நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு மூடுவிழாவா?
- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நேரடி நெல் கொள்முதலைச் செய்துவரும் நிலையில், அதைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவுக்கு வந்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இதன் மூலம், விவசாயிகளுக்கான கொள்முதல் உத்தரவாதத்தையும் கைவிட்டுள்ளது. இதன் பாதிப்புகள் குறித்து உடனடியாகப் பேச வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.
தமிழகத்தின் சாதனை:
- இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தை முதன்முதலில் தமிழ் நாடு அரசுதான் அறிமுகப்படுத்தியது. மக்களுக்குத் தரமான உணவு வழங்க வேண்டும் என்கிற அடிப்படை நோக்கத்துடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் என்கிற பொதுத் துறை நிறுவனத்தை 1972இல் அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி தொடங்கிவைத்தார். அதற்கான உணவுப் பொருள்களைத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்து பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மக்களுக்குக் குறைந்த விலையில் தரமான பொருள்கள் வழங்க வேண்டும் என்கிற கொள்கை வகுக்கப்பட்டது.
- தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நெல்லைக் கொள்முதல் செய்வதற்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம், 1975இல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கருணாநிதி கொண்டு வந்தார். இந்தியாவிலேயே முதன்முதலில் நெல் கொள்முதல் செய்வதற்கு அரசு பொதுத் துறை நிறுவனத்தை உருவாக்கியது தமிழ்நாடுதான். அன்று முதல் இன்றுவரை நெல் கொள்முதலில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இந்தியாவுக்கு வழிகாட்டுகிற வகையில் செயல்பட்டுவருகிறது. அவ்வாறு கொள்முதல் செய்யும் நெல்லை அரவை செய்து தரமான அரிசி உற்பத்தி செய்வதற்கு நவீன நெல் அரவை ஆலைகளை (MRM) உருவாக்கியதும் கருணாநிதி அரசுதான்.
- தமிழ்நாட்டில் இரட்டைக் கொள்முதல் நடைமுறை அமலில் உள்ளது. அரசு நிர்ணயம் செய்யும் விலையில் அரசே நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் தடையின்றிக் கொள்முதல் செய்து விவசாயிகளுக்குக் கொள்முதல் உத்தரவாதம் அளிக்கிறது. அரசு நிர்ணயிக்கும் விலையுடன் கூடுதல் விலை கொடுத்துத் தனியார் கொள்முதல் செய்யும் நிலையில் விவசாயிகள் தங்கள் விருப்பத்துக்குக் கூடுதல் விலை பெற்று விற்றுக்கொள்வதற்கு இக்கொள்கை வழிவகுக்கிறது.
இன்றைய சூழல்:
- குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று விவசாயிகள் போராடிவரும் நிலையில், அதை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை ஏற்று விவசாயிகளுக்கான கடன் நிவாரணம் உள்ளிட்ட சந்தை குறித்த பல்வேறு கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு அரசு காலம் தாழ்த்திவருகிறது. தற்போது அதற்கான கட்டாயமும் நெருக்கடியும் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
- இந்தியாவில் 60% மாநிலங்களில் அரிசியை உணவாக உட்கொள்ளும் நிலை உருவாகி உள்ளது. உலக நாடுகளில் 40% நாடுகளில் அரிசியை உட்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. உலக நாடுகளில் வாழும் மக்களிடையே தமிழகப் பாரம்பரிய அரிசி உணவை உட்கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், தமிழ்நாட்டில் தற்போது கொள்முதல் உத்தரவாதம் இல்லாததால் கரும்பு உள்ளிட்ட பல்வேறு உணவுப்பொருள் உற்பத்தி குறைந்து நெல் உற்பத்தி அதிகரிக்கும் நிலை உள்ளது. காரணம் நெல்லுக்கான கொள்முதல், விலை உத்தரவாதம் உள்ளதால் நெல் உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதேநேரம் தற்போதைய நிலையில் தமிழ்நாட்டுக்குத் தேவையான அரிசியில் 70% மட்டுமே உற்பத்தி செய்கிறோம்.
தவறான முடிவு:
- இந்தச் சூழலில், தமிழ்நாட்டிலேயே வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கையைக் கொண்டுவந்து வேளாண் உற்பத்தியைப் பெருக்குகிறோம் என்று கூறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்க முயற்சிப்பதுதான் ஏமாற்றமளிக்கிறது. வேலைவாய்ப்பை உருவாக்குகிறோம் என்று சிப்காட் பெயரில் விளைநிலங்களை அபகரிக்க முயற்சிக்கும் தமிழ்நாடு அரசு ஆண்டொன்றுக்கு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை வழங்கிவரும் கொள்முதல் நிலையங்களுக்கு முடிவுகட்டி, அவற்றின் பணியாளர்களை வேலை இழக்கச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவது முரணானது.
- உணவின் தேவையை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டில் நெல் உற்பத்தியைப் பெருக்குவதற்கு விவசாயிகளோடு அரசும் உதட்டளவில் ஆர்வம் காட்டுகிறது. அதேநேரத்தில் பேரிடர் காலங்களில் ஏற்படும் இழப்புகளில் அரசு பங்கேற்பதில் மிகப்பெரிய பின்னடைவு நீடித்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக நெல் உற்பத்திக்குக் காப்பீடு செய்யும் விவசாயிகள் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ள விவசாயிகளுக்கு விரோதமான வழிகாட்டுதல்களால் முழு இழப்பீடு பெற முடியாத நிலையும் தொடர்கிறது.
- இவ்வாறான பெரும் நெருக்கடிகளுக்கு இடையில்தான் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு நெல் உற்பத்தியைத் தொடர்கின்றனர். குறிப்பாக, ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே மழை பெய்வதையும் புயல் வருவதையும் தெரிந்துகொள்ளும் அறிவியல் தொழில்நுட்பம் இருக்கும் நிலையில் அதனை எதிர்கொண்டு சாகுபடி செய்யும் மனத் துணிவு விவசாயிகளிடம் இன்றைக்கும் தொடர்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு ‘தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு’ என்கிற பெயரில் கொள்முதலில் கார்ப்பரேட்டுகளை அனுமதிக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக நடப்பாண்டு நேரடி நெல் கொள்முதலுக்கு அனைத்து மாவட்டங்களிலும் நுகர்வோர் கூட்டமைப்பு என்கிற பெயரில் சில தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது. பிறகு காவிரி டெல்டாவுக்கு மட்டும் விலக்களித்து மற்ற மாவட்டங்கள் முழுமையிலும் நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணையை வழங்கி தீவிரப்படுத்தி வருகிறது.
விவசாயிகளுக்கு ஆபத்து:
- கொள்முதல் செய்வதற்கான முழுத் தொகையையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்தான் பொறுப்பேற்றுத் தனியாருக்கு முன்பணமாக வழங்குகிறது. தராசுகள் முதல் பணியாளர்கள்வரை அனைத்து அடிப்படைக் கட்டமைப்புகளையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமே வழங்கிவருகிறது. ஆனால், கொள்முதல் மட்டும் தனியார் பெயரில் நடப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. இது கார்ப்பரேட்கள் கொள்ளை லாபம் அடிப்பதற்கே வழிவகுக்கிறது. இதனால் விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை எதிர்காலத்தில் ஏற்படப் போகிறது. குறிப்பாக, தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்வதால் ஒரு டன்னுக்கு ரூ.100 வரையிலும் ஊக்கத்தொகை கொடுத்து கொள்முதல் செய்யப்படுகிறது. காலப்போக்கில் இது நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு உண்மைக்கு முரணாக உள்ளது. குறிப்பாக, தனியார் இரட்டைக் கொள்முதல் மூலம் கொள்முதல் செய்யும் வாய்ப்பு இருக்கிறபோது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பணியாளர்களையும் அடிப்படைக் கட்டமைப்புகளையும் கொண்டு தனியார் கொள்முதல் செய்துகொள்ள அனுமதிப்பது ஏன்? அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்லின் தரத்துக்கு அரசு அதிகாரிகள் பொறுப்பேற்கும் நிலை உள்ளது. தரம் குறித்த ஆய்வை நடத்துவதற்கான கட்டமைப்புகள், பணியாளர்கள் தனியாரிடத்தில் இல்லாத நிலையில், இவ்வாறான முரண்பாடான கொள்முதல் கொள்கை முடிவு தமிழ்நாடு விவசாயிகளுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தப்போகிறது. உரிய காலத்தில் கொள்முதல் செய்வதற்கான உத்தரவாதம் மறுக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
- இன்றைக்கு, காலநிலை மாற்றத்தால் பேரழிவு, பெருமழை, வறட்சி போன்ற பாதிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டுவருகின்றன. உற்பத்தி மிகையானால் தம்மைத் தாமே பாராட்டிக்கொள்ளும் அரசுகள், விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பின்போது பங்கேற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், காப்பீட்டிலும் கொள்முதலிலும் விவசாயிகளைத் தனியாரிடம் அடிமைப்படுத்தும் முயற்சியில்தான் தமிழக அரசு முனைப்பு காட்டுகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைக் கொண்டுவந்த பெருமைமிகு வரலாறு கொண்ட தமிழக அரசு இந்த முடிவைக் கைவிட வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (10 – 02 – 2025)