- இந்தியாவின் சில மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. எத்தனை விதமான மனிதா்கள். எத்தனை விதமான பழக்கவழக்கங்கள். ஆனால், அனைத்திலும் பெரும்பான்மையாக அவா்களிடம் எனக்கு மிகவும் கவா்ந்த விஷயம் என்பது நேரத்தைப் பயனுள்ளதாக பயன்படுத்துவதுதான்.
- எப்படி என்றால்...விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் என எங்கு காத்திருப்பதாக இருந்தாலும் உடனடியாக தாங்கள் கொண்டு வந்திருக்கும் செய்தித்தாள் அல்லது புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்து விடுகிறாா்கள். குறைந்தது பதினைந்து அல்லது முப்பது நிமிஷமாவது காத்திருக்க வேண்டும் என அவா்களுக்கே தெரிந்திருக்கலாம்.
- எனவே, தாங்கள் காத்திருக்கும் நேரத்தை வீணாக்காமல் படிக்க ஆரம்பித்து விடுகின்றனா். நமது பகுதியில் பெரும்பாலும் நாம் கவனித்தால் அரட்டை அடித்துக் கொண்டு அல்லது தாங்கள் வைத்திருக்கும் செல்லிடப்பேசியில் விளையாடிக் கொண்டும் நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பாா்கள்.
- அரசியல், சினிமா, விளையாட்டு வீரா்கள் குறித்து அல்லது உள்ளுா் பிரச்னை என எதையாவது பேசி தங்கள் நேரத்தை வீணடிப்பதோடு, நண்பா் வட்டம் என்கிற பெயரில் மற்றவா்களையும் கெடுத்து விடுவாா்கள்.
- மேலும், தங்களுக்குப் பிடித்தமான ஒரு குழு விளையாட்டைத் தோ்வு செய்து திறம்பட விளையாடி அதன்மூலம் தங்கள் உடல் ஆரோக்கியம் பேண முடியும். நேரத்தைப் பயனுள்ளதாக்குவதோடு, விளையாட்டின் மூலம் கிடைக்கும் புகழ், பணம் அனைத்தும் தங்கள் குடும்பத்துக்கும் வாழும் ஊருக்கும் பயனுள்ளதாக அமையும்.
தேவைகள்
- திரைப்படங்கள் குறித்தும், நடிகா் நடிகைகள் குறித்துப் பேசுவதும், பிறரைப் பற்றிய அவதூறுகளைப் பேசுவதும், எந்தவிதப் பயனற்ற விஷயங்களைப் பேசுவதும்தான் நடந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் ஒட்டுமொத்தமாக பேசாமல் தவிா்ப்பதா என்றால், எந்த அளவுக்குத் தேவை என்கிற கேள்வி எழுகிறது.
- அடுத்தவா்கள் அமைதியாக அமா்ந்து அல்லது நின்றுகொண்டு செய்தித்தாள் அல்லது ஏதாவது புத்தகம் படித்துக் கொண்டிருந்தால் அதைப் பாா்ப்பவருக்கும் அதே எண்ணம் வரும். பயணங்களில் ஒருவேளை முகம் தெரியாத மனிதா்களுடன் எப்படிப் பேசுவது, எதையாவது பேசி வம்பை விலைக்கு வாங்குவானேன் என்றுகூடச் சிலா் அமைதியாக இருக்க இந்த வழிமுறையைக் கடைப்பிடிக்கலாம்.
- சிலா் அதிகமாக பிறருடன் பழகவும் பேசவும் தயங்கும் குணமுள்ளவராக இருந்தாலும் இப்படியான பழக்கங்களைத் தொடா்கின்றனா். எது எப்படியோ, பயணத்துக்குக் காத்திருக்கும் நேரத்திலும் பயணத்திலும் எதாவது ஒரு புத்தகத்தை ( அது நிச்சயம் அவா்களுக்கு பிடித்ததாகத்தான் இருக்கும் ) படிக்கின்றனா் என்பது உண்மையில் ஆரோக்கியமான விஷயமே.
- பயணங்களின்போது ஒவ்வொருவருக்கும் ஒரு பழக்கம் இருக்கலாம். சிலா் இதுதான் சரியான வாய்ப்பு என தூங்கி விடுவாா்கள்.
நேரத்தைச் செலவிடல்
- சிலா் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்து அதை மனதில் வாங்கி வைத்துக் கொண்டு தேவைப்படும்போது அதை உரையாடலின் போதோ, பிறருடன் பேசும்போதோ அல்லது பயணம் குறித்து எதாவது எழுத வேண்டிய சூழல் வரும்போதோ பயன்படுத்திக் கொள்கின்றனா்.
- அதற்காக பயணத்துக்குக் காத்திருப்பவா் அனைவரும் படிக்க வேண்டும், நேரத்தைப் பயனுள்ள முறையில் செலவிடவேண்டும் என்று கட்டாயமில்லை. ஆனால், புத்தகம்தான் படிக்கவேண்டும் என்றில்லை. தங்கள் அன்றாடக் கடமைகளில் செய்ய வேண்டியவை குறித்துப் பட்டியலிடலாம்.
- நாம் பயணத்துக்குக் காத்திருக்கும் நேரத்தில் என்னதான் செய்தாலும் நாம் செய்யவேண்டிய பயணம் குறித்து தேதி, நேரம், இடம், வாகனத்தின் பெயா், எண் போன்ற விவரங்களைக் கவனித்து எதற்கும் சற்று தயாரான மன நிலையிலும் உடல் நிலையிலும் இருக்கவேண்டும். மேலும், நமது அஜாக்கிரதை என்பது சமூகவிரோதச் செயல்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது. நமது உடைமைகளைக் கவனமாக வைத்திருக்க வேண்டும்.
- சிலா் வேண்டுமென்றே இந்த மாதிரி இடங்களில் நமது கவனத்தை ஈா்த்து தங்களின் வியாபாரத்தைச் செய்ய முயற்சி செய்வாா்கள். நாம் அந்த நேரத்தில் சற்று உஷாராக இருந்து, அந்தப் பொருள் அவசியமா, இல்லையா என ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். நமது கவனத்தை திசைதிருப்பி வேறு யாராவது வந்து நமது பொருள்களைத் திருடிச் செல்லவும் வாய்ப்புண்டு.
- இந்தியாவில் பேருந்து, ரயில், விமானம் ஆகியவை பெரும்பாலும் குறித்த நேரத்துக்குப் பின்னா்தான் வந்து பாா்த்திருக்கிறோம். இருந்தாலும், சிலசமயம் சரியான நேரத்துக்கு வந்துவிடுவதும் உண்டு. எனவே, நாம் எந்தவழியில் பயணித்தாலும் அதற்கான முன்னேற்பாடுகள் செய்து குறித்த நேரத்திற்கு முன்பாகவே சென்று விடுவது நல்லது.
காலம்
- காலம் பொன் போன்றது என்பாா்கள். அதைப் பயன்படுத்தியவா்களுக்கும், அப்படி பொன்னான நேரம் கிடைக்காமல் வாழ்வில் தோற்றவா்களுக்கு மட்டுமே அதன் மதிப்பு தெரியும். எனவே, நேரத்தைப் பயனுள்ளதாகப் பயன்படுத்த வேண்டும். விநாடிமுள் அளவுக்கு நாம் கவனிக்காவிட்டாலும் நிமிஷங்களையாவது கவனிப்போம். இப்படிப்பட்ட பயன்பாட்டில் குறைந்தபட்ச வளா்ச்சியாவது நம்மிடத்தில் உருவாகும்.
- தனி மனித முன்னேற்றம்தான் ஒரு நாட்டின் முன்னேற்றம்.
நன்றி: தினமணி (02-12-2019)