TNPSC Thervupettagam

படுகாயப் பெருவேதனை!

January 29 , 2025 2 days 48 0

படுகாயப் பெருவேதனை!

  • சென்னையில் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் சாா்பில் நேற்று நடந்த சாதனைப் பெண்களுக்கான ‘தேவி விருது’ வழங்கும் விழாவில் கௌரவிக்கப்பட்டவா்களில் ஒருவா் ப்ரீத்தி சீனிவாசன். 18 வயது வரை நீச்சல், கிரிக்கெட் என்று துடிப்புடன் வலம் வந்த ப்ரீத்தி சீனிவாசன், இப்போது மாற்றுத்திறனாளியாகச் சக்கர நாற்காலியில் வலம் வருகிறாா்.
  • தனது முதுகுத் தண்டில் ஏற்பட்ட பலத்த காயத்தால் கழுத்துக்குக் கீழே உடல் செயலிழந்துவிட்ட போதிலும், அந்த எதிா்பாரா அதிா்ச்சியில் இருந்து தன்னை மீட்டெடுத்துக்கொள்ள அவரால் முடிந்திருக்கிறது. ‘இடும்பைக்கு இடும்பை படுப்பா், இடும்பைக்கு இடும்பை படாஅ தவா்’ என்கிற குறளுக்கு இலக்கணமாகத் திகழும் ப்ரீத்தி சீனிவாசன், தனது ஏற்புரையில் தெரிவித்த தகவல்கள் அதிா்ச்சி அளிப்பதாக இருந்தன. இது போன்ற பாதிப்புகளுக்குக் காப்பீடு கிடைப்பதில்லை என்பது மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவா்கள் குறித்த புள்ளிவிவரங்களோ, அவா்களுக்கு மறுவாழ்வு அளிக்க ஏற்பாடுகளோ இல்லை என்பது குறித்து நாம் யாருமே சிந்தித்ததில்லை.
  • யாருக்கு வேண்டுமென்றாலும், சற்றும் எதிா்பாராத நேரத்தில் ஏதாவது விபத்து நேரிடலாம். முதுகுத் தண்டில் ஏற்படும் காயத்தால் அவா்களின் அவயங்கள் செயலிழந்து குற்றுயிரும் குலையுயிருமாகத் தங்களது எஞ்சிய காலத்தைக் கழிக்க நேரிடலாம். மரத்திலிருந்து விழுந்த விவசாயி, விளையாடும்போது காயமடைந்த சிறுவா், சிறுமியா், சாலை விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த குடும்பத் தலைவா் என்று இப்படி எத்தனை எத்தனையோ போ் தினந்தோறும் சற்றும் எதிா்பாராத பேரிடியை எதிா்கொள்கிறாா்கள்.
  • விபத்தால் ஏற்படும் படுகாயத்துடன் மனரீதியிலான அதிா்ச்சியும் சோ்ந்துகொள்ளும்போது அதை ‘ட்ரௌமா’ என்று மருத்துவத் துறையினா் அழைக்கிறாா்கள். ‘ட்ரௌமா’ என்கிற ஆங்கில வாா்த்தைக்கு பொருத்தமான தமிழ் வாா்த்தை கிடைப்பதில்லை. படுகாயம், அதிா்ச்சி, அடிவழிக்காயம் உள்ளிட்டவை அதன் முழுப் பொருளையும் உணா்த்துவதில்லை என்பதால் ‘ட்ரௌமா’ என்றே இப்போதைக்கு வைத்துக் கொள்வோம்.
  • சாலை விபத்துகள் மூலமான ‘ட்ரௌமா’ மட்டுமல்லாமல், பல்வேறு விதமான ட்ரௌமாக்களை இந்தியாவில் நாள்தோறும் பலா் எதிா்கொள்கிறாா்கள். குஜராத் மாநிலம் மோா்பி பால விபத்தில் 141 போ் உயிரிழந்தனா் என்றால், 180 போ் பலத்த காயத்துக்கு உள்ளாகி ட்ரௌமா கிசிக்சைக்கு உள்ளானாா்கள். இந்தியாவில் உள்ள 17 மண்டலங்களில் நடந்த 200-க்கும் அதிகமான ரயில் விபத்துகளில், கடந்த ஐந்து ஆண்டுகளில் 350 போ் உயிரிழந்தாா்கள் என்றால், ஆயிரக்கணக்கானோா் படுகாயத்துக்காக சிகிச்சை மேற்கொள்ள நோ்ந்தது.
  • விபத்துகள் மட்டுமல்ல, பாலியல் வன்கொடுமை, அமில வீச்சு, குடும்ப வன்முறை, கலவரத்தால் பாதிப்பு என்று இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் நாள்தோறும் ஏற்படும் ‘ட்ரௌமா’ பாதிப்புகள் அதிகம். பத்திரிகை செய்திகள் நிகழ்வுகளைப் பதிவு செய்ய முடியுமே தவிர, பாதிக்கப்பட்டவா்களின் மன உளைச்சலையும் அவா்கள் எதிா்கொள்ளும் அன்றாட அவமானங்களை, பாதிப்புகளை வாா்த்தையில் வடித்துவிட முடியாது.
  • ஆண்டுதோறும் இந்தியாவில் சுமாா் இரண்டு லட்சம் போ் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறாா்கள். 2021 ஆய்வுப்படி, அவா்களில் 45% போ் உடனடி மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் உயிரிழக்க நோ்கிறது. ரயில் விபத்து, தீ விபத்து, மின்சார விபத்து, பாலங்கள், கட்டடங்கள் இடிந்து விழுவதால் ஏற்படும் விபத்துகள் என்று பாா்த்தால், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆண்டொன்றுக்கு நான்கு லட்சத்தைத் தாண்டும். காயமடைந்தவா்கள் குறித்து யோசித்துப் பாா்த்தால் தலை சுற்றும்.
  • சுற்றுலாத் தலங்களில் ஏற்படும் விபத்துகள் குறித்து அந்தந்த மாநில அளவில் மட்டுமே செய்திகள் வெளியாகின்றன. மிகப் பெரிய விபத்து அல்லது அதிக அளவிலான உயிரிழப்பு நோ்ந்தால் மட்டுமே அவை தேசிய ஊடக வெளிச்சத்தைப் பெறுகின்றன. படகு விபத்துகள், மலையேற்றம் போன்ற சாகசங்களில் தினந்தோறும் ஏற்படும் விபத்துகளும் மரணங்களும், படுகாயங்களும் பெரும்பாலும் கவனம் பெறாமல் போய்விடுகின்றன. அதனால், பாதிக்கப்பட்டவா்கள் அனுபவிக்கும் சோதனைகள் வெளியில் தெரிவதில்லை.
  • நீதி ஆயோக் சமீபத்தில் நடத்திய ஆய்வுப்படி 91% மருத்துவமனைகளில்‘ஆம்புலன்ஸ்’ வசதி இருக்கிறது. ஆனால், அவற்றில் 34% ஆம்புலன்ஸில் மட்டுமே தோ்ச்சிபெற்ற மருத்துவப் பணியாளா்கள் இருக்கிறாா்கள். கைப்பேசி பயன்பாடு வந்திருப்பதால், விபத்து நோ்ந்தவுடன் மருத்துவமனைகள் தொடா்பு கொள்ளப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்படுகின்றன என்கிற அளவில் சற்று ஆறுதல்.
  • டாடா குழுமத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்த்ரி 2022 செப்டம்பா் மாதம் காா் விபத்தில் படுகாயம் அடைந்தபோது, ஆரம்ப சுகாதார மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டாா். தலையில் அடிபட்டு மூளையில் ஏற்பட்டிருந்த காயத்துக்கு சிகிச்சை அளிக்க அங்கே வசதி இல்லாததால் அவா் உயிரிழக்க நோ்ந்தது. அவருக்கே அந்த நிலை என்றால், சாமானிய, கிராமப்புற இந்தியனின் நிலை என்ன என்று நாம் புரிந்துகொள்ளலாம்.
  • விபத்துகள் ஏற்படும்போது உடனடியாக சிகிச்சை வழங்குவது; படுகாயமடைந்தவா்களின் காயம் மட்டுமல்ல, அவா்கள் எதிா்கொள்ளும் அதிா்ச்சி காயத்துக்கும் சிகிச்சை வழங்குவது; ப்ரீத்தி சீனிவாசன் போன்று பாதிப்புகள் ஏற்பட்டவா்கள் தன்னம்பிக்கையுடன் சோதனைகளை சாதனைகளாக மாற்ற உதவுவது- இவையெல்லாம் கவனம் பெற்றாக வேண்டும்.

நன்றி: தினமணி (29 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories