TNPSC Thervupettagam

நுகர்வோர் நலனில் அரசுக்கு அக்கறை இல்லையா?

March 10 , 2025 5 days 50 0

நுகர்வோர் நலனில் அரசுக்கு அக்கறை இல்லையா?

  • தமிழ்நாட்டில் உள்ள பல ‘நுகர்வோர் குறைதீர் ஆணைய’ங்களில் பணியாளர் பற்றாக்குறை, போதுமான கட்டமைப்பு வசதிகள் இன்மை போன்றவற்றால் அவற்றின் அடிப்படை நோக்கமே கேள்விக்குறி ஆகியுள்ளது. நுகர்வோர் நலனில் அரசுக்கு அக்கறை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் கூறுமளவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு கவலை அளிக்கிறது.
  • விற்பனையாளரால் நுகர்வோர் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும் நிவாரணம் பெற்றுத் தரவும் 1986இல் நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் தொடங்கப்பட்டன. வழக்கமான நீதிமன்ற நடைமுறை எதுவும் பின்பற்றக் கூடாது என்கிற கவனத்தோடு நுகர்வோர் ஆணையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. விரைவான, செலவே இல்லாத, எளிமையான தீர்வுகளே இவற்றின் அடிப்படை நோக்கம். ஒரு புகாரை 90 நாள்களுக்குள் விசாரித்து முடிக்குமாறு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் கூறுகிறது.
  • நுகர்வோர் பாதுகாப்பு (திருத்தம்) சட்டம், 2019இன்படி மாவட்டம், மாநிலம், நாடு ஆகிய மூன்று அடுக்குகளில் நுகர்வோர் குறைதீர் ஆணையம் செயல்படுகிறது. தொடக்கத்தில் நாடு முழுவதும் நுகர்வோர் ஆணையங்கள் புகார்களை உடனுக்குடன் விசாரித்துத் தீர்ப்பு வழங்கினாலும், நாளடைவில் பல காரணங்களால் தொய்வு ஏற்பட்டது. தீர்வு கிடைக்க ஓராண்டிலிருந்து ஐந்தாண்டுகள் வரை ஆகலாம் என்பதே தற்போதைய நிலை. 2024 ஜூலை 31 நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் 50,258 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
  • தமிழகத்தில், 2024 டிசம்பர் 31இல் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஏறக்குறைய 4,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தத் தேக்கநிலை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாகவே விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. விசாரணையை பிப்ரவரி 7 அன்று தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு நடத்தியது.
  • நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 42(3) பிரிவின்படி, மாநிலக் குறைதீர் ஆணையத்தில் தலைவரும் நான்கு பேருக்குக் குறையாமல் உறுப்பினர்களும் இருக்க வேண்டிய நிலையில், தற்போது தலைவர் மட்டுமே இருப்பது நீதிமன்ற உதவுநரால் அப்போது சுட்டிக்காட்டப்பட்டது. மாநில ஆணையத்திலும் மாவட்ட ஆணையங்களிலும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் பற்றாக்குறை உள்ளது; மாநில ஆணையத்தில் தீர்ப்பை அமல்படுத்துகிற கட்டமைப்பு இல்லாததால், 114 தீர்ப்புகள் பலன் தராமல் உள்ளன எனவும் கூறப்பட்டது.
  • மாநில ஆணையத்தில் பணிச்சுமையைக் குறைக்கக் கூடுதலாக ஓர் உறுப்பினர் வேண்டும் என அதன் தலைவர் அரசுக்குக் கடிதம் எழுதி 22 மாதங்கள் ஆன பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படாததைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நுகர்வோர் நலனில் அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே இந்த நிலை காட்டுகிறது எனக் கவலை தெரிவித்தனர். இதையடுத்து, காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது.
  • தமிழகத்தில் காணொளிவழி விசாரணை வசதி ஐந்தாறு ஆணையங்களில்தான் உள்ளதாகவும் கழிப்பறை வசதிகூடப் பல இடங்களில் இல்லை எனவும் நுகர்வோர் உரிமை அமைப்புகள் தொடர்ந்து கூறிவருகின்றன. மாநில அரசுகளின் நிதி நெருக்கடியும் இதன் பின்னணியில் உள்ளது. நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே ஒத்திசைவு இல்லாதது, நுகர்வோர் குறைதீர் ஆணையங்களையும் பாதிக்கிறது.
  • 2021இல் இதே போன்ற ஒரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் இருப்பதை மத்திய அரசு விரும்பவில்லை எனில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்துவிடலாம்’ எனக் கடுமையாகவே கூறியது. இத்தகைய கொதிப்பான அறிவுறுத்தல்கள் இல்லாமலேயே நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் பேணப்பட வேண்டும். அப்போதுதான் நுகர்வோர் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்!

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 03 – 2025)

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

PrevNext
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
Top