- தண்ணீர் மேலாண்மையில் இந்தியா மிகவும் பின்தங்கிவிட்டது. இதனால், குடிநீருக்காக மட்டும் கிராமப்புற மக்கள் அலையவில்லை. விவசாயம் செய்ய போதிய பாசன வசதியின்றிப் பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன.
இந்தியாவில் பருவநிலை தவறிவிட்டது. மழைக்காலத்தில் போதிய மழையில்லை. அளவுக்கு அதிகமாக வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், பொதுமக்கள், கால்நடைகள், மற்ற உயிரினங்கள் எல்லாம் சொல்ல முடியாத அளவுக்கு துன்பத்துக்குள்ளாகின்றன. கடும் வெயிலால் அடர்ந்த காடுகள்கூட கருகி திடீரென தீ பிடித்து எரியத் தொடங்குகிறது. வாழை, தென்னை, கரும்பு எனவும், நெல், கோதுமை, மக்காச்சோளம் போன்ற தானிய வகைகளும் பட்டுப் போய் விவசாயிகளை துயரத்தில் ஆழ்த்துகின்றன.
விவசாயம்
- இந்தியா முழுவதும் 5 கோடி குடும்பங்கள் நிலமற்ற ஏழை விவசாயக் கூலிகளாக ஒரு வேளை சோற்றுக்கே கஷ்டப்படுகின்றனர். 90 கோடி மக்கள் ஒவ்வொரு நாளும் இந்த வறுமை நெருப்பால் சுட்டெரிக்கப்படுகின்றனர் என்ற வேதனையை ஒருவர்கூட சிந்தித்துப் பார்க்க முன்வரவில்லை.
15 கோடி பேர் இப்படியும் இல்லாமல், அப்படியும் இல்லாமல் சிறு, குறு, நடுத்தர விவசாயிகளாக செத்துச் செத்துப் பிழைக்கின்றனர்.
- மீதி 25 கோடி பேர்தான் இந்தியாவில் சகல வசதிகளோடு, ஒய்யார வாழ்க்கையில் திளைக்கின்றனர். இப்படிப்பட்ட இந்தியாவில் ஜனநாயகம் என்கிற பெயரில் மத்திய, மாநிலங்களில் ஆட்சி பரிபாலனம் செய்கிற அரசியல் கட்சிகளும், தலைவர்களும் எல்லா மக்களுக்கும் எல்லாம் என்ற முழக்கத்தை வறட்டுச் சித்தாந்தமாகச் சொல்லி மக்களை மேலும் மேலும் முடிந்தவரை ஏமாற்றி கோலோச்சி குபேரர்களாக, கோடீஸ்வரர்களாக உயர்ந்து வருகின்றனர்.
- இந்தியா முழுவதும் 5 லட்சம் நீர்நிலைகள், அதாவது ஏரி, குளங்கள், கண்மாய்கள், ஊருணிகள், குட்டைகள் என உள்ளன. ஒரு காலத்தில் அவை நீர் நிரம்பி வழிந்தன. விவசாயம் முறையாக நடந்தன. அவையெல்லாம் பொய்யாய், பழங்கதையாய்ப் போய்விட்டன.
- தமிழகத்தில் சுமார் 48,000 நீர்நிலைகள் இருந்தன. அவற்றில் பெரும்பாலானவை ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. எஞ்சி யுள்ள நீர்நிலைகள் 32,000. இவற்றைத் தவிரஊர்தோறும் ஏரி, பாசனக் குளம், குட்டை, கண்மாய், ஊருணிகள் எனப் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. இவை அனைத்தும் கடந்த பல ஆண்டுகளாக வறண்டுபோய்க் கிடக்கின்றன. இந்த அவலத்துக்கு நாட்டை ஆட்சி பரிபாலனம் செய்தவர்களின் தொடர் அலட்சியம்தான் காரணம்.
சோழநாடு சோறுடைத்து; சேர நாடு வேழமுடைத்து; பாண்டியநாடு முத்துடைத்து என்ற பெருமைக்குரிய நாடு தமிழகம்.
தமிழகம்
- சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே கரிகாற்சோழன் கல்லணையைக் கட்டினான். வீணாக ஓடி கடலில் கலந்துகொண்டிருந்த காவிரி நீரை பாசனத்துக்குப் பயன்படுத்திடும் கலையை விவசாயிகளுக்கு சொல்லித் தந்தான்.
உலகத்திலேயே முதன்முதலில் விவசாயம் செய்த பூமி தமிழகம்தான். அதிலும், குறிப்பாக சோழ மண்டலம்தான்.அதனால்தான் நெற்களஞ்சியம் என்ற புகழை தஞ்சாவூர் பெற்றது.
- மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டிப் போரடித்த அழகான தென்மதுரை என்ற புகழின் உச்சத்தை அடைந்தது பாண்டிய நாடு.
உழவர் உலகத்தாருக்கு அச்சாணி என்றதும்; சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்றதும் அய்யன் வள்ளுவன் அறியாமல் சொன்ன வார்த்தைகள் அல்ல. சோழவளநாடு சோறுடைத்து என்கின்ற பழம் புகழ் எப்படி வந்தது? ஒன்றுபட்ட திருச்சி மாவட்டம்; ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் காவிரி டெல்டா பகுதியானது காலம் தந்த கொடை. 1892-ஆம் ஆண்டுக்கு முன்பு காவிரி உற்பத்தியாகும் மலையிலிருந்து எந்த அணைகளும் இல்லை. 726 கி.மீ. தொலைவு கர்நாடக-தமிழக மண்ணில் தானாகவே காவிரி ஓடிவந்து, வளைந்தும் நெளிந்தும் காட்டாறாகப் பாய்ந்து கடலில் வீணாகக் கலந்தது என்பதுதான் வரலாறு.
- அதற்குப் பிறகுதான் காவிரி குடகு மலையில் முதன்முதலில் மைசூர் அணைக்கட்டு சமீபத்திய மகாராஜாக்கள் காலத்தில் கட்டப்பட்டது.
கல்லணை
- ஆனால், இதற்கெல்லாம் முன்பே கல்லணை கட்டப்பட்டு கழனிகளில் பாய்ந்தது என்றால், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களின் பாரம்பரிய விவசாயத்தைப் பற்றி அறிந்துகொள்ள முடியும். காவிரியின் முதல் உரிமை டெல்டா மாவட்ட மக்களுக்குத்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.
- இப்போது டெல்டா மாவட்ட விவசாய கிராமங்களின் நீர்வள ஆதாரங்களான ஏரி, குளம், கண்மாய்கள், காட்டாறுகள் ஆகியவற்றைப் பராமரிக்க உடனடியாக முன்வரவேண்டும். காவிரியில் 25 டி.எம்.சி. தண்ணீரை முறையாக கர்நாடக அரசு தருவதற்கான உத்தரவாதத்தை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். இல்லையேல் பாலைவனமாகிவிடும் டெல்டா மண். மக்களின் எழுச்சி நீருபூத்த நெருப்பாக கனன்று கொண்டே இருக்கட்டும். காலம் வரும்; சீறும்; சிறு நரிகள் ஓடும்.
- காலுக்குச் செருப்புமில்லை கால் வயிற்று கூழுக்கு வழியுமில்லை வீணுக்கு உழைத்தோமடா என் தோழா!
என்ற பொதுவுடைமைக் கவிஞர் ஜீவாவின் நெருப்புப் பொறிகள் ஒவ்வொரு தமிழனின் குறிப்பாக விவசாயிகளின் உள்ளத்திலும் கனன்று கொண்டேதான் இருக்கிறது.
புரட்சி
- புரட்சிக்கு காலம் நேரம் இல்லை. திடீர்... திடீர்...என வெடிக்கும்! வீணர்களின் கொட்டம் தூள்தூளாகும். தேர்தல் திருவிழாக்களால் மக்களின் புரட்சி மனதை மாற்றிவிட முடியாது!
- புரட்சி மட்டுமே மாபெரும் மாற்றத்தை உருவாக்கி விடாது. சில நேரங்களில் வெற்றி பெற்ற மோசமான கலவரங்கள்கூட புரட்சி என சரித்திரத்தில் பதியப்படுவதும் தோல்வியடைந்த நல்ல உயர்ந்த நோக்கம் கொண்ட புரட்சிகள்கூட தோற்றதால் கலவரம் என சித்தரிக்கபட்டதும் உலக வரலாற்றில் பல உண்டு. உதாரணத்துக்கு நமது சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்ட நமது சிப்பாய்களின் புரட்சிகூட அது தோல்வியடைந்ததால் அது சிப்பாய் கலவரம் என்று இன்றுவரை சரித்திரத்தில் பதிந்துள்ளது. ஆனால், மக்களின் தேவை எதுவோ, அது அவர்களுக்குக் கிடைக்காது என்ற நிலை வரும்போது அது புரட்சியாக வெடிக்கும் நிலை ஏற்பட்டுவிடும்.
- அந்த நிலை வராமல் தடுக்க வேண்டியது அமையவிருக்கும் மத்திய அரசின் மிக மிக முக்கியக் கடமையாகும். நாட்டின் பாதுகாப்பு எந்தளவுக்கு முக்கியமானதோ, அதைவிட மிக முக்கியமானது நாட்டின் இயற்கை நீர்வளபாதுகாப்பும் - நீர் மேலாண்மையும்தான் என்பது தற்போதைய இந்திய நாட்டின்தேவையாகும்.
- குறிப்பாக, தமிழகத்தின் நீர் நிலைகளின் பாதுகாப்பற்ற அவல நிலையைக் குறிப்பிட்டு, மழைநீர் சேகரிப்பதிலும், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் மற்றும் நீர்வரத்துக் கால்வாய்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுவதும் அகற்ற வேண்டும். அதற்கு தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைத்து உடனடியாக அவசரமாகச் செயல்படவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
- இந்தத் தீர்ப்பு அவசியமான நேரத்தில் வந்துள்ள தீர்ப்பாகும். அதே நேரத்தில் நீர் ஆதாரங்களைப் பாதிக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளில், இதே நீதிமன்றம் அளித்த முந்தைய குளறுபடியான மாறுபட்ட தீர்ப்புகளால் நீர்நிலைகளில் மற்றும் காலியிடங்களில் உள்ள நிலத்தடிநீர் ஆதாரங்களை அழிக்கும் சீமைக்கருவேல மரங்கள் முழுவதுமாக அகற்றப்படவில்லை. அதற்காக தங்களை அர்ப்பணித்து உழைத்த உத்தமத் தலைவர்களும் உதாசீனப்படுத்தப்பட்டு தடுமாறும் பரிதாப நிலை ஏற்பட்டு விட்டது.
நீதிமன்றம் – நீர்
- நீதிமன்றங்களும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் விஷயங்களில் கவனக்குறைவாக நடந்து கொள்வதாக மக்கள் தவறாக எண்ணி விடுகின்றனர். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போதைய சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த சமூக அக்கறையுடன் அமைந்துள்ளதை ஒட்டுமொத்த தமிழகமும் பாராட்டுகிறது.
இனிவரும் காலங்களில் நீதிமன்றங்கள் இதுபோன்று சமூக அக்கறையுடன்தான் செயல்பட வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
- நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்தான் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் அரசுகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரக்கூடாது.
அரசு ஊழியர்கள் குடியிருப்பு -அலுவலகங்கள்-போக்குவரத்துப் பாதைகள் ஆகியவற்றுக்கு முன்னேற்றம் என்ற போர்வையில் நீர்நிலைகளைப் பயன்படுத்தும் எண்ணம், மத்திய, மாநில அரசுகள் உள்பட எந்தப் பொதுநல அமைப்புகளுக்கும் வரக்கூடாது. அப்படித் திட்டமிடும் எந்த அமைப்பையும் தூக்கி எறிய வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு மிக விரைவில் வரும். அந்த நாள் மிக மிக அருகில் உள்ளது. நல்லதை நாடுவதும், நல்லதையே செயல்படுத்துவதும்தான் இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாக்கும்.
நன்றி: தினமணி (17-05-2019)