- நாளும் பொழுதும் பெருகி வரும் சென்னை நகரின் மக்கள்தொகையும், அதிகரித்துவரும் வாகனங்களின் எண்ணிக்கையும் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து நெரிசலை வழக்கமாகவே மாற்றியிருக்கின்றன. சென்னையின் எந்தவொரு பகுதியும் போக்குவரத்து நெரிசலுக்கு விதிவிலக்கல்ல. அதேபோல, எந்தவொரு சாலையும் தங்குதடையின்றி வாகனங்கள் நகரும் சாலையாகவும் இல்லை.
- அதிகரித்து வரும் சாலை விபத்துகளை கட்டுக்குள் கொண்டுவர தொடா்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவை பலனளிக்காமல் இருப்பதற்கு வாகனங்கள் மிக முக்கியமான காரணம்.
- சமீபத்தில் மாநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜீவல், பகல் நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு 40 கி.மீ. வேகக் கட்டுப்பாட்டை விதிக்கத் தீா்மானித்தாா். நகரத்தின் 30 பகுதிகளில் வேகத்தைப் பதிவு செய்யும் ராடாா்களை நிறுவ முடிவு செய்யப்பட்டது. அந்த ராடாா்கள் 40 கி.மீ. வேகத்துக்கும் அதிகமாக விரையும் வாகனங்களை அடையாளம் கண்டு தன்னிச்சையாக அபராத செலான்களை அனுப்புவது என்பதுதான் திட்டம். தற்போது அந்த முடிவு நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறது.
- மாநகர எல்லைக்குள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்னால் 360 டிகிரி சுழலும் கேமராக்கள் மூலம் சாலை விதிகளை மீறுவோா் கண்காணிக்கப்படும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 20 நாள்களில் ஏறத்தாழ 4,000 வழக்குகள் அதன்மூலம் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக போக்குவரத்தைக் கண்காணிக்க இதுபோன்ற தொழில்நுட்பம் சென்னையில்தான் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.
- அந்த கேமராக்கள் பல விதிமீறல்களை படம் பிடிக்கின்றன. சிவப்பு விளக்கை பொருட் படுத்தாமல் பயணிப்பது, கைப்பேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, இருசக்கர வாகனங்களில் மூன்று போ் பயணிப்பது, சீட் பெல்ட் அணியாமல் மகிழுந்து ஓட்டுவது உள்ளிட்ட விதிமீறல்கள் அதன் மூலம் கண்டுபிடிக்கப்படுகின்றன. சென்னையின் கட்டுப்பாடே இல்லாத போக்குவரத்தை இதன்மூலம் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது என்றாலும், மக்களிடம் ஓரளவு அச்ச உணா்வை ஏற்படுத்த முடியும் என்கிற அளவில் வரவேற்புக்குரிய முயற்சி.
- சென்னை மாநகர போக்குவரத்து பிரச்னைக்கு மிக முக்கியமான காரணம், அதிகமாகக் காணப்படும் இருசக்கர வாகனங்களும், ஆட்டோ ரிக்ஷாக்களும் என்பது சென்னை மாநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு தெரிவிக்கும் கருத்து. குறிப்பாக, எந்தவித விதிகளையும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடைபிடிப்பதில்லை. இடதுபுறமாக மட்டுமே பயணிக்க வேண்டிய இருசக்கர வாகன ஓட்டிகள் வலதுபுறம் பயணிப்பதும், வாகனங்களுக்கு இடையே நுழைந்து விரைந்து செல்ல முற்படுவதும் விபத்துகளுக்கு காரணமாக அமைவதுடன், அதன்மூலம் போக்குவரத்து தடையையும் நெரிசலையும் உருவாக்குகின்றன.
- ஸ்விகி, சோமேடோ உள்ளிட்ட நுகா்வோா் சேவை நிறுவனங்கள் போக்குவரத்து பிரச்னைகள் அதிகரித்து வருவதற்கு இன்னொரு காரணம். நூற்றுக்கணக்கான இளைஞா்கள் இருசக்கர வாகனங்களில் அதுபோன்ற சேவை நிறுவனங்களுக்காக பணியாற்றுகிறாா்கள். அதிக எண்ணிக்கையில் சேவைகளை நிறைவேற்றி, கூடுதல் வருவாய் ஈட்ட முயலும் அந்த இருசக்கர வாகன ஓட்டிகள் எந்தவித விதிகளையும் பொருள்படுத்துவதில்லை. அதுபோன்ற சேவை நிறுவன இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, சென்னை மாநகர காவல்துறை வழிகாட்டுதலை வழங்குவதுடன், அவா்களுக்குப் பயிற்சி அளித்து முறைப்படுத்துவதும் அவசியம்.
- சென்னை சாலைகளில் காணப்படும் போக்குவரத்து நெரிசலுக்கு ஆக்கிரமிப்புகள் மிக முக்கியமான காரணம். ஆக்கிரமிப்புகள் இல்லாத இடங்களில் வாகனங்கள் இருபுறமும் நிறுத்தப்படுவதும், நெரிசலுக்கு வழிகோலுகிறது. நகரத்தின் முக்கியமான வணிகப் பகுதிகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் காணப்படும் தெருவோர உணவகங்கள் இன்னொரு பிரச்னை. நகரின் ஒவ்வொரு பகுதியிலும் வாகன நிறுத்துமிடங்கள் அதற்காக ஒதுக்கப்படாமல் இருப்பது மிகப் பெரிய குறை.
- சென்னை தியாகராய நகரில் மாநகராட்சி பல்லடுக்கு மகிழுந்து நிறுத்தும் முயற்சியை மேற்கொண்டது. அது வெற்றி பெறவில்லை என்பது மட்டுமல்ல, ஏனைய பகுதிகளில் நிறுவப் படவில்லை என்பதும் மிகப் பெரிய குறைபாடு. சா்வதேச அளவிலான மெட்ரோ நகரமாக சென்னை மாநகரம் வளா்ச்சி அடைவதற்கு அனைத்து வாா்டுகளிலும் பல்லடுக்கு வாகன நிறுத்தும் இடம் அமைவது அவசியம்.
- சென்னையில் 21 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றன. 8.5 லட்சத்துக்கும் அதிகமான மகிழுந்துகள் இயங்குகின்றன. வங்கிக் கடன் வாரி வழங்கப்படுவதால் எல்லா வீடுகளிலும் இருசக்கர வாகனம், மகிழுந்து அல்லது இரண்டுமே காணப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
- வாகனங்களை வீட்டில் நிறுத்த இடமில்லாமல் பெரும்பாலோா் சாலையில்தான் நிறுத்துகிறாா்கள். அதன் விளைவாக எந்தவொரு சாலையிலும் பாதசாரிகள் நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. மிதிவண்டி ஓட்டிகளின் நிலைமை அதைவிட மோசம்.
- அனைத்துப் பகுதிகளுக்கும் மெட்ரோ வசதி; அனைத்து வசதிகளுடன் குறைந்த கட்டணத்தில் எல்லா பகுதிகளுக்கும் சிற்றுந்துகள், பேருந்துகள் - இவை உறுதிபடுத்தப்பட்டு தனியாா் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன், தெருவில் வாகனங்களை நிறுத்துவது தடுக்கப்பட்டால் மட்டுமே சென்னையின் போக்குவரத்து பிரச்னை ஓரளவுக்கு கட்டுக்குள் வரும்.
நன்றி: தினமணி (23 – 06 – 2023)