- தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளான ஏப்ரல் 21 அன்று, 17 மசோதாக்கள் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் 2023 (Tamil Nadu Land Consolidation (for special projects) Act 2023) மிக ஆபத்தானது எனக் கருதப்படுகிறது.
- நிலத்தைக் கையகப்படுத்துவது தொடர்பாக, நிலம் கையகப்படுத்துதல் சட்டம் (2013), தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டம் (1978), தமிழ்நாடு தொழில் துறை நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டம் (1997), தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டம் (2001) என ஏற்கெனவே பல சட்டங்கள் உள்ளன. இந்நிலையில், புதிதாக ஒரு சட்டம் எதற்கு எனும் கேள்வி எழுகிறது.
கையகப்படுத்தும் அதிகாரம்:
- பொதுவாக, அரசு நிலம் என்று சொன்னாலும் அது பல்வேறு துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுப் பணித் துறை, நீர்ப்பாசனத் துறை, கால்நடைத் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, கல்வித் துறை, நகராட்சி நிர்வாகம், மருத்துவத் துறை எனப் பல துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை - தேவை என்று அரசு கருதினால் - ஒருங்கிணைத்து கையகப்படுத்திக்கொள்வதற்கு அரசுக்கு இந்தப் புதிய சட்டம் அதிகாரம் அளிக்கிறது. 250 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு தேவைப்படும் திட்டங்களுக்கு இச்சட்டம் பொருந்தும்.
- ஒரு திட்டம் மாநிலத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அரசு கருதினால் போதும். அதை ஒரு சிறப்புத் திட்டமாக அறிவித்துச் செயல்படுத்தலாம். நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு முன்பாக அறிவிப்பு வெளியிடுதல், கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்துதல் போன்ற சம்பிரதாயங்கள் எல்லாம் உண்டு.
- ஆனால், நிபுணர் குழுவின் முடிவே இறுதியானது. திட்டத்துக்கான 250 ஏக்கருக்கு உள்பட்ட பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நிலம் இருந்தால் அதுவும் இச்சட்டத்தின்படி கையகப் படுத்தப் படும். ஆட்சேபம் இருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம். இந்த மேல்முறையீடு எல்லாம் எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதுதான் கேள்வி.
எது சிறப்புத் திட்டம்?
- பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நிலம் கையகப்படுத்துதல் சட்டம் (1894) உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருந்தது. விடுதலைக்குப் பிறகும் 2013 வரை இந்தச் சட்டம்தான் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டுவந்தது. ஏனென்றால், இந்தச் சட்டம் அரசுக்கு வானளாவிய அதிகாரத்தை வழங்கியது. ஏதேனும் ஒரு நிலம் தேவை என்று கருதினால், அதை அரசு கையகப் படுத்திக் கொள்ளும்.
- அதற்கான இழப்பீட்டுத் தொகை எவ்வளவு என்பதையும் அரசே அறிவிக்கும். ஏற்பில்லை எனில், நீதிமன்றத்துக்குத்தான் செல்ல வேண்டும். நீதிமன்றம் இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து உத்தரவிட்டால், அதை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யும். வழக்கு விசாரணை நீண்டு கொண்டே செல்லும். இறுதியில் நிலத்தையும் இழந்து நிலத்துக்கான பணத்தையும் பெற முடியாமல் மரணமடைவதுதான் விவசாயிகளின் நிலை.
- நில உரிமையாளர்களுக்குப் பாதுகாப்பு, நியாயமான இழப்பீடு, மறுவாழ்வு ஆகியவற்றை உத்தரவாதம் செய்யும் வகையில்தான் 2013இல் நிலம் கையகப்படுத்துதல் சட்டம் கொண்டு வரப் பட்டது. இந்தச் சட்டம் இருந்தாலும், பல திட்டங்களுக்கு மாநில அரசுகள் மற்ற சட்டங்களைப் பயன்படுத்தி நிலங்களைக் கையகப்படுத்தும் நிலை தொடர்கிறது. உதாரணத்துக்கு, தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்கு நிலத்தைக் கையகப்படுத்த 1997ஆம் ஆண்டு சட்டம் பயன்படுத்தப்படுகிறது.
நீர்நிலைகள் அழியும்:
- இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் சிறப்புத் திட்டங்களுக்கானது என்று சொல்லப் பட்டாலும் எவையெல்லாம் சிறப்புத் திட்டங்கள் என்று வரையறுக்கப்படவில்லை. எனவே, மாநில அரசு நினைத்தால் எந்தவொரு திட்டத்தையும் சிறப்புத் திட்டம் என்று அறிவிக்க முடியும்.
- உதாரணத்துக்கு, பரந்தூர் விமானநிலையத் திட்டத்துக்குச் சுமார் 4,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இங்கு 13 ஏரிகள், வரத்து வாய்க்கால்கள், ஆறுகள் உள்ளன. பல்வேறு துறைகளுக்குச் சொந்தமான நிலங்களும், மக்களுக்கு, விவசாயிகளுக்குச் சொந்தமான நிலங்களும் உள்ளன. புதிய சட்டத்தின் மூலம் இந்நிலங்களைக் கையகப் படுத்தினால் ஏற்கெனவே உள்ள சட்டரீதியான தடைகளை ஒன்றுமில்லாமல் செய்துவிட முடியும்.
- ‘நீர்நிலைகளைப் பாதுகாப்பது’ என்பதும் புதிய சட்டத்தின் நோக்கமாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால்,கால்வாய்கள், வரத்து வாய்க்கால்கள், நீர்பிடிப்புப் பகுதிகள் பாதுகாக்கப் பட, இச்சட்டத்தில் இடமில்லை. நீர்நிலைகளை மட்டும் பாதுகாத்து அதற்குத் தண்ணீர் வருவதற்கான வழிகளையெல்லாம் அரசு ஆக்கிரமித்துக்கொண்டால், காலப் போக்கில் நீர்நிலைகள் அழிவது மட்டுமே ஒரே வழி.
- ஒரு வாதத்துக்காக, நீர்நிலைகள் பாதுகாக்கப்படுகின்றன என்று வைத்துக்கொண்டாலும் தொழிற்சாலை வளாகம், வணிக வளாகம், பல்கலைக்கழகங்களுக்குள் உள்ள அரசுக்குச் சொந்தமான நீர்நிலைகளை மக்கள் பயன்படுத்த முடியுமா? பொதுச்சொத்தாகவும் மக்களின் பயன்பாட்டிலும் இருந்துவந்த நீர்நிலைகள் தனியாருக்குச் சொந்தமான குளங்கள், ஏரிகளாக மாறிவிடும். விவசாயிகளுக்கு நீர்நிலைகள் மீதுள்ள உரிமைகள் பறிபோகும்; விவசாயம் பாதிக்கப்படும்.
- மேலும் நீர்நிலைகள், நீராதாரங்களைப் பாதுகாக்க நீதிமன்றங்கள் மிகக் கடுமையான பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன. அத்துடன் கடந்த ஆண்டு நடந்த உயிர்ப்பன்மைக்கான உச்சி மாநாட்டில் 2030ஆம் ஆண்டுக்குள் உலகின் 30% நிலத்தைப் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்க வேண்டுமென்கிற ஒப்பந்தத்தில் உலக நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இது குறித்தெல்லாம் அரசு கடுகளவும் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.
- ஏற்கெனவே, பல்வேறு தனியார் பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்களுக்கு உள்பட்ட பகுதியில் உள்ள அரசுக் குளங்கள் அவர்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. மக்கள் அவற்றைப் பயன்படுத்த முடிவதில்லை. இந்நிலையில், சட்டப்படியே தனியாரிடம் ஒப்படைக்கப் பட்டு விட்டால், மக்கள் குளங்களைக் கண்ணால்கூடப் பார்க்க முடியாது. உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான இடத்தை அரசு எடுத்துக்கொள்ளும்போது, பொது இடம் என்பது இல்லாமல் போய்விடும். மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்த மக்கள் பயன்பாட்டுக்கான நிலம் என்பதே இருக்காது.
பின்னணி என்ன?
- நில உரிமை, குடியிருப்பு உரிமை, வாழ்வாதாரம் ஆகியவற்றைப் பாதுகாத்துக்கொள்வது, சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஆகியவை தமிழ்நாட்டு மக்களிடம் பரவலாக இருக்கிறது. இது ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பம்போல் செயல்படுவதற்குத் தடையாக இருக்கிறது. நெய்வேலி நிலக்கரிச் சுரங்க விரிவாக்கத்துக்கு நிலம் எடுப்பது, பரந்தூர் விமான நிலையம், சிப்காட், சிட்கோ மூலம் தொழிற்சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்துவது, இவற்றையெல்லாம் எதிர்த்துத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
- ஏற்கெனவே உள்ள சட்டங்களில் நில உரிமையாளர்களுக்குப் பாதுகாப்பு, கிராம சபைத் தீர்மானம், நீர்நிலைகளைப் பாதுகாப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல அம்சங்கள் உள்ளன. இவை அனைத்தையும் புறந்தள்ளி அரசு நினைத்தபடி செயல்பட அதிகாரம் வழங்கக் கூடியது தான், புதிய நில ஒருங்கிணைப்புச் சட்டம். இது போன்ற ஒரு சட்டத்தை வேறு எந்த மாநிலமும் கொண்டுவந்ததாகத் தெரியவில்லை.
- அரசுத் திட்டங்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்தும்போது விவசாயிகளின் ஒப்புதல் பெற்றுச் செயல்படுத்தப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அந்த வாக்குறுதிக்கு நேரெதிரான இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அது எதிர்காலத் தலைமுறைகளையும், தமிழ்நாட்டின் நலனையும் நிச்சயம் பாதிக்கும். தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிக்கும் சட்டம் பாதகமானது என்று பலத்த எதிர்ப்பு எழுந்தவுடன் திரும்பப் பெறப்பட்டதைப் போல, இந்த நில ஒருங்கிணைப்புச் சட்டத்தையும் தமிழ்நாடு அரசு திரும்பப் பெறுவதே எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்துவதற்கான வழி.
நன்றி: தி இந்து (12 – 05 – 2023)