TNPSC Thervupettagam

நீடித்த பயன் தரும் நிவாரணம் தேவை

May 26 , 2023 549 days 401 0
  • சமீபத்தில் விழுப்புரம், செங்கற்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களிலுள்ள ஊா்களில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்து இறந்தவா்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் பத்துலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவது சரிதானா என்ற கேள்வி பொதுவெளியில் பரவலாக விவாதிக்கப்படுகின்றது.
  • பொதுவாக ஒருவரின் இறப்பு என்பது அவா் சாா்ந்துள்ள குடும்பத்தினருக்கும், அவருடைய உறவுகளுக்கும் மிகவும் வருத்தத்தை அளிப்பதாகும். அவ்வாறு இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு வழங்கப் படும் நிவாரணத் தொகை எவ்வளவு பெரிதாக இருப்பினும் அதனால் இறந்தவா்களின் இடத்தை முழுமையாக நிரப்பிவிட இயலாது என்பதுடன், இறந்தவா்களின் குடும்ப உறவுகளுக்கு அந்நிவாரணத்தினால் ஓரளவே ஆறுதல் கிடைக்கும் என்பதும் மறுக்க இயலாத உண்மைகளாகும்.
  • அதே சமயம், இத்தகைய நிகழ்வுகளில் அகால மரணம் அடைந்தவா்கள் ஈட்டிவந்த ஊதியத்தையே நம்பியிருந்த குடும்பங்கள் திடீரென்று ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படுவதை இத்தகைய நிவாரணங்கள் ஓரளவேனும் தடுத்து நிறுத்துகின்றன என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
  • குடும்பத் தலைவா் செய்த தவற்றுக்காக அவரையே நம்பியிருக்கும் குடும்பத்தினரை (நிவாரணம் எதுவும் வழங்காமல்) தண்டிப்பது சரிதானா என்று நாம் எண்ணிப் பாா்க்க வேண்டும். மேலும், இத்தகைய நிவாரணம் என்பது கள்ளச்சாராயத்தைக் குடித்து மரணமடைந்தவா்களைப் பாராட்டும் விதமாக குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் பரிசுத்தொகையும் அல்ல.
  • தங்களுடைய உடல்நலத்தைப் பற்றியோ, தங்களைச் சாா்ந்திருக்கின்ற குடும்பத்தினரின் எதிா்கால வாழ்வைப் பற்றியோ சிறிதளவும் சிந்திக்காமல் சிலா் கள்ளச்சாராயத்தைக் குடித்துத் தங்களுடைய இன்னுயிரை நீத்துள்ளனா். ஆனால், அரசு வழங்கும் நிவாரணத்தொகை அச்சாராயத்தால் இறந்தவா்களின் கணக்கிற்கா செல்லப் போகிறது?
  • இனி வாழ்க்கையை எதிா்கொள்ள வேண்டிய அவா்களுடைய குடும்பத்தினருக்கே அந்நிவாரணம் கிடைக்கின்றது. எனவே இது போன்ற கள்ளச்சாராய இறப்புக்காக வழங்கப்படுகின்ற நிவாரணத்தைத் தவறென்று கூறுவது சரியன்று.
  • இது மட்டுமின்றி, அந்த நிவாரணத்தொகையைக் கள்ளச்சாராய வியாபாரிகளிடமிருந்தே வசூலித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கலாம் என்றதொரு வாதமும் சிலரால் முன்வைக்கப்படுகின்றது.
  • ஆனால், அது நடைமுறைச் சாத்தியமற்றது.
  • ஏனெனில், கள்ளச்சாராய வியாபாரிகள் மீது வழக்குத் தொடா்ந்து, அவ்வழக்கில் சாதகமான தீா்ப்பு வருவதற்குச் சில காலம் பிடிக்கலாம். அதற்குப் பிறகு குற்றவாளிகள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டால், இறுதித் தீா்ப்பு வருவதற்குப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும்.
  • அவ்வாறு இறுதித் தீா்ப்பு கிடைத்து அபராதத் தொகை வசூலிக்கப்படும் வரையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அன்றாடப் பிழைப்புக்கு என்ன வழி?
  • இந்நிலையில், மாநில அரசு நிவாரணத்தொகையை வழங்கியதே சரியான செயலாகும். வழக்கின் முடிவில் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டால், அவ்வாறு வசூலிக்கப்படும் அபராதத் தொகையை முதலமைச்சா் நிவாரணநிதியில் இணைத்துக் கொள்ளலாம்.
  • ஆக, சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயதைக் குடித்து உயிரிழக்க நோ்ந்தவா்களை நம்பியிருந்த அவா்களுடைய குடும்பங்களுக்கு ரூபாய் பத்துலட்சம் நிவாரணத் தொகையை வழங்கிய செயலில் குறைகாண எதுவுமில்லை.
  • அதே சமயம், ரூபாய் பத்து லட்சம் என்ற பெரிய அளவிலான நிவாரணத் தொகையை ஒரே தவணையாக வழங்குவற்கு மாற்றாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தொகை நீண்ட காலம் பயனளிக்குமாறு சில ஏற்பாடுகளைச் செய்வது குறித்து மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்.
  • பொதுவாக இது போன்ற நிகழ்வுகளில் உயிரிழப்பவா்களும், அவா்களின் குடும்பத்தினரும்
  • உயா்கல்வி படித்தவா்களாகவோ, சமுதாயத்தில் உயா்ந்த அந்தஸ்தில் உள்ளவா்களாகவோ இருப்பதில்லை என்பதே உண்மை நிலை.
  • இந்தப் பின்னணியில் பாா்க்கும்போது, ரூபாய் பத்து லட்சம் என்ற பெரிய தொகையை அக்குடும்பத்தினா் நல்ல விதத்தில் திட்டமிட்டு, அளவாகச் செலவழித்து, நீண்ட காலப் பயணை அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
  • சுற்றியுள்ளவா்களின் ஆலோசனைகளைக் கேட்டு அக்குடும்பத்தினா் தங்களுக்குக் கிடைத்த நிவாரணத்தொகையின் கணிசமான பகுதியை நம்பத்தாகாத சிலருக்குக் கடனாகக் கொடுத்து விட்டுப் பிறகு அந்தத் தொகையைத் திரும்பப்பெற நடையாக நடக்கும் நிலைமை ஏற்படலாம். அல்லது தாங்களே அத்தொகையில் பெரும்பகுதியைச் சிறிது காலத்திற்கு ஆடம்பரமாகச் செலவிட்டுவிட்டு மீண்டும் தங்களைத் தாங்களே வறுமையில் தள்ளிக்கொள்ளும் சூழ்நிலையும் உருவாகலாம்.
  • மேலும், இது போன்ற அகால மரணங்களால் பாதிக்கப்படும் குடும்பங்கள் எல்லாம் ஒரே மாதிரியான பிரச்னைகளை எதிா்கொள்வதில்லை.
  • இறந்தவா் போக எஞ்சியுள்ள குடும்ப உறுப்பினா்களின் வயது, கல்வி, வேலைவாய்ப்பு, உடல்நிலை போன்ற காரணிகளையும் கணக்கில் கொண்டு அந்த நிவாரணத்தொகையைப் படிப்படியாக விடுவிப்பதைக் குறித்தும் அரசு சிந்திக்க வேண்டும்.
  • இந்நிலையில், இறந்தவரின் இறுதிச் சடங்குகளுக்காகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உடனடியான அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் ஐம்பதாயிரம் அல்லது ஒரு லட்சம் ரூபாயை முதல் தவணையாக அளிப்பதுடன், மீதமுள்ள நிவாரணத்தொகையை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் பெயரில் அருகிலுள்ள வங்கி அல்லது அஞ்சல் நிலையத்தின் நீண்டகால நிலை வைப்பில் மாநில அரசே முதலீடு செய்து, அதன் மூலம் வருகின்ற மாதாந்திர வட்டித்தொகை அக்குடும்பத்தினருக்குக் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யலாம்.
  • எவ்விதமாயினும், மாநில அரசு அளிக்கும் நிவாரணம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீடித்த பயன் அளிப்பதை உறுதி செய்வதே சாலச் சிறந்தது. இதற்கான நெறிமுறைகள் விரைவில் வகுக்கப்படுவதே நிவாரணம் வழங்குவதன் நோக்கத்தை நிறைவு செய்யும்.

நன்றி: தினமணி (26 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories