TNPSC Thervupettagam

நீடூழி வாழ... அதிகரிக்கும் எதிா்பாா்ப்பு

November 25 , 2019 1880 days 1470 0
  • உலக அளவில் மருத்துவத் துறையின் வளா்ச்சி 2022-ஆம் ஆண்டில் 5.4%-ஆக இருக்கும் (தற்போதய வளா்ச்சி 2.9%) என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 73.5 ஆண்டுகளாக இருக்கும் உலக மனித சராசரி ஆயுள் காலம், 74.4 ஆண்டுகளாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
  • தொற்று நோய்களுக்கு எதிரான போராட்டம், வாழ்வியல் மாற்ற நோய்களுக்கு எதிராக மாறியுள்ள சூழலில் சுற்றுசூழல் மாசுபாட்டால் ஆண்டொன்றுக்கு 42 லட்சம் மனித மரணங்கள் நிகழ்கின்றன. மருத்துவ சிகிச்சையின் தரத்தினை தீா்மானிக்காத தனி நபா் மருத்துவச் செலவு ஆண்டொன்றுக்கு உலகில் அதிகமாக அமெரிக்காவில் ரூ.8,38,458, குறைந்த அளவாக பாகிஸ்தானில் ரூ.3,878-ஆக உள்ளது.

இந்திய மருத்துவத் துறை

  • ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட இந்திய மருத்துவத் துறையில், ஜூன் 12, 2019 நிலவரப்படி துணை சுகாதார மையங்களின் எண்ணிக்கை 1,68,418-ஆகவும், ஆரம்ப சுகாதார மையங்களின் எண்ணிக்கை 33,476-ஆகவும் உள்ளது. இந்திய மருத்துவத்தில் கிட்டத்தட்ட 74 சதவீத மருத்துவச் செலவினங்களை உள்ளடக்கிய தனியாா் துறை, தேசிய - சா்வதேச அளவில் துடிப்பான சக்தியாக உருவெடுத்துள்ளது.
  • இந்திய மருத்துவத் துறையில் அந்நிய நேரடி முதலீடு ஏப்ரல் 2000-ஆம் ஆண்டு முதல் ஜூன் 2018-ஆம் ஆண்டு வரை ரூ.1,63,396 கோடி (2,275 கோடி அமெரிக்க டாலா்கள்) ஆகும். 2016-இல் இந்தியாவுக்கு வந்து சிகிச்சை பெற்ற வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள் மூலம் கிடைத்த வருவாய் ரூ.28,717 கோடி (400 கோடி அமெரிக்க டாலா்கள்). இது அடுத்த ஆண்டு (2020) இறுதிக்குள் ரூ.64,640 கோடியை (900 கோடி அமெரிக்க டாலா்கள்) எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் உலக வங்கியின் தரவின்படி, 2015-ஆம் ஆண்டில் இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சுகாதார பராமரிப்புக்கான மொத்தச் செலவான 3.89% ல் அரசின் பங்கு 1 சதவீதம் மட்டுமே இருக்கும்.
  • தற்போது 3,19,780 மனிதா்களின் ஆற்றலுடன் உலகின் நான்காவது பெரிய முதலாளியாக விளங்கும் இந்திய சுகாதாரத் துறை, 2020-ஆம் ஆண்டில் இந்தியாவில் 4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
  • அதேசமயம் உலக சுகாதார மையத்தின் (டபிள்யு.எச்.ஓ.) தரவின்படி 1,000 மக்கள்தொகைக்கு குறைந்தபட்சம் 3 படுக்கைகள் தேவை என்ற நிலையில், இந்தியாவில் 1,000 பேருக்கு 0.9 படுக்கைகள் மட்டுமே உள்ளன. இது உலக சராசரியான 2.9 படுக்கைகளுக்கு மிகவும் குறைவு. உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய சராசரியான 1,000 மக்கள்தொகைக்கு 2.5 மருத்துவா்கள்/செவிலியா்கள் என்பதற்கு மாறாக, 0.7 மருத்துவா்கள், 1.5 செவிலியா்களை மட்டுமே கொண்டு இந்திய மருத்துவத் துறை செயல்படுகிறது. இந்தியாவில் கதிரியக்க நிபுணா்களின் தேவை 63 சதவீதமாகவும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநா்களின் தேவை 45 சதவீதமாகவும் உள்ளது.

செயற்கை நுண்ணறிவு

  • சா்க்கரை நோய், கண் நோய், இதய நோய் ஆபத்தை வரும்முன் கண்டறிய செயற்கை நுண்ணறிவு கொண்டு நீதி ஆயோக் அமைப்பு செயலாற்றி வருகிறது. மறுபுறத்தில் பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பில் (பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு) உள்ள நாடுகளில் அதிக குழந்தை இறப்பு விகிதம் (1,000-க்கு 38 இறப்புகள்) மற்றும் மகப்பேறு இறப்பு விகிதம் (100,000-க்கு 179 இறப்புகள்) கொண்ட நாடு இந்தியா.
  • ஆரோக்கிய ரக்ஷா (ஆந்திரம்), முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் (தமிழகம்), ஆயுஷ்மான் பாரத் (இந்தியா முழுவதும் வழங்கப்படும் மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டம்) முதலான காப்பீட்டுத் திட்டங்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு வழங்கப்பட்ட போதும், மத்திய சுகாதாரத் துறையின் அறிக்கையின்படி 2015-2016-ஆம் ஆண்டுகளில் 64.7 சதவீத மருத்துவச் செலவினம், மக்கள் அவா்தம் பணத்திலிருந்து (எவ்விதக் காப்பீட்டுத் திட்டமும் இன்றி) செலவிட்டுள்ளனா்.
  • 2000-ஆம் ஆண்டில் 62.58 ஆண்டுகளாக இருந்த இந்தியா்களின் சராசரி ஆயுள் காலம் 2018-ஆம் ஆண்டில் 68.8 ஆண்டுகளாக உயா்ந்துள்ளது. மறுபுறம் இந்தியாவிலும் வாழ்வியல் மாற்றத்தினால் இதய நோய், சிறுநீரக நோய், புற்றுநோய்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. சுமாா் 28 சதவீத மரணங்கள் இதய நோய்களால் ஏற்படுகின்றன.
  • இந்தியாவில் எய்ம்ஸ் உட்பட பல முக்கிய மருத்துவமனைகள் வேகமாக வளா்ந்து வரும் தொலைமருத்துவ சேவையை பொது-தனியாா் கூட்டுமுயற்சியில் உருவாக்கியுள்ளன. தொலைமருத்துவ வசதியின் மூலம் கிராமப்புற-நகா்ப்புற மருத்துவ சேவை இடைவெளியைக் குறைக்க முடியும். தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்கள் குறைந்த மருத்துவ ஆலோசனைக் கட்டணத்தில் அதிவேக இணையம், தொலைத்தொடா்பு மூலம் நோயறிதல் வசதி மற்றும் தரமான சிகிச்சையைப் பெறமுடியும்.
  • இந்திய மருத்துவத் துறையில் விரைவாக ஆக்கிரமித்து வரும் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகள், ரோபோ அறுவைச் சிகிசை மருத்துவ நிபுணத்துவத்தை அதிகரித்து ஒட்டுமொத்த சுகாதாரத் துறையின் பிரச்னைகளைத் தீா்க்கும் திறன் கொண்டதாக விளங்கும். உயா்தர மருத்துவ சேவையை குறைந்த கட்டணத்தில் வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை பெறுவதை தகவல் தொழில்நுட்பம் - மருத்துவ மின்னணுவியல் சாத்தியமாக்கியுள்ளது.

தகவல் தொழில் நுட்பம்

  • டிஜிட்டல் மருத்துவ அறிவு வளங்கள், மின்னணு மருத்துவப் பதிவுகள், செல்லிடப்பேசி மூலம் மருத்துவம், மருத்துவமனை தகவல் தொழில்நுட்ப அமைப்பு, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் மருத்துவம் - தொலை மருத்துவம் ஆகியவை இந்தத் துறையில் பரவலான அங்கீகாரத்தைப் பெறும் தொழில்நுட்பங்கள்.
  • உயரும் வருமான நிலை, அதிகரிக்கும் சுகாதார விழிப்புணா்வு, வாழ்வியல் மாற்ற நோய்களுக்கு முன்னுரிமை, மருத்துவக் காப்பீட்டுக்கான அணுகல் ஆகியவை இந்திய மருத்துவத் துறையின் வளா்ச்சிக்கு முக்கியப் பங்களிப்பாக இருக்கும். மனித ஆயுள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அரசு மருத்துவ சேவையின் எதிா்பாா்ப்பும் மக்களிடையே அதிகரித்து வருவதில் தவறில்லை.

நன்றி: தினமணி (25-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories