TNPSC Thervupettagam

பஞ்சமி நிலம் மீட்பு - விடிவுகாலம் இல்லை

November 4 , 2019 1902 days 3354 0
  • பஞ்சமி நிலக் கொடை என்பது, பட்டியலின மக்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்துக்காக சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயே ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்ட திட்டம்.
  • அப்போதைய செங்கல்பட்டு மாவட்டத்தின் பொறுப்பு ஆட்சியராக இருந்த ஜேம்ஸ் ட்ரெமென்கீர் என்பவர், பட்டியலின மக்களின் சமூக-பொருளாதார நிலை குறித்து ஓர் விரிவான அறிக்கையை தயார் செய்தார்.
  • அந்த அறிக்கையை 1891-இல் ஆங்கிலேயே அரசிடம் அளித்தார். அதில், பட்டியலின மக்கள் அனுபவித்து வரும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்தும், உழைக்கும் மக்களான அவர்கள், நில உடைமையாளர்களால் வஞ்சிக்கப்படுவது குறித்தும் விரிவாக எடுத்துக் கூறியிருந்தார்.

பட்டியலின மக்கள் – நிலம்

  • பட்டியலின மக்களுக்கு நிலம் அளிக்கப்பட்டால் அவர்களது சமூக-பொருளாதார நிலை உயரும் என ஆலோசனை கூறியிருந்தார் ட்ரெமென்கீர். ஆட்சியரின் அந்த ஆலோசனையில் ஒரு மறைமுக செயல் திட்டமும் உண்டு.
  • அதாவது, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நில வரியே அரசாங்கத்துக்கான பிரதான வருமானமாக இருந்தது. ஆதலால், உழைப்பாளர்களான பட்டியலின மக்களுக்கு நிலம் வழங்குவதன் மூலம் ஆங்கிலேய அரசுக்கான வரி வருவாய் அதிகரிக்கும் என்பது அவரது எண்ணம்.
  • அந்த அறிக்கையானது ஆங்கிலேய நாடாளுமன்றத்தில் 1892-ஆம் ஆண்டு விவாதிக்கப்பட்டு பட்டியலின மக்களுக்கு நிலம் வழங்குவதற்கான சட்டமும் உடனடியாக இயற்றப்பட்டது.
  • அதன்படி, இந்தியா முழுவதும் பட்டியலின மக்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் 62,745 பேருக்கு சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டன. இந்த நிலங்களே "பஞ்சமி நிலங்கள்' (வர்ணாசிரம கொள்கைப்படி, மனித சமூகம் பிராமணன், சத்ரியன், வைஷ்ணவன், சூத்திரன் என 4 பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.

"பஞ்சமி நிலம்'

  • இந்த நான்கு பிரிவுகளிலும் அடங்காத ஐந்தாவது பிரிவாக உள்ளவர்கள் "பஞ்சமர்' என அழைக்கப்படுகின்றனர். அப்படிப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிலம் என்பதால், அந்த நிலம் ‘பஞ்சமி நிலம்' எனக் கூறப்படுகிறது) என அழைக்கப்படுகின்றன.
  •  இவற்றில் பெரும்பாலான நிலங்கள் வட மாவட்டங்களிலேயே உள்ளன. தென் மாவட்டங்களில் பஞ்சமி நிலங்கள் குறைவு. பஞ்சமி நிலங்களை முதல் 10 ஆண்டுகளுக்கு விற்கவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ, தானம் கொடுக்கவோ கூடாது.
  • 10 ஆண்டுகள் கழித்து அந்த நிலத்தை மற்றொரு பட்டியலினத்தைச் சேர்ந்தவருக்கு விற்கவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ அல்லது தானம் கொடுக்கவோ செய்யலாம். இந்த நிபந்தனைகளை மீறி செய்யப்படும் நில உரிமை மாற்றங்கள் எதுவும் சட்டப்படி செல்லாது.
  • பெரும்பாலான பஞ்சமி நிலங்கள் பாசன வசதி இல்லாத தரிசு நிலங்களாகவே இருந்துள்ளன. பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்ற நிலையில் இருந்த பட்டியலின மக்கள், அந்த நிலத்தைச் சீர்படுத்தவோ, பாசன வசதி செய்து கொள்ளவோ வழி இல்லாமல் இருந்துள்ளனர்.
  • எனவே, பெரும்பாலான நிலங்கள் பயன்படுத்தப்படாமலேயே கிடந்தன. காலப்போக்கில் வறட்சி, பஞ்சம் போன்றவற்றால் அம்மக்கள் இடம்பெயர்ந்து சென்றதும், அருகில் உள்ள நிலவுடைமை ஆதிக்க ஜாதியினரின் அச்சுறுத்தல், பாசனத்துக்கு தண்ணீர் கொடுக்காதது, வழிகளை அடைத்தல், ஆக்கிரமிப்பு போன்றவற்றால் பஞ்சமி நிலங்கள் படிப்படியாக கைமாறத் தொடங்கின.
  • இதில் பெரும்பகுதி கைமாற்றம் என்பது 1965-க்கும் 1969-க்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த கைமாற்றம் அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தின் கூட்டணியுடன் நடைபெற்றதால் பட்டியலின மக்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
  • இன்றைய நிலையில் பாதிக்கும் மேற்பட்ட நிலங்கள் பிற இன மக்களிடமே உள்ளதாகக் கூறப்படுகிறது.

விழிப்புணர்வு

  • பின்னர் பட்டியலின மக்களிடையே நிலவுடைமை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதால் பஞ்சமி நிலங்களை மீட்க போராடத் தொடங்கினர். உச்சகட்டமாக 1994-இல் செங்கல்பட்டில் ஏற்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் இறந்தனர். ஆனாலும், பிரச்னைக்கு விடிவுகாலம் ஏற்படவில்லை.
  • தொடர்ந்து பஞ்சமி நில மீட்புக்காக பட்டியலின மக்கள் நல அமைப்புகளும், சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் போராடி வருகின்றன. பஞ்சமி நிலத்தை மீட்பதற்காக தமிழக அரசு இதுவரையில் 3 முறை குழுக்களை அமைத்த போதிலும் பலன் கிடைக்கவில்லை.
  • கடந்த 100 ஆண்டுகளில் அந்த நிலங்கள் பலருக்கு கைமாறி இருப்பதாலும், தற்போது அந்த நிலங்கள் வீடுகள், கட்டடங்கள், வணிக நிறுவனங்கள், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மையங்கள் எனப் பெரிதும் நிலை மாறி இருப்பதாலும் அவற்றை மீட்பது என்பது அத்தனை எளிதானதாக இருக்கப்போவதில்லை.
  • சட்டத்தின் மூலம் மீட்கலாமே என்றாலும், நீதிமன்றம் செல்வோர், இழப்பீடு கோருவோர் என பெரியதொரு சட்டப் போராட்டம் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி: தினமணி (04-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories