TNPSC Thervupettagam

பணப்புழக்கமும் பணவீக்கமும்!

October 14 , 2021 1139 days 636 0
  • உலகமயமாக்கல் என்ற பொருளாதார சித்தாந்த வலைக்குள் உலக நாடுகள், தற்போது சுழன்று கொண்டிருக்கின்றன.
  • இந்த சித்தாந்தத்தின் நேரடி விளைவாக, உலகின் ஏதாவது ஒரு பகுதியில் நிகழும் பொருளாதார நிகழ்வு, மற்ற பகுதிகளில் அதிர்வலைகளை தோற்றுவிக்கும் தூண்டு கோலாக செயல்படுகிறது.
  • உதாரணமாக, 2008-09 ஆண்டுகளில், "லெஹ்மன் பிரதர்ஸ்' என்ற அமெரிக்க முதலீட்டு நிறுவனம் திவால் ஆன விவகாரத்தால், அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் ஆட்டம் கண்டது.
  • அந்த ஆட்டம் அடங்கி மீண்டும் இயல்பு நிலைக்கு வருவதற்கு சுமார் ஐந்தாண்டு ஆனது.
  • இந்தச் சூழ்நிலையில், உலகின் எங்கோ ஒரு மூலையில் நடந்தேறும் ஒவ்வொரு பொருளாதார நிகழ்வும், ஒவ்வொரு சாதாரண குடிமகனையும் பாதிக்கும் வல்லமை படைத்தது என்பதால், அத்தகைய நிகழ்வுகளைப் பற்றிய அடிப்படை விவரங்களை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
  • அது போன்ற விவரங்கள் மூலம், ஒரு குறிப்பிட்ட நிகழ்வு, நம்முடைய தனிப்பட்ட பொருளாதாரத்தில் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஓரளவு கணித்து, அதற்கேற்றபடி நாம் நமது வரவு - செலவுகளைத் திட்டமிடலாம்.

கச்சா எண்ணெய்யின் விலை ஏற்றம்

  • நம் அன்றாட வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் விலை, அவற்றின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யின் விலையைச் சார்ந்துள்ளது.
  • அதே சமயத்தில், கச்சா எண்ணெய்யின் விலை, கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் (ஓபிஈசி) நாடுகளின் உற்பத்தித் திறன், விலையை உயர்த்தி பிடிப்பதற்கான வியாபார உத்திகள், போர்ச்சூழல், ஈரான் போன்ற நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகள், பருவநிலை மாற்றங்கள், இயற்கைச் சீற்றங்கள் போன்ற சர்வதேச காரணிகளைச் சார்ந்துள்ளது.
  • இது போன்ற பொது காரணிகளைத் தவிர, எரிபொருளுக்கான தேவை சார்ந்த மாறுபாடுகளும், விலை நிர்ணயத்தில் ஒரு சிறப்புக் காரணியாக அமைகிறது எனலாம். மேலும், தேவைக்கான அளவுகோல், உலகப் பொருளாதார இயக்கத்தின் வேகத்தை சார்ந்துள்ளது.
  • இந்த வேகத்தில் அவ்வப்போது நிகழும் இயற்கைச் சீற்றங்களும், பொருளாதாரத் தடைகளும் கச்சா எண்ணெய்யின் விலையைப் பெருமளவு பாதிக்கின்றன.
  • எனவே, எரிபொருளை வாகனத்தில் நிரப்பும் தருணத்தில், மேலே குறிப்பிட்டவற்றில், ஏதாவது சில காரணிகள் நமக்கு சாதகமாகவோ பாதகமாகவோ செயல்பட வாய்ப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
  • உதாரணமாக, உலகப் பொருளாதார நடவடிக்கைகள் சீராக இருந்த காலகட்டத்தில், (2008 ஜூலை) பீப்பாய்க்கு 147 அமெரிக்க டாலர் என்ற உச்சத்தைத் தொட்ட கச்சா எண்ணெய்யின் விலை, அதற்கு பிறகு பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துப் பயணித்திருக்கிறது.
  • கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலால் ஏற்பட்ட பொருளாதார முடக்கத்தால், எரிபொருள்களுக்கான தேவை பாதிக்கப்பட்டது.
  • அந்தக் காலகட்டத்தில், (2020 ஏப்ரல்) "வெஸ்ட் டெக்ஸாஸ் இன்டர்மீடியட்' என்று அழைக்கப்படும் வணிக குறியீட்டின்படி, கச்சா எண்ணெய்யின் விலை அதலபாதாளத்தில் விழுந்து, பூஜ்ய நிலையை தொட்டது, எரிபொருள் விலை வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
  • 2021 ஜனவரி முதல், தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த பிறகு, உலகப் பொருளாதாரம் மீண்டு எழத் தொடங்கியதும், கச்சா எண்ணெய்யின் தேவை அதிகரிக்க ஆரம்பித்தது.
  • அதனால், அதன் விலைக் குறியீடு மேல் நோக்கி நகர ஆரம்பித்து, கடந்த மாத இறுதியில், பீப்பாய்க்கு 80 அமெரிக்க டாலர் என்ற அளவைத் தொட்டது.
  • சமீபத்தில், அமெரிக்கா, மெக்ஸிகோ போன்ற நாடுகளில், "இடா' புயல் என்ற இயற்கைச் சீற்றம், எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களின் கட்டமைப்பை பாதித்ததால், அவற்றின் உற்பத்தித் திறன் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
  • இந்த நிகழ்வு, கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டிற்கு வழிவகுத்து, விரைவில் அதன் விலையை நூறு டாலர் வரை மேல் நோக்கி நகர்த்திவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இதனால், எரிபொருள்களின் தொடர் விலையேற்றத்தையும், அதன் விளைவாக, பொருள்களின் விலையேற்றத்தையும் விரைவில் சந்திக்க நாம் தயாராக வேண்டும்.
  • கச்சா எண்ணெய்யின் சர்வதேச விலை இறக்க தருணங்களில், உள்நாட்டு வரி ஏற்றத்தின் மூலம் அதன் முழுப் பலனை பொதுமக்களுக்கு அளிப்பதைத் தவிர்த்த நமது மத்திய - மாநில அரசுகள், விலை
  • ஏற்றத்தின்போதாவது, வரிகளைக் குறைத்து மக்களின் சுமையை குறைக்க முற்பட வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாகும்.
  • கச்சா எண்ணெய்யின் விலை ஏற்றத்திற்கு வித்திட்ட உலகப் பொருளாதார மீட்சி, அத்துடன் மேலும் பல தொடர் நிகழ்வுகளுக்கும் வித்திட்டு வருவதை நாம் கவனிக்க வேண்டும்.
  • அவற்றில் முக்கியமான ஒன்று, உலக நாடுகள் அறிமுகப்படுத்திய பொருளாதார ஊக்க நடவடிக்கைகளை சார்ந்தது.

ஊக்க நடவடிக்கை

  • நோய்த்தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார இறக்கத்தைத் தூக்கி நிறுத்த, அமெரிக்கா, ஐரோப்போ போன்ற மேலை நாடுகள், பெரும் அளவிளான பொருளாதார ஊக்க நடவடிக்கைகளை (ஸ்முலஸ் பேக்கேஜ்) அறிமுகப்படுத்தின.
  • பொருளாதார சுணக்கம் (ரெஸிஷன்) என்ற நோய்க்கான மருந்தாக அது கருதப்பட்டது.
  • நலிவடையும் தொழில்களுக்கான நிதி உதவி, வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டித்தல், கடனுக்கான வட்டிக் குறைப்பு, வரி குறைப்பு அல்லது வரி தள்ளுபடி, குடும்பப் பராமரிப்பு நிதியுதவி போன்ற பொருளாதார நடவடிக்கைகள் இதில் அடங்கும்.
  • உதாரணமாக, கொள்ளை நோய்த்தொற்றால் பெருமளவில் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில், சுமார் 30 லட்சம் கோடி டாலர் அளவிலான ஊக்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப் பட்டன.
  • சந்தையில் பெருமளவில் கடன் பத்திரங்களை வாங்கி, அதன் மூலம் பணப் புழக்கத்தை அதிகப்படுத்துவது இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
  • நோய்த்தொற்றுக் காலத்தில், கடன்களுக்கான வட்டி விகிதத்தை "பூஜ்யம்' என்ற நிலைக்குள் கொண்டு வந்து நிலை நிறுத்தியது, அமெரிக்க ரிசர்வ் வங்கியால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார ஊக்க நடவடிக்கைகளில் முக்கியமானது.
  • பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையால், நோய்த்தொற்றுப் பரவல் குறைந்து, பொருளாதாரம் மீண்டு எழுந்துகொண்டிருக்கும் நிலையில், பொருளாதார ஊக்க நடவடிக்கைகளால், பல மடங்கு அதிகரித்த பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்ற கருத்து பொருளாதார நிபுணர்களிடையே பரவி வருகிறது.
  • அபரிமிதமான பணப் புழக்கம் "பண வீக்கம்' என்ற பூதம் கிளம்புவதற்கு வழி வகுத்துவிடும் என்ற அச்சம்தான் அதற்கு காரணம்.
  • சுருங்கச் சொன்னால், பொருளாதார ஊக்க நடவடிக்கைகளைப் படிப்படியாகத் திரும்பப் பெறுவதற்கான விவாதங்கள் தொடங்கிவிட்டன எனலாம்.
  • சந்தையில் கொள்முதல் செய்யப்பட்ட கடன் பத்திரங்களை விற்பனை செய்வதும் கடனுக்கான வட்டி விகிதங்களை அதிகரிப்பதும் தற்போதைய விவாதங்களின் கருப்பொருள்களாக உள்ளன என்பது குறிப்பிட்டத்தக்கது.
  • இதன் விளைவாக, ஊக்க நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்பட்ட பணப்புழக்க மேடுகள் படிப்படியாகக் கரைக்கப்பட்டு, அமெரிக்காவில் தோன்றி, உலக பொருளாதார சந்தைகளில் உலவிக் கொண்டிருக்கும் அதிகப்படியான பணம் (எக்ùஸஸ் லிக்யூடிடி) உறிஞ்சி எடுக்கப்படும்.
  • இந்த நடவடிக்கைகளால், "இடைக்கால பண உலா'வின் பலன்களை, இதுவரை அனுபவித்து வந்த நாடுகளில் இனி பண வறட்சி ஏற்படக்கூடும்.
  • அந்நிய முதலீடுகள் திடீரென்று குறையும்போது, பங்குச் சந்தை போன்ற முதலீட்டுத் தளங்களில், அந்த வறட்சியின் பாதிப்பு தெரிய ஆரம்பிக்கும்.
  • உதாரணமாக, விலை மேன்மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பில் உலா காலத்தில் வாங்கப்பட்ட பங்குகளின் விலை பல மடங்கு குறையும் வாய்ப்புகள் உருவாகும்.

தாரக மந்திரமாகும்

  • 2012-13 ஆண்டுகளில், அமெரிக்க அரசாங்கம், பொருளாதார ஊக்க நடவடிக்கைகளை விலக்கிய போது அரங்கேறிய இது போன்ற நிகழ்வுகள் நம் நினைவில், இன்றும் பசுமையாக நிற்கின்றன.
  • இதனால், ஏராளமான சிறு முதலீட்டாளர்கள், தங்கள் வாழ்நாள் சேமிப்புகளை இழந்து நின்றார்கள் என்பது சரித்திரம்.
  • கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், இந்தியா உள்பட அனைத்து உலக நாடுகளும், அதிர்வு அலைகளைக் கட்டுப்படுத்தத் தேவையான பொருளாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • அமெரிக்காவைப் பின்பற்றி, இந்தியா உள்ளிட்ட வேறு சில நாடுகளும், கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்கும் காலகட்டத்தை நெருங்கி கொண்டிருக்கின்றன.
  • வங்கிக் கடனுக்கான வட்டி விகிதத்தில், வளர்பிறைக் காலம் தொடங்குவதற்கு முன்பு, குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் போன்ற அத்தியாவசிய கடன் திட்டங்களில் நுழையும் கடைசி வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய நேரம் இது.
  • மிதக்கும் வட்டி (ஃபுளோட்டிங் இன்ட்ரெஸ்ட்) திட்டத்தின் கீழ் இருக்கும் பயனாளிகள், வங்கிகளை கலந்து ஆலோசித்து, நிலைத்த வட்டி (ஃபிக்ஸட் இன்ட்ரெஸ்ட்) திட்டத்திற்கு மாறினால், உயரக் காத்திருக்கும் வட்டியின் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம்.
  • வருமுன் காப்போம் - இது தற்போதைய பொருளாதாரச் சூழலில் அனைவரும் பின்பற்ற வேண்டிய தாரக மந்திரமாகும்!

நன்றி: தினமணி  (14 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories