TNPSC Thervupettagam

பட்டியலால் பயனில்லை

October 12 , 2023 443 days 293 0
  • நமது குடும்பத்தில் உள்ளவர்களின் பிறந்த நாட்களை நாம் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கொண்டாடி வருகின்றோம். அது போன்றதொரு சடங்கினை யூஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவும் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்த்தி வருகிறது. நமது நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் உரிய அங்கீகாரமின்றி சட்டவிரோதமாக இயங்கும் போலிப் பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிடும் சடங்குதான் அது.
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள பட்டியலில் அங்கீகாரமின்றிச் செயல்படும் இருபது கல்வி நிறுவனங்கள் குறித்த விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
  • ஆந்திர பிரதேசத்தில் இரண்டு, தலைநகர் தில்லியில் எட்டு, கர்நாடகத்தில் ஒன்று, கேரளத்தில் ஒன்று, மகாராஷ்டிரத்தில் ஒன்று, உத்தர பிரதேசத்தில் நான்கு, புதுச்சேரியில் ஒன்று, மேற்கு வங்கத்தில் இரண்டு என மொத்தம் இருபது போலிப் பல்கலைக்கழகங்கள் இயங்கிவருவதாக அப்பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இத்தகைய போலிப் பல்கலைக்கழகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட மாநிலங்களின் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர்களுக்குக் கடிதம் அனுப்பபட்டுள்ளது. இதுதவிர, மேற்கண்ட கல்வி நிறுவனங்களின் துணைவேந்தர்களுக்குப் பல்கலைக்கழக மானியக்குழுவின் செயலர் மணீஷ் ஜோஷி கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
  • "தங்களின் கல்வி நிறுவனம் போலிப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன். மேலும், தங்களின் மோசடியான நடவடிக்கைகளுக்கு அப்பாவி மாணவர்கள் பலியாகி வருவதால், இது ஒரு கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது' என்று அந்தக்கடிதத்தில் மணீஷ் ஜோஷி தெரிவித்திருக்கிறார்.
  • சென்ற சில ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இதுபோன்ற பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த சில போலிப் பல்கலைக்கழகங்களும் இடம்பெற்றிருந்தன. இந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் அப்படி எதுவும் இல்லை என்பதால் நமது மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும், பெற்றோர்களும் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.
  • நமது நட்டில் போலிப் பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன என்ற செய்தியைக் கேள்விப்பட்டு நாமெல்லாம் அதிர்ச்சி அடைந்த காலம் மாறி, இதெல்லாம் ஒரு செய்தியா என்று சலனமின்றிக் கடந்து செல்லும் நிலைமை உருவாகிவிட்டதாகவே தோன்றுகின்றது.
  • முன்பெல்லாம் கல்லூரிக்குச் சென்று படித்துப் பட்டம் பெறுவது என்பது மிகவும் கெளரவமான விஷயமாக இருந்தது. குடும்பத்தில் ஒருவர் பட்டதாரியாவது என்பதே பெரிய விஷயமாகக் கருதப்பட்டது. அவ்வாறு பெறுகின்ற பட்டமானது எந்தப் பல்லைக்கழகத்தினால் வழங்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே அது மதிப்பைப் பெறுகிறது.
  • சென்னைப் பல்கலைக்கழகம், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கென்று பாரம்பரியம் உண்டு. அவற்றின் பெயரில் வழங்கப்படும் பட்டங்களுக்கு சமூகத்தில் தனி மரியாதையும் உண்டு.
  • நமது நாட்டின் பிற மாநிலங்களிலும் இவை போன்று மதிப்பும் பாரம்பரியமும் மிகுந்த பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இவ்வளவு ஏன், சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை தொடங்கிய அஞ்சல்வழிக் கல்வித் திட்டத்தில் பெறுகின்ற பட்டங்கள்கூட கல்லூரிகளில் சேர்ந்து நேர்முகமாகப் படித்துப் பெறுகின்ற பட்டங்களுக்கு நிகராக மதிக்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது.
  • பட்டப்படிப்பில் சேருவது என்பது ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவில் ஆழ்ந்த ஞானத்தைப் பெறுவதற்குப் பயன்படவேண்டும். ஆனால், காலப்போக்கில் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் வேலையைப் பெறுவதற்கான அடிப்படைத் தகுதியாக மட்டுமே அது மாறிப்போனது.
  • பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப, கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தங்களுடைய மாணவர்களைப் பயிற்றுவிப்பதற்கான கல்வித் திட்டங்களையும், அவற்றுக்கேற்ற கட்டணங்களையும் தாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையும் அதிகமாயிற்று.
  • எவ்விதம் அரசுப் பல்கலைக்கழகங்கள் பல இருந்தாலும் அவற்றில் ஒருசில பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களுக்கு மட்டுமே அதிக மதிப்பு இருக்கிறதோ, அவ்விதமே நம் நாட்டிலுள்ள தனியார் பல்கலைக்கழகங்களுக்குள் ஒருசிலவற்றின் பட்டங்களுக்கு மட்டுமே மதிப்பு இருக்கிறது. ஏனைய தனியார் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களை வெறும் அச்சடித்த காகிதங்களாக மட்டுமே கருத இயலும்.
  • அரசுப் பணிகளுக்கான வாய்ப்புகள் சுருங்கி, தனியார் நிறுவனங்கள் வழங்கும் வேலைவாய்ப்புகளையே இன்றைய இளைய தலைமுறையினர் பெருமளவு நம்பியிருக்கின்றனர். அத்தகைய நிறுவனங்கள் தாங்கள் தரமான கல்வி நிறுவனங்களாகக் கருதுகின்ற பல்கலைக்கழகங்களிலிருந்து பெற்ற பட்டங்களையே பணியாளர்களுக்கான அடிப்படைத் தகுதியாகக் கொள்கின்றன.
  • நேர்முகக் கல்வி மூலம் பட்டம் பெற்றவர்களையும், அஞ்சல் வழிக் கல்வி மூலம் பட்டம் பெற்றவர்களையும் அந்நிறுவனங்கள் சமமாகக் கருதாத நிலை உள்ளது. இந்நிலையில் போலியாக இயங்கும் பல்கலைக்கழகங்களின் விளம்பரக் கவர்ச்சியில் மயங்கி, பெரும் பொருட்செலவு செய்து பயிலும் மாணவர்கள் கதி என்னாவது? இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தையே வீணாக்கும் இத்தகைய போலிப் பல்கலைக்கழகங்களை அதிரடியாக இழுத்து மூடுவதுதானே சரியாக இருக்க முடியும்?
  • அதைவிடுத்து, ஆண்டுதோறும் போலிப் பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிடுவதாலும், அவற்றின் துணைவேந்தர்களுக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருப்பதாலும் யாருக்கு என்ன லாபம்? எத்தனையோஅதிரடிகளைச் செய்யும் நமது மத்திய அரசு ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்தாவது இத்தகைய போலிப் பல்கலைக்கழகங்களின் இயக்கத்தை நிறுத்தி, இளைய தலைமுறையினரைக் காக்க முன்வர வேண்டும்.

நன்றி: தினமணி (12 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories