TNPSC Thervupettagam

பசுமைக் குற்றம்: பேசப்படாத பேராபத்து

May 3 , 2023 566 days 357 0
  • சுற்றுச்சூழலுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பசுமைக் குற்றங்கள் (Green crimes) தற்போது திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களாக (Organised crime) மாறியுள்ளன. ஒருபுறம் இயற்கை வளங்களின் பற்றாக்குறை; மற்றொருபுறம் வளர்ச்சி என்ற பெயரில் அந்த வளங்களுக்கான தேவை அதிகமாக இருப்பதாலும், சட்டத்துக்குப் புறம்பான இயற்கை வளச்சுரண்டல், பசுமைக் குற்றங்களுக்கு இட்டுச்செல்கிறது.
  • காட்டுயிர்களை வேட்டையாடுதல், கடத்துதல், காடுகளை வரைமுறையின்றி அழித்தல், காற்று, நீரை மாசுபடுத்துதல், கடல் வளங்களை அழித்தல், நிலத்துக்கு மேலும் கீழும் காணப்படும் கனிம வளங்களைக் கட்டுப்பாடின்றிச் சூறையாடுதல் ஆகியவை முதன்மையான பசுமைக் குற்றங்கள்.

அதிரவைக்கும் கொலைகள்:

  • பசுமைக் குற்றங்களைத் தடுக்க இந்திய, உலக அளவில் இயற்கை ஆர்வலர்களும் அரசு அலுவலர்களும் முற்படுகின்றனர். அத்தகைய முயற்சியில் அவர்கள் மிரட்டப்படுவதும் தாக்கப்படுவதும் அதிகபட்சமாகக் கொல்லப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன.
  • உதாரணத்துக்கு, ‘குளோபல் விட்னஸ்’ என்ற அமைப்பின் 2022 ஆய்வின்படி, 2012-2021 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகம் முழுவதும் 1,733 இயற்கைப் பாதுகாவலர்கள் குற்றக் கும்பல்களால் (Criminal gangs) கொல்லப்பட்டதாகத் தெரியவருகிறது. இதில் அதிகபட்சமாக மெக்ஸிகோ, கொலம்பியா, பிரேசில் ஆகிய தென் அமெரிக்க நாடுகளில் மட்டும் 818 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
  • இந்தியாவில் 79 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. சமீபத்தில்கூட மணல் கொள்ளையைத் தடுக்க முற்பட்ட தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், மணல் கொள்ளையர்களால் அவரது அலுவலகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார்.
  • தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் கடந்த 20 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள், அரசு ஊழியர்கள் உட்பட எட்டுப் பேர் கொலை செய்யப்பட்டதும் தற்போது அம்பலமாகியிருக்கிறது. கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை இங்குகுறிப்பிடுவதற்குக் காரணம், புள்ளியியல் கணக்கீட்டுக்காக மட்டுமல்ல, மாறாக ஒவ்வொரு மனித உயிரும் முக்கியம் என்கிற சமூகப் பொறுப்பை வெளிப்படுத்தவே.
  • பசுமைக் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் போதுமான, வலுவான சட்டங்கள் நம்மிடையே இருக்கின்றன. இருந்தும் அக்குற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. குற்றத் தரவுகளின் அடிப்படையில் இதற்கான காரணங்களை அறிய முற்படுவோம். தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB), 2014 முதல் பசுமைக் குற்றத் தரவுகளை வெளியிடுகிறது.
  • அதன்படி 2014 முதல் 2021 வரை பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை 2,53,971. இதில் கவனிக்கப்பட வேண்டியவை பசுமைக் குற்றங்களை விசாரிப்பதற்கான காவல் துறையின் நிபுணத்துவம், அரசு வழக்கறிஞர்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்ட நிபுணத்துவம், நீதிமன்றத்தால் கையாளப்படும் பிற குற்ற வழக்குகளின் எண்ணிக்கை ஆகியவை.

முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகள்:

  • தற்போதைய சூழலில் காவல் துறை பலதரப்பட்ட பணிகளைச் செய்கிறது. எனவே, காவல் துறையினர் பசுமைக் குற்றங்களை விசாரணை செய்வது என்பதுமுதன்மையானதாக இருக்க முடியாது. கூடுதலாக, அக்குற்றங்களைக் கையாள்வதற்கான நிபுணத்துவமும் அவசியம்.
  • எனவே, இணையவழிக் குற்றம், சிலைக் கடத்தல், பொருளாதாரக் குற்றம், போதைப் பொருள் கடத்தல் ஆகியவற்றைக் கையாள்வதற்குச் சிறப்புக் காவல் பிரிவுகள் இருப்பதுபோல, பசுமைக் குற்றங்களுக்கு என ஒரு பிரிவை (Environmental crime unit) உருவாக்குவதற்கான தேவை மிக அதிகமாக உள்ளது. அக்குழுவில் காவலர்கள் மட்டுமின்றி காடு, சுற்றுச்சூழல், தடய அறிவியல் துறைசார் நிபுணர்களும் இருப்பது அவசியம்.
  • இதன் மூலம் பிற அரசுத் துறைசார் அலுவலர்கள் பசுமைக் குற்றவாளிகளை எதிர்கொள்ளும் நிகழ்வுகளும் அதனால் ஏற்படும் அசம்பாவிதங்களும் பெருமளவு குறைக்கப்படும். கூடுதலாக, அக்குற்றங்கள் பற்றி மக்கள் அச்சமின்றிப் புகாரளிக்கவும் வழிவகை ஏற்படும்.
  • நீதிமன்ற விசாரணையில் காவல் துறைக்குத் துணைநிற்கும் அரசு வழக்கறிஞர்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதும் அவசியம். நிலுவையில் உள்ள அதிகப்படியான வழக்குகளைத் தீர்த்துவைக்க பசுமைக் குற்ற விசாரணைக்கு மட்டும் என சிறப்பு நீதிமன்றங்களும் தேவைப்படுகின்றன.
  • காவல் - நீதித் துறையில் இருக்கும் இத்தகைய இடைவெளிகள், தொடர்ந்து பசுமைக் குற்றங்கள் நிகழ்வதற்குக் காரணங்களாக இருக்கலாம். மேலும், அக்குற்றங்களைத் தடுக்க முற்படுபவர்களுக்கு எதிராகக் கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல், கொடிய காயங்களை ஏற்படுத்துதல் போன்ற கொடுங்குற்றங்களும் நடப்பதற்கான சாத்தியம் உண்டு.
  • பொதுவாக, ஒரு குற்றச்செயலைத் தடுக்க அதற்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுவது இயல்பு. காரணம், குற்றம் செய்ய நினைப்பவருக்கு அதிகபட்சமான தண்டனை பயத்தை ஏற்படுத்திக் குற்றத்தைக் குறைக்கும் என்பது நம்பிக்கை. ஆனால், குற்ற தண்டனையை அதிகரிப்பதைவிட குற்றத்துக்கான தண்டனையை உறுதிப்படுத்துவதுதான் குற்ற நிகழ்வுகளைக் குறைப்பதற்கும், தடுப்பதற்கும் வழிவகுக்கும் என்றே பல குற்றவியல் ஆராய்ச்சிகள் நிறுவுகின்றன.
  • ஆக, குற்றம் செய்தால் தண்டனை உறுதி என்ற செய்தி, குற்றம் செய்யத் துணிபவர்களுக்குப் பயத்தை ஏற்படுத்தும் (குற்றம் செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள் இதற்கு விதிவிலக்கு). எனவே, குற்றவாளிக்குத் தண்டனையை உறுதிப்படுத்த நமது குற்றவியல் நீதி அமைப்பிலுள்ள காவல் துறை, நீதித் துறையில் மாற்றங்கள் இன்றியமையாததாகின்றன.

பொது விவாதம் அவசியம்:

  • காலநிலை மாற்றம் நிகழ்ந்துகொண்டிருப்பதை நாம் உணரத் தொடங்கி இருக்கிறோம். வரைமுறையற்ற கார்பன் உமிழ்வு,காடு, மலை, கடல், கனிம வளங்களை அழித்தல் போன்றவை காலநிலை மாற்றத்தை விரைவுபடுத்தும் செயல்களாகும். பசுமைக் குற்றங்களுக்கும் காலநிலை மாற்றத்துக்கும் நேரடித் தொடர்பு இருப்பதைப் பல ஆராய்ச்சிகள் நிறுவியுள்ளன.
  • எனினும், பசுமைக் குற்றங்கள் குறித்தும், அதனால் நிகழும் பிற கொடுங்குற்றங்கள் பற்றியும் பொது விவாதம் நம்மிடையே மிகவும் குறைவு. தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் கொல்லப்பட்ட சம்பவம் முக்கிய ஊடகங்களில் செய்தியாக வந்தது; சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியிலும் பேசப்பட்டது. எனினும், பரவலான பொது விவாதத்தை உருவாக்கவில்லை. இதற்குக் காரணம், பசுமைக் குற்றங்களால் நேரடியாகவும் உடனடியாகவும் மனிதர்களான நாம் பாதிக்கப்படுவதில்லை என்கிற எண்ணம் பலரிடம் இருப்பதுதான்.
  • பசுமைக் குற்றங்கள் குறித்துப் போதுமான விவாதம் இல்லாததால் மக்கள் பிரதிநிதிகளும், கொள்கை வகுப்பாளர்களும், அரசு - நீதிமன்றங்களும், சுற்றுச்சூழலுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பசுமைக் குற்றங்களைக் கட்டுப்படுத்தப் போதிய நடவடிக்கைகள் மேற்கொள்வதில்லையோ என்று தோன்றுகிறது.
  • சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் சார்ந்த நெருக்கடிநிலையில் இருக்கும் நாம், இந்த விஷயத்தில் காத்திரமான நடவடிக்கைகளைத் தொடங்கியாக வேண்டும். சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் பசுமைக் குற்றங்கள், நம்மையும் நம்சந்ததியினரையும் நேரடியாகப் பாதிக்கத் தொடங்கி இருக்கின்றன எனும் உண்மையை உரக்கப் பேசுவது அவசியம்.

நன்றி: தி இந்து (03 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories