம் அருகே வங்கக் கடலில் கலக்கிறது.
- என்.எல்.சி. சுரங்க நீா் பரவனாற்றில் வெளியேற்றப்படுவதால் ஆண்டு முழுவதும் ஆற்றில் நீரோட்டம் இருக்கும். மக்கள், ஆற்றுக் கரைப்பகுதியில் மோட்டார்களை நிறுவி அதில் இருந்து தண்ணீா் எடுத்து விவசாயத்துக்குப் பயன்படுத்தி வந்தார்கள். இதுதவிர வாய்க்கால் பாசனமும் உண்டு.
- என்.எல்.சி. எதிர்காலத் திட்டமிடலாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இரண்டாவது சுரங்கத்தை யொட்டி அமைந்துள்ள விவசாய பூமியை கையகப்படுத்தத் தொடங்கி விட்டது. என்.எல்.சி.யின் நிலக்கரித் தட்டுப்பாடு கடந்த 2022-ஆம் ஆண்டு முதலே தொடங்கி விட்டது. இதனை நிறுவனத்தின் தலைவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
- அதாவது, ‘என்.எல்.சி.யில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஐந்து யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், சுரங்க விரிவாக்கத்திற்கு உடனடியாக 80 ஹெக்டோ் நிலம் தேவைப்படுகிறது’ என்று அவா் கூறினார்.
- இதற்கு அப்போதே எதிர்ப்புகளும் வந்தன. இருப்பினும் என்.எல்.சி. நிறுவனம், ஏற்கெனவே கையகப்படுத்தியிருந்த இரண்டாவது சுரங்கப் பகுதியில் தனது விரிவாக்கப் பணியை மேற்கொண்டது. இப்போது அதனைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதற்காகவே பரவனாற்றின் வழித்தடத்தை மாற்றியமைக்கும் பணியை என்.எல்.சி. நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதற்காகவே 12 கி.மீ. தொலைவிற்கு புதிய வழித்தடம் உருவாக்கப்படுகிறது.
- இவ்வாறாக என்.எல்.சி. தனது பணியை ஏறக்குறைய முடித்துவிட்டது. இப்போது பரவனாறு வழித்தடத்தை மாற்றி அமைத்ததன் காரணமாக கரிவெட்டி, மும்முடிச் சோழகன் உள்ளிட்ட நான்கு கிராமங்கள் தீவுகள் போல மாறிவிட்டன. இதற்கு என்ன தீா்வு? விவசாயிகள் எங்கே போவார்கள்? எனவே வேறு வழியின்றி அவா்கள் போராடுகிறார்கள்.
- 1935-ஆம் ஆண்டு எம். ஜம்புலிங்க முதலியார் என்னும் பெருநிலக்கிழார் அவருடைய நிலத்தில் ஆழ்துணைக் கிணறு தோண்டிய போது நீா் தானாகவே பொங்கி எழுந்தது. அதில் கரித்தூளும் சோ்ந்து வந்தது. அதனை அரசுக்கு அனுப்பி வைத்தார். அப்போது ஆங்கிலேயஆட்சி இருந்ததால் ஆங்கிலப் பொறியாளா்கள் ஆய்வு செய்து வந்தனா்.
- நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பல்வேறு கட்டங்களில் ஆய்வு நடந்து 1954-இல் அங்கு பழுப்பு நிலக்கரி இருப்பது உறுதியானது. 1955-இல் அந்த நிறுவனம் மாநில அரசின் பொறுப்பிலிருந்து மத்திய அரசுக்கு மாற்றப்பட்டது. 1956-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த காமராசரின் இடைவிடாத முயற்சியால் பிரதமா் நேருவால் தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.
- ஏராளமான கிராமங்களையும், முப்போகம் விளையும் விவசாய நிலங்களையும் அழித்தே இந்த நிறுவனம் உருவானது. நிலம் கொடுத்தவா்களுக்கு இழப்பீடும், படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்று காமராசா் நம்பினார். ஆனால் அந்த நம்பிக்கை தொடரவில்லை. இப்போது அந்த நிறுவனம் வடமாநிலத்தவரின் ஏகபோக உரிமையாகி விட்டது என்று கூறுகிறார்கள்.
- ‘அறுபது ஆண்டுகளுக்கு முன் மின்சாரத் தேவைக்காக என்.எல்.சி. நிறுவனம் தமிழ்நாட்டுக்குத் தேவைப்பட்டது. இப்போது தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறிவிட்டது. நிலக்கரி சுரங்கங்கள், அனல்மின் நிலையங்களால் கடலூா் மாவட்டத்தின் சுற்றுச்சூழலுக்கும், மக்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம். எனவே இனிமேல் இந்த நிறுவனம் தேவையில்லை’ என்று போராட்டக்காரா்கள் கூறுகின்றனா்.
- மின்சாரத்தை பல வழிகளில் தயாரிக்க முடியும். ஆனால் உணவு தயாரிக்க ஒரே வழிதான் உள்ளது. நிலங்களில் விவசாயம் செய்து உணவு தானியங்களை உற்பத்தி செய்தால்தான் மக்கள் பசியின்றி வாழ முடியும். நிலங்களை அழித்து மின்சாரம் தயாரிக்கும் கொள்கை மனித குலத்துக்கு எதிரானது என்பதை அரசுகள் உணர வேண்டும்.
நன்றி: தினமணி (11 – 08 – 2023)