பட்டாசு ஆலை விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது?
- விருதுநகர் மாவட்டம் பொம்மையாபுரம் பட்டாசு ஆலையில் ஆறு தொழிலாளர்களைப் பலி கொண்டுள்ள வெடிவிபத்து, பட்டாசு ஆலைகளின் அலட்சியப் போக்கு எப்போது முடிவுக்கு வரும் என்கிற பெரும் ஆதங்கத்தை அளிக்கிறது. பட்டாசு உற்பத்தி என்பது தொழிலாளரின் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாத தொழில்தான்.
- ஒரு வேதிப்பொருள் எதிர்பாராத நேரத்தில் தீப்பிடிக்க அதிக வெயிலும் காரணமாகலாம்; மழை, குளிர் காரணமாகக் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதும் காரணமாகலாம். எனினும், அரசு வகுத்துள்ள விதிமுறைகளை ஆலைகள் சமரசமின்றிப் பின்பற்றினால் விபத்துகளை நிச்சயம் குறைக்க முடியும். ஒருவேளை விபத்து ஏற்பட்டால்கூட, அதன் பாதிப்பையோ உயிரிழப்பையோ பல மடங்கு குறைக்க முடியும். ஆனால், ஆலைகள் இதையெல்லாம் முழுமையாகப் பின்பற்றுகின்றனவா என்பது கேள்விக்குறிதான்.
- பொம்மையாபுரம் பட்டாசு ஆலையில் ஜனவரி 4 அன்று சில தொழிலாளர்கள் பேன்சி பட்டாசுகளைச் செய்வதில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேதிப்பொருள்கள் வெடித்ததில், பணியில் இருந்த ஆறு தொழிலாளர்கள் இறந்தனர். 21 வயது ஊழியர் ஒருவர் படுகாயமடைந்தார். வேதிப்பொருளைத் தொழிலாளர்கள் எடை போடும்போது உராய்வு ஏற்பட்டு வெடித்திருக்கலாம் எனக் காவல் துறை முதல் கட்டமாகக் கூறியுள்ளது.
- ஆலை செயல்பட்டுவந்த கட்டிடத்தின் மூன்று அறைகள் இந்த விபத்தில் தரைமட்டமாகின. கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட ஆறு பேரும் இறந்துவிட்டனர். ஆலையின் உரிமையாளர், ஃபோர்மேன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் நிவாரணத் தொகையாக 4 லட்ச ரூபாயும் காயமடைந்தவருக்கு 1 லட்ச ரூபாயும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பண்டிகை, திருமணம், கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட கொண்டாட்ட நிகழ்வுகளிலும் இறுதி ஊர்வலங்களிலும் பட்டாசு வெடிப்பது தவிர்க்க முடியாத அங்கமாகவே உள்ளது. பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காகப் பட்டாசு உற்பத்தித் துறையின் மீது கடும் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான தேவை இருப்பினும், மத்திய, மாநில ஆட்சியாளர்கள் இதில் தீவிரம் காட்டுவதில்லை.
- பட்டாசு உற்பத்தியால் வேலைவாய்ப்புப் பெறும் தொழிலாளர்கள், மகிழ்ச்சிக்கும் துயரத்துக்கும் பட்டாசு கொளுத்திப் பழக்கப்பட்டுவிட்ட மக்கள் ஆகியோருக்காக ஆலைகளின் விதிமீறல்கள் பொறுத்துக்கொள்ளப்படுகின்றன என்றே கூறலாம். இந்தச் சூழலைப் பட்டாசு ஆலைகள் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
- தொழிலாளர் பாதுகாப்பை உறுதிசெய்வதில் ஆலை உரிமையாளர்கள் தங்கள் முழுக் கவனத்தைச் செலுத்த வேண்டும். ஆலை உரிமையாளர்களுக்கான நலச் சங்கங்கள் கூடுதல் பொறுப்பு எடுத்துக்கொள்வதும் தேவைப்படுகிறது. பாதிக்கப்பட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு சட்டப்படியான இழப்பீட்டைச் சங்கங்கள் பெற்றுத் தர வேண்டும்.
- தொழிலாளர்களுக்கு இலக்கு நிர்ணயித்துக் குறைந்த கால அளவில் அதிக அளவில் பட்டாசு உற்பத்தியில் பங்கெடுக்க வைப்பதும் வெடிவிபத்துக்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. மத்திய அரசின் பெட்ரோலியப் பொருள்கள் - வெடிபொருள்கள் பாதுகாப்புத் துறையின் (பெசோ) கீழ் பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றன.
- தமிழக அரசின் வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை, காவல் துறை, தொழிலகப் பாதுகாப்புத் துறை போன்றவையும் பட்டாசு ஆலைகளில் தம் துறைசார்ந்து கண்காணிக்கின்றன. சக மனிதர்களின் உயிரைப் பறிக்கும் ஒவ்வொரு விபத்தும் இத்தனை துறைகளின் மீதான மக்களின் நம்பிக்கையையும் சேர்த்தே பறிக்கும் என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது.
நன்றி: இந்து தமிழ் திசை (09 – 01 – 2025)