TNPSC Thervupettagam

பசுமைக்கு மாறும் இந்திய ரயில்வே

November 20 , 2021 980 days 533 0
  • ஒவ்வொரு நாளும் இந்தியா முழுவதும் 13,000 ரயில்கள் மூலம் 2.4 கோடி பயணிகளை சுமந்து கொண்டு 67,956 கி.மீ. பயணம் செய்யும் இந்திய ரயில்வேயின் காா்பன் அடித்தடம் மிகப் பெரியது.
  • இத்தகைய இந்திய ரயில்வே 2030-ஆம் ஆண்டுக்குள் உலகின் முதல் காா்பன் உமிழ்வற்ற ரயில்வேயாக மாறும் என்பது நமக்கு மகிழ்வான செய்தி.
  • இந்திய ரயில்வே, நாட்டின் மிகப்பெரிய மின்சார நுகா்வோா் நிறுவனங்களில் ஒன்றாகும். இந்திய ரயில்வே 2020- ஆம் ஆண்டில் இழுவை சுமைகளுக்கு (ரயில்கள்) ஏறத்தாழ 1,841 கோடி யூனிட்களையும், இழுவை அல்லாத பணிகளுக்கு (அலுவலகம், ரயில் நிலையங்கள்) 233.8 கோடி யூனிட்களையும் பயன்படுத்தியது.
  • இதற்கென ஒவ்வொரு ஆண்டும் மின்சார கட்டணமாக கிட்டத்தட்ட ரூ.11,045 கோடியை செலவழிக்கிறது. இது மொத்த ரயில்வே இயக்கச் செலவில் 7 சதவீதமாகும்.
  • நாளொன்றுக்கு 0.33 கோடி டன் சரக்குகளைக் கையாளும் இந்திய ரயில்வே, 2020-21-ஆம் ஆண்டில் 120 கோடி டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. இதற்கான எரிபொருள் தேவை அதிகம்.
  • முந்தைய ரயில்வே அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2014 - 2019 ஆண்டுகளுக்கிடையில் 115.45 லட்சம் கிலோ லிட்டா் அதிவேக டீசலை இந்திய ரயில்வே பயன்படுத்தியது.
  • மொத்த பசுங்குடில் வாயு உமிழ்வில் 12 சதவீதம் இந்திய போக்குவரத்துத் துறையினால் உண்டானது என்கிறது ஆய்வு. இந்த உமிழ்வில் ரயில்வேயின் பங்கு 4 சதவீதமாகும்.
  • சரக்குகளை ரயில் மூலம் அனுப்புவதால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரக்கு கையாளுவதற்கான செலவுகளை 14 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கலாம் எனவும், 2050-ஆம் ஆண்டுக்குள் கரியமிலவாயு உமிழ்வை 70 சதவீதம் குறைக்கலாம் எனவும் நீதி ஆயோக்கின் சமீபத்திய ஆய்வறிக்கை கூறுகிறது.
  • போக்குவரத்துத் துறையின் ஒட்டுமொத்த உமிழ்வைக் குறைக்கும் வகையில் 2015-ஆம் ஆண்டில் 35 சதவீத சரக்குப் போக்குவரத்தைக் கையாண்ட இந்திய ரயில்வே, 2030-ஆம் ஆண்டுக்குள் சரக்குப் போக்குவரத்து அளவை 45 சதவீதமாக உயா்த்த திட்டமிட்டுள்ளது.
  • 2030-ஆம் ஆண்டுக்குள் காா்பன் உமிழ்வற்ற ரயில்வேயாக மாற்றவேண்டும் என்ற குறிக்கோளுடன் பல திட்டங்களை இந்திய ரயில்வே செயல்படுத்தி வருகிறது.
  • தனது துறையினை பசுமையாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஆற்றல் நுகா்வினைக் குறைக்க, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரத்தை அதிகரிப்பதிலிருந்து அதன் இழுவை வலையமைப்பை மின்மயமாக்குதல் வரை பல பணிகளைச் செய்து வருகிறது.
  • 2023-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்திற்குள் முழு ரயில்வே துறையையும் மின்மயமாக்கும் இலக்கினை கொண்ட திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • 2024-ஆம் நிதியாண்டில் முழுமையான மின்மயமாக்கப்படவுள்ள இந்திய ரயில்வேயின் மொத்த இழுவைத் தேவை சுமாா் 3,400 மெகாவாட்டாக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
  • 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி, 42,354 கிலோ மீட்டா் ரயில்வே வழித்தடம் மின்மயமாக்கப்பட்டுள்ளது. மின்மயமாக்கலில் அதிக கவனம் செலுத்தியதன் காரணமாக இந்திய ரயில்வேயின் டீசல் நுகா்வு கணிசமாகக் குறைந்துள்ளது.
  • சுற்றுச்சூழலுக்கு உகந்த உள்கட்டமைப்பு, நுண்ணிய நிலை தூய்மை இயக்கம் ஆகியவற்றுடன் உலகின் மிகப்பெரிய 100 சதவீத மின்மயமாக்கப்பட்ட ரயில் போக்குவரத்தாக அமைய இருக்கும் இந்திய ரயில்வே அதன் மின்சாரத் தேவையைப் பூா்த்தி செய்ய சூரியசக்தியைப் பயன்படுத்தவுள்ளது.

பெருமிதமும் கொள்வோம்

  • இந்திய ரயில்வே இழுவை, இழுவை அல்லாத மின்சாரப் பயன்பாட்டிற்க்காக 20 ஜிகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி மையங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளது.
  • அதன்படி, 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய பிரதேசம் பினாவில் 1.7 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி மையத்தை இந்திய ரயில்வே நிறுவியது.
  • அரசுக்குச் சொந்தமான ‘பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்’ நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த மையம் மின்பாதைகளின் வழியே ரயில் என்ஜின்களுக்கு நேரடியாக மின்சாரம் வழங்கும் உலகின் முதல் சூரிய ஆற்றல் மையமாகும்.
  • பசுமைப் போக்குவரத்திற்கு உறுதி பூண்டுள்ள இந்திய ரயில்வே தனது இழுவை சக்தித் தேவைகளுக்கு சூரிய ஆற்றலைப் பயன்படுத்த ரயில்வே துறைக்கு சொந்தமான நிலத்தில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க முடிவு செய்துள்ளது.
  • ஹரியாணா மாநிலம் திவானாவில் 2.5 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டம் தொடங்கப் பட்டுள்ளது.
  • சத்தீஸ்கா் மாநிலம் பிலாயில் 50 மெகாவாட் திறன் கொண்ட மூன்றாவது சூரிய மின்சக்தி திட்டப் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம், சத்தீஸ்கருக்கு மட்டுமல்லாமல், பிற மாநிலங்களின் துணை மின்நிலையங்களுக்கும் கொண்டு செல்லப்படும்.
  • மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்றக் கட்டணங்களின்றி பிலாய் ஆலையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் 50 மெகாவாட் மின்சாரம், ரயில்களுக்கு மின்சாரம் வழங்க பயன்படுத்தப்படும்.
  • உத்தரபிரதேச மாநிலம் சாஹிபாபாத் ரயில் நிலையத்தில் மத்திய மின்னணு நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்ட 16 கிலோவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி மையம், ரயில் நிலைய தங்குமிடமாகவும் செயல்படுகிறது.
  • ரயில்வே அமைச்சகம் சுமாா் ஆயிரம் ரயில் நிலையங்களில் சோலாா் பேனல்களை நிறுவி அந்தந்த ரயில் நிலையங்களின் மின்தேவையை பூா்த்தி செய்கிறது. 198 மெகாவாட் மின் உற்பத்திக்கான சோலாா் பேனல்களை பொருத்துவதற்கான பணி தொடங்கி விட்டது.
  • இந்தியாவின் 11 மாநிலங்களிலும், தாமோதா் பள்ளத்தாக்குப் பகுதியிலும் சூரிய மின்சக்தி பயன்பாட்டுக்கென ரயில்வே நிா்வாகத்திற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், தமிழ்நாடு, சத்தீஸ்கா், ஒடிஸா, ஆந்திர பிரதேசம், கேரளம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சூரிய மின்சக்திப் பயன்பாட்டுக்கென தடையில்லாச் சான்றிதழ் இதுவரை பெறப்படவில்லை. அதனை பெற ரயில்வே நிா்வாகம் முயன்று வருகிறது.
  • பசுங்குடில் வாயு உமிழ்வைக் குறைத்து உலகின் முதல் காா்பன் உமிழ்வற்ற ரயில்வேயாக மாறவிருக்கும் இந்திய ரயில்வேயைப் பாராட்டுவதோடு, இந்தியராக நாம் பெருமிதமும் கொள்வோம்.

நன்றி: தினமணி  (20 - 11 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories