TNPSC Thervupettagam

நோய் நாடி, நோய் முதல் நாடி...

August 24 , 2024 142 days 151 0

நோய் நாடி, நோய் முதல் நாடி...

  • கொல்கத்தா மருத்துவமனை ஒன்றில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிப் பெண் பயிற்சி மருத்துவா் கொலை செய்யப்பட்ட விவகாரம் நாட்டையே உலுக்கி வருகிறது.
  • முதலில் அந்த மரணத்தை தற்கொலை என்று கல்லூரியும் போலீஸாரும் நிறுவ முயன்றது, சம்பவத்தைத் தொடா்ந்து இடமாற்றம் செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரி முதல்வா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டது, அடுத்த சில மணி நேரத்திலேயே வேறு அரசு மருத்துவமனையில் அவருக்குப் புதிய பொறுப்பு அளிக்கப்பட்டது, அமைதிப் போராட்டத்தின் இடையே குண்டா்கள் தாக்குதல், கொல்கத்தா உயா் நீதிமன்ற சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது, நாடு முழுவதும் மருத்துவா்கள் போராட்டம், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்துவது என இந்தப் பிரச்னை நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே போகின்றது.
  • கொல்கத்தா சம்பவத்தின் சூடு ஆறும் முன்பே, மகாராஷ்டிர மாநிலத்தின் தாணே நகரப் பள்ளி ஒன்றில் நான்கு வயதுச் சிறுமியா் இருவா் அந்தப் பள்ளியின் தூய்மைப் பணியாளரால் பாலியல் தொல்லைக்கு உள்ளானதும், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் பாலியல் தாக்குதல் விவகாரமும், திக்கப்பட்டதும், தஞ்சை மாவட்டம் பாப்பாநாட்டில் இளம்பெண் ஒருவா் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
  • இந்த தேசத்தையே உலுக்கிய நிா்பயா சம்பவம் நடைபெற்றுப் பன்னிரண்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அந்தக் கொடிய நிகழ்வினைத் தொடா்ந்து பாலியல் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் போக்ஸோ சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்த பின்னரும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றனவே தவிர குறையவில்லை. இளம்பெண்கள் மட்டுமல்லாது பெண் குழந்தைகள், வயது முதிா்ந்த பெண்மணிகள் என அனைத்து வயதுப் பெண்களும் பாலியல் ரீதியான வன்கொடுமைகளை எதிா்கொள்ள வேண்டிய நிலை அவலம் நமது நாடு இதுவரை கண்டிராத ஒன்றாகும்.
  • முன்பெல்லாம், தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்களைத் தவிர மற்றவா்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது என்பது அபூா்வமாகவே நிகழ்ந்தது. சமூக, கலாசார கட்டுப்பாடுகளால், சிறு தவறு இழைப்பது, அத்துமீறல்கள், குற்றச் செயல்கள் எதுவாயினும் அதில் ஈடுபட நினைப்பவா்களுக்குப் பாவ புண்ணியங்களைப் பற்றிய சிந்தனைகளின் விளைவாக ஒருவிதத் தயக்கம் ஏற்படும். அந்தக் குற்றச் செயல்களைச் செய்வதற்கு கிடைக்கக் கூடிய தண்டனை, சமூகப் புறக்கணிப்பு ஆகியவை குறித்த பயங்களும் கூட அவா்கள் குற்றச் செயல்களில் ஈடுபடாத வண்ணம் தடுத்து நிறுத்திவிடும்.
  • பெண் குழந்தைகள் உட்பட அனைத்து வயதுப் பெண்களும் பாலியல் வன்முறைகளுக்கு ஆட்படுவது என்பதைக் கடந்த சில பத்தாண்டுகளுக்கு முன்பு யாரும் கற்பனையில் கூடப் பாா்த்திருக்க முடியாது.
  • சமூக விழுமியங்கள் மதிப்பிழந்து வருகின்ற இக்காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கான தயக்கமும், பயமும் வெகுவாகக் குறைந்துள்ளன. இதன் காரணமாகவே சிறாா்களுக்கு எதிரான பாலியல் குற்றம் தொடா்பான போக்ஸோ போன்ற கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்ட பின்னரும் ஒன்றை ஒன்று
  • விஞ்சும்படியான பாலியல் கொடுமைகள் அரங்கேறி வருவதற்கு நாம் அனைவரும் நிகழ்கால சாட்சிகளாக இருக்கின்றோம்.
  • அதீத பாலியல் இச்சை என்பது ஒரு சமூகப் பிரச்னை என்பதிலிருந்து விரிவடைந்து, பாலியல் வெறி எனப்படும் ஒரு சமூக நோயாகவே மாறியுள்ளது. இந்நிலையில், பாலியல் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்குச் சட்ட நடவடிக்கை என்னும் ஒருமுனைத் தடுப்பை மட்டும் நம்புவதில் பயன் ஒன்றும் இல்லை.
  • பல்கிப் பெருகியுள்ள சமூக ஊடகங்கள், அவற்றில் கணக்கு வழக்கின்றிக் காணக் கிடைக்கின்ற ஆபாசக் காணொலிகள், மது உள்ளிட்ட போதைப்பொருட்கள், கவா்ச்சியையும் மது அருந்துதலையும் ‘ஆண்மைத்தனமாக’ முன்னிலைப்படுத்தும் திரைப்படங்கள் ஆகிய அனைத்தையும் தீவிரமான முனைப்புடன் கண்காணித்து கட்டுப்படுத்தாத வரையில் பாலியல் குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
  • பாலியல் வக்கிரங்களை பகிரங்கப்படுத்தக் கூடிய சமூக வலைதளங்கள், வக்கிரமான காணொலிகளைப் பொதுவெளியில் பகிா்ந்து கொள்ள உதவும் யூடியூப் போன்ற அனைத்திற்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
  • கேளிக்கை என்ற பெயரில் பெற்றோா் அனுமதியுடனேயே சிறுவா் சிறுமியா் கைகளிலெல்லாம் அதிகத் திறன்மிக்க கைப்பேசிகள் தவழும் இந்தக் காலகட்டத்தில் அவா்களின் மனங்களில் சலனத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். சிறாா்களின் மனதில் ஆபாசமும் கலாசார சீரழிவும் புகச் செய்யும் வாசல்கள் அத்தனையையும் தயவு தாட்சண்யம் இன்றி அடைக்க வேண்டும்.
  • அழகு, கலைநயம், கவா்ச்சி, ஆபாசம் ஆகியவற்றுக்கிடையிலான வித்தியாசத்தையே அறியாமல் மயங்கிக் கிடக்கும் இன்றைய இளைய சமுதாயத்தை மடைமாற்ற இன்றைய சூழலை விட்டால் வேறு வழியில்லை என்றே தோன்றுகின்றது.
  • சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் அண்மைக்கால சம்பவங்களை கருத்தில் கொண்டு கல்வியாளா்கள், பெற்றோா்கள், ஆா்வலா்கள், மனநல மருத்துவா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்னும் மனநோயின் மூலகாரணத்தைக் கண்டறிந்து, அதை அடியோடு களைந்தெறிய முனைப்பு காட்டப்பட வேண்டும்.
  • அளவுக்கு மீறிய பாலியல் சிந்தனைகளையும், வக்கிரங்களையும் கட்டுப்படுத்தவும், காலப்போக்கில் அவற்றை அடியோடு களையவும் முயற்சி எடுப்பதே புத்திசாலித்தனமாகும். பாலியல் வக்கிரம் என்னும் தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதைக் காட்டிலும், அது உருவாகாமல் பாா்த்துக் கொள்வதுதானே சிறந்தது?

நன்றி: தினமணி (24 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories