TNPSC Thervupettagam

நேரு என்றொரு மகத்தான ஆட்சியாளர்

November 14 , 2019 1892 days 1202 0
  • இந்திய வரலாற்றில் நேருவின் பங்கு மகத்தானது. விடுதலைப் போராட்டக் காலத்தில் காந்தியின் தலைமையை ஏற்று பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று 3,259 நாட்கள் சிறைவாசம் அனுபவித்து, 1947-ல் இந்தியாவின் பிரதமராக ஜவாஹர்லால் நேரு பொறுப்பேற்று 17 ஆண்டுகாலம் ஆட்சிசெய்த அந்தக் காலகட்டம்தான் அவரை ‘நவ இந்தியாவின் சிற்பி’ என்று வரலாறு அழைப்பதற்குக் காரணம்.
  • சுதந்திரம் பெற்றபோது உலகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் மிக மிகக் குறைவான உற்பத்தியைச் செய்துவந்த இந்தியா, உலகத்தின் மிக ஏழை நாடுகளில் ஒன்றாகத் தரவரிசைப்படுத்தப்பட்டிருந்தது. 200 ஆண்டுகால ஆங்கிலேயர்களின் சுரண்டல் ஆட்சிக்குப் பிறகு, 30 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நாடாகத் திக்கற்ற நிலையில், ஆதரவின்றி விடப்பட்டது இந்தியா.
  • 1943-ல் ஏற்பட்ட வங்கப் பஞ்சத்தில் 30 லட்சம் இந்தியர்கள் செத்து மடிந்தனர். இத்தகைய மிக மோசமான பின்னணியில்தான் இந்தியாவின் பிரதமராக நேரு பொறுப்பேற்றார். வறுமையிலும் வளர்ச்சியின்மையிலும் உழன்றுகொண்டிருந்த இந்தியாவை, வளர்ச்சிப் பாதையில் அழைத்துச்செல்வதற்குத் தனது ஆட்சிக் காலத்தில் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். திட்டமிட்ட பொருளாதாரத்தின் மூலமாக வளர்ச்சியை நோக்கி அவரது தலைமையில் நடைபோட்டது இந்தியா.
  • அன்றைய சுதந்திர இந்தியாவின் நிலையை அடிப்படையாக வைத்துத்தான் அவரது சாதனைகளைப் பார்க்க வேண்டும். 1947-48ல் சமர்ப்பிக்கப்பட்ட முதல் பட்ஜெட் தொகை ரூ..178.77 கோடி. அவரது ஆட்சியின் இறுதியில் 1964-65ல் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட் தொகை ரூ.2,095 கோடி. நேருவின் ஆட்சியில் ஆண்டுதோறும் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து பட்ஜெட்டுகளின் மொத்த தொகை ரூ.12,151 கோடி. ஆனால், சமீபத்தில் மத்திய அரசு 2019-20ம் ஆண்டுக்குச் சமர்ப்பித்த பட்ஜெட் தொகை ரூ.27 லட்சத்து 86 ஆயிரத்து 349 கோடி. இந்தப் பின்னணியில்தான் நேரு அரசின் சாதனைகளை மதிப்பிட வேண்டும். நேரு அரசின் பங்களிப்பு எல்லாத் துறைகளிலும் நீண்டது. அவரது அக்கறைகள் விசாலமானவை. ஆக, துறைவாரியாக அவரது சாதனைகளைப் பார்க்க வேண்டும்.

விவசாயம் & நீர்ப்பாசனம்

  • மத்திய பொருள் கிடங்குக் கழகம் 1957-ல் அதன் பணிகளைத் தொடங்கியது. இந்தியாவில், முதன்மையான ஒன்றாக இது உருவானது. விவசாய உற்பத்திப் பொருட்களைப் பாதுகாக்க இது உதவியது. 1964-ல் இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ) அமைக்கப்பட்டது. 1948-ல் தாமோதர் பள்ளத்தாக்குக் கழகம் உருவானது. அமெரிக்காவில் உள்ள டென்னசி பள்ளத்தாக்கு ஆணையம்போலவே இது உருவானது. 1943-ல் தாமோதர் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து, அங்கு ஏற்பட்ட பிரச்சினைகளைச் சமாளிப்பதற்காக இது உருவாக்கப்பட்டது.
  • இந்திய அரசு மேற்கொண்ட முதல் பன்நோக்குத் திட்டம் இதுவாகும். ஜூலை 8, 1954 அன்று உலகின் மிகப் பெரிய பக்ரா நங்கல் கால்வாய் கட்டமைப்பைத் தொடங்கிவைத்த நேரு, ‘அணைகள், வழிபட வேண்டிய ஆலயங்கள்’ என்று குறிப்பிட்டார். இது மட்டுமல்லாமல் கொனார் அணை, கிருஷ்ணா நதி மீது நாகார்ஜுனா சாகர் அணை, பக்ரா நங்கல் அணை, ரிஹந்த் அணை என்று ஏராளமான அணைகள் நேருவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டன. 1960-ல் சிந்து நதிநீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. உலகின் மிகப் பெரிய நீர்ப்பாசன அமைப்பைக் கட்டமைக்க இது உதவியது.

தொழில் துறை

  • தொழில் துறையைப் பொறுத்தவரை நேருவுக்குப் பெருங்கனவு இருந்தது. 1948-ல் தொழிற்கொள்கைத் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. தொழில் வளர்ச்சியிலும், பொதுத் துறை, தனியார் துறைகளிலும் அரசாங்கக் கொள்கையின் விரிவான நோக்கங்களுக்கு இது வழிவகுத்தது. தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்க வேண்டியதை இது அங்கீகரித்தது. இந்த ஆண்டில்தான் ஒடிசாவில் டால்மியா சிமென்ட் ஆலை நிறுவப்பட்டது. 1950-ல் சித்தரஞ்சன் ரயில் இன்ஜின் தொழிற்சாலையை டாக்டர் ராஜேந்திர பிரசாத் தொடங்கி வைத்தார்.
  • தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்குதல், புதிய தொழில்களுக்கு அனுமதி வழங்குதல், நடைபெற்றுவரும் தொழில்களை விரிவாக்கம்செய்தல் ஆகியவற்றில் அரசாங்கத்தின் கட்டுப்பாடு குறித்த தொழில் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் 1951-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1952-ல் சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை (ஐசிஎஃப்) நிறுவப்பட்டது.
  • 1953-ல் ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் (ஹெச்எம்டி) உருவாக்கப்பட்டுப் பலவிதமான தொழில் உபகரணங்களை உற்பத்திசெய்யத் தொடங்கியது. 1954-ல் அரசாங்கத்துக்குச் சொந்தமான பிம்ப்ரி ஆலையிலிருந்து பென்சிலின் மருந்து தயாரிக்கப்பட்டது. பின்னாளில், ‘ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் லிமிடெட்’ என்று பெயர் சூட்டப்பட்டது இந்த ஆலைக்குத்தான். 1955-ல் இரும்பு-உருக்கு அமைச்சகம் உருவானது. இந்தியாவின் முதல் பத்திரிகை காகித ஆலை, மத்திய பிரதேசத்தில் நேபா நகரில் 1955 ஜனவரி 11 அன்று உற்பத்தியைத் தொடங்கியது.
  • 1956-ல் தனியார் துறையினரின் ஆதிக்க வரம்பிலிருந்த 29 பெருந்தொழில்களைத் தொழிற்கொள்கை பற்றிய தீர்மானம் விலக்கி வைத்தது. அதே ஆண்டு போபாலில் பாரத மிகு மின் நிறுவனம் (பிஹெச்இஎல்) லண்டன் தொழில்நுட்ப உதவியுடன் அமைக்கப்பட்டது. தற்போது அமெரிக்காவுக்கு வெளியில் உள்ள 500 பெரிய நிறுவனங்களில் ஒன்றாக இது பட்டியலிடப்பட்டுள்ளது. 1958 டிசம்பரில், இந்திய அரசாங்கம் கனரகப் பொறியியல் கழகத்தை அமைத்தது.

கல்வி

  • வறுமையில் ஆழ்ந்துகிடந்த இந்தியாவைக் கல்வியில் கரையேற்றுவது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. நேருவின் ஆட்சிக் காலத்தில் நாடெங்கும் ஏராளமான பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. இவற்றில் பஞ்சாப் பல்கலைக்கழகம், ராஜஸ்தான் பல்கலைக்கழகம், குஜராத் பல்கலைக்கழகம், பிஹார் பல்கலைக்கழகம், சர்தார் படேல் பல்கலைக்கழகம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. 1953-ல் அமைக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உயர் கல்வியின் மேம்பாட்டுக்குப் பேருதவி புரிந்துவருகிறது. அது மட்டுமல்லாமல், நேரு அரசின் சாதனையாக இந்திய தொழில்நுட்பக் கழகத்தையும் (ஐஐடி) சொல்லலாம்.
  • 1958-ல் பம்பாயில் ஐஐடி அமைக்கப்பட்டது; 1959-ல் சென்னை கிண்டியில் மேற்கு ஜெர்மனி அரசின் கூட்டுறவுடன் ஐஐடி அமைக்கப்பட்டது; 1960-ல் கான்பூரில் ஐஐடி அமைக்கப்பட்டது; 1961-ல் டெல்லியில் பிரிட்டிஷ் அரசின் ஒத்துழைப்புடன் ஐஐடி அமைக்கப்பட்டது.

ஆராய்ச்சி & தொழில்நுட்பம்

  • உயர் தொழில்நுட்பத்திலும் ஆராய்ச்சியிலும் இந்தியா மேம்பாடு அடைய வேண்டும் என்று நேரு பெருவிருப்பம் கொண்டிருந்தார். இதன் விளைவாக, பல்வேறு துறைகளிலும் ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டன. 1947-ல் அப்போதுதான் புதிதாக உருவாக்கப்பட்ட அணுசக்தித் துறையின் இயக்குநராக ஹோமி பாபா நியமிக்கப்பட்டார். தேசிய வேதியியல் ஆய்வகம் பிரதமர் நேருவால் புனேயில் 1950-ல் திறந்துவைக்கப்பட்டது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இத்தகைய 11 ஆய்வகங்களில் இது முதலாவதாகும்.
  • 1940-ல் உருவான அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுமத்தின் (சிஎஸ்ஐஆர்) ஓர் அங்கமாக இது இருந்தது. தேசிய வேதியியல் ஆய்வகத்தின் முதன்மையான நோக்கம், தொழிலகங்களில் அறிவியல் அறிவைப் பயன்படுத்துவதாகும். பல்கலைக்கழகங்களுக்கும் மாநிலங்களுக்கும் நாட்டிலுள்ள பிற அறிவியல் நிறுவனங்களுக்கும் இடையே ஓர் இணைப்பாகச் செயல்படுவதும் அதன் நோக்கம். மேலும், 1957-ல் பாபா அணு ஆராய்ச்சி மையம் டிராம்பேயில் திறக்கப்பட்டது. 1963-ல் தானே வழியறிந்து பறந்து செல்லும் ஏவுகணை, தும்பாவில் உள்ள ஏவுமையத்திலிருந்து செலுத்தப்பட்டது அப்போதைய தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு இந்தியா செய்த சாதனை எனலாம்.

சமூக நலம்

  • நேரு நவீனத்துவத்தின் காதலர். ஆகவே, அவருக்கு நவீனத் தொழில்நுட்பம், தொழில்துறையின் மீது ஈர்ப்பு இருந்தது. அதே நேரத்தில் சமூக நலன் மீதும் அவர் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தார். இதன் விளைவாக, பல முக்கியமான சட்டங்கள் அவரது ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்டன. 1947-ல் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர் நல நிதிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
  • தொழிற்சாலைகள், சுரங்கங்கள், தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு கருதி இது இயற்றப்பட்டது. தொழிற்சாலை சட்டம் 1948-ல் அமலுக்கு வந்தது. சுகாதாரம், பாதுகாப்பு, தொழிலாளர் நலம், இளம் வயதினரை வேலைக்கு அமர்த்துதல், பணி நேரம் ஆகியவை பற்றிய விரிவான வழிகாட்டுதல்கள் இதில் இடம்பெற்றிருந்தன. இதனால், 30 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்றனர். மேலும், 1956-ல் ஆயுள் காப்பீட்டுக் கழகம் தேசியமயமாக்கப்பட்டது நேரு அரசு எடுத்துவைத்த முக்கியமான முன்னெடுப்பு இது.

சட்டங்கள்

  • நேருவின் ஆட்சிக் காலத்தில் பல்வேறு முக்கியமான சட்டங்கள் இயற்றப்பட்டன. 1955 மே 5 அன்று நிறைவேறிய இந்து திருமணச் சட்டம் அவற்றுள் முக்கியமானது. இந்தச் சட்டப்படி ஒரு தாரம் மட்டுமே செல்லுபடியாகும். இந்து திருமணச் சட்டத்தில் அதுவரை இல்லாதிருந்த விவாகரத்து அனுமதிக்கப்பட்டது. பலத்த எதிர்ப்புக்கிடையே இந்து தனிநபர் மசோதாவும் அதே ஆண்டு நிறைவேறியது.
  • 1956-ல் இந்து வாரிசுச் சட்டம் - 1956 நிறைவேற்றப்பட்டது. இதன்படி, இந்து ஆண் வாரிசின் சொத்துகள் மீது அவரது மகன், மகள், விதவை மனைவி, தாயார் ஆகியோருக்கு உரிமையளிக்கப்பட்டது. சொத்தில் பெண்களுக்கு வாரிசுரிமை உண்டு என்பதை இந்தச் சட்டம் நிறுவியது. இதுதவிர, தீண்டாமையை ஒரு குற்றமாகச் சட்டப்படி அறிவித்தது சமூகநீதிக்கான பயணத்தில் முக்கியமான இது மைல்கல் ஆகும். 1962-ல் அரசமைப்புச் சட்டத்தின் 12-வது திருத்தம் கோவா, டையு, டாமன் ஆகிய பகுதிகளை இந்தியாவுடன் இணைத்தது. அரசமைப்புச் சட்டத்தின்
  • 13-வது திருத்தத்தின்படி நாகலாந்து தனி மாநிலமாகியது. அரசமைப்புச் சட்டத்தின் 14-வது திருத்தம் இமாசல பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, கோவா, டையு, டாமன், புதுச்சேரி ஆகிய இடங்களில் சட்டப்பேரவைகளை அமைக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் அளித்தது.

வெளியுறவு

  • நேருவின் மிகச் சிறந்த பங்களிப்புகளுள் வெளியுறவும் ஒன்று. ‘சமாதானப் புறா’ என்ற பெயரை அவர் சர்வதேச நாடுகளிடையே பெற்றிருந்தார். சர்வதேச விவகாரங்களிலும் இந்தியா தனது அண்டை நாடுகளிடம் கொண்டிருந்த உறவின் அடிப்படையிலும் இந்த நற்பெயரை நேரு பெற்றிருந்தார். 1949-ல் காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா நீடித்திருக்க முடிவெடுத்தது ஒரு முக்கியமான நகர்வு.
  • அதேபோல, இந்திய அரசு அப்போது அமைந்த சீனாவின் புதிய அரசுடன் தூதரக உறவுகளை உருவாக்கிக்கொள்ளும் முடிவைத் தெரிவித்து அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டது. 1950-ல் தென் கொரியாவுக்கு எதிரான வடகொரியாவின் ஆக்கிரமிப்பை இந்தியா கண்டித்தது. அமைதி காக்கும் படைகளை காஸா பகுதிக்கு இந்தியா 1956-ல் அனுப்பியது.
  • யுகோஸ்லேவியாவின் ப்ரியோனி நகரில் இருந்தபடி நேரு, நாசர், டிட்டோ ஆகிய மூவரும் ஒரு கூட்டுப் பிரகடனத்தை ஜூலை 19-ல் வெளியிட்டனர். அணிசேரா இயக்கத்தின் தொடக்கமாக அது அமைந்தது. 1957-ல் சீன ராணுவம் திபெத்தைக் கைப்பற்றிய பிறகு, தலாய்லாமாவுக்கு இந்தியாவில் அரசியல் புகலிடம் அளிப்பது பற்றி நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு ஏப்ரல் 3 அன்று அறிக்கை அளித்தார். தலாய்லாமாவுக்கும் அவரது ஒரு லட்சம் சீடர்களுக்கும் இந்தியாவில் தஞ்சம் அளித்ததால், சீனாவை இந்தியா பகைத்துக்கொண்டது.
  • இந்தியா என்பது பன்மைத்துவத்தின் பரிசோதனைச் சாலை. இந்தப் பரிசோதனைச் சாலை இன்றுவரை வெற்றிகரமாக நடந்துவருகிறது என்றால் அதற்கு காந்தி, நேரு உள்ளிட்டோரின் பங்களிப்பு பிரதானமானது. இதில் இந்தியாவுக்கு 17 ஆண்டுகள் பிரதமராக இருந்த நேருவின் பங்களிப்பை வரலாற்றிலிருந்து மறைத்துவிட முடியாது.
  • நேரு என்றும் மறக்க முடியாத ஆளுமை!

நன்றி: இந்து தமிழ் திசை (14-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories