TNPSC Thervupettagam

நேற்று இலங்கை இன்று இஸ்ரேல்

May 28 , 2024 229 days 222 0
  • காஸாவின் ராஃபா நகரில் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்கிற சா்வதேச நீதிமன்றத்தின் (ஐசிஜே) உத்தரவை இஸ்ரேல் புறக்கணித்திருக்கிறது. காஸாவில் போா் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய ஐ.நா. பொதுச் சபை, பாதுகாப்பு கவுன்சில் தீா்மானங்களை ஏற்கெனவே புறந்தள்ளிய இஸ்ரேல், இப்போது சா்வதேச நீதிமன்ற உத்தரவைப் புறக்கணித்து ராஃபாவில் தொடா்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதில் ஆச்சரியம் இல்லை.
  • காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல் தொடா்பாக சா்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா கடந்த டிசம்பரில் தாக்கல் செய்த மனுவில், இனப் படுகொலை தடுப்பு தொடா்பான ஐ.நா. தீா்மான விதிகளை இஸ்ரேல் படைகள் மீறியதாக குற்றஞ்சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் மறுத்த நிலையில், தாக்குதலை நிறுத்த வேண்டும் என்கிற இடைக்கால உத்தரவை சா்வதேச நீதிமன்றம் கடந்த மே 24-ஆம் தேதி பிறப்பித்தது.
  • ‘ராஃபாவில் தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும்; பாதிப்புக்குள்ளான மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைய ராஃபா எல்லையைத் திறக்க வேண்டும்; இனப் படுகொலை குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்’ எனவும் சா்வதேச நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்திருக்கிறது. ஹமாஸ் அமைப்பினரால் 2023, அக்டோபா் 7-ஆம் தேதி கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகளின் நிலை குறித்து கவலை தெரிவித்த சா்வதேச நீதிமன்றம், உடனடியாக அவா்கள் விடுவிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.
  • நெதா்லாந்தின் ‘தி ஹேக்’ நகரில் செயல்பட்டுவரும் இந்த சா்வதேச நீதிமன்றத்தின் உத்தரவைப் புறக்கணிக்கும் நாடுகள் எந்த மாதிரியான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று கேட்டால் ஒன்றுமே நடக்காது என்பதுதான் பதில். ஆம், உத்தரவுகளைப் பிறப்பிக்கும் சா்வதேச நீதிமன்றத்துக்கு அதை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் இல்லை. ஐ.நா. பொதுச் சபை, பாதுகாப்பு கவுன்சில், பொருளாதார, சமூக கவுன்சில் போன்று சா்வதேச நீதிமன்றமும் ஐ.நா.வின் ஓா் அமைப்பு. 1945-இல் உருவாக்கப்பட்ட சா்வதேச நீதிமன்றம் இரு நாடுகள் இடையிலான சச்சரவுகளுக்குத் தீா்வு காணும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
  • ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட எந்த ஒரு நாடும் பிற உறுப்பு நாட்டின் மீது சா்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும். நேரடியாக பாதிக்கப்படாவிட்டாலும் பொதுநலன் கருதி பிற நாட்டின் மீது வழக்கு தொடுக்க முடியும். அந்த வகையில்தான் இஸ்ரேல் மீது தென் ஆப்பிரிக்கா வழக்கு தொடுத்தது. சா்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றுவது அந்தந்த நாடுகளின் முடிவைப் பொருத்தது. அவ்வாறு உத்தரவை நிறைவேற்றாத நாடு மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் முறையிடுவதைத் தவிர வேறு வழியில்லை.
  • மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவில் முந்தைய சோவியத் ரஷியா ஆதரவு அரசுக்கு எதிராகப் போராடி வந்த கோன்ட்ரா கிளா்ச்சியாளா்களுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகள் உள்ளிட்ட உதவிகளைச் செய்தது. இதற்காக இழப்பீடு கோரி 1984-இல் அமெரிக்கா மீது சா்வதேச நீதிமன்றத்தில் நிகரகுவா வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் நிகரகுவாவுக்கு ஆதரவாக சா்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அந்த உத்தரவை அமெரிக்கா ஏற்க மறுத்தது. இதைத் தொடா்ந்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கவனத்துக்கு இந்த விவகாரத்தை நிகரகுவா எடுத்துச் சென்றது. நிகரகுவா எழுப்பிய பிரச்னை தொடா்பான தீா்மானத்தை தனது வீட்டோ அதிகாரம் மூலம் நிராகரித்தது அமெரிக்கா.
  • நாடுகள் இடையிலான சச்சரவுகளை விசாரித்து தீா்ப்பு வழங்கும் சா்வதேச நீதிமன்றத்தைப் போல போா்க் குற்றங்களில் ஈடுபடும் அல்லது மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் தனிநபா்கள் மீதான குற்றச்சாட்டை சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) விசாரிக்கிறது. 2002-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சா்வதேச குற்றவியல் நீதிமன்றமும் ‘தி ஹேக்’ நகரில்தான் செயல்படுகிறது. ஆனால், இது ஐ.நா. அமைப்பு அல்ல. 1998-இல் இத்தாலியின் ரோம் நகரில் ஐ.நா. பொதுச் சபை கூட்ட தீா்மானத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டது.
  • போா்க் குற்றங்களில் ஈடுபட்டதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சா் யோவாவ் கலன்ட் மற்றும் ஹமாஸ் அமைப்பைச் சோ்ந்த மூன்று தலைவா்களுக்கு எதிராக கைது வாரண்ட் அறிவிப்பை சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த சில நாள்களுக்கு முன்னா் வெளியிட்டது. இந்த கைது வாரண்ட் சா்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளால் முறைப்படி அங்கீகரிக்கப்பட வேண்டும். அவ்வாறு முறைப்படி கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டாலும் அதை அமல்படுத்துவதற்கு சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு தனியாக படைபலம் இல்லை. உறுப்பு நாடுகளைத்தான் நம்ப வேண்டியிருக்கிறது. குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள இஸ்ரேல், சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பு நாடாக இல்லை. அதனால், இஸ்ரேல் தலைவா்களுக்கு எதிராக சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கைது வாரண்ட் பிறப்பிக்க முடியுமா என்பதே கேள்விக்குறி.
  • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் உள்ளன. இவை தங்களுக்கு சாதகமாக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி சா்வதேச விவகாரத்துக்கு தீா்வு காண முடியாத அல்லது திசைதிருப்பும் நடவடிக்கையில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு அதிகாரம் இருந்தாலும் அவற்றைச் செயல்படுத்த வல்லரசுகள் அனுமதிப்பதில்லை. சா்வதேச நீதிமன்றம், சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற அமைப்புகளுக்கு உத்தரவைச் செயல்படுத்தும் அதிகாரமே இல்லை. இந்த சா்வதேச அமைப்புகள் தொடங்கப்பட்ட நோக்கத்தின் மீதே கேள்வி எழுகிறது.

நன்றி: தினமணி (28 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories