- உலகின் பணக்கார நாடுகளில், கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கும் குடியேற்றங்கள் தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கை (International Migration Outlook: 2023) பல முக்கியத் தகவல்களை வெளிப்படுத்தியிருக்கிறது. பொருளாதார ஒத்துழைப்பு-மேம்பாட்டுக்கான அமைப்பில் (ஓஇசிடி) அங்கம் வகிக்கும் பணக்கார நாடுகளின் குடியேற்றங்கள் குறித்த இந்த அறிக்கையில், இந்தியாதான் முதன்மை இடத்தைப் பிடித்திருக்கிறது. 38 நாடுகள் அங்கம் வகிக்கும் ஓஇசிடி அமைப்பில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் செல்வவளம் மிக்கவை.
- கல்வி, பணிவாய்ப்பு உள்ளிட்டவற்றுக் காகப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்நாடுகளில் குடியேறுகின்றனர். 2021இல் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 28 லட்சம் பேர் இந்நாடுகளில் குடியேறியிருக்கின்றனர். இதில், இந்தியாவுக்குத்தான் முதலிடம் (4 லட்சம் பேர்). 2020இல் 2.20 லட்சம் இந்தியர்கள் இந்நாடுகளில் குடியேறியதை ஒப்பிடும்போது இது 85% அதிகம். சர்வதேச நாடுகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் சீனாவுக்கே, இதில் இரண்டாம் இடம்தான் (2.3 லட்சம் பேர்).
- மேற்சொன்ன நாடுகளில் நிரந்தரக் குடியுரிமையைப் பெறுவதிலும் இந்தியர்கள்தான் முன்னிலையில் (1.33 லட்சம் பேர்) இருக்கிறார்கள். சுவாரசியமான இன்னொரு அம்சம், 2022இல் அதிகளவு குடியேற்றங்களைக் கண்ட நாடு கனடா என்பதுதான். மொத்தம் 3.75 லட்சம் வெளிநாட்டினர் அங்கு குடியேறியிருக்கின்றனர்; 2021ஐ ஒப்பிட இது 174% அதிகம். இந்தியர்கள்தான் இதில் முதல் இடம் (60,000 பேர்) என்பதுதான் கவனத்துக்குரிய விஷயம். காலிஸ்தான்
- விவகாரம் தொடர்பாக கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே சமீபகாலமாகக் கசப்புணர்வு நிலவிவரும் நிலையில், இந்தியர்கள் பெருமளவில் கனடாவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்பது கவனத்துக்குரியது. மேலும், கனடா வழியே சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருவதாக அமெரிக்கச் சுங்க-எல்லைப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
- குறிப்பாக, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான மோதல் உச்சத்தில் இருந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் கனடாவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த 8,076 இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இந்தியர்கள் வெளிநாடுகளில் குடியேறுவது புதிதல்ல. இன்றைய தேதியில் 1.8 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.
- வெளிநாடுகளில் குடியேறியவர்கள் சொந்த நாட்டுக்குப் பணம் அனுப்பும் விஷயத்திலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 2022இல் மட்டும் இதன் மூலம் ரூ.9.2 லட்சம் கோடி இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது; இது இந்தியாவின் ஜிடிபி-யில் 3%. அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிக சம்பளத்தில் பணிபுரிபவர்கள் இதில் கணிசமாகப் பங்காற்றியிருப்பதாகச் சொல்கிறது உலக வங்கி. இவையெல்லாம் சாதகமான அம்சங்கள்.
- மறுபுறம், வெளிநாடுகளில் குடியுரிமை பெறுவதில் இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டுவது ஏன் என்றும் கேள்விகள் எழுந்திருக்கின்றன. உயர் கல்வி பெறுவது, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்வது போன்ற அடிப்படைக் காரணிகளைத் தாண்டி, வேலைவாய்ப்பின்மை, சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பு போன்றவை எதிர்மறைக் காரணிகளாக முன்வைக்கப்படுகின்றன.
- உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக உருவெடுத்திருக்கும் இந்தியா, தனது அபரிமிதமான மனிதவளத்தைத் தக்கவைத்துக்கொள்வது அவசியம். உள்நாட்டிலேயே உயர்தரமான கல்வி, அதிகச் சம்பளம் அளிக்கவல்ல பணி வாய்ப்புகள், சுற்றுச்சூழல் மேம்பாடு போன்றவற்றுக்கு உத்தரவாதம் அளித்தால், இந்தப் போக்கை மாற்ற முடியும்.
நன்றி: இந்து தமிழ் திசை (26 - 10 – 2023)