TNPSC Thervupettagam

நோய்களுக்கு 'நோ' - தொற்றா நோய்கள் எனும் புதிய ஆட்கொல்லி

June 3 , 2023 589 days 583 0
  • இன்றைய நவீன மருத்துவ அறிவியல் மனிதனின் சராசரி ஆயுள்காலத்தை 66 ஆண்டிலிருந்து 73 ஆண்டாக உயர்த்தியிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் 14 கோடிப் பேர் பிறக்கிறார்கள்; 6 கோடிப் பேர் இறக்கிறார்கள். இந்த மரணங்களில் 74% தொற்றா நோய்களால் (Non communicable disease) ஏற்படுகின்றன. இவர்களில் சுமார் 2 கோடிப் பேர் 70 வயதை அடைவதற்கு முன்பாகவே இறந்துவிடுகிறார்கள்.
  • தொற்றா நோய்களின் காரணமாக மரணங்கள் அதிகமாக நிகழ்ந்துவருகின்றன. இந்த மரணங்களை நம்மால் தவிர்க்க முடியும் என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம். தொற்றா நோய்கள் குறித்து விழிப்புணர்வும், ஆரம்பநிலையிலேயே முறையான சிகிச்சையும் கிடைத்திருந்தால் இந்த மரணங்களில் பெருமளவு தவிர்க்கப்பட்டிருக்கும்.

தொற்றா நோய்கள்:

  • தொற்றா நோய்கள் என்பவை வெளியிலிருந்து நம்முள் நுழையும் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய் அல்ல. இது நம் உடலினுள் ஏற்படும் பாதிப்புகளால் உருவாகும் நோய். இந்த நோய் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவாது. இருப்பினும், மரபுவழியாக இந்த நோய்கள் நமக்கு ஏற்படுவதற்குச் சாத்தியமுண்டு. நாள்பட்ட நோய்கள் என்றும் அறியப்படும் இந்தத் தொற்றா நோய்களின் பாதிப்பு நீண்டகாலம் நீடிக்கும். இவற்றில் சில வாழ்நாள் முழுவதும் நீடிக்கலாம்.

காரணிகள்

  • மரபணுத் தன்மை, உடலியல் மாற்றங்கள், சுற்றுச்சூழல், வாழ்க்கைமுறை மாற்றங்கள் போன்றவற்றின் கலவையே தொற்றா நோய்களை ஏற்படுத்தும் முக்கியக் காரணி. புகையிலை பயன்பாடு, குடிப்பழக்கம், ஆரோக்கியமற்ற உணவு முறை, தீங்கு விளைவிக்கும் உணவுப்பொருள்களின் பயன்பாடு போன்றவை தொற்றா நோய்களால் மரணம் ஏற்படும் சாத்தியத்தை அதிகரிக்கின்றன.
  • புகையிலை பயன்பாட்டால் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் 80 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகள் ஏற்படுகின்றன. குடிப்பழக்கத்தால் ஆண்டுதோறும் 30 லட்சம் பேர் இறக்கிறார்கள். இவை போதாதென்று, அதிகப்படியாக உப்பு / சோடியம் உடலில் சேர்வதால் சுமார் 20 லட்சம் பேர் இறக்கிறார்கள். உடல்நலத்தின் மீது போதிய அக்கறையும், நல்ல பழக்கவழக்கங்களும், கட்டுப்பாடும் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை இந்தத் தரவுகள் நமக்கு உணர்த்துகின்றன.

ஆபத்தான நான்கு நோய்கள்

  • தொற்றா நோய்களில் இதயநோய்கள், புற்றுநோய்கள், நீரிழிவு நோய், சுவாச நோய்கள் ஆகிய நான்கும் ஆபத்தானவை. தொற்றா நோய்களால் ஏற்படும் மரணங்களில் 80% இந்த நான்கு வகை நோய்களால் மட்டும் ஏற்படுகின்றன. ஆண்டுதோறும் கிட்டத்தட்ட இரண்டு கோடிப் பேர் இதய நோய்களால் இறக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக, ஆண்டுதோறும் புற்றுநோய் காரணமாகச் சுமார் ஒரு கோடி மரணங்களும், சுவாச நோய்கள் காரணமாகச் சுமார் 40 லட்சம் மரணங்களும், நீரிழிவு நோய் காரணமாகச் சுமார் 20 லட்சம் மரணங்களும் நிகழ்கின்றன.

வளர்சிதை மாற்ற ஆபத்துக் காரணிகள்

  • வளர்சிதை மாற்ற ஆபத்துக் காரணிகள் நான்கு முக்கிய வளர்சிதை மாற்றங்களுக்குப் பங்களிக்கின்றன. அவை:
  • உயர் ரத்த அழுத்தம்
  • அதிக எடை / உடல் பருமன்
  • ஹைபர் கிளைசீமியா (ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை)
  • ஹைபர் லிபிடெமியா (ரத்தத்தில் அதிக அளவு கொழுப்பு)
  • இந்த மாற்றங்கள் தொற்றா நோய்கள் ஏற்படும் ஆபத்தையும் அதிகரிக்கின்றன. குறிப்பாக, இதயப் பாதிப்புகளுக்கு இவை முக்கியக் காரணமாக இருக்கின்றன. உலகளாவிய மரணங்களில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஏற்படும் மரணம் மட்டும் 19%

சமூகப் பொருளாதாரத் தாக்கம்

  • தொற்றா நோய்கள் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளைவிடக் குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள மக்களையே அதிகம் பாதிக்கின்றன. உலக அளவில் தொற்றா நோய்களால் ஏற்படும் மரணங்களில் 75% இந்த நாடுகளில்தாம் நிகழ்கின்றன.
  • பொதுவாக, தொற்றா நோய்கள் வறுமையுடன் நெருங்கியத் தொடர்புடையவை. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் தொற்றா நோய்களின் பரவலும் விரைவாக உள்ளது. இது அந்த நாடுகளின் வறுமை ஒழிப்பு முயற்சிகளைத் தடுக்கிறது. குறிப்பாக மருத்துவச் செலவுகள் அதிகரிப்பதால் வறுமையில் இருப்பவர்கள் கூடுதல் வறுமையைச் சந்திக்கும் சூழலுக்குத் தள்ளப் படுகின்றனர்.
  • இந்தச் சூழலில்தான், நான்கு முக்கியத் தொற்றா நோய்களால் 30 முதல் 70 வயதுக்கு இடைப் பட்டவர்கள் மரணத்தைச் சந்தித்து வருகின்றனர். இது ஒரு தனிப்பட்ட குடும்பத்தை மட்டும் பாதிப்பதில்லை. அந்த இழப்பின் தாக்கம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் எதிரொலிக்கும்.

தொற்றா நோய்கள்‌

  • இதய நோய்கள்‌
  • பக்கவாதம்‌
  • புற்றுநோய்கள்‌
  • ஆஸ்துமா
  • நுரையீரல்‌ பாதிப்பு
  • நாள்பட்ட சுவாச நோய்கள்‌
  • நீரிழிவு
  • பிறந்த குழந்தைக்கு ஏற்படும்‌ பாதிப்புகள்‌
  • அல்சைமர்‌, டிமென்ஷியா
  • வயிற்றுப்போக்கு நோய்கள்‌
  • சிறுநீரக நோய்கள்‌
  • மனநலப்‌ பாதிப்புகள்‌
  • உயர்‌ ரத்த அழுத்தம்‌

தடுப்பது எப்படி

  • தொற்றா நோய்களுடன் தொடர்புடைய ஆபத்துக் காரணிகளைக் குறைப்பதில் கவனம் செலுத்துவதே அவற்றைக் கட்டுப்படுத்துவதற் கான முக்கிய வழிமுறை. தொற்றா நோய்களால் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதற்கு முறையான நோய் கண்டறிதல், தகுந்த இடைவெளியில் பரிசோதித்தல், உரிய சிகிச்சை போன்றவை உதவும்.
  • தொற்றா நோய்களைத் தவிர்ப்பதற்கு ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மாற்றங்கள், காய்கறிகள், பழங்கள் அடங்கிய சமச்சீர் உணவு, புகையிலை பயன்பாட்டைத் தவிர்த்தல், குடிப் பழக்கத்தை நிறுத்துதல், உடற்பயிற்சி, போதிய தூக்கம் போன்றவை மிகவும் அவசியம். இவற்றைத் தனிநபராக இல்லாமல் குடும்பமாக, சமூகமாக இணைந்து கடைபிடிக்க முயல வேண்டும்.
  • முக்கியமாக உடல் எடை, ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு ஆகிய நான்கு அளவீடுகளில் போதிய கவனம் செலுத்த வேண்டும். அது தொற்றா நோய்களின் பாதிப்பிலிருந்து நம்மைக் காக்கும்; மரணம் ஏற்படும் சாத்தியத்தையும் பெருமளவு தவிர்க்கும்.
  • அடுத்து வரும் வாரங்களில் முக்கியமான தொற்றா நோய்களைக் குறித்து விரிவாகத் தெரிந்து கொள்வோம்.

நன்றி: தி இந்து (03 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories