TNPSC Thervupettagam

நீர் இருக்கும் வரை "நீர்' இருப்பீர்!

January 18 , 2020 1825 days 776 0
  • காலத்துக்கும் கம்பீரமாய் நின்று 5 மாவட்ட மக்களின் கண்ணீரைத் துடைக்கும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர்  ஓர் ஆங்கிலேயப் பொறியாளர்.
  • தென் மாவட்டங்களின் தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்குவதற்காக கட்டப்பட்ட 152 அடி உயரம் கொண்ட கம்பீரத்துடன் கூடிய முல்லைப் பெரியாறு அணையைக் கட்டுவதற்கு ஜான் பென்னிகுயிக் சந்தித்த துயரத்தை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.
    தீராத வேட்கையால், தியாக உள்ளத்தால், விடாமுயற்சியால் பென்னிகுயிக் பிரிட்டனுக்குச் சென்று தனது வீட்டை விற்று, கிடைத்த பணத்தில் அணையைக் கட்டினார் என்ற செய்தி, வரலாறு நெடுகிலும் அவரை வழிபட வைக்கிறது.
    நூற்றாண்டுகளுக்கு முன்பு வைகை வடிநிலப் பரப்பில் மழை பொய்த்தது. 
    இதனால், அதை நம்பியிருந்த ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டப் பகுதிகளில் கடும் வறட்சியும், உணவுப் பஞ்சமும் சில ஆண்டுகள் ஏற்பட்டன.

மேற்கு நோக்கிப் பாயும் நதிகள்

  • மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நதிகள், மேற்கு நோக்கிப் பாய்ந்து கடலில் வீணாகச் சென்று கலப்பதைப் பார்த்த ராமநாதபுரம் மன்னர் சேதுபதி 1798-ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு, பெரியாறு நதிகளை இணைத்து அணை கட்டி தண்ணீர் முழுவதையும் மதுரை, ராமநாதபுரம் பகுதிகளுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டார்.
    இதற்காக முத்துஇருளப்ப பிள்ளை தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அனுப்பினார். அந்தக் குழு அங்கு தங்கி, காடுகளை அழித்து அணை கட்டும் இடத்தைத் தேர்வு செய்து மதிப்பீட்டைத் தயார் செய்தது. நிதி வசதியின்றி இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
  • மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்த ஜான் பென்னிகுயிக் என்ற மகத்தான வரலாற்று நாயகனுக்கு மனம் பதைபதைத்தது. ஓர் அணையைக் கட்டி வடக்குப் பகுதிக்குத் திருப்பிவிட்டால் வறண்ட நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று கனவு கண்டார். அப்போதைய சென்னை மாகாண அரசின் ஆளுநர் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.  
     1893-ஆம் ஆண்டு ரூ.75 லட்சம் திட்ட மதிப்பீட்டில்  அணை கட்டும் பணி தொடங்கப்பட்டது.  அடர்ந்த காடு, அதில் இருக்கும் விஷப் பூச்சிகள், ஆபத்தை எந்த நேரமும் விளைவிக்கக் கூடிய காட்டு மிருகங்கள், இவை போதாதென்று கடும் மழை போன்ற இடையூறுகளைச் சமாளித்து அணையைக் கட்டிக் கொண்டிருந்தபோது தொடர் மழை காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் பாதி கட்டப்பட்டிருந்த அணை அடித்துச் செல்லப்பட்டது.

பென்னிகுயிக்

  • இதனால், சொல்லொணாத் துயரத்தை அடைந்த பென்னிகுயிக், அணை உடைந்தாலும் மனம் உடையாமல் நிதி கேட்டு ஆங்கிலேய அரசிடம் போராடினார்.  இவர் திட்டத்தை ஆங்கிலேய அரசு நிராகரித்து விட்டது. இதனால் சிறிதும் மனம் தளராத பென்னிகுயிக், பிரிட்டனுக்குத் திரும்பிச் சென்று அவரது குடும்பச்சொத்துகள் அனைத்தையும் விற்று கிடைத்த பணத்தில் முல்லைப்பெரியாறு அணையைக் கட்டி நிர்மாணித்தார்.
    முல்லைப் பெரியாறு அணையால் தமிழ்நாட்டின் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2.23 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, சேடப்பட்டி பகுதிகளுக்கான குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்கிறது.
  • ஆங்கிலேயரின் ஆளுமைக்குக் கீழ் இருந்த தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் ஒரு பகுதி தன் ஆளுகைக்கு உள்ளது என்பதை மறந்து, தனது பேரன்பால் அந்த மக்களை ஜான்பென்னிகுயிக் நேசித்த காரணத்தினால்தான், தன் உற்றார் - உறவினர் வாழும் தாய்நாட்டைப் போலக் கருதியதால்தான் மழையை நம்பி மானாவாரி சாகுபடி செய்யும் மக்களின் விவசாயத்துக்காக, அவர்களின் குடிநீர் வசதிக்காக ஆங்கிலேய அரசாங்கம் நிதி உதவி செய்ய மறுத்த நிலையிலும், தன் சொத்துகளை விற்றது அவரது தியாக உள்ளத்தைப் பறைசாற்றுகிறது.
    அணை கட்டுமானப் பணியின் போது பலர் உயிரிழந்தனர். தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டும், காலரா வந்தும் பலியானார்கள். அவர்களில் தமிழர்கள் மட்டுமல்லர், ஆங்கிலேயர்களும் இருந்தனர். 20-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் உயிரிழந்தனர். இப்படி தமிழர்களின் ரத்தமும், ஆங்கிலேயர்களின் ரத்தமும் கலந்து உருவாகி ஒரு தியாகத்தின் சின்னமாக விளங்கிக் கொண்டிருப்பதுதான் முல்லைப் பெரியாறு அணை.
    தென் தமிழக மக்களின் வாடிய வயிறுகளையும், வதங்கிய பயிர்களையும் கண்டு வள்ளலாராய் உருகிய ஜான் பென்னிகுயிக்கின் வாழ்க்கை என்பது, மனிதகுலத்துக்கு எடுத்துக்காட்டு.
  • பொறியியல் துறையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது முல்லைப் பெரியாறு அணை. இதன் உறுதியும், நவீனத் தொழில்நுட்பமும் பொறியியல் உலகில் இன்றும் வியப்பாகப் பேசப்படுகிறது. அதிசயமாகப் பார்க்கப்படும் இந்த அணையின் பின்புலத்தை நீங்கள் பார்த்தீர்கள் என்று சொன்னால், காட்டில் ஓடும் காட்டாற்றின் குறுக்கே அணை கட்டியிருப்பது பெரும் சாதனையாகும்.

முல்லைப் பெரியாறு அணை

  • கடல்மட்டத்தில் இருந்து 2,890 அடி உயரத்தில் அமைந்திருக்கும் முல்லைப் பெரியாறு அணையில், புவி ஈர்ப்பு விசை  கன அடிக்கு 145 பவுண்டாக இருக்கும் என்பதால் இந்த அணையை எடை ஈர்ப்பு அணை என்கிறார்கள் தொழில்நுட்பம் உணர்ந்த பொறியாளர்கள்.
    ஓடும் தண்ணீருக்குக் குறுக்கே அணை கட்டினால் மட்டும் போதாது. அந்தத் தண்ணீரை ஓங்கி உயர்ந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்து, கிழக்கே கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அதற்கு முதல் விதையாக மலையில் ஒரு சுரங்கம் அமைக்க வேண்டும். அதன் பயனாகத்தான் வடக்குப் பக்கம் இருந்தும், தெற்குப்பக்கம் இருந்தும் மலையைக் குடையும் வேலையைத் தொடங்கினார் ஜான் பென்னிகுயிக்.
  • மழைக் காலங்களில் ஏரியில் தண்ணீர் அதிகரிக்கும்போது வடக்குப் பக்கம் சுரங்கம் தோண்டும் பணி தடைபடும். அந்த நேரத்தில் தெற்குப் பக்கம் சுரங்கப் பணிகள் நடைபெறும். தொழில்நுட்பங்களும், செயற்கைக்கோள்களும் இல்லாத அந்தக் காலத்தில் எதிரெதிர் பக்கங்களில் இருந்து தோண்டப்பட்ட அந்தச் சுரங்கங்கள் சரியாக இருந்தன என்பது பெரும் அதிசயம். சுரங்கம் தோண்டுவதற்காக "நோபல் எக்ஸ்ப்ளோசிவ்' கம்பெனியிடமிருந்து உயர் ரக வெடிமருந்துகள் வாங்கியுள்ளார் பென்னிகுயிக் என்று வரலாற்றுப் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
  • சங்கத் தமிழனின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் கல்லணையின் தொழில்நுட்பத்தைக் கண்டு வியப்பின் விளிம்பிற்கே சென்றவர்கள் ஏராளம். அவற்றை ஆராய்ச்சி செய்த பிரிட்டிஷ் பொறியாளர் சர் ஆர்தர் காட்டனின் கல்லணை குறித்த ஆய்வறிக்கையைப் படித்த ஜான் பென்னிகுயிக், தமிழர்கள் பயன்படுத்தும் சுண்ணாம்புக் கலவையால் ஆன "சுர்க்கி' கொண்டு முல்லைப் பெரியாறு அணையைக் கட்டத் திட்டமிட்டார்.
  • அந்தக் காலத்தில் பிரபலமான போர்ட்லேண்ட் சிமெண்ட்டும் பயன்படுத்தப்பட்டது. பாறை ஒன்றை எடுத்துத் துளையிட்டு அதில் கான்கிரிட் - சுர்க்கி கலந்த கலவையைப் போட்டுக் காய வைத்து, அதன் உறுதித் தன்மையை ஆராய்ந்த பின்னரே அந்தக் கலவையை அணை கட்டப் பயன்படுத்தினோம் என்று தனது ஆவணங்களில் பதிவு செய்திருக்கிறார் பென்னிகுயிக்.

கட்டுமானப் பணி

  • தட்பவெப்ப நிலை காலநிலை காரணமாக ஆண்டுக்கு 6 முதல் 9 மாதங்கள் மட்டுமே கட்டுமானப் பணியில் ஈடுபட முடிந்திருக்கிறது. முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடிக்க 9 ஆண்டுகள் ஆயின. மொத்தம் 483 பேர் நோயாலும், விபத்தாலும், தங்கள் இன்னுயிரை இந்தக் கட்டுமானத்தின்போது தியாகம் செய்திருக்கிறார்கள்.  
    கட்டுமானப் பணிகளின்போது 6 கான்கிரீட் கலவை இயந்திரங்கள் பிரிட்டனிலிருந்து வரவழைக்கப்பட்டன. இதற்கான மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய, சிறு  அனல் மின் நிலையத்தை அக்காட்டுப் பகுதிகளில் அமைத்து, அதன் மூலம் மின்சாரத்தைப் பயன்படுத்தியிருப்பதும், கம்பம் பள்ளத்தாக்கில் இருந்து குமுளி வரை செங்குத்தான சரிவுகளைக் கொண்ட மலைப் பகுதியில் தொங்குபாலம் அமைத்ததும், தொங்குபாலத்தில் வந்திறங்கும் பொருள்களை அணைப் பகுதிகளுக்குக் கொண்டுவர சிறிய மின்சார ரயில்,  பெரியாற்றில் பயணிக்கக் கூடிய மிதவைப் படகு இவையனைத்தும் அடர்ந்த காட்டில் பென்னிகுயிக் செய்திருக்கும் வியக்கத்தக்க நிகழ்வுகளாகும்.
  • ஒரு பிரிட்டிஷ் பொறியாளர் தமிழக மக்களுக்கு செய்திட்ட மானுடப் பற்றின் மகத்தான மறுபெயர்தான் முல்லைப் பெரியாறு அணை. தேனி வட்டாரங்களில்  பென்னிகுயிக்கின் பிறந்தநாளான ஜனவரி 15-ஆம் தேதியன்று பொங்கல் வைத்து வழிபாடு செய்து அவரின் உருவப் படத்தை வணங்கி மகிழ்கிறார்கள். ஓர் அரசு அதிகாரியாக, ஓர் ஆங்கிலேயராக இருந்த ஒருவரின் விலை மதிக்க முடியாத அன்பு, எத்தகையதொரு பேரன்பின் சின்னமாகத் திகழ்ந்து அது அணையாக எழுந்து நிற்பதை இன்று நாம் நினைத்துப் பார்த்தாலும்கூட நெஞ்சம் உருகுகிறது.

நன்றி: தினமணி (14-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories