TNPSC Thervupettagam

நீதித் துறையின் திசைவழி | தேர்தல் எதிர்பார்ப்புகள்

April 3 , 2024 282 days 283 0
  • இந்தியாவில் பலரின் வைகறைப் பொழுதுகள் நீதிமன்ற வாசலைப் பார்த்தே விடியும் காலம் இது. கடந்த பத்து ஆண்டுகளில் சில பழைய சட்டங்கள் ரத்தாகி, புதிய சட்டங்கள் பிறந்துள்ளன. முத்தாய்ப்பாக, அண்மையில் வெளிவந்துள்ள ஒரு முக்கியத் தீர்ப்பு ஜனநாயகத்தை நிலைநிறுத்துகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், நீதித் துறையின் சமகாலப் போக்குகள், எதிர்கால எதிர்பார்ப்புகளைப் பற்றிப் பேசுவது அவசியம்.

முக்கியத் தீர்ப்புகள்

  • கடந்த பத்து ஆண்டுகளில்தாம், (இப்போது ஓய்வுபெற்றுவிட்ட) நீதிபதிகள் குரியன் ஜோசப், சலமேஸ்வர், மதன் லோகுர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் நீதிபதிகள் நியமனம் குறித்த விவகாரத்தில் பொதுவெளியில் பேட்டி தந்தனர். பண மதிப்பிழப்பு அறிவிப்பு, அயோத்தி ராமஜென்ம பூமி, சபரிமலையில் பெண்கள் வழிபாடு, காஷ்மீரில் 370ஆவது பிரிவு ரத்து, தன்பாலினத் திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம் மறுப்பு எனப் பல தீர்ப்புகள் வெளிவந்தன.
  • 2013இல் தேர்தல் அறக்கட்டளை பெயரிலும் 2018 முதல் தேர்தல் பத்திரங்கள் பெயரிலும் செய்யப்பட்ட பணப் பரிவர்த்தனைகளை உச்ச நீதிமன்றம் கூண்டில் ஏற்றியது. அதில் இந்திய வாக்காளர்களுக்கான தகவல் அறியும் உரிமையை அரசமைப்புச் சட்டப் பிரிவு 19(1)(a) இன் கீழ் வரையறுத்தது.
  • தன்னை ஆளப்போகும் அரசாங்கத்தைத் தேர்வுசெய்ய அந்தந்தக் கட்சிகளின் நிதிப் பரிவர்த்தனைகளைத் தெரிந்துகொள்ளும் உரிமை வாக்காளர்களுக்கு உண்டு என்று பகர்ந்தது. ஒவ்வோர் அரசியல் கட்சியும் தேர்தல் பத்திரம் என்ற பெயரில் ஈட்டிய ஆதாயத்தை வெளியிட பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது.
  • சேவைசெய்ய வேண்டிய அரசியல் கட்சிகள் இத்தகு பண பேர வியாபாரத்தில் ஈடுபடுதல் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதம் எனத் தேர்தல் பத்திர முறையை ரத்துசெய்தது.
  • சட்டம் மற்றும் நீதித் துறையின் செயல்பாடுகளில் மூன்று அம்சங்கள் உள்ளன.

1. பழைய மற்றும் புதிய சட்டங்கள்

  • நடைமுறையில் இல்லாத 76 பழைய சட்டங்களை ரத்து செய்ய 2023 டிசம்பர் மாதம் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டன. மேலும் இந்தியக் குற்றவியல் சட்டம், சாட்சியச் சட்டம், குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் ஆகியவற்றுக்கு வடமொழியில் பெயர் சூட்டப்பட்டு, அவற்றின் உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.

மாற்றங்கள் எவ்வாறு நிகழ்கின்றன?

  • 2023 டிசம்பர் 4 முதல் 22 வரையிலான 15 நாள்களில் 19 மசோதாக்கள் பட்டியலிடப்பட்டன. நாடாளுமன்றத்தில் 150 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட தருணத்தில்தான் பல புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன. “போதுமான விவாதம் இல்லாமல் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவது வருத்தம் அளிக்கிறது” என 2021இல் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா கூறினார்.
  • 100 ஆண்டுகளைக் கடந்துவிட்ட மூன்று சட்டங்களைக் காலனியாதிக்கத்தின் எச்சங்கள் என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறினார். அதேவேளையில், புதிய சட்டங்கள் ராணுவத்துக்கும், காவல் துறைக்கும் அதிக அதிகாரத்தை வழங்குவதாக விவாதம் எழுந்தது.
  • பெண்களின் உரிமைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டதாக விவாதங்கள் எழுந்தன. அவற்றை விவாதிக்க நேரம் போதாது என பாஜக பெண் எம்பிக்களே நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். சட்ட வரம்புக்கு அப்பாற்பட்ட வழக்குகளும் நீதிமன்றத்துக்கு வருகின்றன.
  • அதைப் பற்றி முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா இப்படிக் கூறினார்: “கொள்கை வகுப்பதில் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றாலும், ஒரு குடிமகன் புகாருடன் எங்களிடம் வந்தால் நீதிமன்றம், அதை மறுக்க முடியாது. எனவே, ஆழமாக விவாதம் - விவாதத்தின் பின் சம்பந்தப்பட்ட மக்களின் தேவைகள் - அபிலாஷைகள் உள்ளடங்கிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
  • நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரும் இதையே கூறியிருக்கிறார்: “ஒரு நாட்டில் நீதித் துறையானது மேலோட்டமாக ஒரு பார்வையாளராக இருக்கக் கூடாது. அவ்வாறு இருக்கிறதா? – மாறாக, மக்கள் மீதான அநீதியை எங்கு கண்டாலும் உடனே தீயணைப்புத் துறை போன்ற விரைவு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். குத்துச்சண்டைப் போட்டியில் நிற்கும் நடுவர் போல் இருக்க முடியாது.”

2. நீதி பரிபாலனத்துக்கு எது தேவை?

  • அகில இந்திய நீதிபதிகள் சங்கம் தொடர்ந்த வழக்கில் (All India Judges Association Vs Union of India 2002 (4) SCC 247) இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
  • போதுமான நீதிமன்றங்கள், அவற்றில் போதிய அறைகள், இருக்கைகள், குடிநீர், கழிப்பறை வசதிகள் ஆகியவை அத்தியாவசியமானவை. அவற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்தது நீதிபதிகளின் எண்ணிக்கை ஆகும். 16,000 நீதிபதிகள், 3 கோடி வழக்குகள் என்பதே இப்போதைய நிலை.
  • நீதிபதிகளின் விகிதாச்சாரம் உயர்த்தப்பட வேண்டும். 10 லட்சம் பேருக்கு 10.5 அல்லது 13 என்பது 50 என உயர்த்தப்பட வேண்டும். உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் பணியிடங்களில் 59% இன்னும் பூர்த்திசெய்யப்படவில்லை. இத்தகைய தேவைகளைப் பூர்த்திசெய்யாமல், புதிய சட்டங்களை இயற்றுவது நீதிமன்றத்தின் தோள்களில் பாரத்தை ஏற்றுவதற்குச் சமம்.

3. நீதிமன்றங்கள் எதிர்நோக்குபவை

  • குடியுரிமைச் சட்டத்தில் 2019ஆம் ஆண்டு செய்யப்பட்டுள்ள திருத்தத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. 11.03.2024இல் குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையான மதச்சார்பின்மை சவாலுக்கு உள்ளாகிறது. அரசமைப்புச் சட்டக் கூறுகள் 15, 21, 21 ஏ ஆட்டம் கண்டுள்ளன.
  • கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த அபிஜித் கங்கோபாத்யாயா 05.03.2024இல் பதவி விலகினார். அதற்கு முன்பே நீதிபதி சௌமியா சென் என்பவருடன் அவர் மோதலில் ஈடுபட்டிருந்தார். இப்பிரச்சினையை உச்ச நீதிமன்றம் தாமாகவே விசாரணைக்கு எடுத்தது.
  • இந்நிலையில், பதவி விலகிய அன்றே பாஜகவின் நாடாளுமன்ற வேட்பாளராக நிற்பதாக அவர் விருப்பம் தெரிவித்தார். வேறு கட்சிகளில் ஏன் சேரக் கூடாது என அவரைக் கேட்டபோது, தான் பெருமைமிக்க ஒரு இந்து என்று கூறினார். 2018 முதல் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த காலத்தில், அவர் வழங்கிய தீர்ப்புகள் (14 வழக்குகளில் அவர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்) நம்பகத்தன்மைக்கு உரியவையா எனக் கேள்விகள் எழுந்திருக்கின்றன.
  • மாநிலங்களிடம் மத்திய அரசு வரி வசூலிப்பதோடு சரி, அவர்கள் தேவைக்கு நிதி தருவதில்லை என்கிற குற்றச்சாட்டு வலுத்திருக்கிறது. இதற்காகக் கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளன. கூட்டாட்சியை நெறிப்படுத்துவதும் நீதிமன்றப் பணியாகிறது.
  • நீதித் துறைக்கும் மத்திய அரசுக்குமான பனிப்போர் வெளிப்படையாகத் தொடர்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையர் நியமனத்தில் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவரும் அடங்கிய குழுவில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் முக்கிய அங்கமாக இருந்தார். மத்திய அரசு அவரைப் புறக்கணித்தது.
  • அவருக்குப் பதிலாக மத்திய அமைச்சரை இணைத்தது. “இந்தியா நொறுக்கப்படுகிறது. நீதித் துறை தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டது” என்று நோபல் பரிசு பெற்ற மேதை அமர்த்திய சென் ஒருமுறை கூறினார். எல்லா தருணங்களிலும், அது உண்மை அல்ல.
  • பணி ஓய்வு பெறப்போகும் நீதிபதிகள், பிற்காலத் தில் தமக்குக் கிடைக்கவிருக்கும் பதவிகளுக்காக அரசாங்கத்தின் ஊதுகுழலாக மாறும் நிகழ்வுகள் உண்டு. மறுபுறம், அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றத் துணிச்சலாக முடிவெடுக்கும் நீதிபதி களும் உண்டு.
  • “எந்த நாடும் அநீதியின் மீது நிலைத்து நிற்க முடியாது. மணல் சூழப்பட்ட எகிப்திலிருந்து, பளிங்கு காடுகளாக இருந்த ஏதென்ஸிலிருந்து ஒவ்வொரு கற்களாக இடிந்து விழுகிற ரோமிலிருந்து, அநீதியின் மீது நிறுவப்பட்ட எந்த தேசமும் நிரந்தரமாக நிற்க முடியாது” என நீதியரசர் கிருஷ்ணய்யர் கூறியது என்றென்றைக்கும் நினைவில் கொள்ளத்தக்கது!

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories