TNPSC Thervupettagam

நெஞ்சத்தை சுடும் ஆதிதிராவிட நல கல்வி நிலையங்களின் அவலநிலை

September 24 , 2023 491 days 309 0
  • தமிழகத்தில் ஆதிதிராவிட நலத்துறையின்கீழ் பள்ளி, கல்லூரி, ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் முதுகலை பட்டதாரி விடுதிகள் என மொத்தம் 1331 விடுதிகள் இயங்கி வருகின்றன‌. இந்த நலத்துறை விடுதிகளில் மொத்தம் 98 ஆயிரத்து 909 மாணவ, மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர்.
  • இந்த விடுதிகள் பெயரளவிலே விடுதிகளாக இருக்கின்றன. அவற்றில் போதிய அடிப்படை வசதிகள், சரியான பராமரிப்பு இல்லாமல் அநாதை விடுதிகளைப் போல‌ இயங்கிக் கொண்டிருக்கின்றன. கணிசமான விடுதிகளில் கழிப்பறைகள் கூட இல்லை. சில போதிய தண்ணீர் வசதிகள் இல்லை. மாணவர்கள் வசிக்க முடியாத நிலையிலே பெரும்பாலான விடுதிகள் தவிக்கவிடப் பட்டுள்ளன.

காவலர் இல்லாத நிலை

  • இந்த 1331 விடுதிகளில் 50 சதவீதமான விடுதிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருக்கும் இந்த விடுதிகளில் கட்டாயம் இரவு பாதுகாப்பாளர்கள் இருக்க வேண்டும் என விதிமுறை இருக்கிறது. ஆனால் ஆதிதிராவிட நலத்துறை அதனை பின்பற்றுவதில்லை.
  • தற்போதைய நிலவரப்படி, காவலர் (வாட்ச்மேன்) மற்றும் உதவியாளர் சேர்த்து மொத்தம் 974 பேர் மட்டுமே இருக்கிறார்கள். பாதுகாப்பாளர்களின் இந்தக் குறைவான எண்ணிக்கை மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்குகிறது. ஆகவே விடுதிகளின் உடனடி தேவையாக இரவு காவலர்களை நியமனம் இருக்கிறது. ஆதிதிராவிட‌ மாணவர்களுக்கு ரூ.33, போலீஸ் நாய்க்கு ரூ.200?
  • இந்த விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களின் உணவுக்காக ஒரு மாணவனுக்கு ஒரு நாளைக்கு வெறும் ரூ.33 மட்டுமே (2020-2021 கல்வி ஆண்டின்படி) அரசு ஒதுக்கியுள்ள‌து. அதாவது, ஒருவேளை உணவுக்கு ரூ. 11 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ள‌து. தற்போதைய‌ சூழலில் தானியப் பொருட்களின் விலையேற்றதுக்கு ஒரு நாள் உணவுக்கு

ரூ.33 போதுமானதாக இருக்குமா

  • விலைவாசி ஏற்றத்தைப் பற்றி எவ்வித புரிதலும், ஆதிதிராவிட மாணவர்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லாமல் இந்த தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை எந்தப் புள்ளி விவரங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரியவில்லை. இந்த குறைந்த தொகை நிர்ணயமே, ஆதிதிராவிட நலத்துறை விடுதிகளின் உணவு தரமின்மைக்கு முதல் காரணம் ஆகும்.
  • பள்ளிகளில் என்.சி.சி. பயிற்சிக்கு செல்லும் ஒரு மாணவருக்கு ஒரு வேளை உணவுக்கு ரூ.50 அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால் ஆதிதிராவிட நல விடுதி மாணவர்களுக்கு மூன்று வேளை உணவுக்கு வெறும் ரூ.33 மட்டும் ஏன் ஒதுக்கியது? சமூக நீதியை பின்பற்றுவதாக கூறும் அரசு ஆதிதிராவிட மாணவர்களுக்கு மட்டும் பாராபட்சம் காட்டுவது நியாயமா?
  • இன்னொருபுறம், காவல்துறைப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் மோப்ப நாய்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.200 (2013 ஆண்டு கணக்குப்படி ) உணவுக்காக ஒதுக்கப்படுகிறது. நாய்க்கு ரூ. 200 ஒதுக்கும் அரசு, ஆதிதிராவிட விடுதி மாணவர்களுக்கு ரூ.33 ஒதுக்கியதை என்னவென்று சொல்வது? ஒரு நாயிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக்கூட, ஆதிதிராவிட விடுதி மாணவர்களுக்கு திமுக, அதிமுக அரசுகள் கொடுக்கவில்லை என்பதே சுடும் உண்மை.
  • இந்த குறைந்த தொகையில் விடுதி ஊழியர்கள் தொடங்கி உள்ளூர் அரசியல் பிரமுகர், வட்டாட்சியர், மாவட்ட அலுவலர், மாநில அதிகாரிகள், அமைச்சர் வரை எல்லாருக்கும் பங்கு பிரிக்க வேண்டும்? 33 ரூபாயை இத்தனை பங்குகளாக பிரித்துவிட்டால் மாணவர்களுக்கு எப்படி தரமான, சத்தான உணவை வழங்க முடியும்? என்ற கேள்வியும் எழுகிறது.
  • நலத்துறை விடுதிகளை அரசு இவ்வாறு மோசமாக நடத்துவதோடு அல்லாமல், தற்போது கடந்த ஏப்ரல் மாதம் முதல் உணவு கட்டணத் தொகை அரசால் இன்னும் விடுதிக் காப்பாளர்களுக்கு வழங்கப்படவில்லை. உணவுக் கட்டணத்தொகையை திமுக அரசு நான்கு மாதமாக வழங்கவில்லை என்றால் விடுதியைக் காப்பாளர்கள் எப்படி நடத்துவது? ஏற்கனவே கூடுதல் பணிச் சுமையில் இருக்கும் இவர்களுக்கு மேலும் சுமையைக் கூட்டினால் என்ன செய்வார்கள் என்று அரசு ஒருபோதும் சிந்திப்பதில்லை.

கடலூரின் நிலை

  • தமிழகத்திலேயே கடலூர் மாவட்டத்தில்தான் அதிகமாக 61 ஆதிதிராவிட நல விடுதிகளும், 126 நலப் பள்ளிகளும் இயங்குகின்றன. இந்த பகுதியில் ஆதிதிராவிட மக்களின் நலனுக்காக பாடுப்பட்ட சுவாமி சாகஜானந்தா, எல்.இளையபெருமாள், சிவசுப்ரமணியன், குப்புசாமி, ஜெயசீலன் போன்றவர்களின் உழைப்பால் ஏற்படுத்தப்பட்டவை.
  • இன்று அந்த விடுதிகள் பாழடைந்த நிலையில் இருக்கின்றன. பெரும்பாலானவற்றில் காவலர் இல்லாததால் குடிகாரர்களின் கூடாரமாக மாறியுள்ளன. இதனால் விடுதிகளுக்குள் மாணவர்கள் நுழையவே அஞ்சுகிறார்கள். இன்னொருபுறம் மாணவர்கள் கண்முன்னே கெட்டு சீரழிகிறார்கள். இதில் அரசு அக்கறை காட்டாத நிலையில், பட்டியலின பிரதிநிதிகளும் கவனிக்க மறுக்கிறார்கள்.
  • கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் மக்களவைத் தொகுதி எம்பியாக உள்ள விசிக தலைவர் தொல்.திருமாவளவனும், காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்எல்ஏயாக உள்ள விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வனும், கடலூர் மாநகராட்சித் துணை மேயராக உள்ள விசிக பொறுப்பாளர் தாமரைச்செல்வனும் கூட இதனை கவனிக்காமல் இருப்பது வேதனையாக இருக்கிறது.

ஆதிதிராவிட பள்ளிகளின் அவல நிலை

  • தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் 1466 தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருன்கிறன. இவற்றில் போதிய ஆசிரியர்கள் இல்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலி பணியிடங்களை நிரப்ப காலதாமதம் ஆகிறது. இதனால் தற்காலிக ஏற்பாடாக, தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை அரசு நியமனம் செய்தது. அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 19 முதுநிலை ஆசிரியர்கள், 80 பட்டதாரி ஆசிரியர்கள், 366 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 465 பணியிடங்களை 2022- 2023 கல்வி ஆண்டுக்கு மட்டும் நியமனம் செய்தது.
  • அதேவேளையில் அரசு பள்ளிகளில் 14 ஆயிரத்து 19 தற்காலிக ஆசிரியர்களை கடந்த கல்வி ஆண்டில் அரசு நியமனம் செய்தது. கோடை விடுமுறைக்கு பிறகு அரசு பள்ளிகள் செயல்பட‌ தொடங்கிய போது மறுபடியும் காலி பணியிடங்களை கணக்கெடுத்து தற்காலிக ஆசிரியர்களை நியமித்தது.
  • ஆனால் அதேப்போன்று ஆதிதிராவிட நல பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை அரசு உடனடியாக நியமிக்கமில்லை. இதற்காக‌ கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி அரசாணை வெளியிட்டு ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டது. 3 நாளுக்குள் சரியான நல்லாசிரியர்களை எவ்வாறு தேர்வு செய்து நியமிக்க முடியும்?
  • இதையே காரணமாக வைத்து மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை, இதுவரை முறையாக ஆசிரியர்களை காலதாமதம் செய்து வருகிறது. ஆசிரியர் கலந்தாய்வும் இன்னும் நடத்தப்படவில்லை. ஆசிரியர்கள் இல்லாமல் ஆதிதிராவிட‌ நலப் பள்ளிகள் இயங்குவதால் மாணவர்களின் கல்வி தரம் வெகுவாக குறைந்துள்ளது.

உடனடி கவனம் தேவை

  • அவல நிலையில் இருக்கும் ஆதிதிராவிட நல பள்ளிகள், விடுதிகளை அரசு உடனடியாக கவனிக்க வேண்டும். பள்ளி, விடுதிகளில் உள்ள காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். ஆதிதிராவிட நலத்துறை விடுதி மாணவர்களுக்கான உணவுக்கான நிர்ணய தொகையை ஒரு மாணவருக்கு நாளொன்றுக்கு ரூ. 200 ஆக உயர்த்த வேண்டும்.
  • விடுதிக் காப்பாளர்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். கடந்த காலங்களைப் போல சிறப்பு உட்கூறுத் திட்ட நிதியை மற்ற பணிகளுக்கு மடைமாற்றம் செய்யாமல், மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பாமல் ஆதிதிராவிடர்களின் ஆக்கபூர்வமான தேவைகளுக்கு செலவிட வேண்டும்.

நன்றி: தி இந்து (24 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories