TNPSC Thervupettagam

நிலம் கையகப்படுத்துவதில் நிகழ்த்தப்படும் அநீதி

October 24 , 2024 31 days 109 0

நிலம் கையகப்படுத்துவதில் நிகழ்த்தப்படும் அநீதி

  • ‘நிலச் சீர்திருத்​தம்’, ‘நிலமற்​றவர்​களுக்கு நிலம் வழங்குவது’ என்கிற முழக்​கங்கள் எல்லாம் இன்றைக்கு அர்த்​தமிழந்​து​வருகின்றன. அநேகமாக நாடு முழுவதுமே ‘நிலச் சீர்திருத்தம்’ என்ற வார்த்தை புழக்​கத்தில் இல்லாத​தாகவே ஆகிவிட்டது. மாறாக, ‘நிலக்கு​வியல்’ என்னும் அவலம்தான் மீண்டும் அரங்கேறிவரு​கிறது. என்ன நடக்கிறது?

மாறிய நிலவரம்:

  • ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்கிற முழக்கம் நாட்டின் விடுதலைப் போராட்​டத்தோடு இணைந்​திருந்த முழக்கம். தெலங்கானா புரட்சி, பழங்குடிகளின் நில வெளியேற்​றத்​துக்கு எதிரான போராட்​டங்கள், வினோபா பாவேவின் பூமிதான இயக்கம் போன்றவை எல்லாம் இதன் விளைவு​கள்​தான்.
  • விடுதலைக்குப் பிறகு பல்வேறு மாநிலங்​களில் நிலச் சீர்திருத்தச் சட்டம் நிறைவேற்​றப்​பட்டது. தமிழ்​நாட்டில் காமராஜர் முதலமைச்சராக இருந்த காலத்​தில், தமிழ்நாடு நிலச் சீர்திருத்த (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் 1961 செப்டம்​பரில் நிறைவேற்​றப்​பட்டது. இச்சட்​டத்​தில், 5 பேர் கொண்ட குடும்பத்​துக்கு 30 தர (Standard) ஏக்கர் என்று உச்சவரம்பு தீர்மானிக்​கப்​பட்​டிருந்தது. ஏராளமான விதிவிலக்​குகள் அளிக்​கப்​பட்​டிருந்​த​தால், மிச்ச நிலங்​களைப் பெரிதாக எடுக்க முடிய​வில்லை.
  • மீண்டும் திமுக ஆட்சிக் காலத்தில் 1971, 72, 73 ஆண்டு​களில் நிலச் சீர்திருத்தத் திருத்தச் சட்டம் நிறைவேற்​றப்​பட்டது. இதில், 15 தர ஏக்கர் என்று உச்சவரம்பு குறைக்​கப்​பட்டது. அத்துடன், ஏற்கெனவே, 1961ஆம் ஆண்டு சட்டத்தில் கொடுக்கப்​பட்​டிருந்த பல விதிவிலக்​கு​களும் ரத்துசெய்​யப்​பட்டன. இச்சட்​டத்தின் நோக்கம், உச்சவரம்​புக்கு மேற்பட்ட நிலங்​களைக் கையகப்​படுத்தி நிலமற்றவர்​களுக்கு நிலம் வழங்குவது, அதன் மூலம் விவசாய உற்பத்​தியைப் பெருக்குவது என்று குறிப்​பிடப்​பட்​டுள்ளது.
  • ஆனால், 2024 வரை உபரி என்று அறிவிக்​கப்​பட்டது 2,08,442 ஏக்கர் மட்டுமே. இதில், வழங்கப்பட்ட நிலம் 1,90,723 ஏக்கர். பயனாளிகள் எண்ணிக்கை 1,50,935 பேர். கடைசியாக நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் நிலம் வழங்கப்​பட்டது 2011-12இல் 635 ஏக்கர். அதற்குப் பிறகு, நிலச் சீர்திருத்தத் துறைக்​கென்று இருந்த தனி அலுவலகம், தனி அதிகாரிகள் எல்லாம் இப்போது இல்லை. ஒரே ஒரு ஆணையர், ஒரு அலுவலகம் மட்டுமே சென்னையில் உள்ளது.

அரசு இயந்திரத்தின் அலட்சியம்:

  • கடந்த செப்டம்பர் மாதம் உபரி நிலம் சம்பந்​தப்பட்ட ஒரு பிரச்​சினையில் தலையிட நேர்ந்தது. திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்​பட்டி ஒன்றியம் தும்பலப்​பட்டி என்கிற கிராமத்தில் உள்ள அருந்ததியர் சமூக மக்கள் 37 குடும்​பங்​களுக்கு 37 ஏக்கர் உபரி நிலம் 1980ஆம் ஆண்டு நிலஒப்​படைப்பு வழங்கப்​பட்​டுள்ளது. நிலப்​பிரபு தரப்பில் நீதிமன்​றத்தில் வழக்குத் தொடுக்​கப்​பட்டு நீண்ட​காலம் நடைபெற்று, 2021ஆம் ஆண்டு உபரி நிலம்தான் என்று தீர்ப்பு அளிக்​கப்​பட்டது. இந்நிலை​யில், 2022ஆம் ஆண்டு நிலஒப்​படைப்பை ரத்து செய்வதாக அரசால் அறிவிக்​கப்​பட்டது. ஒப்படைப்பு பெற்றவர்கள் விவசாயம் செய்ய​வில்லை என்று அதிகாரிகள் தரப்பில் காரணம் சொல்லப்​பட்டது.
  • உபரி நிலமா, இல்லையா, அரசு எடுத்​துக்​கொண்டது சரியா என்று உயர் நீதிமன்​றத்தில் வழக்கு நடைபெற்றுவந்த நிலையில், ஒப்படைப்பு பெற்றவர்கள் விவசாயம் எப்படிச் செய்ய முடியும்? பிறகு, நில ஒப்படைப்பு பெற்றவர்கள் மதுரை உயர் நீதிமன்​றத்தில் வழக்குத் தொடுத்து, அரசின் ரத்து உத்தர​வுக்குத் தடை பெற்றனர். விவசாயம் செய்ய முடியாமல் போனதற்கு வறட்சி, பாசன வசதி இல்லாதது, முதலீட்டுக்கு உரிய பணம் இல்லாதது எனப் பல காரணங்கள் இருக்​கலாம்; அதனால், ஒப்படைப்பு ரத்து என்பது ஏற்கத்​தக்கது அல்ல என்று நீதிமன்றம் குறிப்​பிட்டது.
  • இதுபோன்ற பல வழக்குகள் நீதிமன்​றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலை​யில், நிலமற்​றவர்​களுக்கு நிலம் வழங்க வேண்டும் என்ற விருப்பம் அரசுக்கு இல்லை என்றே கருத வேண்டி​யிருக்​கிறது. அரசியல் உறுதிப்​பாடும், நிலம் வழங்க வேண்டும் என்கிற நோக்கமும் இருந்திருந்தால் இத்தகைய வழக்குகளை எப்போதோ முடித்​திருக்க முடியும்.
  • அதிகாரி​களின் அலட்சியம், அரசு வழக்கறிஞர்​களின் அக்கறை​யின்மை, நிலத்தை உரிமை கொண்டாடு​பவர்​களின் செல்வாக்​குக்குத் தங்களை உட்படுத்​திக்​கொள்வது போன்ற காரணங்​களால் நிலச் சீர்திருத்தச் சட்டத்தை நடைமுறைப்​படுத்து​வதில் சிக்கல் ஏற்படு​கிறது.
  • இதே காலக்​கட்​டத்​தில், கொடுத்த நிலத்தின் அளவைவிட அரசு பறித்த நிலத்தின் அளவு பல மடங்கு என்பதில் சந்தேகமில்லை. சிறப்புப் பொருளாதார மண்டலம் (SEZ), நிலவங்கி (Land Bank), சிட்கோ, சிப்காட், தேசிய நெடுஞ்​சாலைகள், பரந்தூர் பசுமை விமான நிலையம் எனப் பல்வேறு பெயர்​களில் விவசா​யிகளிட​மிருந்து நிலம் அரசால் கட்டாயப்​படுத்தி பறிக்​கப்​படு​கிறது. மிகமிகக் குறைவாக நிலம் வைத்துள்ள பட்டியல் சாதியினர், பழங்குடி​யினரும் இதில் தப்பவில்லை.
  • பட்டியல் சாதி மக்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட பஞ்சமி நிலம் அம்மக்கள் கையில் இல்லை. அதை மீட்டு மீண்டும் பட்டியல் சாதி மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத் தீர்ப்புகள், பல்வேறு அரசு ஆணைகள் இருந்தும் இதுவரை நிலம் மீட்கப்​பட​வில்லை. பஞ்சமி நிலத்தை மீட்டு மீண்டும் ‘பஞ்சமர்கள்’ என்று ஒடுக்​கப்பட்ட பட்டியல் சாதி மக்களிடம் ஒப்படைக்க, 8.10.2015 அரசாணை நிலை எண் 357 மூலம் ஓர் உயர்நிலைக் குழு உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்​படையில் அமைக்​கப்​பட்டது.
  • அந்தக் குழு 2.5 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை அடையாளம் கண்டிருப்​ப​தாகச் செய்தி வெளியானது. ஆனால், 2.5 ஏக்கர்கூட பட்டியல் சாதி மக்களுக்கு மீண்டும் வழங்கப்​பட​வில்லை. நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி, மக்களை ஆக்கிரமிப்​பாளர்கள் என்று குற்றம்​சாட்டி, அவர்களின் குடியிருப்பு​களி​லிருந்து வெளியேற்று​வதில் காட்டும் தீவிரத்தில் ஒரு சதவீதம்கூட, பஞ்சமி நில அபகரிப்​பாளர்களை வெளியேற்று​வதில் இந்த ஆட்சி​யாளர்கள் அக்கறை செலுத்தவில்லை. அரசு பல்வேறு காரணங்​களைக் கூறி நல்ல விவசாய நிலங்​களைப் பறிப்​ப​தால், விவசா​யிகளின் வாழ்வா​தாரம் பறிபோவது மட்டுமல்​லாமல், வேளாண் உற்பத்​தி​யிலும் பெரும் சரிவு ஏற்படு​கிறது.

பிரிட்டிஷ் காலம் திரும்​பு​கிறதா?

  • ‘நிலம் கையகப்​படுத்​துதல், நியாயமான இழப்பீடு, மறுவாழ்வு மற்றும் மறுகுடியேற்றம் சட்டம் 2013’ நாடாளு​மன்​றத்தில் நிறைவேற்​றப்​பட்டு, நாடு முழுவதற்​குமான சட்டமாகக் கருதப்​படு​கிறது. ஆனால், பல மாநில அரசாங்​கங்கள், இந்த மத்திய சட்டத்தை ஒதுக்​கி​வைத்து​விட்டு, மாநிலத்தில் நிறைவேற்​றப்பட்ட சட்டத்தைப் பயன்படுத்தி, நிலத்தைக் கையகப்​படுத்துவது விவசா​யிகளுக்​கும், அந்த நிலத்தைச் சார்ந்து வாழும் மக்களுக்கும் இழைக்​கப்​படும் பெரும் துரோகம். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ‘நிலம் கையகப்​படுத்​துதல் சட்டம் 1894’ நிறைவேற்​றப்​பட்டு நடைமுறையில் இருந்தது. இந்தச் சட்டம் ஆட்சி​யாளர்​களுக்கு வானளாவிய அதிகாரத்தை வழங்கு​கிறது என்பத​னால்தான் 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்​படுத்​துதல் சட்டம் கொண்டு​வரப்​பட்டது.
  • மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தை நினைவு​படுத்தும் வகையில் அரசின் செயல்​பாடுகள் இருக்​கின்றன.
  • உதாரணத்​துக்கு, தமிழ்​நாட்டில் ‘தொழிற் சாலைகளுக்கு நில எடுப்புச் சட்டம் 1997’ஐப் பயன்படுத்​தித்தான் அனைத்துத் திட்டங்​களுக்கும் நிலம் கையகப்​படுத்துவதை வழக்கமாக வைத்திருக்​கிறார்கள். இந்தச் சட்டத்தில் நில உரிமை​யாளர்கள் கருத்துத் தெரிவிக்​கலாமே தவிர, அதை அரசு ஏற்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால், 2013ஆம் ஆண்டு சட்டத்தில் பெரும்​பான்​மையான நில உரிமை​யாளர்கள் நிலம் தர மறுப்பு தெரிவித்​தால், அதை ஏற்று அரசு திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும்.
  • கூடுதல் இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சி​யருக்கு இச்சட்​டத்தில் அதிகாரம் அளிக்​கப்​பட்​டுள்ளது. என்ன நோக்கத்​துக்காக நிலம் எடுக்​கப்​பட்டதோ, அதற்குப் பயன்படுத்​தாமல் போனால் நிலத்தைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும். நிலத்தைச் சார்ந்து வாழ்ந்த குத்தகை​தா​ரர்கள், விவசாயத் தொழிலா​ளர்கள் ஆகியோரின் மறுவாழ்வுக்கான திட்டங்கள் இதில் உண்டு. இவை எதுவும் 1997ஆம் ஆண்டு சட்டத்தில் இல்லை. விவசாயி களுக்கும் மக்களுக்கும் ஓரளவு சாதகமான சட்டத்தைப் புறந்​தள்​ளி​விட்டு, ஆட்சி​யாளர்கள் விருப்​பத்​துக்கு ஏற்ப ஒரு சட்டத்தைப் பயன்படுத்தி நிலவெளி​யேற்றம் செய்வது விவசா​யிகள் மீது தொடுக்​கப்​படும் கொடூரமான தாக்குதல் ஆகும்.
  • பல்வேறு வளர்ச்சித் திட்டங்​களுக்கு நிலம் தேவை என்பதில் இருவேறு கருத்​துக்கு இடமில்லை. ஆனால், அதில் ஒரு வரன்முறை கடைப்​பிடிக்​கப்பட வேண்டும். பல லட்சம் ஏக்கர் அரசுக்குச் சொந்தமான தரிசு நிலம், விவசா​யத்​துக்கு லாயக்கற்ற நிலம் போன்ற​வற்றைத் தொழிற்​சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்​களுக்குப் பயன்படுத்​தலாம், நஞ்சை நிலங்களை வேறு பணிகளுக்குப் பயன்படுத்துவதை அரசு தடை செய்ய வேண்டும்.
  • வேறுவழியே இல்லை என்கிற நிலையில், நிலத்தைக் கையகப்​படுத்​தும்போது சந்தை மதிப்பில் கூடுதல் இழப்பீடு வழங்குவதன் மூலம் நிலத்தை இழப்பவர்​களின் மறுவாழ்வு உத்தர​வாதப்​படுத்​தப்பட வேண்டும். அல்லது, அத்திட்​டத்தில் நிலம் இழப்பவர்​களைப் பங்கு​தா​ரராகச் சேர்த்து நிரந்​தரமான வருமானத்​துக்கு வழிசெய்ய வேண்டும்.
  • நில உரிமை​யாளர்​களின் ஒப்புதல் என்பது கட்டாயம். மாறாக, காவல் துறையைப் பயன்படுத்தி மிரட்டுவது, பொய்வழக்கு போடுவது, வருவாய்த் துறையைப் பயன்படுத்தி அச்சுறுத்துவது, வலுக்​கட்​டாயமாக நிலத்தைக் கையகப்​படுத்துவது போன்ற செயல்கள் ஏற்புடையவை அல்ல. விவசாயிகளின் ‘நில உரிமை’ மதிக்​கப்பட வேண்டும். அதுவே அவர்களின் அடையாள​மாக​வும், ஒரே சொத்தாகவும் இருக்​கிறது என்பதை அரசு கவனத்தில் கொள்வது அவசியம்.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories