- இன்றைக்கு இந்தியாவின் ஆன்லைன் கேமிங் தொழிற்துறையின் வருமானம் 3 பில்லியன் டாலராகும் (ரூ.25 ஆயிரம் கோடி). இது 2027-ம் ஆண்டு சுமார் 8.6 பில்லியன் டாலரைத் (ரூ.71 ஆயிரம் கோடி) தொடக்கூடும் எனவும், வளர்ச்சி விகிதம் சுமார் 27 சதவீதம் இருக்கும் எனவும் ஃபெடரேஷன் ஆஃப் இண்டியன் ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸும் (Federation of Indian Fantasy Sports – FIFS) டெலாய்ட் (Deloitte) ஆலோசனை நிறுவனமும் சேர்ந்து நடத்திய ஆய்விலிருந்து தெரிய வந்திருக்கிறது. ஆனால், கணிக்கப்பட்டிருக்கும் இந்த வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைப் போடுவது போல வந்திருக்கிறது ஜிஎஸ்டி கவுன்சிலின் ஜுலை மாத அறிவிப்பு.
- இந்த அறிவிப்பின் படி, ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அதிகபட்ச வரியாக 28% விதிக்கப்பட்டிருக்கிறது. அது திறமை சார்ந்த விளையாட்டுகளாக (கேரம், செஸ் போன்றவை) இருந்தாலும் சரி அல்லது அதிர்ஷ்டம் சார்ந்த விளையாட்டுகளாக (சூதாட்டம், பந்தயம்/பணயம் சார்ந்தவை) இருந்தாலும் சரி ஒரே மாதிரியான வரிவிதிப்புதான்.
- இதோடு பல நிறுவனங்களுக்கு ரூ 1.5 லட்சம் கோடி அளவுக்கு வரி வசூலிப்பு நோட்டீஸ்களும் அனுப்பப்பட்டிருப்பது இத் துறையில் இயங்கி வரும் பல நிறுவனங்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது. சில நிறுவனங்கள் இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடுத்திருக்கின்றன. ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் முக்கியப் பங்கு வகிப்பதால் அது ஒரு சமூகம் சார்ந்த பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. ஆன்லைன் கேம்களில் ஈடுபட்டவர்கள் பெரும் கடன் சுமைக்கு ஆளாகி, தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலிலேயே வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
- இந்தியாவில் ஆன்லைன் கேமிங் விளையாடுபவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 50 கோடி ஆகும். கடந்த ஆண்டு இது 45 கோடியாக இருந்தது. இந்த வளர்ச்சிக்குக் இணையத்தின் பரவலாக்கம், மலிவான டேட்டா கட்டணம், இந்தியாவிலேயே மொபைல் போன் தயாரிப்பதற்கான அரசாங்கத்தின் உந்துதல் போன்றவை காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. இதோடு இந்திய மக்கள்தொகையில் இளம் வயதினரின் எண்ணிக்கையும் மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது அதிகமாகும்.
- இந்தியாவில் இயங்கி வரும் கேமிங் நிறுவனங்கள் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 2.8 பில்லியன் டாலர் அளவுக்கு உலகளாவிய முதலீட்டாளர்களிடம் நிதி திரட்டியிருக்கிறது. அதோடு இத்துறையின் மூலம் ஏறக்குறைய ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்துறையிலும் யுனிகார்ன் என அழைக்கப்படும் (அதாவது 1 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்பீடு கொண்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்) ட்ரீம் 11, மொபைல் பிரிமீயர் லீக், கேம்ஸ் 24x7 ஆகிய நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்தக் காரணங்களினால் இந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் மிகவும் நம்பிக்கையோடு தங்களது எதிர்காலத் திட்டங்களை தீட்டி வந்தனர். ஆனால் இப்போது வெளியான வரி விதிப்பு அறிக்கையால் இவர்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.
- இந்த வரிவிதிப்பானது ஆன்லைன் கேமர்களை விளையாட ஊக்குவிக்காது என்பதோடு நிறுவனத்தின் வருமானத்தையும் லாபத்தையும் பெருமளவில் பாதிக்கும் எனவும் துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
நன்றி: இந்து தமிழ் திசை (23 – 10 – 2023)