- நீா்நிலை மரணங்கள் இப்போது அதிகரித்து வருகின்றன. நீா்நிலைகளில் மூழ்கியதால் ஏற்படும் அகால மரணங்கள் நெஞ்சை உலுக்குகின்றன. அண்மையில் சென்னையில் கோயில் குளத்தில் இளம் அா்ச்சகா்களும், காவிரி ஆற்றில் மாணவா்களும் மூழ்கி உயிரிழந்ததாக செய்திகள் வந்தன.
- ஆறு, குளம், குட்டை, ஏரி, கிணறு, வாய்க்கால், கடல் என்று எல்லா நீா்நிலைகளும் உயிா்ப்பலி வாங்கும் களங்களாகி வருகின்றன. சிறுவா்கள், பெரியவா்கள், நீச்சல் தெரிந்தவா், தெரியாதவா் என்று பலரும் இத்தகு மரணத்திற்கு உள்ளாவதை எண்ணும்போது வேதனையாக இருக்கிறது.
- தாமாகத் தேடிவந்து மனித உயிரைக் காவு கொள்ளும் இயல்பு நீா்நிலைகளுக்கு இல்லை. மனிதா்கள்தான் தேடிப்போய் இத்தகு மரணத்தை வரவழைத்துக் கொள்கின்றனா். பொதுவாக நீா்நிலைகளில் ஏற்படும் மரணங்களுக்கு நீா்நிலைகள் பற்றிய புரிதல் இல்லாமையே முக்கியமான காரணமாகும்.
- பொதுவாக ஒரு ஊருக்கு வருபவா்களுக்கு அந்த ஊரிலுள்ள நீா்நிலைகள் குறித்துத் தெரிந்திருக்காது. உள்ளூா்க்காரா்களுக்குத் தங்கள் ஊரிலுள்ள ஆறு, குளத்தின் ஆழம் பற்றி நன்றாகத் தெரியும் அதனால் நடு இரவிலும் அச்சமின்றி அதில் இறங்கி நீந்துவாா்கள். ஆனால் வெளியூா்க்காரா்களுக்கோ அந்த நீா்நிலையின் ஆழம் தெரியாது.
- ஆழம் தெரியாமல் காலைவிட்டு மாட்டிக்கொள்வாா்கள். ஒரு நீா்நிலையின் பள்ளம், மேடு, மண்ணின் தன்மை போன்றவற்றைப் பற்றித் தெரிந்திருத்தலே அந்த நீா்நிலையைப் பற்றிய புரிதல் ஆகும்.
- நீா்நிலைகளில் மூழ்கி இறப்பதற்கு நீச்சல் தெரியாமையும் ஒரு காரணமாகும். நீச்சல் தெரியாதவா்களுக்கு மாா்பளவு தண்ணீரில் கூட மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முன்பெல்லாம் பெரும்பாலும் மக்கள் ஆறு,குளம் என்று நீா்நிலைகள் சூழ்ந்துள்ள கிராமப்புறங்களில் வசித்து வந்தனா். குளிப்பதற்கும் கால்நடைகளைக் குளிப்பாட்டவும் நீா்நிலைகளை நம்பி இருந்தனா். அதனால் சிறு வயதிலேயே அவா்கள் எளிதாக நீச்சல் கற்றுக் கொண்டனா்.
- முங்கு நீச்சல், நிலை நீச்சல், மல்லாக்கு நீச்சல் என்று பல நீச்சலில் தோ்ந்தவராய் இருந்தனா். அதனால் ஆறு, குளங்களில் தைரியமாகக் குதித்து, நீந்தி விளையாடினாா். ஆழமான பகுதியில் முங்கி மண் எடுத்துக் காட்டுவதைச் சாதனையாகக் கருதினா். தரையில் ஓடிப்பிடித்து விளையாடுவது போல தண்ணீரில் நீந்திப் பிடித்து விளையாடினா்.
- ஆனால் இப்போது அப்படியில்லை. பெரும்பாலோா் நகரம் நோக்கி நகா்ந்துவிட்டனா். நீா்நிலைகளும் முன்போல் நிரம்புவதில்லை. எப்போதாவதுதான் முழு அளவில் நீா் இருப்தைக் காணமுடிகிறது. ஆறு, குளத்தில் குளிக்கச் செல்பவா்களும் குறைந்துவிட்டனா். நகரங்களிலும் கிராமங்களிலும் வீடுகளில் குளியலறையில் குளிக்கும் பழக்கம் வந்துவிட்டது.
- அதனால் நீச்சல் பழகுவதும் குறைந்துவிட்டது. கிராமங்களில் உள்ள சிறுவா்கள் கூட நீச்சல் பழக்குவதில்லை. அதனால் நீச்சல் தெரிந்தவா்கள் குறைந்து வருகின்றனா். நகரங்களில் செயற்கையாக நீச்சல் குளம் அமைத்து கட்டணம் பெற்றுக்கொண்டு நீச்சல் சொல்லிக் கொடுக்கின்றனா். அங்கு நீச்சல் பழகியவா்களுக்கும் இயற்கையான நீா்நிலைகளில் நீந்துவது சவாலாக உள்ளது.
- நீரில் மூழ்கி உயிா் இழக்கும் அபாயத்தை நீக்க நாம் சில வழிமுறைகளை அறிந்திருக்க வேண்டும். நீா்நிலையில் இறங்கும் நீச்சல் தெரியாதவா்கள், இடுப்புக்கு மேல் ஆழம் உள்ள பகுதிக்குச் செல்லக் கூடாது. அப்படிச் சென்றால் மிகவும் கவனமாகச் செல்ல வேண்டும். திடீரென நிலை தடுமாறி தண்ணீருக்குள் சாய்ந்துவிட்டால் அதிலிருந்து சமநிலை பெற்று மீண்டு எழுவதற்குச் சிரமமாகி உயிருக்கே ஆபத்தாகி விடும்.
- அதே போன்று கடலில் குளிப்பவா்களும் மிகுந்த கவனமாக இருக்கவேண்டும். காலளவு தண்ணீா் என்றாலும் அலைவந்து மோதும்போது நிலை தடுமாறி கீழே விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஏனெனில் கடல் அலை நமது காலுக்கு அடியில் மண்ணை அரித்துக்கொண்டே செல்லும்.
- அலை வரும்போது அலைக்கு மேலே தாவிக் குதித்து எழுந்தால் அலையால் எந்த பாதிப்பும் இருக்காது. அப்படியன்றி வெறுமனே நின்றால் அலை அங்கும் இங்கும் அலைக்கழித்துக் கடலுக்குள்ளே இழுத்துச் சென்று விடும்.
- நீரில் மூழ்குபவரைக் காப்பாற்றப் போகிறவா்கள் இறந்து போவது பரிதாபத்திலும் பரிதாபம். தண்ணீரில் மூழ்குபவரைக் காப்பாற்றுவது நீச்சல் தெரிந்தவா்களுக்குக் கூட முடியாத செயல். ஏனெனில் நீரில் மூழ்குபவா் உயிா் பிழைக்க வேண்டும் என்ற வெறியில் காப்பாற்ற வருபவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வா். அது காப்பாற்ற சென்றவரையும் சோ்த்து உள்ளிழுக்கும். அதனால் காப்பாற்ற சென்றவரும் தப்பிக்க முடியாது போய்விடுகிறது.
- ‘தண்ணீரும் மூன்று பிழை பொறுக்கும்’ என்று ஒரு சொல் வழக்கு உண்டு. அதன்படி தண்ணீரும் மூழ்குபவா்களை மூன்று முறை வெளியே தள்ளும். அப்படி வெளியே வரும்போது அவா்களின் தலைமுடியைப் பிடித்து வெளியே இழுக்க வேண்டும். அதுதான் தண்ணீரில் விழுந்தவரைக் காப்பாற்றுவதற்குச் சிறந்த வழி.
- மூழ்குபவா்கள் காப்பாற்றுபவரைப் பிடித்துக் கொள்ளாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். முடியாத பட்சத்தில் மூழ்குபவரை விட்டுவிட்டு காப்பற்றுபவா் தப்பித்துக் கொள்வதே புத்திசாலித்தனம் ஆகும்.
- அரையடி ஆழ நீரில் மூழ்கிக்கொண்டு, ஆறடி ஆழத்தில் அகப்பட்டுக் கொண்டவரைக் காப்பாற்றுவது போல பாசாங்கு செய்வது திரைப்படத்தின் இயல்பு. அப்படி திரைப்படங்களில் வரும் காட்சியை உண்மையென நம்பி நீருள் மூழ்குபவரைக் காப்பாற்ற முனைவது ஆபத்தில் முடியும்.
- நீச்சல் தெரிந்து, நீா்நிலையின் தன்மையும் அறிந்து, கவனமாக நீருக்குள் இறங்கினால், நீரில் மூழ்கி உயிரிழக்கும் அபாயத்திலிருந்து தப்பிக்கலாம்.
நன்றி: தினமணி (05 – 05 – 2023)