TNPSC Thervupettagam

பங்குகளின் விலை சரிவில் வித்தியாசம் ஏன்?

September 9 , 2024 131 days 181 0

பங்குகளின் விலை சரிவில் வித்தியாசம் ஏன்?

  • பங்குச்சந்தையில் நான் முதலீடு செய்திருக்கிறேன். பங்குச்சந்தை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. தற்போது பெரிய அளவில் வீழ்ச்சி அடையுமா? அப்படி நிகழ்ந்தால் என்னுடைய முதலீட்டின் மதிப்பு எவ்வளவு குறைய வாய்ப்பு உள்ளது? என சிலர் மனதில் தோன்றலாம். இந்திய பங்குச்சந்தையை பொருத்தவரை வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து விற்பவராக இருக்கிறார்கள்.
  • அவர்கள் தொடர்ந்து விற்பனையை முடுக்கி விட்டால் சந்தை வீழ்ச்சியை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. எனினும், உள்நாட்டு நிறுவனங்கள் பங்குகளை தொடர்ந்து வாங்கி வருவதால் சந்தை தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கிறது. உள்நாட்டு நிதி நிறுவனங்களின் வாங்குதல் குறைந்தாலோ அல்லது பங்குகளை விற்கத் தொடங்கினாலோ பங்குச்சந்தை குறுகிய காலத்தில் வலுவிழக்கும்.
  • அப்படி ஒரு வீழ்ச்சி நிகழ்ந்தால், என்னுடைய முதலீட்டின் மதிப்பு எந்த அளவுக்கு குறையும் என்ற ஒரு அச்சமும் சிறு முதலீட்டாளர்களுக்கு இடையே இருக்கிறது. எடுத்துக்காட்டாக, 5 லட்ச ரூபாயை, 10 நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாக எடுத்துக்கொள்வோம். சந்தை இறங்க ஆரம்பித்தால், நாம் வைத்திருக்கும் 10 பங்குகளில், 1) சில நிறுவனங்கள் குறைவாக இறங்கலாம், 2) சில நிறுவனங்களின் விலை அதிகமாக இறங்கலாம், 3) சில நிறுவனங்களின் விலை பெருமளவு வீழ்ச்சி அடையலாம்.
  • பங்குச்சந்தையின் இறக்கம் என்பது ஒரு பொதுவான விஷயம். நாம் வைத்திருக்கும் பங்குகள் ஏன் வெவ்வேறு அளவுகளில் இறங்க வேண்டும்? இந்த கேள்விதான் பலருக்கும் எழும். இதற்கான விடையை சுருக்கமாக பார்க்கலாம். ஒரு பங்கின் விலை ஏற்றமும் இறக்கமும், அந்நிறுவனத்தின் லாபத்தோடு நேரடியாக தொடர்புடையது.
  • லாபத்தை தொடர்ந்து ஈட்டி வரும் நிறுவன பங்குளின் விலையானது, தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும். நடுநடுவே சிலர் லாபத்தை எடுப்பதனால் அவ்வப்போது தற்காலிக இறக்கம் வந்து போகும். இது முதல் வகையான நிறுவனங்கள். பங்குச்சந்தை நன்கு சரிந்தாலும், நன்கு லாபம் ஈட்டிக் கொண்டிருக்கும் இந்த நிறுவன பங்குகளின் விலை குறைவாகத்தான் இறங்கும்.

இரண்டாவது வகை:

  • சில நிறுவனங்கள் தொடர்ந்து லாபத்தை ஈட்டிக் கொண்டிருந்தாலும், கடந்த ஓரிரு காலாண்டுகளில் லாபம் கொஞ்சம் குறைந்து காணப்படலாம். இந்நிறுவன பங்குங்கள் சந்தை இறங்கும்போது, கொஞ்சம் தாக்குப்பிடிக்கும். ஆனால், சந்தை அதிகமாக இறங்கும்போது இந்த பங்கை வைத்திருக்கும் முதலீட்டாளர்கள், நம்பிக்கையை இழந்து, மளமளவென விற்க ஆரம்பிப்பார்கள். இதனால், இந்த வகை பங்குகளின் சரிவு, முதல் வகையைவிட அதிகமாக இருக்கும்.

மூன்றாவது வகை:

  • சில நிறுவன பங்குகளின் விலையானது, எதிர்காலத்தில் வரக்கூடிய லாபத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, இப்போதே பெருமளவு ஏறி இருக்கும். இந்த ஏற்றம் என்பது, இந்த வகை பங்குகளின், தற்போதைய நியாயமான சந்தை மதிப்பைவிட, மிக மிக அதிகமாக இருக்கும். பங்குச்சந்தை பெருமளவு சரியும்போது, இந்த வகை பங்குகள், பலூனில் ஊசி ஏற்றும்போது, பலூன் பொசுக்கென்று குறைவது போல, மளமளவென்று சரியும்.

என்ன செய்ய வேண்டும்

  • பொதுவாக நீண்டகால அடிப்படையில், பங்குச் சந்தை மேல்நோக்கியே நகர்கிறது. முதலீட்டாளர்கள், அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய நினைத்தால், பங்குச்சந்தையில் வரும் தற்காலிக இறக்கம் பற்றி கவலைப்பட வேண்டாம். ஆனால் 3 அல்லது 6 மாதம், ஒரு வருட காலம் என்ற கணக்கை கொண்டு முதலீடு செய்பவர்களுக்கு, இந்த இரக்கம் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும்.
  • சரி இப்போது நாம் வைத்திருக்கும் பங்குகளில் எவை எவை, இந்த மூன்றில் எந்த வகையைச் சார்ந்தது என்று எப்படி கண்டுபிடிப்பது. இதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும், ஒரு வழிமுறை பிஇ (PE) ரேஷியோ உபயோகிப்பது. பி/இ ரேஷியோ என்பது, ஒரு பங்கு சம்பாதிக்கும் வருமானத்துக்கு (EPS), எத்தனை ரூபாய் கொடுக்கிறது. நாம் வைத்திருக்கும் பங்குகளுடைய பிஇ ரேஷியோ கடந்த காலத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது அதிக அளவில் இருந்தால், இதன் விலை சந்தை சரியும்போது அதிகமாக இருக்கும்.
  • ஒருவேளை பிஇ ரேஷியோ, சராசரி விலைக்கு அருகில் இருந்தால், இதன் விலையின் வீழ்ச்சி குறைவாக இருக்கும். சில பங்குகளின் பிஇ ரேஷியோ சராசரி விலையைவிட சற்றே குறைவாக இருந்தால், சந்தை வீழ்ச்சி அடையும்போது, இதன் விலை மெதுவாக குறையலாம். அதேநேரம் இந்த பிஇ ரேஷியோ பற்றி இன்னும் நுணுக்கமாக தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. இன்னொரு கோணத்தில் பார்த்தால், அதிக லாபம் ஈட்டும் பங்குகளின் பிஇ ரேஷியோ அதிகமாகவும், குறைவாக லாபம் ஈட்டும் பங்குகளின் ரேஷியோ குறைவாகவும் இருக்கலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories