- இந்திய நீதிமன்றக் கட்டமைப்பின் உயர் அடுக்குகளில் பெண் நீதிபதிகளின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதை ‘இந்திய நீதி அறிக்கை 2022’ சுட்டிக்காட்டியிருக்கிறது. இது நீதித் துறையில் பாலினச் சமத்துவத்தை உறுதிசெய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்தியிருக்கிறது.
- சமூக நீதிக்கான மையம், காமன்வெல்த் மனித உரிமைகள் முன்னெடுப்பு ஆகிய அமைப்புகளுடன் இணைந்து, நீதி வழங்கலில் இந்திய மாநிலங்களின் செயல்பாட்டை மதிப்பிடும் இந்திய நீதி அறிக்கையை (Indian Justice Report) டாடா அறக்கட்டளை 2019 முதல் ஒவ்வோர் ஆண்டும் வெளியிட்டுவருகிறது. 2022 நிலவரப்படி, இந்திய மாநிலங்களில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில், பெண் நீதிபதிகளின் பிரதிநிதித்துவம் 35%; அதே நேரம், உயர் நீதிமன்றங்களில் 13% மட்டுமே என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
- மாவட்ட நீதிமன்றங்களைப் பொறுத்தவரை நாட்டிலேயே அதிகமாக (70%) கோவாவில் பெண் நீதிபதிகள் பணியாற்றுகின்றனர். மேகாலயம், நாகாலாந்து இரண்டு மாநிலங்களிலும் 63% பெண் நீதிபதிகள் பணியாற்றுகின்றனர். 13 பெண் நீதிபதிகளுடன் நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்றம் என்னும் பெருமையைச் சென்னை உயர் நீதிமன்றம் தக்க வைத்துள்ளது.
- தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் விகிதம் 7.1%இலிருந்து 27.3%ஆக அதிகரித்திருக்கிறது. மறுபுறம் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் 19%இலிருந்து 6.7%ஆகவும், சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் 14.3%இலிருந்து 7.1%ஆகவும் பெண் நீதிபதிகளின் பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது. பிஹார், திரிபுரா, மணிப்பூர், மேகாலயம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளே இல்லாத நிலை தொடர்கிறது.
- கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்ட தகவல்களுடன் இவை பெரும்பாலும் ஒத்துப்போகின்றன. உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் 775 நீதிபதிகளில், 106 பேர் மட்டுமே பெண்கள் என்று அவர் கூறியிருந்தார்.
- உச்ச நீதிமன்றம் செயல்படத் தொடங்கிய 1950இலிருந்து இன்றுவரை, 11 பெண்கள் மட்டுமே அதில் நீதிபதி ஆக நியமிக்கப்பட்டுள்ளனர். ஹிமா கோலி, பேலா திரிவேதி, பி.வி.நாகரத்னா ஆகிய மூவர் மட்டுமே தற்போது பதவியில் உள்ளனர். இவர்கள் மூவருமே 2021இல் பதவியேற்றுக்கொண்டவர்கள்.
- கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த இணையவழிக் கூட்டம் ஒன்றில் பேசிய அன்றைய உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, பொது வாழ்க்கைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் நீதிபதிகள் உள்ளிட்ட சமூகத்தில் தாக்கம் செலுத்தக்கூடிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டியிருந்தார்.
- பெண் நீதிபதிகள் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கூடுதல் புரிதலுடனும் அக்கறையுடனும் கையாள்வார்கள் என்பதற்காகவேனும் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை முற்றிலும் ஒதுக்கிவிட முடியாது.
- அதே நேரம், பெண் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது வெறும் பெயரளவிலான நடவடிக்கையாக இருந்துவிடக் கூடாது; பாலினச் சமத்துவத்தை முழுமையாக உள்வாங்கியவர்கள் நீதிபதிகளாக்கப்பட வேண்டும் என்பதும் முக்கியம்.
நன்றி: தி இந்து (11 – 04 – 2023)