TNPSC Thervupettagam

பசுமைக் கண்துடைப்பா பாகு காலநிலை மாநாடு?

December 2 , 2024 11 hrs 0 min 35 0

பசுமைக் கண்துடைப்பா பாகு காலநிலை மாநாடு?

  • அசர்பைஜான் தலைநகர் பாகுவில் நவம்பர் 11 முதல் நவம்பர் 22ஆம் தேதி வரை, 29ஆவது காலநிலை உச்சி மாநாடு (Conference of Parties - COP 29) நடைபெற்று முடிந்திருக்கிறது. காலநிலை சார்ந்த நிதி ஒதுக்கீடு முடிவுகளை எடுப்பதே முக்கிய நோக்கம் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இது ‘நிதி உச்சிமாநாடு’ (Finance COP) என்றும் வல்லுநர்களால் அழைக்கப்பட்டது. மாநாட்டில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்றாலும் பெரும்பாலான செயல்பாடுகள் ஏமாற்றம் தருபவையாகவே இருக்கின்றன.

தலை​வர்​களின் பங்களிப்பு குறைவு:

  • அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜெர்மனி, பிரேசில் போன்ற முக்கிய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்​க​வில்லை. அந்தந்த நாடுகளின் பிரதி​நி​திகள் பேச்சு​வார்த்​தைகளில் கலந்து​கொண்​டனர். “காலநிலைப் பிரச்சினை எவ்வளவு தீவிர​மானது என்பதை இந்நாடுகள் புரிந்​து​கொள்ள​வில்லை என்பதை இது வெளிப்​படுத்து​கிறது” எனக் காலநிலை அறிவியலாளர்கள் விமர்​சித்திருக்​கிறார்கள்.
  • கடந்த உச்சி மாநாடு​களில் காலநிலை மாற்றத்தை எதிர்​கொள்​வதற்கான நிதி ஒதுக்கீடு பற்றிப் பல்வேறு பேச்சு​வார்த்​தைகள் நடைபெற்றன. இதற்காக 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தருவதாக வளர்ந்த நாடுகள் அறிவித்​திருந்தன. இம்மா​நாட்டுப் பேச்சு​வார்த்​தையின் முடிவில், 2035ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு 300 பில்லியன் டாலர்​களைத் தொடர்ந்து தருவதாக​வும், இதை நிதி உதவியாகவும் குறைவான வட்டி​யுடன் கூடிய கடனாகவும் தருவதாக வளர்ந்த நாடுகள் தெரிவித்​திருக்​கின்றன.
  • முடிந்தால் வளர்ந்​து​வரும் நாடுகளும் சிறிதளவு நிதி அளிக்​கலாம், அது கட்டாயமில்லை என்றும் மாநாட்டில் முடிவெடுக்​கப்​பட்டது. இது இம்மா​நாட்டின் மிகப்​பெரிய சாதனை​யாகும். அதே வேளையில், இந்தப் பணம் எப்படிப் பிரித்துக் கொடுக்​கப்​படும் என்பதி​லும், இதற்கு யாரெல்லாம் பங்களிக்​கலாம் என்பதிலும் வளர்ந்த நாடுகள் எந்தத் தெளிவான முடிவுக்கும் வரவில்லை.
  • வரப்போகும் நிதியை எப்படிச் செலவு செய்வது, யார் அதைப் பிரித்துக் கொடுப்​பார்கள், முடிவை எடுக்கும் அதிகாரம் யாரிடம் இருக்​கிறது என்பது போன்ற பல கேள்வி​களுக்குப் பதில் இல்லை. “பணக்கார நாடுகள் பாகு மாநாட்டில் எப்படியோ பேசிப் பேசித் தப்பித்து​விட்டன” என்கிறார் கென்யாவைச் சேர்ந்த முகமது அடௌ. இந்த மாநாட்டில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு இடையில் நிதி தொடர்​பாகப் பல முரண்கள் எழுந்தன.

புதைபடிவ எரிபொருள்கள்:

  • சென்ற முறை துபாயில் நடைபெற்ற உச்சி​மா​நாட்டில் ‘புதைபடிவ எரிபொருள்​களி​லிருந்து விலகிச் செல்வது’ என்கிற முடிவு எடுக்​கப்​பட்டது. இந்த முறை அதைப் பற்றிய பேச்சு​வார்த்தை விரிவாக நடந்தது. எண்ணெய் வளங்களை முக்கிய​மான​தாகக் கருதும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் இதை எதிர்த்​த​தால், மாநாட்டின் இறுதி ஆவணத்தில் எரிபொருள்கள் பற்றி அதிகம் குறிப்​பிடப்​பட​வில்லை. அசர்பைஜானின் அதிபர் இல்ஹாம் அலியேவ், மாநாட்டின் தொடக்​கத்​திலேயே, “புதைபடிவ எரிபொருள்கள் கடவுளிட​மிருந்து கிடைத்த பரிசுகள்.
  • ஒரு நாட்டில் இயற்கை வளங்கள் இருக்​கின்றன என்பதையோ, அந்த நாடுகள் இந்த வளங்களைச் சந்தைப்​படுத்து​கின்றன என்பதையோ குற்ற​மாகச் சொல்ல முடியாது” என்று அழுத்​த​மாகத் தெரிவித்​திருந்​தார். அசர்பைஜானில் எண்ணெய்க் கிணறுகள் அதிகம். ஆகவே, இதுபோன்ற நிலைப்​பாடுகளை அசர்பைஜான் எடுக்​கலாம் என்பது முன்பே கணிக்​கப்​பட்டிருந்தது.
  • அது மட்டுமல்​லாமல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் ஒரு நாடு, காலநிலை உச்சி மாநாட்டுக்குத் தலைமை வகிப்பது இது இரண்டாவது முறை. கச்சா எண்ணெயை அதிகமாகச் சார்ந்​திருக்கும் நாடுகளில் உச்சி மாநாட்டை நடத்துவது எரிபொருள் பற்றிய சரியான முடிவுகளுக்கு வழிவகுக்​காது.
  • இம்மா​நாட்​டில், புதைபடிவ எரிபொருளுக்கு ஆதரவாக ‘லாபி’ செய்பவர்கள் நிறையப் பேர் கலந்து​கொண்​டார்கள். 1,773 எரிபொருள் ஆதரவாளர்கள் கலந்து​கொண்​டனர். காலநிலையால் மோசமாகப் பாதிக்​கப்​படக்​கூடிய 10 நாடுகளின் மொத்தப் பிரதி​நி​தி​களைவிட, இந்த எண்ணிக்கை அதிகம்.
  • இவர்களில் பலர் கச்சா எண்ணெய் நிறுவனங்​களின் நேரடிப் பிரதி​நி​திகள் என்பது மேலும் கவலையூட்​டக்​கூடிய தகவல். ஓர் உலக மாநாட்டில் கலந்து​கொள்ள இவர்களுக்கு ஏன் அனுமதி தரப்பட்டது என்பது முக்கியமான கேள்வி. காலநிலை மாற்றத்தால் பாதிக்​கப்​படு​பவர்கள், காலநிலைச் செயல்​பாடு​களில் ஈடுபட்​டிருப்​பவர்​களைவிட இதுபோன்ற தொழில்சார் பிரதிநிதிகள் உச்சி மாநாடு​களில் அதிகமாகி​யிருக்​கிறார்கள்.

கரிமச் சந்தை பற்றிய முடிவு:

  • கரிம உமிழ்வுகள், கரிம உமிழ்வுகளை உறிஞ்சும் தொழில்​நுட்​பங்கள், அதற்கான சந்தை ஆகியவை காலநிலையைப் பொறுத்தவரை முக்கிய விவாதப் புள்ளிகள். ஆனால், இவை பல ஆண்டு​களாகவே பேச்சளவில் மட்டுமே இருந்​து​கொண்​டிருக்​கின்றன. நல்வாய்ப்பாக, இந்த உச்சி​ மா​நாட்டில் இது பற்றிய சில முக்கியமான முடிவுகள் எடுக்​கப்​பட்​டிருக்​கின்றன. பாரிஸ் ஒப்பந்​தத்தில் 6ஆவது பிரிவின் கீழ் இது பற்றிய சில வரையறைகள் தரப்பட்​டுள்ளன. இதையொட்டிக் கரிம உமிழ்வு​களைக் குறைப்பது, கரிமச் சந்தையை உருவாக்குவது ஆகியவை பற்றிய சில முடிவுகள் எடுக்​கப்​பட்டன.
  • இது சரியான முறையில் நடைமுறைக்கு வந்தால், ஏற்கெனவே வெளியிடப்​பட்​டுள்ள கரிம உமிழ்வுகளை உறிஞ்சும் தொழில்​நுட்​பங்கள் பெருகும். இதன்மூலம் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்​படுத்​த​வும், ஏற்கெனவே வெளியான உமிழ்வு​களைக் கட்டுப்​படுத்​தவும் முடியும். வெளியிடப்பட்ட உமிழ்வு​களுக்கு ஈடாக, வேறு இடங்களில் கரிம உறிஞ்சு தொழில்​நுட்​பங்கள், காடு உருவாக்கம் போன்ற​வற்றைப் பயன்படுத்தி கரிம உமிழ்வைச் சரிகட்​டவும் இந்தப் பேச்சு​வார்த்தை வழிவகுத்​திருக்​கிறது.
  • அதேவேளை​யில், இதுவரை வெளியிடப்​பட்​டுள்ள கரிம க்ரெடிட்டு​களில் 16% மட்டுமே செயல்​திறன் கொண்டவை என 2024 நவம்பரில் ‘நேச்சர்’ இதழில் வெளியான ஓர் ஆய்வுக் கட்டுரை தெரிவிக்​கிறது. ஆகவே, இதன் செயல்​திறனை அதிகரிக்​காமல் அப்படியே நடைமுறைப்​படுத்​தினால் எதிர்​பார்க்கும் நன்மைகள் கிடைக்​காது. அது மட்டுமல்​லாமல், இப்போது நிலவும் நவதாராளமயப் பொருளா​தாரச் சூழலில் இந்தச் சந்தை என்னவாகும் என்பதையும் கவனிக்க வேண்டும்.
  • கரிமச் சந்தையைப் பயன்படுத்திப் பெருநிறு​வனங்கள் லாபம் பார்க்​கலாம். கரிமச் சந்தையே போலியாக நடத்தப்​படலாம். இதனால், உமிழ்வுகள் மேலும் அதிகரிக்​கவும் வாய்ப்பு இருக்​கிறது. கடந்த காலத்​துடன் ஒப்பிடும்போது கரிமச் சந்தையைக் கண்காணிக்​கக்​கூடிய அறிவியல் தொழில்​நுட்​பங்கள் வளர்ந்​திருக்​கின்றன. ஆகவே, இந்த முறை பெரிய தவறுகள் நடக்காது என்றும் ஒரு தரப்பினர் நம்பிக்கை தெரிவிக்​கின்​றனர்.

பிற முடிவுகள்:

  • 25 உலக நாடுகள், ஐரோப்பிய யூனியன் ஆகிய பிரதி​நி​தி​களைக் கொண்ட கூட்டமைப்பு, “இனிமேல் புதிய அனல்மின் நிலையங்களை உருவாக்கு​வ​தில்லை” என்று முடிவெடுத்​திருக்​கிறது. இன்னொரு​புறம் மீத்தேன் பற்றிய பேச்சு​வார்த்​தைகளிலும் நல்ல முடிவுகள் கிடைத்திருக்​கின்றன. உலகளாவிய மீத்தேன் உமிழ்வில் பாதிக்கும் மேற்பட்ட உமிழ்வு​களுக்குக் காரணமான நாடுகள் ஒன்றிணைந்து ஒப்பந்​தத்தில் கையெழுத்​திட்​டிருக்​கின்றன.
  • “மீத்தேன் உமிழ்வு​களைக் கூடிய​வரையில் குறைப்பது, மீத்தேன் உறிஞ்சு தொழில்​நுட்​பங்களை வளர்த்​தெடுப்பது” ஆகிய இரண்டு முக்கிய அம்சங்கள் இந்த ஒப்பந்​தத்தில் காணப்​படு​கின்றன. வளர்ந்த நாடுகள் தங்களது உமிழ்வு பற்றிய முக்கியமான சில உறுதி​மொழிகளையும் அளித்திருக்​கின்றன.
  • அதே நேரம் மேற்குறிப்​பிட்ட குறைந்த நன்மைகள் நீங்கலாக, ஒட்டுமொத்தமாக இந்த மாநாடு ஏமாற்றம் தரும் ஒன்று​தான். ‘பசுமைக் கண்துடைப்பு நிறைந்த மாநாடு’ என்று இது வர்ணிக்​கப்​படு​கிறது. “இந்தக் காலநிலை உச்சி மாநாடுகள் மக்களுக்கும் புவிக்​குமான நியாயத்தைத் தருபவையாக இல்லை.
  • ஒருவரை ஒருவர் வெறுமனே சந்திப்​ப​தற்கும் தங்களது ஆதிக்​கத்தை நிலைநிறுத்​திக்​கொள்​வதற்​குமான மேடைகளாக இவை மாறிவிட்டன” என்று குற்றம்​சாட்டு​கிறார், காலநிலை ஆராய்ச்​சி​யாளர் ஜோனதன் பார்ன்ஸ். ஆனால், இதுபோன்ற உலகளாவிய முன்னெடுப்புகளை ​வி​வா​திக்க உச்சி ​மா​நாடுகளை ​விட்​டால், நமக்கு வேறு வழி​யில்லை என்​பது​தான் கசப்பான உண்​மை.

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories