TNPSC Thervupettagam

நீதி கேட்கும் சிலைகள்

January 28 , 2024 176 days 153 0
  • இரண்டாம் உலகப் போரின்போது ’ஆறுதல் மகளிர்’ என்கிற பெயரில் தங்களைப் பாலியல் சித்தரவதைக்கு ஆளாக்கிய ஜப்பான் ராணுவத்தினர் சார்பில் ஜப்பான் மன்னிப்பு கோர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட பெண்கள் கோரிக்கை விடுத்தனர். ஜப்பான் ராணுவ வீரர்களின் பாலியல் தேவைக்காக ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பலர் கடத்தப்பட்டுச் சீரழிக்கப்பட்ட கொடுமை குறித்து கொரிய நாட்டுப் பத்திரிகை ஒன்றில் 1990இல் கட்டுரை வெளியானதுமே ஜப்பான் அதிர்ச்சிக்குள்ளானது.
  • ’ஜப்பான் ராணுவத்தினரால் ’ஆறுதல் மையங்கள்’ நடத்தப்பட்டதை மூத்த பெண்மணிகள் வாயிலாக அறிய முடிகிறது. இது குறித்துத் தற்போது விசாரணை நடத்துவதால் எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை’ என்கிற ஜப்பானின் பதில் கொரியப் பெண்களைக் கொதிப்படையச் செய்தது.
  • 37 பெண்கள் அமைப்பினர் ஒன்றிணைந்து ஜப்பானின் பதிலைக் கண்டித்ததோடு, 6 கோரிக்கைகளையும் முன்வைத்தனர். ஆறுதல் மையங்களில் பாலியல் சுரண்டலுக்காக கொரியப் பெண்கள் ஜப்பான் ராணுவத்தினரால் கடத்தப்பட்டதை ஒப்புக்கொள்ள வேண்டும், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இந்தப் பிரச்சினை குறித்து விரிவான விசாரணை நடத்தி முடிவுகளைப் பொதுவெளியில் அறிவிக்க வேண்டும், ஜப்பான் ராணுவத்தினரால் பாதிக்கப்பட்ட பெண்களை நினைவுகூரும் வகையில் நினைவகம் அமைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கோ அவர்களது வாரிசுகளுக்கோ இழப்பீடு வழங்க வேண்டும், இந்த வரலாறு குறித்து வரும் தலைமுறையினர் உணர்ந்துகொள்ளும் வகையில் கருத்தரங்குகள் நடத்த வேண்டும் என்பவையே அந்த ஆறு கோரிக்கைகள்.

ஒப்புக்கொண்ட ஜப்பான்

  • பாதிக்கப்பட்ட பெண்களின் இந்தக் கோரிக்கைகள் குறித்து ஜப்பான் ஊடகங்கள் பரவலாகச் செய்தி வெளியிட்டன. ’ஆறுதல் மையங்கள்’ குறித்துப் பொதுவெளியில் பகிர்ந்துகொண்ட முதல் கொரியப் பெண்ணான கிம் ஹாக் சன், தன் அடையாளத்துடன் வழக்குத் தொடுத்தார். ஜப்பான் ராணுவத்தினரின் பாதகச் செயல்களை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இருப்பதாக ஜப்பான் பேராசிரியர் யோஷியாகி யோஷிமி தெரிவிக்க, அது ஜப்பானை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் பிறகே ஜப்பான் விசாரணையைத் தொடங்கியது. அதன் முடிவுகளை வெளியிட்டதோடு, ஜப்பான் ராணுவ வீரர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பை வேண்டுவதாக அறிவித்தது. இப்படியொரு மோசமான நிகழ்வு இனி நிகழாதவகையில் பார்த்துக்கொள்வதாகவும் உறுதியளித்தது.
  • ஆறுதல் மையங்களை ராணுவத்தினர் அல்லாத நபர்களே நடத்தினார்கள். அதில் ஜப்பான் ராணுவத்துக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்கு உண்டு. எப்படிப் பார்த்தாலும் இந்தச் செயல் பெண்களின் மாண்பையும் கண்ணியத்தையும் குலைத்துள்ளது. அளவிட முடியாத வேதனையாலும் தீர்க்க முடியாத மன, உடல் காயங்களாலும் தவிக்கும் பெண்களிடம் ஜப்பான் மனமார மன்னிப்பை வேண்டுகிறது. இந்தக் கொடும் வரலாற்றிலிருந்து நாங்கள் தப்பிக்க விரும்பவில்லை. மாறாக, இனி இப்படியொரு கொடுமை நிகழாதவண்ணம் பாடம் கற்றுக்கொள்கிறோம்’ என ஜப்பான் அரசு 1993இல் அறிவித்தது.

எதிர்ப்பைத் தெரிவிக்கும் சிறுமி

  • ஆனால், இவையெல்லாமே ஜப்பான் அரசு மனமாரக் கேட்ட மன்னிப்பு கிடையாது என்பது பாதிக்கப்பட்டோரின் வாதம். ஏதோவோர் அறிக்கைக்குள் ஓரிரு வரிகள் மேலோட்டமாக இடம்பெறுவதாலேயே ஜப்பான் அரசு மன்னிப்பு கேட்டதாகிவிடாது என்பதை ஜப்பான் ராணுவ வீரர்களுக்கு இரையான பெண்களும் அவர்களது நாட்டினரும் வெவ்வேறு வகையில் வெளிப்படுத்தினர். அந்தப் போராட்ட வடிவங்களுள் ஒன்றுதான் சிலை. தங்கள் நாட்டுப் பெண்கள் ஜப்பான் ராணுவத்தினரால் வதைக்கப்பட்டனர் என்பதை உணர்த்தும் விதமாக சியோலில் உள்ள ஜப்பான் தூதரக அலுவலகத்தின் முன் வெண்கலச் சிலையொன்றை கொரியா 2011இல் நிறுவியது.
  • கொரியப் பாரம்பரிய உடையணிந்தபடி நாற்காலியில் அமர்ந்திருக்கும் சிறு பெண்ணின் சிலை அது. ஜப்பான் ராணுவத்தினர் அமைத்த பாலியல் சித்ரவதைக்கூடத்துக்குள் பலியான லட்சக்கணக்கான பெண்களை அந்தச் சிலை பிரதிபலித்தது. தன் விருப்பத்துக்கு மாறாகக் கூந்தல் கத்தரிக்கப்பட்டிருக்க, அழுத்தமான முகமும் இதற்கு மேல் பொறுக்க முடியாது என்பதை உணர்த்தும் வகையில் மூடிய விரல்களுமாக அந்தச் சிலை வடிக்கப்பட்டிருந்தது. இந்தச் சிலை ஜப்பானைக் கொதிப்படையச் செய்தது. என்றைக்கோ நடந்த கொடுமையை இன்றைக்கு ஏன் நினைவூட்ட வேண்டும் என்பது ஜப்பானின் கோபத்துக்குக் காரணம். வரலாறு எல்லாமே என்றைக்கோ நிகழ்ந்தவைதானே. இந்தச் சிலையைத் தொடர்ந்து அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் 90க்கும் மேற்பட்ட சிலைகள் ஆறுதல் மகளிரை நினைவூட்டும் விதமாக நிறுவப்பட்டன.

சிலையோடு ஒரு பயணம்

  • உலகம் முழுவதும் நிறுவப்படும் ஆறுதல் மகளிர் சிலைகள், தங்கள் பெருமைக்கு இழுக்கைத் தேடித்தருவதை உணர்ந்த ஜப்பான், தாங்கள் ஏற்கெனவே பல முறை மன்னிப்பு கேட்டுவிட்டதாகக் கூறியது. 2015இல் கொரியாவுடன் ஓர் ஒப்பந்தத்தை உருவாக்கி இழப்பீடு வழங்குவதாகவும் தெரிவித்தது. அதில் கொரிய நாட்டுப் போராளிகளுக்கு உடன்பாடில்லாத நிலையில் 2017இல் மீண்டும் ஒரு சிலையை கொரியா நிறுவியது. இந்த முறை கொரிய நாட்டுப் பேருந்துகளின் இருக்கையில் அமர்ந்திருக்கும் நிலையில் ஆறுதல் மகளிர் சிலைகள் வடிக்கப்பட்டன. இந்தப் பேருந்துகள் ஜப்பான் தூதரகத்தின் முன்னால் நின்று செல்லும் என்பதால் ஒவ்வொரு முறை பேருந்துகளின் கதவுகள் திறக்கும்போதும் கண்ணில்படுகிற ஆறுதல் மகளிர் சிலை ஜப்பானின் மனசாட்சியை உலுக்க வேண்டும் என்பது கொரியாவின் எண்ணம்.
  • பேருந்தில் சக பயணிபோல் அமர்ந்திருந்த ஆறுதல் மகளிர் சிலை இழந்துவிட்ட தன் பால்யத்தை நினைவூட்டுவதாக ஜப்பான் ராணுவத்தினரால் பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட ஆன் ஜியோம் சன் (89) நினைவுகூர்ந்தார். இரண்டாம் உலகப்போரையொட்டி 14 நாடுகளைச் சேர்ந்த இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் ஆறுதல் மகளிர் என்கிற பெயரில் ஜப்பான் ராணுவத்தினரால் பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டனர் என ஐ.நா. தெரிவித்திருந்த நிலையில், ஆன் ஜியோம் சன் போன்று பாதிக்கப்பட்ட பெண்களின் கூற்று அதை உறுதிப்படுத்தியது. முள்கம்பிகளால் சூழப்பட்ட தற்காலிகக் குடில்களுக்குள் தினமும் குறைந்தது 70 பேர் தங்களைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதாகச் சொன்ன அந்தப் பெண்களின் வேதனையை உணர்த்தியபடி அந்தச் சிலைகள் சாலைகள்தோறும் அன்றைக்கு ஓடின.
  • லட்சக்கணக்கான ஆறுதல் மகளிரில் பிழைத்திருந்த சில நூறு பெண்களுக்கு இழப்பீடு வழங்குவதிலும் அவர்களிடம் மன்னிப்பு கேட்பதிலும்கூட அரசியல் லாப நஷ்டக் கணக்குகள் புகுந்துவிட்டன. “அந்தச் சிலைகள் அப்படியே இருக்கட்டும்” என்று ஆன் ஜியோம் சன் உதிர்த்த சொற்களிலும் அந்த வேதனைதான் புதைந்திருந்தது. நீதிகேட்டு நிமிர்ந்து நின்ற சிலைகளுக்கு நீதி வழங்கப்பட்டதா?

நன்றி: தி இந்து (28 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories