TNPSC Thervupettagam

நீதி கேட்டு ஒலித்த முதல் குரல்

January 21 , 2024 220 days 188 0
  • உடலையும் மனதையும் ஒருசேரக் குலைக்கும் கொடுமையிலிருந்து மரணம் ஒன்றே விடுவிக்கும் என்கிற நிலையில்தான்ஆறுதல் மகளிர்இருந்தனர். ஆனால், போர் முடியும் வரைக்கும் உயிர்த்திருக்க வேண்டும் என லீ ஓக் சான் முடிவெடுத்தார். அது மரணத்தைவிடவும் கொடுமையாக இருந்தது. ஜப்பான் சரணடைந்தது, போர் முடிவுக்கு வந்தது. லீ ஓக் சான் அடைத்துவைக்கப்பட்டிருந்தஆறுதல் மையத்தின் நிர்வாகி தலைமறைவாகிவிட்டார். அங்கிருந்த பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் விடுதலை கிடைத்தது. ஆனால், எங்கே செல்வது என்கிற கேள்வியும் குழப்பமுமே அவர்களுக்கு மிஞ்சின.

நான் எங்கே போக முடியும்

  • என் மீது வலுக்கட்டாயமாகச் சுமத்தப்பட்ட அவமானத்தோடு என்னால் ஊர் திரும்ப முடியுமா? நான் ஆறுதல் மையத்தில் இருந்தேன் என்று என் முகத்திலேயே எழுதப்பட்டிருக்கிறதே, இதை வைத்துக்கொண்டு நான் என் ஊரில் நடமாட முடியுமா? இந்த அடையாளத்தைச் சுமந்துகொண்டு என் அம்மாவைப் பார்க்கிற துணிவு எனக்கு இல்லைஎன்று தான் அன்றைக்குக் கடந்துவந்த வேதனையைப் பகிர்ந்துகொண்ட லீ ஓக் சான், பல நாள்களைத் தெருக்களில் தூங்கிக் கழித்தார். கொரியாவுக்குச் செல்லாமல் சீனாவிலேயே தங்க முடிவெடுத்தார். மனைவியை இழந்த ஒருவரை மணந்துகொண்டு அவருடைய குழந்தைகளை வளர்த்தார். ‘ஆறுதல் மையத்தில் அவர் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையால்சிஃபிலிஸ்எனப்படும் பால்வினை நோயால் தாக்கப்பட்டு மோசமான நிலைக்குச் சென்றார். அதிலிருந்து மீண்டு, ‘ஆறுதல் மையங்களில் அடைக்கப்பட்டுத் தன்னைப் போலவே பாதிப்புக்குள்ளான பெண்களோடு சேர்ந்து நீதி கேட்டுப் போராடினார்.

உறுதிப்படுத்தும் ஆவணங்கள்

  • லீ ஓக் சானைப் போல லட்சக்கணக்கான பெண்கள், ஜப்பான் ராணுவத்தால் பாலியல் அடிமைகளாக்கப்பட்டுச் சீரழிக்கப்பட்டனர். ‘ஆறுதல் மையங்கள் குறித்த தரவுகளை ஜப்பான் ராணுவம் அழித்துவிட்டபோதும் வரலாற்று ஆய்வாளர்கள் 4 லட்சத்துக்கு அதிகமான பெண்கள் வரைஆறுதல் மையங்களில் அடைக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர். 1942இல் ஜப்பானின் போர் அமைச்சகத்தின் ஆவணம் ஒன்று சீனாவிலும் கிழக்காசியாவிலும் 400 ‘ஆறுதல் மையங்கள் அமைக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது. ஜப்பான் ராணுவத்தினரால் ஜப்பான் நாட்டுப் பெண்களும்ஆறுதல் மையங்களில் அடைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 1938 முதல் 1939 வரை தைவான் வழியாக சீனாவின்ஆறுதல் மையங்களுக்கு அனுப்பப்பட்ட பெண்களில் 50 சதவீதத்தினர் ஜப்பானியர்கள், 40 சதவீதத்தினர் கொரியர்கள், மீதமுள்ளோர் தைவானைச் சேர்ந்தவர்கள் என்கிறது ஓர் ஆவணம்.
  • போர் முடிந்து ஜப்பான் சரணடைந்த பிறகும்ஆறுதல் மையங்கள் சில செயல்பட்டு வந்ததாகவும் அவற்றை அமெரிக்க ராணுவ வீரர்கள் பயன்படுத்திவந்ததாகவும்அசோசியேடட் பிரஸ்செய்தி வெளியிட்டது. 1946இல் டக்ளஸ் மெக் ஆர்தர் தலையிட்டுஆறுதல் மையங்களை மூடச்சொல்லும்வரை அமெரிக்க ராணுவத்தினர் அங்கிருந்த பெண்களை வல்லுறவுக்கு ஆளாக்கியிருக்கின்றனர் எனஅசோசியேடட் பிரஸ்நிருபர்கள் தங்களுக்குக் கிடைத்த அரசு ஆவணங்களின் அடிப்படையில் செய்தி வெளியிட்டனர். போரின் கொடுமைகளைக் குறித்துப் பதிவுசெய்திருக்கும்வார் அண்டு பப்ளிக் ஹெல்த்என்கிற நூலும்ஆறுதல் மகளிர்குறித்துப் பதிவுசெய்திருக்கிறது. ராணுவப் பாலியல் மையங்களில் அடைக்கப்பட்ட பெண்களில் பலர் மார்பகம் அறுக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். மாதவிடாயைத் தடுப்பதற்காகப் பலரது கருப்பை மிக மோசமான முறையில் நீக்கப்பட்டது. பலர் கடலில் மூழ்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். பலர் தற்கொலை செய்துகொள்ளும்படி மிரட்டப்பட்டனர். ‘ஆறுதல் மையங்களுக்கு அனுப்பப்பட்ட பெண்களுக்கு அது மீண்டு வர முடியாத ஒருவழிப் பாதையாகவே அமைந்தது. ஒரு சதவீதப் பெண்கள் மட்டுமே போருக்குப் பிறகு பிழைத்திருக்கக்கூடும் என வரலாற்றாய்வாளர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள்.

கலைந்த மௌனம்

  • ஜப்பான் ராணுவத்தின்முறைப்படுத்தப்பட்டஇந்தக் கொடூரம் வெளியுலகத்துக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், அதைப் பேசுகிற துணிவு அன்றைக்குப் பலருக்கும் இல்லை. காரணம், இதில் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள். போர்க் காலத்தில் பெரும்பாலான பெண்கள் வெடிமருந்து கம்பெனிகளில் பணியமர்த்தப்பட்டனர். பெருவாரியான பெண் குழந்தைகளை அந்தப் பணியில் சேரும்படியான பரப்புரை 1943இல் கொரியாவில் முன்னெடுக்கப்பட்டபோது பலரும் அஞ்சினர். காரணம் தாங்களும்ஆறுதல் மையங்களில் அடைக்கப்பட்டுவிடுவோம் என நம்பினர். ‘ஆறுதல் மையம்என்பதே கட்டுக்கதை என ஜப்பானின் அன்றைய கவர்னர் ஜெனரல் அலுவலகம் அறிவித்தது. மக்களும் அந்தக் கட்டுக்கதையை நம்புவதாகக் காட்டிக்கொண்டனர். அவர்கள் விழித்துக்கொள்வதற்கு அவர்களது நாடு விடுதலையடைய வேண்டியிருந்தது. தங்கள் நாட்டுப் பெண்களுக்கு ஜப்பான் ராணுவத்தினர் இழைத்த கொடுமை குறித்து தென்கொரியா தனி நாடான பிறகு பேசத் தொடங்கியது. ‘ஆறுதல் மகளிர்குறித்த கட்டுரை 1990இல் வெளியாகி உலகின் கவனத்தை ஈர்த்தது. பூனைக்கு மணி கட்டுவது யார் என்கிற தயக்கம் எப்போதும் இருப்பதுதான். கிம் ஹாக் சன் அதைச் செய்தார். ஜப்பான் ராணுவத்தினரின் வன்முறை குறித்துப் பொதுவெளியில் பகிர்ந்த முதல் கொரியப் பெண் அவர்.
  • கிம் ஹாக் சன், கொரிய விடுதலைப் போராட்ட வீரரின் மகள். தந்தையின் இறப்புக்குப் பிறகு தாயுடன் கொரியாவுக்குத் திரும்பினார். தாய் மறுமணம் செய்துகொள்ள, வளர்ப்புத் தந்தையால் பெய்ஜிங்கில் கிம் ஹாக் சன் விற்கப்பட்டார். அது, அவரைஆறுதல் மையத்தில் கொண்டு சேர்த்தது. அங்கே நான்கு மாதங்களைக் கழித்தவர், கொரியர் ஒருவரது உதவியால் அங்கிருந்து தப்பினார். ‘ஆறுதல் மையங்களில் நடைபெற்ற கொடுமைகள் குறித்து 1991இல் பொதுவெளியில் அவர் பேசிய பிறகே லட்சக்கணக்கான பெண்கள் மீது ஜப்பான் ராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட வன்முறை பரவலாகக் கவனத்தைப் பெற்றது. அதன் பிறகு பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவராகத் தங்களை வெளிப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்கினர். அவர்கள் ஒரு குழுவாக இணைந்து தங்களுக்கு நீதி கேட்டு சியோலில் உள்ள ஜப்பான் தூதரகத்தின் முன்பு வாரந்தோறும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

ஏன் கவனம் பெறவில்லை

  • ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் குண்டு வீசித் தகர்க்கப்பட்டபோது லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதும் ஜப்பான் அதிலிருந்து மீண்டு வந்ததும் கொண்டாடப்பட்டபோது தன் நாட்டு ராணுவத்தால் பிற நாடுகளைச் சேர்ந்த பெண்கள் சீரழித்துக் கொல்லப்பட்டதைப் பற்றிப் பேச ஜப்பான் விரும்பவில்லை. அந்தப் பெண்கள் அணு ஆயுதத்தால் கொல்லப்பட்டிருந்தால் ஒருவேளை அவர்களுக்கு நீதி கிடைத்திருக்கக்கூடும். ஆண்களால் கொல்லப்பட்டதாலேயே லட்சக் கணக்கான பெண்களின் கொலை பேரழிவாகக் கருதப்பட்டவில்லை. 1940களின் தொடக்கத்தில் தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு 50 ஆண்டுகள் கழித்து அந்தப் பெண்கள் நிவாரணம் கேட்கவில்லை. தங்களை வன்முறைக்கு ஆளாக்கியவர்கள் தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றுதான் அவர்கள் கேட்டனர். அவர்களிடம் மன்னிப்பு கேட்கப்பட்டதா? அடுத்த வாரம் பார்க்கலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (21 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories