- வௌவால்களே சீனாவிலிருந்து பரவிய கரோனா வைரஸின் தோற்றுவாயாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. பல்வேறு நோய்களுக்குக் காரணமான நுண்கிருமிகளுடன் வாழ்வதற்கான நோய் எதிர்ப்பு சக்தி வௌவால்களுக்கு இருக்கிறது என்பதுதான் அதற்கான காரணம். ‘இகாஹெல்த் அலையன்ஸ்’ அமைப்பின் தலைவரான பீட்டர் டஸக், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்களைப் பற்றி சீனாவிலிருந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகிறார். ‘கரோனாவுக்கு மூலக் காரணம் என்னவென்று இதுவரை எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், அது வௌவால்களிடமிருந்து தோன்றிய கரோனா வைரஸ் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன’ என்று கூறியிருக்கிறார்.
வௌவால் வைரஸ்களுக்கு உறைவிடம்
- ஒரு வௌவால் தனக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமலேயே பெரும்பாலான வைரஸ்களுக்கு உறைவிடமாக இருக்க முடியும். ஆப்பிரிக்கா, மலேசியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பரவிய ‘மார்பர்க்’, ‘நிபா’, ‘ஹேந்த்ரா’, ‘ரேபிஸ்’ வைரஸ்களுக்கு வௌவால்கள்தான் இயற்கை உறைவிடம். ‘எபோலா’ வைரஸ்களையும்கூட வௌவால்கள் தங்களோடு வாழ அனுமதிக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. வௌவால்கள் மற்ற எந்தப் பாலூட்டிகளைவிடவும் வைரஸ்களால் பாதிக்கப்படாத தன்மையையும் அதிகமாகவே கொண்டிருக்கின்றன.
- இது தொடர்பாக மருத்துவ அறிவியல் தொடர்ந்து ஆராய்ச்சிகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறது. புதிதாக வெளிவந்திருக்கும் ஆய்வு முடிவொன்று, வௌவால்கள் பறப்பதற்கான பரிணாம வளர்ச்சிப் படிநிலைகளானது அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தியிலும் மாற்றங்களை உருவாக்கியிருக்கின்றன என்று கூறுகிறது. தற்போது உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு, அதன் தோற்றத்தைக் கண்டுபிடிப்பதும், மேலும் அது பரவாமல் தடுப்பதும் அவசியம். அதற்கு வௌவால்களைக் கண்காணிப்பதும் ஒரு பகுதி என்கிறார் பீட்டர் டஸக்.
- சீனாவில் உள்ள அறிவியலாளர்கள் ஏற்கெனவே வௌவால்களை மிகவும் தீவிரமாகக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தற்போது ஏற்பட்டிருக்கும் கரோனா வைரஸ் தாக்குதலைப் போல மீண்டும் ஒன்று ஏற்படக்கூடும் என்று அவர்களுக்குத் தெரியும். சீன ஆராய்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையொன்றில், வௌவால்கள் வழியாகப் பரவக்கூடிய கரோனா வைரஸ் மீண்டும் நோய்த் தாக்குதலை ஏற்படுத்தும், சீனா அதன் முக்கியக் குவிமையமாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
மனிதர்களோடு நெருக்கமாக வாழ்பவை
- கொறித்துண்ணும் விலங்குகள், குரங்குகள், பறவைகள் ஆகியவையும்கூட நோய்களைச் சுமந்துவந்து மனிதர்களிடத்தில் பரப்புகின்றன. ஆனால், வௌவால்கள் மனிதர்களோடு மிகவும் நெருக்கமாக வாழ்பவை. மிக அதிக ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டவையும்கூட. சில வௌவால் இனங்கள், 40 ஆண்டுகள் வரையிலும்கூட வாழ்கின்றன. அண்டார்க்டிகா தவிர்த்து அனைத்து கண்டங்களிலும் வௌவால்கள் இருக்கின்றன. மிகப் பெரிய பரப்பளவில் அவை பறக்க முடியும் என்பதால் நோய் பரவும் வேகமும் அதிகமாக இருக்கிறது. எனவே, வௌவால்களின் வாழ்விடங்களை ஆக்கிரமிக்கும்போது அவை குடியிருப்புக்குள் வருகின்றன; எனவே, வன அழிப்பைத் தவிர்க்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் அறிவுரை.
நன்றி: தி இந்து (02-04-2020)