TNPSC Thervupettagam

பணவீக்கம் எனும் அபாய அறிகுறி

July 20 , 2020 1646 days 850 0
  • இந்தியப் பொருளாதாரத்தையும் மக்களின் அன்றாடத்தையும் கரோனா சூறை யாடிக்கொண்டிருக்கும் நேரத்தில், பயந்ததுபோலவே பணவீக்க நெருக்கடியும் சேர்ந்துகொள்கிறது.

  • நாடு தழுவிய பொது முடக்கத்தின் காரணமாகப் பொருட்கள், சேவைகள் கிடைப்பதில் பெரும் இடையூறு ஏற்பட்டிருப்பதால் விலையேற்றம் நிகழ்ந்திருக்கிறது. தேவை குறைந்திருக்கும் நேரத்தில் இப்படி விலையேற்றம் நிகழ்வதுதான் கவலையளிக்கிறது.

  • நுகர்வோர் விலைப் பட்டிய’லைக் கூர்ந்து கவனித்துப் பார்த்தால், உணவு மற்றும் பானங்கள் வகைகளில் ஒவ்வொரு ஆண்டும் 7.3% விலையேற்றம் ஏற்படுவதைக் காண முடியும்.

  • இவற்றில் தற்போது பருப்புகள் உள்ளிட்ட புரத ஆதார உணவுப் பொருட்களின் விலை 16.7% அதிகரித்திருக்கிறது; இறைச்சி, மீன் ஆகியவற்றின் விலை 16.2%, பால் மற்றும் பால் பொருட்களின் விலை 8.4% அதிகரித்திருக்கிறது.

  • உணவு வகைகளில் விலையேற்றம் இன்னும் வேகமாக இருந்திருக்கும்; ஆனால் காய்கறிகள், பழங்களின் உற்பத்தியாளர்கள் அவற்றை அவசர அவசரமாகக் குறைந்த விலைக்கு விற்றதால் விலை சற்றே மட்டுப்பட்டது.

  • பெட்ரோல், டீசல் செலவு உட்பட போக்குவரத்துச் செலவு போன்றவற்றாலும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் 7.1% அதிகரித்திருக்கிறது. ஆகவே, உணவுப் பொருள் விலை குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாகவே தெரியவில்லை.

  • ஜூன் மாதத்தில் பருவமழை நன்றாகப் பெய்திருப்பது சற்றே நம்பிக்கையைத் தருகிறது.

  • இதேபோல் முக்கியமான வேளாண் மண்டலங்களில் போதுமான அளவு மழை பெய்தால் நல்ல விளைச்சலும், அதனால் உணவுப் பொருட்களில் விலையிறக்கமும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

  • இருந்தும், காய்கறிகள் விலை அதிகரித்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், குறைவான தேவையே இருப்பதால் பொருட்கள், சேவைகள் ஆகியவற்றை விநியோகிப்பவர்கள் தங்கள் தொழிலைப் பாதுகாத்துக்கொள்வதற்கான வழிமுறைகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

  • எஃகு நிறுவனங்கள் சமீபத்தில் விலையை அதிகரிப்பதாக அறிவித்தன. இதற்கு இரும்புப் பாளங்கள் தொடர்பான விலை அதிகரிப்பும் கரோனாவும்தான் பிரதான காரணங்கள்.

  • ஆய்வு நிறுவனமான ஐ.எச்.எஸ். மார்க்கிட் நடத்திய ‘இந்தியா பிஸினஸ் அவுட்லுக்’ கணக்கெடுப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அந்த நிறுவனம் கடந்த 11 ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் கணக்கெடுப்பு நடத்திவருகிறது.

  • முதன்முறையாக, எல்லோருக்கும் நம்பிக்கை கடுமையாகக் குறைந்திருப்பதாக ஒரு மோசமான சித்திரத்தை முன்வைக்கிறது.

  • கேட்பு குறைந்திருப்பதால் பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், அவர்களின் தயாரிப்புகள், சேவைகளின் விலையை அதிகரிக்கும் திட்டத்தில் இருப்பதாக இந்தக் கணக்கெடுப்பு பதிவுசெய்கிறது.

  • மிகவும் இக்கட்டான கட்டத்தில் இந்தியப் பொருளாதாரம் இருக்கும் இந்த நிலையில், மத்திய அரசும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் எடுக்கும் முடிவுகள் ஒவ்வொன்றும் மக்களின் நம்பிக்கையையும் தொழில் துறையினர், விவசாயிகள், வணிகர்கள் நம்பிக்கையையும் பெறக்கூடிய வகையில் இருப்பது அவசியம்.

நன்றி: தி இந்து (20-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories