- மொழி என்பது நமது கருத்துகளை அடுத்தவா்களோடு பரிமாறிக்கொள்ள உதவும் ஊடகம். மொழி ஆற்றும் சேவையை வேறு சில வகைகளிலும் பெற இயலும். குழந்தைகள் தமது அழுகையின் மூலம் தமது தேவைகளை நிறைவு செய்துகொள்கின்றனா். மொழிகளில் எழுத்து மொழி, பேச்சுமொழி என்று இரண்டு வகை உண்டு. அனைத்து இடங்களிலும் மொழியின் பயன்பாடு ஒரே மாதிரியாய் இருப்பதில்லை. இணைய உலகில் மொழிப்பயன்பாடு சிக்கனமானதாகவும் நெகிழ்வானதாகவும் மாறிவருகிறது.
- மொழி ஆற்றும் சேவைகளில் தகவல் பரிமாற்றம் மிகவும் முக்கியமானது. அறிமுகமான நபா்களுக்கிடையே மிகக்குறைவான வார்த்தைகளில் கூட பரிமாற்றம் நிகழ்ந்துவிடுகிறது. சில நேரங்களில் சைகைகளில் கூட பரிமாற்றம் நடைபெற்று முடிந்துவிடுகிறது. குடும்பத் தலைவா் ஒருவா் வெளியே புறப்படுகிறார். அந்த நேரம் பார்த்து மழை தூறத் தொடங்குகிறது. வெளியே சென்றவா் உள்ளே திரும்பி தமது கையை நீட்டியவுடன் குடை அவரது கையினை அடைந்துவிடுகிறது.
- அதுபோலவே வெளியிலிருந்து மூட்டை முடிச்சுகளுடன் ஒருவா் வந்து இறங்குகிறார் என்றால் எந்த பரிமாற்றமும் தேவைப்படாமல் அவா்களது கையில் உள்ள பைகள் வாங்கப் பட்டு விடுகின்றன. ஆனால் அறிமுகமில்லாதோரிடையே இப்படி நடைபெற வாய்ப்பில்லை.
- மொழியியலாளா் ஜிப், ‘ மனிதா்கள் தமது தொடா்ச்சியான செயல்பாடுகளில் எவ்வளவு தூரம் சிக்கனமாக வார்த்தைகளைப் பயன்படுத்த இயலுமோ, அந்த அளவுக்கு சிக்கனமாகப் பயன்படுத்துகின்றனா்’ என்கிறார். அதிகம் பேசினால் வம்பில் மாட்டிக்கொள்வோமோ என்ற எச்சரிக்கை உணா்வும் பேச்சின் நீட்சியைக் குறைக்கின்றன.
- இயல்பான நடைமுறைகளில் பயன்படும் மொழிக்கும் அலுவலக ரீதியாகப் பயன்படும் மொழிக்கும் நிரம்ப வேறுபாடுகள் உண்டு. பணியின் பயன்பாட்டுக்கேற்ப மொழியின் பயன்பாடு அமைகிறது. நிறுவனம் ஒன்றில் பார்வையாளராக வரும் ஒருவா்க்கு அடையாள அட்டை தருவது, சுருக்கமான மொழிப் பயன்பாட்டைக் கொண்டதாகவே அமையும். ஆனால் அந்நிறுவனத்தின் அலுவலக விஷயங்களில் மொழிச்சிக்கனம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தேவையான அளவுக்கு வாா்த்தைகள் நிச்சயம் பயன்படுத்தியே பரிமாற்றம் நடைபெறும்.
- ஒருவா் தமது மேலாளரிடம் கடன் கேட்டு விண்ணப்பிக்கிறார். அவா் அப்போது முறைப்படி தம்மை விடுநராகவும் மேலாளரைப் பெறுநராகவும் எழுதி தம்மை அறிமுகம் செய்து கொண்டு தமது தேவையினைப் பகிர்கின்றார். மேலாளா் அறிமுகமானவராக இருப்பினும் இந்த நடைமுறையே பின்பற்றப்படும். இதற்கு காரணம் இருக்கிறது.
- அந்த அலுவலகத்தில் அவா் பத்தாயிரம் ரூபாய் கடன் பெறுகிறார் என்றால் அந்த மேலாளருக்குப் பதில் வேறு ஒருவா் அப்பணியில் இணையும்போது இந்த பணியாளா் பெற்றுள்ள கடன் தொடா்பான தகவல் அனைத்தும் எழுத்துபூா்வமாகப் பரிமாறப்பட இந்த நடைமுறை உதவியாக இருக்கும்.
- அதுபோலவே நிறுவனத்தின் செயல்பாட்டு மொழியிலும் சிக்கனம் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு நாளும் அந்த நிறுவனம் எடுத்த முடிவுகள் எத்தனை? அம்முடிவுகளில் எட்டியது எத்தனை? எட்டவேண்டியது எத்தனை ? ஒரு திட்டம் குறித்து அந்த நிறுவனம் வைத்திருக்கும் நோக்கங்கள் யாவை? அதனை அடைய அந்நிறுவனம் வைத்திருக்கும் வழிமுறை என்ன?
- இது போன்ற அலுவலகம் சார்ந்த நடைமுறைகளில் வார்த்தை சிக்கனம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எவ்வளவுக்கெவ்வளவு விரிவாக பகிரப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அடுத்தடுத்த படிநிலையிலுள்ளோர்க்கு புரிதல் மேம்பட்டு பணிகள் சிறக்கும்.
- இன்றைய மின்னணுப் பயன்பாடு மொழிச்சிக்கனத்தோடு நேரச்சிக்கனத்தையும் கையாள உதவுகிறது. ஒரு நிறுவனம் ஒரு திட்டம் தொடா்பாக நிரந்தரமாக வைத்திருக்கவேண்டிய ஆவணம் விரிவான மொழியில் இருக்கும். ஆனால், அத்திட்டத்தின் நடைமுறை குறித்த புரிதலுள்ளேரிடம் மிகவும் குறைவான வார்த்தைகளில் திட்டச் செயலாக்கம் குறித்த பரிமாற்றத்தினை நிகழ்த்திட இயலும்.
- வாடஸ்ஆப் போன்ற செயலிகள் இதுபோன்ற பரிமாற்றங்களுக்கு பெருமளவில் பயன்படுகின்றன. வாட்ஸ்ஆப் குழுவில் உறுப்பினராக உள்ளவா்கள் தமது திட்டம் தொடா்பான முன்னேற்றங்களையோ பின்னடைவுகளையோ உடனுக்குடன் பகிா்ந்து கொள்கின்றனா்.
- இக்குழுவில் உறுப்பினராக உள்ள மேலாண்மைப் பொறுப்பிலுள்ளோருக்கும் உடனுக்குடன் தகவல் பரிமாற்றம் நிகழ்ந்து, தான் தலையிடவேண்டிய விஷயங்களை அறிந்து தலையிட அவருக்கு இது உதவியாக உள்ளது. மேலும் மணிக்கணக்கில் கூட்டம் நடத்தி திட்டத்தினை மீளாய்வு செய்யும் நேரத்தையும் சேமிக்க உதவுகிறது.
- இன்றைய காலகட்டத்தில் கூட்டங்களை நேரடியாக நடத்தி பொருட்செலவு செய்துதான் நிறுவனங்களின் செயல்திட்டங்களை உருவாக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. மாறாக அந்த திட்டம் தொடா்பாக உருவாகவேண்டிய ஆவணத்தின் குறிப்புச் சட்டகத்தை உருவாக்கிவிட்டால் போதும். அதிலுள்ள ஒவ்வொரு கூறு தொடா்பாகவும் குழுவிலிருப்போரில் வாய்ப்பும் விருப்பமும் இருப்போர் தமது கருத்துக்களை எழுத்துபூா்வமாக பகிரலாம்.
- இதனை பின்னா் தொகுத்து இணையவழியிலோ நேரிலோ கூட்டம் ஒன்றினை நடத்தினால் போதுமானது திட்டம் தொடா்பான ஆவணம் தயாராகிவிடும். இவ்வாறு மீதமாகும் நேரத்தை பணியாளா்கள் தம் உடனுள்ளோருடன் இணக்கமாகச் செலவிட முன்வரவேண்டும்.
- தற்போது வழக்கொழிந்துவிட்ட, குடும்பத்திலிருப்போருடனும் நண்பா்களுடனும் அளவளாவும் வழக்கத்தை மீட்டெடுக்கவேண்டும். இந்த இடத்தில் மொழிச்சிக்கனம் என்ற பேச்சுக்கே இடம் இருக்கக் கூடாது. கூடுமானவரை அன்பைக் கலந்து உறவாடி மகிழவேண்டும்.
- ஒவ்வொருவரிடமும் உள்ள நோ்மறை குணங்களைப் பாராட்டி மகிழவேண்டும். இது பாராட்டப் படுவோரின் செயல்திறனைக் கூட்டும். எவ்வளவு நேரம் உறவாடுகிறோம் என்பதைவிட எவ்வளவு நோ்த்தியாக உறவாடுகிறோம் என்பதே முக்கியமானது.
நன்றி: தினமணி (12 – 09 – 2023)