- உலகளவிலான பட்டினிக் குறியீட்டில் இந்தியா 101-வது நாடாக வரிசைப் படுத்தப் பட்டிருப்பதை மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஏற்றுக்கொள்ளவில்லை.
- பட்டினிக் குறியீடு போதுமான கள நிலவரங்களையும் தரவுகளையும் கொண்டிருக்க வில்லை என்பதோடு, அதன் ஆய்வு முறைமைகளும் அறிவியல் பூர்வமானதாக இல்லை என்று மறுப்புத் தெரிவித்துள்ளது.
- கடந்த ஆண்டு பட்டினிக் குறியீட்டில் இடம்பெற்ற 107 நாடுகளில் இந்தியா 94-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு 116 நாடுகளில் 101-வது இடத்துக்குச் சரிந்துள்ளது.
- மக்கள்தொகையில் சத்தான உணவு கிடைக்கப்பெறாதவர்களின் விகிதாச்சாரம் குறித்த, உணவு மற்றும் விவசாய அமைப்பின் (எஃப்.எ.ஓ.) மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்தப் பட்டினிக் குறியீடுகள் அமைந்துள்ளன என்றும், இந்த அறிக்கையை வெளியிட்ட சர்வதேச அமைப்புகளான ‘கன்சர்ன் வேர்ல்ட்வைட்’, ‘வெல்ட்ஹங்கர்லைஃப்’ ஆகியவை தங்களது ஆய்வை முறையாகச் செய்யவில்லை என்றும் மத்திய அமைச்சகம் கருத்துத் தெரிவித்துள்ளது.
- ஐநா அவையின் சிறப்பு முகமைகளில் ஒன்றான உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலகம் முழுவதும் பட்டினியை ஒழிக்கவும் சத்துணவு மற்றும் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும் செயல்பட்டுவரும் அமைப்பாகும்.
- உணவுப் பாதுகாப்பு தொடர்பாக உலகளாவிய ஆய்வுகளை ஏறக்குறைய 75 ஆண்டுகளாக நடத்திவரும் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆய்வுகள் அறிவியல்பூர்வமானவை அல்ல என்ற இந்தியாவின் கருத்து பெரும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.
- சத்துணவுக் குறைபாட்டை அளவிடுவதற்கு உயரம், உடல் எடை முதலான அளவீடுகளைக் கணக்கில் கொள்வதே அறிவியல்பூர்வமானதாக இருக்க முடியும்; ஆனால், தொலைபேசி வழியாகக் கேள்விகளைக் கேட்டு அவற்றின் அடிப்படையில் அறிக்கை வெளியிடப் பட்டுள்ளதாகக் குறை கூறியுள்ளது, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்.
- கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவின் மக்கள்தொகை முழுமைக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்திட மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டினிக் குறியீட்டு அறிக்கை கவனத்தில் கொள்ளாததைச் சுட்டிக் காட்டியிருக்கும் அமைச்சகம், அது குறித்த அனைத்துத் தரவுகளும் பார்வைக்குக் கிடைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
- ஏற்கெனவே ஜனநாயகக் குறியீட்டில் இந்தியாவின் இடம் குறித்த கேள்வியும் இதே விதமாகத்தான் எதிர்கொள்ளப்பட்டுவருகிறது.
- ஜனநாயகக் குறியீட்டு அறிக்கையை ஆண்டுதோறும் வெளியிட்டுவரும் லண்டனைச் சேர்ந்த எகானமிஸ்ட் நுண்ணறிவு அலகு (இஐயூ) அமைப்பு, தனது முடிவுகளை எவ்வாறு வந்தடைகிறது என்ற விவரங்கள் வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை என்பதும் அரசு அமைப்புகளைக் கலந்தாலோசிக்காமலேயே அந்த முடிவுக்கு வருகிறது என்பதும் இந்தியாவின் பார்வையாக உள்ளது.
- பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியா போன்ற மிகுந்த மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில் எத்தகைய பொருளாதாரச் சரிவுகள் ஏற்படும் என்பதும் புரிந்து கொள்ளக் கூடியது தான். அதன் தொடர்ச்சிதான் பட்டினிக் குறியீட்டுக்கான தற்போதைய எதிர்வினையும்.
- உலகத்தின் பார்வையில் இந்தியாவின் மதிப்பு குறைந்துவிடக் கூடாது என்பது என்னவோ சரிதான்.
- அதே நேரத்தில், மொத்த மக்கள்தொகையில் உணவுப் பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பவர்களின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் உணவு மானியங்களைக் குறைக்க வேண்டும் என்பது போன்ற நிதி ஆயோக் பரிந்துரைகளை மத்திய அரசு மக்களின் மீதான பரிவுணர்ச்சியோடு பரிசீலிக்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (21 - 10 - 2021)