TNPSC Thervupettagam

'நேருவை விடாதீர்கள்...’ கவிஞர் மஜ்ரூஹ் சுல்தான்புரி

November 24 , 2024 17 hrs 0 min 8 0
  • இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே (சமீப காலத்தில்) முதல் முறையாக - வாக்குப் பதிவு நடந்த மூன்று நாள்களில் - மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று (23/11/2024) அறிவிக்கப்படுகின்றன. உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கட்சி - ராஷ்ட்டிரிய உலமா கவுன்ஸில் (Rashtriya Ulama Council (RUC) ) - மகாராஷ்டிர மாநிலச் சட்டப் பேரவைத் தேர்தலில் இரண்டே இரண்டு தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
  • அந்த இருவரில் ஒருவர், மேற்கு வந்த்ரே (Vandre West) தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர், அதிகம் அறியப்படாத ஒரு திரைப்பட இயக்குநர் ஆண்டலிப் (மாலை 6 மணி நிலவரப்படி 221 வாக்குகள் பெற்றிருக்கிறார்). அவர் ‘மிட் டே’ என்ற இணைய இதழ் வழியாகக் கூறியிருக்கும் விஷயம் வினோதமாகத் தெரிகிறது. கேளுங்கள்.
  • ‘’இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன் மறைந்த என் தந்தைக்கு இந்த நாடு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை; ஒரு தெருவுக்கோ அல்லது ஹாலுக்கோ அல்லது சதுக்கத்துக்கோகூட இதுவரை என் தந்தையார் பெயர் வைக்கப்படவில்லை. இதனால், சினிமாவில் பாடியவர்கள், நடித்தவர்கள் பெயரை நினைவில் வைத்திருக்கும் அளவுக்குக்கூட என் தந்தையார் பெயரை மக்கள் நினைவில் வைத்திருக்க வாய்ப்பில்லாமற் போய்விட்டது.
  • நான் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் மறைந்த எனது தந்தைக்கு உரிய நியாயம் கிடைக்கச் செய்து, எதிர்காலத்தில் இந்தியாவிலுள்ள ஒவ்வொருவரும்  எனது தந்தையை எப்போதும் மறக்காமல் நினைவில் வைத்திருக்குமாறு செய்யப் போகிறேன். இந்த நாட்டின் அரசாங்கம், எனது தந்தையை ‘தேசத்தின் பொக்கிஷமாகப்’ பிரகடனப்படுத்த வேண்டும். நான் தேர்தலில் வெற்றி பெற்றால், இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதுடன், நாட்டில் இஸ்லாமிய இனப் பெண்களுக்கு இலவசக்கல்வி அளிப்பேன்’’ என்றும் வாக்குறுதிகளை  வாரிவழங்கியிருக்கிறார்.
  • (RUC கட்சி செயல்படுவது உ.பி.யில்; போட்டியிடுவது மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில், இரண்டே இடங்களில்! வாக்குறுதி, நாடு முழுவதற்கும்!).
  • அது சரி, இந்த வேட்பாளரின் தந்தை யார்?
  • நாடு அவருக்கு என்ன கௌரவம் அளிக்கவில்லை?
  • வேட்பாளரின் தந்தையார் ஓர் உருதுக் கவிஞர், இந்தி, போஜ்புரி மொழித் திரைப்படங்களின் பாடலாசிரியர்.
  • அவருக்கு, 1993 ஆம் ஆண்டிலேயே, திரைப்படத் துறையின் மிக உயர்ந்த விருதாகக் கருதப்பட்டு வந்த (!) தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும் அந்த விருது நிறுவப்பட்டபின் 15 ஆண்டுகால வரலாற்றில், முதன் முதலாகத்,  திரைப்படப் பாடலாசிரியர் என்ற வகையில் அவருக்குத்தான் வழங்கப்பட்டது. திரைத்துறையில் மற்றொரு கௌரவமாகப் பார்க்கப்படும் ஃபிலிம்ஃபேர் விருதும் ஒருமுறை (1965) வழங்கப்பட்டுள்ளது. மேலும், கவிஞர்களுக்கு மத்தியப் பிரதேச அரசு அளிக்கும் உயர் விருதான இக்பால் சம்மான்விருதும் பெற்றுள்ளார்.
  • ஷாஜஹான் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற அவரது ஆரம்பகாலப் திரைப்பாடல் ('ஜப் தில் ஹி டூட் கயா)  வரிகளில் வாழ்நாள் முழுவதும் லயித்து நின்ற அந்தத் திரைப்படத்தின் கதாநாயகன், புகழ்பெற்ற நடிகர் கே.எல். சைகல்,  ‘தான் இறந்த பின்னர்  செய்யப்படும் இறுதிச் சடங்கின்போது, அந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும்’ என்று தன் கைப்பட உயில் எழுதி வைத்திருந்தார் என்பதைவிட ஒரு திரைப்படப் பாடலாசிரியருக்கு வேறென்ன சிறப்பு வேண்டும்?
  • யார் அந்தத் திரைப்படப் பாடலாசிரியர்?
  • அவருக்குத் தந்தையார் இட்ட பெயர் அஸ்ரர் உல் ஹசன் கான். இளமையிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கியபோது நாஷே  (‘Naseh’, மதபோதகன்) என்ற புனைபெயர் வைத்துக்கொண்டார். கவிதைகளோடு காதலும் வருமே! வந்தது, ஆனால்... காதலி அவரை ஏற்றுக்கொள்ளவில்லை! புண்பட்டது அவர் இதயம்! ஆதலால், ‘புண்பட்டவன்’ என்ற பொருள் தரும் மஜ்ரூஹ் என்பதைக் காதலி, காதல் தோல்வி எனும் இரண்டின் கூட்டு நினைவாகத், தன் புனைபெயராகச் சூடிக்கொண்டார். இளவயதுக் காதல்தான் கைகூடவில்லை. ஆனால், அந்நினைவாகச் சூட்டிக்கொண்ட அந்தப் பெயராலேதான் அவர் கவிஞராகக் காலமெலாம் வெளியுலகில் அறியப்பட்டார். அதனுடன், தான் காதலில் தோல்வியனுபவித்தபோது வாழ்ந்து வந்த சுல்தான்பூர் என்ற ஊர்ப்பெயரையும் உறவாக இணைத்துக்கொண்டு மஜ்ரூஹ் சுல்தான்புரி (Majrooh Sultanpuri) என்ற புனைபெயருடனேயே இறுதிவரை புகழ்வலம் வந்தார்!
  • அஸ்ரர் உல் ஹசன் கான் என்ற மஜ்ரூஹ் சுல்தான்புரியை ஒரு ‘’பலபட்டடை’’ (பலபட்டடை = பலவகைச் சாமான்கள் சேகரித்து வைக்கப்படும் அறை) என்று சொல்லலாம். ஆரம்பத்தில், அவர் காலத்தில் வழங்கப்பட்டுவந்த ஆங்கிலக் கல்வியில் சேர்க்காமல், அவரது தந்தையார் இஸ்லாமிய மதரஸாவில் தன் மகனைச் சேர்த்துப் படிக்க வைத்தார். ஏழரை ஆண்டுகள் மதக்கல்வி பயின்ற பின்னர், நான்காண்டு யுனானி மருத்துவம் படித்து ஒரு ஹக்கீம் (யுனானி டாக்டர்) ஆனார். தன் தந்தைக்குத் தெரியாமல் வீணை கற்றார்.
  • அவரது தாய்மொழி உருதுமல்ல, இந்தியுமல்ல. கஜல் கவிதைகள் எழுத ஆர்வங்கொண்டு உருது ஆசிரியர்களிடம் பயிற்சி பெற்றார். கஜல்கள் பாடும் எண்ணத்தில் தன் குரல் வளத்தைப் பெருக்கிக் கொள்ளத் தனிப் பயிற்சியும் மேற்கொண்டார். சிலகாலம் சுல்தான்பூர் என்ற சிறுநகரத்தில் யுனானி மருத்துவராகப் பணியாற்றினார். இவ்வாறு இளமைக் காலத்திலேயே தனக்குள் பல ஆற்றல்களையும் அனுபவங்களையும் சேர்த்துக் கொண்டேயிருந்தார்.
  • பின்னர் மும்பை வந்து, இந்தி திரைப்பட உலகில் கிட்டத்தட்ட ஐந்து தலைமுறைகளாக அகற்றப்பட இயலாத பாடலாசிரியராகப் பணியாற்றி, சுமார் 300-க்கு மேற்பட்ட  திரைப்படங்களில் 3000 பாடல்களுக்கு மேல் - போஜ்புரி முதலிய பிற மொழிப்படப் பாடல்களையும் சேர்த்து - 3500 பாடல்கள் வரை எழுதிக் குவித்தார்.
  • சொல்லப் போனால், ஒரு மாபெருங் கவிஞராக அறியப்பட்டுப் போற்றப்பட்டிருக்க வேண்டிய  மஜ்ரூஹ் சுல்தான்புரி, ஒரு திரைப்படப் பாடலாசிரியராகத் தன்னைச் சுருக்கிக்கொண்டு, உருது கவியுலகிற்குப் பேரிழப்பை உண்டாக்கி விட்டாரோ என்று அவரது கவியாற்றலறிந்த பலர் கவலைப்பட்டதுண்டு. உண்மையில், அவரே விரும்பி இத்துறைக்குள் வரவில்லை. தனது மிக இளம்வயதிலேயே உருது மொழியில் அதியற்புதமான கஜல்களையும், கவிதைகளையும் படைத்து, ‘கேட்டார்ப் பிணிக்கும்’ தகையவாய்க் ‘கேளாரும் வேட்ப’ மொழியும் - அருவியாய்ப் பொழியும் - வல்லமை அவருக்கிருந்தது.
  • அது வெளிப்படத் தொடங்கிய காலத்தில், பெயர் பெற்றிருந்த, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பழம்பெரும் உருதுக் கவிஞர் ஜிகர் முரடாபாடியின் அரவணைப்பு  மஜ்ரூஹுக்குக் கிடைத்தது.  1945 இல், இந்தியாவின் பலபகுதிகளிலிருந்தும் கவிஞர்கள் சங்கமிக்கும் முஷைரா (mushaira) எனப்படும் கவிஇரவு நிகழ்வு  மும்பை, சாபு சித்திக் கல்வி நிலைய மைதானத்தில் நடைபெற்றது.
  • அழைப்பின்பேரில், அக்கவிஞர்கள் சங்கமத்தில் கலந்துகொள்ள வருகை தந்த கவிஞர்  ஜிகர் முரடாபாடி, தன்னுடன் சுல்தான்பூரில் இருந்து அஸ்ரர் உல் ஹசன் கான் என்ற இளங்கவிஞரை அறிமுகப்படுத்த அழைத்து வந்திருந்தார். அந்த நிகழ்வின் அமைப்பாளர்களின் கவனக் குறைவால், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கச் சரியான நபரைத் தேர்ந்தெடுக்காததால் நிகழ்ச்சித் தொடக்கமே சொதப்பலானது; கூச்சலுங் குழப்பமும்கூடி  மைதானத்தின் அமைதியை அழிக்கும் நிலை உருவானது.
  • கவிஞர்கள் சங்கமக் களம்பல கண்ட கவிஞர் ஜிகர் முரடாபாடி அரங்கில் முன்வந்துநின்று ‘’இதோ எனது சீடன், இளங்கவிஞன் மஜ்ரூஹ் சுல்தான்புரியை உங்களுக்குப் பெருமையுடன் அறிமுகம் செய்கிறேன். இவர் வழங்கும் கஜல்கள் உங்களுக்குப் பிடிக்காமல் போனால் இந்த நிகழ்வை இத்துடன் முடித்துக் கொள்வோம்” என்று நம்பிக்கையுடன் முழங்கினார்.
  • கழுத்துவரை, பளிச்சென்ற அரைவட்ட வெள்ளைப் பட்டன்கள் மூடிய,  கருப்பு நிறச் ஷெர்வானியணிந்து, கவருந்தோற்றப் பொலிவுடன் மேடையேறிய  இளைஞன் மைக் முன் வரும்வரையிலும் அமைதியின்மையே அங்கு அலையாகப் பொங்கிவந்து கொண்டிருந்தது. வசீகரமாக மைக் முன் வந்து, கணீர் குரலில் -இந்த இரவுக்காக எவ்வளவு காத்திருந்தேன்; எனது ஒவ்வொரு இரவிலும் விளக்கை, விடியும் வரை அணைக்காமலே வைத்திருந்தன்றோ காத்திருந்தேன்’’ என அந்த இளைஞன்- மஜ்ரூஹ் சுல்தான்புரி- வழங்கிய முதல் கஜலிலேயே, எரிநெருப்பில் சடசடவெனப் பெருமழை இறங்கியதுபோலச் சட்டென அடங்கியது அங்கிருந்த அமைதியின்மை.
  • அதற்குப் பின் அந்த இரவும், மைதானமும் அவர் வசமானது. கூடியிருந்தவர்களின் ஆன்மாக்களைக் கூட்டாக வசியப்படுத்தும் கஜல்களை இளைஞர் சுல்தான்புரி அலை அலையாக, அநாயசமாக அள்ளிவீசி அனைவரையும் மெய்மறக்கச் செய்த நிகழ்வு அது. கவிமழையாய்ப் பொழிந்த அவரது கஜல்களின் நர்த்தனம் கூடியிருந்த கவிஞர்களின் கொண்டாட்டத்தைக் கூட்டியது; பெருக்கியது. அன்று அந்த முன்னிரவில், அஸ்ரர் உல் ஹசன் கான் எனும் பெயர்  காணாமற்போய், அந்த மைதானத்தில் தொடங்கியது, மஜ்ரூஹ் சுல்தான்புரியின் நீண்ட (1945-2000) மும்பை வாழ்க்கை.  
  • மஜ்ரூஹ் வாழ்வின் திருப்புமுனையான அந்த மும்பை முஷைராவில் (mushaira),  அவரது கஜல்களிலும், அதை அவர் வழங்கிய குரலிலும் மயங்கிய பலநூறு பார்வையாளர்களில் ஹிந்தி திரைப்படத் தயாரிப்பாளர் - இயக்குநர் ஏஆர் கர்தார் ஒருவர். அனைவரையும் மெய்மறக்கச் செய்த அந்நிகழ்வு முடிந்ததும் கர்தார், இளங்கவிஞர் மஜ்ரூஹைச் சந்தித்துப் பரவசத்துடன் பாராட்டியதுடன், தனது திரைப்படத்தில் பாடல் எழுத வருமாறு அழைப்பையும் அங்கேயே நீட்டினார். ஆனால், கவிக்கடல் பயணத்திற்கு ஆர்வங்கொண்டிருந்த இளைஞர் மஜ்ரூஹ், தரைநிலைத் திரைப்பாடல் வண்டியேற இசையவில்லை.
  • சிறு ஏமாற்றத்துடன் திரும்பிய கர்தார், விரைவில் அவரது ஆசான் ஜிகர் முரடாபாடி பரிந்துரையுடன் சுல்தான்புரியை மீண்டும் சந்தித்தார். அவரை அன்புடன் வற்புறுத்தி,  இசை மேஸ்ட்ரோ நௌஷத்திடம் அழைத்துச் சென்றார். அங்கு நௌஷத் ஒரு இசைக்குறிப்பைச் சுல்தான்புரியிடம் கொடுத்துத் ‘தேர்வு’ வைப்பதுபோல, அதே மீட்டரில் ஒரு கவிதையாக எழுதிவரும்படி சொன்னார். கவிஞர் ஒருவேளை அடுத்த நாள் வரக்கூடும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள்.
  • ஆனால், கவிஞர் படியிறங்கவில்லை. அங்கேயே, அவரிடம் வழங்கப்பட்ட வெள்ளைத்தாளில் மின்னல் வேகத்தில் அரும்பிப் பூத்தது அழகுக் கவிதை. அதன் நடையழகும், நளினமும் சொற்கோர்வைச் சுகந்தமும், கர்தார், நௌஷத் ஆகிய இருவர் முன் மேனகையாய் நின்று கிறங்கடித்தது. இருவரும் இனி மஜ்ரூஹை விடுவதில்லை என உறுதியான முடிவெடுத்தனர். (பின்னாட்களில் நௌஷத் - சுல்தான்புரி இருவரும் சம்பந்தி ஆயினர்!). உத்தரப் பிரதேசம், சுல்தான்பூர் எனும் சிறுநகரப் பின்னணியிலிருந்து ஒரு முஷைரா (கஜல்) நிகழ்வுக்காகப் மும்பை வந்திருந்த மஜ்ரூஹ், அங்கொரு திரைப் பாடலாசிரியனாகப் பிறந்த நாள் அது.
  • மிகுந்த தயக்கத்துடன் திரைப்பாடல் துறையில் அடியெடுத்து வைத்த மஜ்ரூஹ் சுல்தான்புரியின் முதல் திரைப்படமே சிகரப் பயணமானது. அப்போதைய மும்பை சினிமாவின் மூன்று சிகரங்களான -  கதாநாயகன்  கே.எல்.சைகல், இசை மேதை நௌஷத், தயாரிப்பாளர் - இயக்குநர் கர்தார் - கூட்டணியில் உருவானது ஷாஜஹான் திரைப்படம் (1946). தனது முதல் படத்திலேயே பத்துப் பாடல்களில் இவரெழுதியது எட்டு; அத்தனையும் அமோக ஹிட்!
  • அழியாக் காதலின் அழகுச் சின்னமாக, அவனியில் நிரந்தர இனிமையாக நிற்கும் வெண்பளிங்குக் கவிதை தாஜ்மகாலைப் போலவே, மஜ்ரூஹ் சுல்தான்புரியின் முதல் திரைப்படப் பாடல்-'ஜப் தில் ஹி டூட் கயா'- தீரா இனிமையாகத் திசைவென்று நிற்கிறது, இன்றும்!
  • இப்பாடலைத் திரையில் - ஷாஜஹான் படத்தில்- மட்டுமல்ல, அதற்குப்பின் தன்வாழ்நாள் முழுதுமே ரசித்துக் கேட்டுச் சதாசர்வகாலமும் முணுமுணுத்துக் கொண்டேயிருந்த அப்படத்தின் ‘ஷாஜஹான்’, கே.எல். சைகலின் உயிலின்படி, அவரது இறுதிச் சடங்கு நிறைவுறும் வரையிலும் அப்பாடல் தொடர்ந்து இசைக்கப்பட்டு, அவரது விருப்பம் நிறைவேற்றப்பட்டது என்று உருக்கமுடன் நௌஷத்தின் மகன் ராஜு நௌஷத் (இவர் பின்னர் மஜ்ரூஹ் சுல்தான்புரியின் மகள் சபா சுல்தான்புரியின் கணவரானவர்) கூறியுள்ளார்.
  • ஷாஜஹானில் 'ஜப் தில் ஹி டூட் கயா' பாடலுடன் தொடங்கிய சுல்தான்புரியின் திரைப்பாடல் பயணம் நதியெனப் பாய்ந்து கடலாய்ப் பரவியது. ஹிந்தி திரைப்படப் பாடல்களில் கவிதையோட்டத்தையும், திரைப்பாடல் ரசிகர்கள், அப்பாடல்களில் மிதந்துவரும் கவிதைகளை ஆர்வமுடன் இதழேந்தி முணுமுணுக்கும் ரசனையையும்  மஜ்ரூஹ் தன் மந்திரச் சொற்களால் உருவாக்கினார். அவரது திரைப்பயண வெற்றியை, அவரது காஜல் வரிகளால்தான் சரியாகச் சொல்ல முடியும்.
  • ‘’எனது இலக்கை நோக்கித் தனியொருவனாகத்தான் நடக்க முற்பட்டேன்: என்னைத் தொடர்ந்து வந்திணைந்துவரும் மக்களால் அது மாபெரும் பேரணியாக விகசித்திருக்கிறது” என்பது அவரது புகழ்பெற்ற காஜல் வரிகள். முன்னர் குறிப்பிட்டது போலத் தயக்கத்தோடு திரைத்துறைக்கு வந்து, தனது திறமையால் நிலைபெற்று, ஐம்பதாண்டுகளுக்கு மேல் (1946 - 2000) பம்பாய் திரையுலகில் கவிராஜ்ஜியம் நடத்தினார். போஜ்புரி மொழிப் படங்களிலும் கோலோச்சினார் மஜ்ரூஹ்.
  • இப்போது அவரது பயணத்தைத் திரும்ப நோக்கும்போது, மஜ்ரூஹ் மீது 'சினிமாவின் ஒளிச்சுழலில் சிக்கிக்கொண்ட ஒரு கவிஞர்’ என்று லேபிள் ஒட்டுவதைவிட, ‘சினிமா என்ற வெகுஜன ஊடகத்தின் முதுகில் ராஜகம்பீரமாகச் சவாரிசெய்து -சினிமாவின் விகசிப்பைச் சாதுரியமாகப் பயன்படுத்தி – தான் சொல்லவந்த செய்திகளைப் பயணப் பாதைகளிலோ, அதன் பகட்டுகளிலோ  எங்கும் தொலைத்து விடாமல், கவியழகோடு நயம்படவுரைக்கும் பணி செய்த திறன்மிகு கவிஞர்’ என்று மதிப்பீடு செய்வதே நியாயமானதாக இருக்கும்.
  • மஜ்ரூஹ் சுல்தான்புரியைப் போலவே, திரைப்பாடல்களிலும் மானுட மேம்பாட்டுக்கான செய்திகளை நினைவுகொண்டு பரப்புவது என்று அவரது காலத்துக் கவிஞர்கள் சிலரும், அவர்கள் இணைந்திருந்த முற்போக்கு எழுத்தாளர் இயக்கம் உள்ளிட்ட இலக்கிய அமைப்புகளும் முடிவுசெய்தன. பர்தீப், சாஹிர் லூதியான்வி, கமர் ஜலாலாபாதி, ராஜா மெஹ்தி அலிகான், ஷகீல் பதாயுனி, சாகர் நிஜாமி, ராஜீந்தர் க்ரிஷன் ஆகியோர் இவ்வகையில் குறிப்பிட உரியவர்கள். வெறும் பாடலாசிரியர்களாக இல்லாமல் சிறந்த கவிஞர்களாகவுமிருந்தவர்கள் இவர்கள் அனைவரும்.
  • குறிப்பாக மஜ்ரூஹ் -  திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுத ஒப்புக்கொண்ட நிலையிலும், திரைப்படப் பாடல் வரிப் பல்லக்குகளில், கவிதையின் தரமும் நயமும் இழைத்து ஒளிருலா வரச்செய்தார்; காண்போர்க்கும் கேட்போர்க்கும் களிப்புக் கூட்டினார். மஜ்ரூஹ் திரைத்துறைக்கு வந்ததால்,  உருதுக் கவிதைக்கு அது இழப்பு என்பது ஒரு பக்கத்து உண்மையென்றால், அதே சமயம் அவரது வரவு, தரைகிடந்த "சினிமாப்" பாடல்களின் தரமுயர்த்தி, லட்சக்கணக்காணவர்களின் இதழ்களில் சினிமாப் பாடல்களை ஏற்றி முணுமுணுக்க வைத்தது வெளிப்படையாகத் தெரிந்ததொரு நிச்சயமான லாபம் என்பதும் மறுபக்கத்து உண்மை.
  • மும்பை நகரத் திரைப் படைப்புகளின் பாடல்களில், ‘தீவிர எழுத்து’ (Serious Writing), வெகுஜன எழுத்து (Popular Writing) என்ற இருதளங்களுக்கும் இடைகிடந்த இடைவெளியை மனங்கவர் கவிச்சொற்பாலங்கட்டிக் கடந்தார் மஜ்ரூஹ். காதல் பிரவாகம் நிறை பாடல்களிலும், கஜல்கள், குவாவாலிகள், முஜ்ராக்கள், பஜனைகள், நாட்டுப்புறப் பாடல்கள், சோகப் பாடல்கள், நகைச்சுவைப் பாடல்கள், குழந்தைகளுக்கான பாடல்கள், காபரே பாடல்கள், டிஸ்கோக்கள் மற்றும் கற்பனை செய்யக்கூடிய எந்தவகையான திரைப்படப் பாடல்களானாலும், பல்வேறு முறைகளிலும் அவரால் மிக எளிதாகவும் சர்வ கச்சிதமாகவும் எழுத முடிந்தது.
  • கதை, காட்சிகளின் சூழல்கள் நிர்ப்பந்தித்த வேளைகளிலும்கூட முகஞ்சுழிக்கவைக்கும் விரசச்சொற்கள் எதுவும், எப்போதும் தன்பாடல்களில் புகாத சொற்கற்பு அவரிடம் பொற்காப்பாக இறுதிவரை நின்றது. தேவைப்படும் உணர்வுகளைக் கேட்போர் செவிகளுக்கு எளிதாகப் புரியும்படி எடுத்துச்சொல்ல - லாவகக் கவிமொழியாடையுடுத்தி, மோகன வரிகளால் அணிநயங்கூட்டி, முகம் மலரச் சொல்லிப் - பாடலாசிரியன் என்ற  தன் தொழிலுக்கும் நேர்மையாக நின்றார் அவர்.
  • கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் சந்தித்த மும்பை மேற்கு வந்த்ரே (Vendre West) தொகுதி வேட்பாளர் ஆண்டலிப். "எங்களுக்கு, அவர் எங்கள் அப்பாவாக இருந்தார், அவர் ஒரு இலக்கிய ஜாம்பவான் என்று அவரது மரணத்திற்குப் பிறகுதான் எங்களுக்குத் தெரியும்," என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதையும் இங்கு குறிப்பிட்டுத் தொடர்வோம், வாங்க.
  • மஜ்ரூஹின் மகனே, தன் தந்தை ஒரு இலக்கிய ஜாம்பவான் என்று அவரது மரணத்திற்குப் பிறகுதான் தங்களுக்குத் தெரியும் என்கிறார். அவருக்கே அப்படியென்றால் மற்றவர்கள் எப்படி அவரது வரலாற்றை ஒழுங்காகச் சரிவர அறிந்து எழுதியிருப்பார்கள்?
  • ஒரு நூற்றாண்டும் சில ஆண்டுகளும்தான் ஆகியுள்ள மஜ்ரூஹ் சுல்தான்புரியின் வரலாறு, சரியான தரவுகள் இல்லாமல் – ஆளாளுக்கு வாய்க்கு வந்ததைச் செல்லி, கைக்கு வந்ததை எழுதித், ‘தடங்கண்ட பாதை’யிலேயே கண்ணை மூடிக்கொண்டு தமிழ்ச் சிறுகதை வரலாறு எழுதப் புகுந்த களப்பிரர்களால் குழம்பிக் கிடப்பதுபோல - குழம்பிக் கிடக்கிறது.
  • மஜ்ரூஹின் பிறந்த ஆண்டு முதல், அவர் வாழ்வில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகள் தொடர்பான ஆண்டுகள், தொடர்புடைய நபர்கள் பற்றிய பல விவரங்கள் குறித்து உறுதியான நம்பத் தகுந்த தகவல்களைத் தேடும் என் பயணம் நீள்கிறது நெடுநாளாக.
  • சுருக்கமாக ஒன்றிரண்டு இங்கே காண்போம். பலரும் மஜ்ரூஹின் பிறந்த நாளை மாற்றாமல், அக்டோபர் 1 என்று குறிப்பிட்டு வருகிறார்கள். ஆனால், அவரது பிறந்த ஆண்டு 1915,1918,1919,1922 என வேறுபட்டுக் குறிக்கப்பட்டு வருகிறது. மஜ்ரூஹின் நெருங்கிய, சமகாலத்து நண்பர்- உருதுக் கவிஞர் காலிக் அஞ்சும் (Khaliq Anjum), தன்னிடம், தான் பிறந்த ஆண்டு 1915 என்று மஜ்ரூஹ் நேரடியாகச் சொல்லியுள்ளார் என எழுதியிருக்கிறார். மஜ்ரூஹ் மகன் (மகாராஷ்ட்ர வேட்பாளர்) தன் தந்தை பிறந்த ஆண்டு 1919 எனக் குறிப்பிட்டுள்ளதாக ஒரு பத்திரிகையாளர் பதிவு செய்துள்ளார்.
  • அக்தர் ஃபரூக்கி என்பவர் தனது கட்டுரையில் மஜ்ரூஹ் பிறந்த ஆண்டு 1918 என்றும், உத்கர்ஷ் சிங் என்ற கட்டுரையாளர்,  1919 ஆம் ஆண்டு என்றும், கவிஞரின் பல படைப்புகளை வெளியிட்டுவரும் ரேக்தா வலைத்தளம் (Rekhta website) அவர் பிறந்த ஆண்டை 1915 ஆம் ஆண்டு எனவும் குறித்துள்ளதைக் காணும்போது, ‘யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?’ என்று நாம் முணுமுணுக்க வேண்டியுள்ளது. இதையெல்லாம் புறந்தள்ளி, 2019 இல் அவரது நூற்றாண்டு விழாக் கொண்டாடப்பட்டு விட்டது!
  • அடுத்து, அவரது தந்தையார் உ.பி. காவல் துறையில் பணியாற்றியுள்ளார் என்பது பலராலும் குறிப்பிடப்படுகிறது. ஆனால், என்ன பணி நிலையிலிருந்தார் என்பதில் ஏகப்பட்ட குழப்பங்கள். காவல்துறையில் அமைச்சுப் பணி, கான்ஸ்டபிள், சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், உயரதிகாரி எனப் பல பதவிகளை அவருக்குக் கட்டுரையாளர்கள் வழங்கியுள்ளனர். ‘சரி, அவர் பதவி உயர்வில் வந்திருக்கலாம்’ என நமக்குச் சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அடுத்த வரியில், குறிப்பிட்ட பணிநிலையில் ‘ஓய்வுபெற்றவர்’ என்று அதிரச் செய்கிறார்கள்.
  • இத்தனை குழப்பங்களையும் சமாளித்து நேர்செய்யும் தீவிர முயற்சியில், ஒரு கட்டுரையாளர் (நவம்பர் 2019 பிலிம்ஃபேர்) ‘’மஜ்ரூஹ்ஹின் தந்தையார் காவல்துறையில் கான்ஸ்டபிளாக அல்லது சப்- இன்ஸ்பெக்டராக அல்லது இன்ஸ்பெக்டராக இருந்தவர்’’ என்ற பஞ்சாயத்து செய்து கட்டுரை எழுத வேண்டிய நிலையும் ஏற்பட்டது. (கட்டுரை முடிவில் சற்று நீண்ட பி.கு. வாசிப்பீர்கள்தானே?)
  • சரி, மஜ்ரூஹ் சுல்தான்புரி குறித்து இவ்வளவு நீட்டி முழக்குவதற்கும். கவிதைதான் குற்றம் என்பதற்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா?
  • இருக்கே. கொஞ்சம் பொறுங்கள்.
  • முன்னரே கோடிட்டுக் காட்டியுள்ளோம். பணநிறைவுக்கு வழி காட்டும்  திரைப்படப் பாடலாசிரியராகப் பயணிப்பதைவிட, மனநிறைவுக்கு இட்டுச்செல்லும் கவிதைத் திசைதான் அவரது பயண விருப்பமாக இருந்தது என்பதை. மஜ்ரூஹ் சுல்தான்புரி வெறும் திரைப்படப் பாடலாசிரியராக மட்டும் தன்னைச் சுருக்கிக்கொள்ளவேயில்லை. அடிப்படையில் தான் ஓர் கவிஞன் என்பதை அவர் மறக்கவேயில்லை.
  • அடிமைத்தளையில் நாடு சிக்குண்டு கிடந்த காலத்தில் எழுந்த கவிஞர் அவர். விடுதலை என்பது அரசியல் விடுதலையாக மட்டுமல்ல, அடித்தட்டு மக்களுக்கும் அது அர்த்தமாக்கப்படப் பொருளாதார விடுதலையாக மலர வேண்டும் எனும் எண்ணம் வளர்த்திருந்தார். புரட்சி எண்ணமும் மொழியுங் கொண்டிருந்த பைஸ் அகம்மது பைஸ், அலி சர்தார் ஜாஃப்ரி,மொயின் ஹஸன் ஜஸ்பி, கைஃபி ஆஸ்மி போன்ற கவிஞர்களோடு நட்புறவானார்.
  • ஏகாதிபத்தியத்தை, முதலாளித்துவ சுரண்டலை எதிர்த்து, உழைப்பாளர்களுக்குத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருப்பதால், கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அக்கட்சியின் கிளை அமைப்பான முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தின் (Progressive Writers’ Movement, PWM) தீவிரச் செயற்பாட்டாளரானார். ‘’எங்கே உங்கள் உணர்வுகளைச் சொல்ல உங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறதோ, எங்கே உங்கள் வார்த்தைகள் உங்களுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றனவோ, அங்கிருந்து நமக்கு விடுதலை வேண்டும்’’ என்று நாட்டின் விடுதலைக்கு முன்னர் தொடர்ந்து முழங்கிவந்தவர் கவிஞர் மஜ்ரூஹ்.
  • நாடு விடுதலையடைந்த நாளை (ஆகஸ்ட் 15,1947) தனது முற்போக்கு எழுத்தாளர் குழு உறுப்பினர்களோடு மிக உற்சாகமாகத் தன் தந்தை கொண்டாடியதாக அவரது மகள், கவிஞரது நூற்றாண்டின்போது, ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். “இந்தியா சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்ட நாளே அப்பாவின் வாழ்வில் (மஜ்ரூஹ் சுல்தான்புரி) மிகவும் மகிழ்ச்சியான நாள் ஆகும். அன்றைய தினத்தை அவர் விவரித்த விதத்தில் ஏற்பட்ட பரவசத்தை, உற்சாகத்தை விவரிக்க முடியாது. எழுத்தாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒரு உயரமான மூங்கில் பேனாவை உருவாக்கினர். அது,பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தின் கொண்டாட்டச் சின்னமாகக் காட்டப்பட்டது. தாங்கள் எதற்காகப் போராடிக், கடைசியில் வெற்றி பெற்றோமோ அது இதற்காகத்தான் என்று அந்தப் பேனாவை உயர்த்திக்கொண்டு - இந்திய வரலாற்றின் இருண்ட காலத்தின் முடிவை -நடனமாடிப், பாடிக்கொண்டாடினர்” என்று அவர் தன் கட்டுரையில் எழுதியுள்ளார்.
  • ஆனால் நாடு விடுதலையாகும்போதே முழு விடுதலையில்லை; இந்தியா, பாகிஸ்தான் எனப் பிரிவினை செய்து,  இரண்டுக்கும் டொமினியன் (Dominion) அந்தஸ்து வழங்கப்படுகிறது என்றறிந்து கலங்கினார் மஜ்ரூஹ். கம்யூனிஸ்ட் கட்சியும் டொமினியன் ஏற்பாட்டை எதிர்த்தது.  இந்து மகாசபையும் பிரிவினையை முன்னிறுத்தி அந்த அரசியல் ஏற்பாட்டை எதிர்த்தது.
  • சற்று நுணுக்கமான அரசியல் அறிய வேண்டும்... வாங்க...
  • இங்கொரு கவிஞன் நாடு விடுதலையடைவதற்குப் பல்லாண்டுகளுக்கு முன்பே அசைக்கவியலா நம்பிக்கையோடும், அழியாத ஆர்வத்தோடும், 'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே... ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே” என்று துள்ளிக் குதித்தான். பாவம், பாரதி, விடுதலையடைந்த இந்தியாவைக் காணாமலே கண்மூடினான். ஆனால், ‘உலகமே உறங்கும்போது இந்தியா உயிர்ப்போடும் சுதந்திரமாகவும் கண் விழிக்கிறது’ என்று நடுநிசியில் உற்சாகமாக, உணர்வுபூர்வமாக  அறிவிக்கப்பட்ட சுதந்திரம், உண்மையான சுதந்திரமாக இல்லாமற்போனதே என்று மஜ்ரூஹ் போன்ற கம்யூனிஸ்ட்கள் மனக்கவலையடைந்தனர்.
  • தற்போதுள்ள இளைஞர்கள் பலருக்குத் தெரிந்திருக்குமா என்பதில் மூத்தோர்க்கு ஐயமிருப்பது நியாயமே. ஆகஸ்ட் 15,1947-ல் நாடு சுதந்திர இந்தியா என்று அறிவிக்கப்பட்டாலும், (பிரிவினையால்) ‘இந்தியா’ கூறுபோடப்பட்டது. அடுத்ததாக, ‘பூரண ஸ்வராஜ்’ (முழு சுயாட்சி) என்பதன் முனை மழுங்கி, டொமினியன் (Dominion) அந்தஸ்துதான் நமக்கு வழங்கப்பட்டது, அந்நாளில். பிரிட்டனின் மன்னர் ஆறாம் ஜார்ஜ்தான் நமக்கும் மன்னர் 1950 வரை.
  • பிரிட்டனைப் போலவே 1950 வரை இந்தியாவிற்கும் பார்லிமெண்ட் உண்டு; அரசியல் சட்டமும் வைத்துக்கொள்ளலாம்; ஆனால் மக்களாட்சியல்ல; மன்னராட்சிதான்! (Parliamentary, constitutional monarchy) 1950 வரை. லார்டு மவுண்ட் பேட்டன்தான் 1948 வரை நமது கவர்னர் ஜெனரல். போனால் போகிறது என்று லார்டு மவுண்ட்பேட்டன் தன் பதவியைத் துறந்தபின், ராஜாஜி கவர்னர் ஜெனரலானார். நேரு 1947 முதலே பிரதமர். பிரிட்டனின் மன்னருக்கு விசுவாசமாக இருப்பதாகத்தான் பதவியேற்பு உறுதிமொழி (நமக்கு 1950 ஜனவரி வரை இந்த நிலை. பாகிஸ்தானுக்கு 1956 வரை) இந்த டொமினியன் நிலையை அறவே விரும்பாதவர்களில் மஜ்ரூஹ் முன்நின்றார்.
  • இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன் பல கேள்விகள் எழுந்தன. கம்யூனிஸ்டுகள் கடுமையாகப் போராடிய பிரிட்டிஷ் காலனிய அதிகாரம் உண்மையாகவே அகன்று போய்விட்டதா? இப்போது நாட்டை ஆட்சி செய்யும் புதிய இந்திய அரசு காலனிய அரசின் ஒரு பொம்மையாகவேதான் உள்ளதா?
  • கம்யூனிஸ்ட் கட்சி, புதிய ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கூட்டணி வைக்க வேண்டுமா? அல்லது அரசைத் தூக்கியெறிவதற்காக ஆயுதப்போராட்டத்தை நடத்த வேண்டுமா? அதற்காக 'ரஷிய வழி' அல்லது 'சீன வழி' எதை எடுக்க வேண்டும்? அல்லது இந்திய முறை என ஏதேனும் ஒன்று இருக்கிறதா? இத்தகைய கேள்விகள் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் எழுந்த முக்கிய கேள்விகளாக அப்போது இருந்தன. இன்றைய தெலங்கானா பகுதியிலும் வங்காளத்திலும் ஆயுதப் போராட்டங்களை அவர்கள் நிகழ்த்திக் கொண்டிருந்தனர்.
  • சுதந்திரம் பெற்றதும் பிரிட்டிஷ் கொடி இறக்கப்பட்டு, மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டதென்னவோ உண்மைதான். ஆனால் இங்கு பிரிட்டிஷ் கொடியை இறக்கிவிட்டுக் காமன்வெல்த் என்ற அமைப்பில், அதே பிரிட்டிஷ் கொடியின் கீழ் இந்தியா வணங்கி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதே என்பதால். பிரதமர் நேரு, துணைப் பிரதமர் சர்தார் படேல் போன்ற தலைவர்கள் எடுத்த - காமென்வெல்த்தில் இணைந்திருப்பது என்ற - முடிவைக் கம்யூனிஸ்ட்கள் முழுமூச்சாக எதிர்த்தனர்.
  • அந்த முடிவென்பது மக்களைக் கேட்காமல், எதேச்சாதிகாரமாக எடுக்கப்பட்டது; மேலும், தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்களால் எடுக்கப்பட்டது; என்று கம்யூனிஸ்ட்கள் எதிர்த்தனர். கூடுதலாக, அந்த எதிர்ப்புக்கு அடிப்படையான காரணம் ஒன்றும் உண்டு. காமன்வெல்த் அமைப்பு கம்யூனிசத்தை முழுமூச்சாக எதிர்த்ததும், கம்யூனிசத்தை ஒடுக்குவது, கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்வது என்ற செயல்பாடுகளில் தீவிர முனைப்புக் காட்டும் அமைப்பாக அது நின்றதும் ஆகும். மஜ்ரூஹ் கவியாயுதம் எடுத்தார்.
  • மும்பையில் நடைபெற்ற மில் தொழிலாளர் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட தொழிலாளர் பேரணியின்போது, காமன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இந்தியாவைச் சேர்க்க ஜவாஹர்லால் நேரு எடுத்த முடிவைக் கடுமையாக விமர்சித்து மஜ்ரூஹ் ஒரு கவிதை வாசித்தார். கவிதை வரிகள் என்னவோ கொஞ்சம்தான். ஆனால் கவிதை வீச்சு, திருப்பாச்சேத்தி அருவாள் வீச்சு!

நமது சமாதானக் கொடியால்

அப்படியொரு அசௌகரியம் இப்போது!

காதித்தோல் போர்த்த பாம்பு

நேரு ஹிட்லரின் நேர்,

காமன்வெல்த்தின் ஒரு அடிமை நேரு.

நண்பர்களே, அவர் தப்பி விடாதபடி

அவரது காலரைப் பிடித்து இழுங்கள், விடாதீர்கள்!.

(கொல்லுங்கள், அவரை விடாதீர்கள்!)

  • என்ற வரியையும் சில மொழிபெயர்ப்புகளில் காண முடிகிறது)
  • இந்தக் கவிதைதான் குற்றமாச்சு!
  • அவர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. தப்பிவிடாதபடி நேருவைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று கவிபாடிய மஜ்ரூஹ், தன்மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது அறிந்தவுடன் மேடையிலிருந்தே தலைமறைவானார். இது 1949 இல். அந்தக் காலகட்டம்தான் அவர் திரைப்படப் பாடலாசிரியராகக் காலூன்றிக் கொண்டுவரும் ஆரம்ப காலம்.
  • “இரண்டு மாதங்கள் பாடலெழுதாவிட்டால் வீட்டடுப்பில் பூனையுறங்கும்” பொருளாதார வளத்தில்தான் அக்காலத்தில் இருப்பதாக அவரே குறிப்பிட்டார். அச்சமயத்தில் அவரது மனைவி மகப்பேறு காலத்தை நெருங்கிக்கொண்டிருந்தார். ஆனாலும், வீட்டு நிலை பற்றி வருந்திக் கொண்டிருக்காமல், நாட்டு நிலைகண்டு கவலையுற்றுக் கவிதை வாளுருவிச் சமருக்கு நின்றார் மஜ்ரூஹ். தலைமறைவுக் காலத்திலும் போராட்ட முழக்கக் கஜல்களை எழுதி இரகசியமாக வீசிக்கொண்டிருந்தார்.
  • அவரது கவி சகாக்கள், கம்யூனிஸ்ட்கள், சஜ்ஜாத் ஜாகீர் மற்றும் ஃபைஸ் அகமது ஃபைஸ் ஆகியோர் ராவல்பிண்டி சதிவழக்கில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் - தப்பித்துப் ஓடிப் பிழைக்கத் தலைமறைவாகவில்லை நான்; தக்க பாய்ச்சலுக்காகத்தான் பதுங்கினேன் என்பதை அப்போதைய புதிய (இந்திய) ஆட்சியாளர்களுக்குச் சொல்லாமல் உணர்த்துவதுபோல், அஞ்சாமல் வெளிவந்து - மேடையேறி முழங்கினார். அன்றும் அவரது கவிதை வாள்வீச்சு நிகழ்ந்தது.
  • முழக்கம் முடிந்து மேடையிலிருந்து இறங்கும்போது, முந்தைய நிகழ்வில் பாடிய கவிதை, நாட்டின் ஒற்றுமைக்கு ஊறாக, நாட்டின் சர்வதேச உறவுகளை முறிக்கும் முயற்சியாக இருப்பதாகக் கருதிப் பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட் அடிப்படையில் கைது செய்யப்பட்டு ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். அச்சமயத்தில் மஜ்ரூஹ் மனைவி அவரது முதல் மகளைப் பெற்றெடுத்தார். மன்னிப்புக் கேட்டால் விடுதலை பெற்று வீட்டிற்குச் செல்லலாம் என்று அவருக்கு அப்போதைய மும்பை மாநில முதல்வர் சொன்னதாகவும், கவிஞர் மறுத்துவிட்டுச் சிறையிலேயே தொடர்ந்ததாகவும் உறுதிப்படுத்த முடியாத செய்திகளின் உலா நடைபெறுகிறது.
  • மஜ்ரூஹ் சிறைப்பட்ட அதேசமயத்தில் (1949 ஆம் ஆண்டில்) இடதுசாரி திரைப்பட நடிகர் பால்ராஜ் சகானி போன்ற பிற கம்யூனிஸ்ட்களும் சிறைப்பட்டனர். இரண்டாண்டுச் சிறை என்று அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை நாட்டின் முதல் பொதுத்தேர்தல் 1952 இல் நடைபெறுவதையொட்டி, ஒரு ஆண்டு முடிந்தவுடன் விடுதலையானார் மஜ்ரூஹ் மற்றவர்களுடன்.
  • பின்னர் இந்திய - சீனப் போர்க்காலத்தில் -1962- கம்யூனிஸ்ட்களைத் தேடித்தேடிக் கைது செய்தபோதும் மறக்காமல் மஜ்ரூஹ் பெயரும் சேர்க்கப்பட்டுக் கைதானார்.
  • கவிதைதான் குற்றம் என்ற குற்றச்சாட்டில் கைதாகிப் பலவகைக் கொடுமைகளுக்குள்ளான - இதுவரை நாம் சந்தித்த ஆறு கவிஞர்கள் - டாரின் டட்டூர் (பாலஸ்தீன்), மன்னாரமுது, அஹ்னாஃப் ஜெஸிம் (இலங்கை), ஆர்டெம் கமர்தீன் (ரஷியா), இஸ்லாம் சமஹன் (ஜோர்டான்), ஃபதேமே எக்தேசரி, (ஈரான்), சா வாய் (மியான்மர்) போல மஜ்ரூஹ் சிறைக் கொடுமைகளை அனுபவித்தார் என்று சொல்ல ஆதாரங்கள் இல்லை.
  • ஆனால், அந்நிய ஏகாதிபத்தியச் சுரண்டல்கள் ஒழிந்து, அவர்கள் மேற்கொண்டுவந்த அடக்குமுறை வழிகள் யாவும் அறவே அகன்று, கருத்துச் சுதந்திரம் மிளிரும் பூரண சுயாட்சி மலரும் என்ற அரது கவிக்கனவு பொய்த்து, சுதந்திர இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்தைச் சுருக்கிலிட்டுக் கவிதைதான் குற்றம் என்ற காரணத்திற்காகக் கைதாகிச் சிறைப்பட்ட முதல் கவிஞர் மஜ்ரூஹ் சுல்தான்புரி என்பதே அவருக்குப் பெருந்தண்டனை.
  • (பி.கு.: மஜ்ரூஹ் கைது செய்யப்பட்ட விவகாரம் அண்மையில் மாநிலங்களவையில், ஒரு ஆளுங்கட்சி உறுப்பினரால் குறிப்பிடப்பட்டு, வழக்கம்போல் நேருவின் பெயர் இழுக்கப்பட்டு, கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் நேருதான் மஜ்ரூஹ் சுல்தான்புரியைக் கைது செய்தார் என்ற பேச்சு நிகழ்ந்தது. நேருவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட்கள் மீது காதலேதும் இருந்ததில்லை என்பது உண்மைதான். ஆனால் உண்மைகளை முழுவதுமாக அறியாமலோ அல்லது வேண்டுமென்றே மூடிமறைத்தோ, ஒருசார்பாக நம்நாட்டின் அரசியல்வாதிகள் பேசிவருவது நமக்குப் பழகிப்போய்விட்டது.
  • இக்கட்டுரைக்காக 167 இணையதள வளங்களும், 19 நூல்களும், மனித உரிமை அறிக்கைகள் 12-ம் அணுகப்பட்டன. பல இணையதளக் கட்டுரைகளில், ‘மும்பை கவர்னராக இருந்த மொரார்ஜி தேசாய்’ கைது செய்தார், கைது செய்ய ஆணைகள் பிறப்பித்தார், மஜ்ரூஹை மன்னிப்புக்கோர அறிவுறுத்தினார் என்றெல்லாம் இஷ்டத்துக்கு எழுதிப் பதிவு செய்துள்ளார்கள். மொரார்ஜி எப்போதும் கவர்னராக இருந்ததில்லை. அவர் பம்பாய் மாநிலத்தில் 1952 இல்தான் முதல்வரானார். அதற்கு முன் சில ஆண்டுகள் அங்கு அமைச்சராக இருந்திருக்கிறார். அவருக்கும் நேருவுக்கும் இருந்த உறவும் நாடறியும்.
  • முன்னரே இக்கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போல மஜ்ரூஹ் பிறந்த ஆண்டு, அவர் தந்தையார் பணி பற்றிய விவரங்கள் என்பனவற்றில் நிலவும் குழப்பங்களோடு, மஜ்ரூஹ் கைது யாரால், யாருடைய ஆணையின்பேரில் நிகழ்ந்தது? எந்த ஆண்டில் நிகழ்ந்தது? நேரு, மொரார்ஜி போன்றவர்களுக்கு கவிஞரின் கைது விஷயத்தில் நேரடித் தொடர்புகள் இருந்தனவா? என்பதெல்லாம் எந்தச் சார்புகளுமில்லாமல் நடுநிலையாக நின்று நம்பத்தகுந்த ஆதாரங்கள் தேடி ஆராயப்பட்டுத் தெளிவாக நாடறியச்செய்ய வேண்டும்.)

நன்றி: தினமணி (24 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories