TNPSC Thervupettagam

பணியிடப் பாலினப் பாகுபாட்டைக் களையும் தீர்ப்பு

February 29 , 2024 145 days 229 0
  • திருமணம் செய்துகொண்டதற்காகப் பெண் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்பதை உச்ச நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பு உறுதி செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ராணுவச் செவிலிச் சேவைகள் பிரிவில் லெஃப்டினென்ட் அந்தஸ்து கொண்ட அதிகாரியாக செகந்திராபாத் ராணுவ மருத்துவமனையில் நிரந்தரப் பணியாற்றிவந்த செலினா ஜான், திருமணம் செய்துகொண்டதால் 1988இல் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
  • ராணுவச் சேவைகளில் பணியாற்றும் பெண்கள் திருமணம் செய்துகொண்டால், அவர்களைப் பணியிலிருந்து நீக்கலாம்’ என்று 1977இல் சேர்க்கப்பட்ட விதி, 1995இல் நீக்கப்பட்டது. பணிநீக்கத்தை எதிர்த்து செலினா தொடர்ந்திருந்த வழக்கில், ஆயுதம் ஏந்திய படைகள் தீர்ப்பாயத்தின் லக்னோ அமர்வு, அவர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட வேண்டும் என்று 2016இல் உத்தரவிட்டது.
  • இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் பிப்ரவரி 14 அன்று தீர்ப்பளித்த நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு, தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டுள்ளது.
  • செலினா ஜானுக்கு எட்டு வாரங்களுக்குள் இதுவரையிலான சம்பள நிலுவை மற்றும் இறுதி இழப்பீட்டுத் தொகையாக ரூ.60 லட்சம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவைப் பிறப்பித்த நீதிபதிகள் “ஒரு பெண் திருமணம் செய்துகொண்டார் என்பதற்காக அவரை வேலையை விட்டு நீக்குவது மோசமான பாலினப் பாகுபாடும் சமத்துவ மறுப்பும் ஆகும். இது போன்ற ஆணாதிக்க மனநிலை சார்ந்த விதிகளை ஏற்றுக்கொள்வது தனிமனித கண்ணியம், பாகுபாடின்றி நியாயமாக நடத்தப்படுவதற்கான உரிமை ஆகியவற்றை மீறுவதாகும்” என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • 1992இல் இந்திய ராணுவம் பெண் அதிகாரிகளை நியமிக்கத் தொடங்கியது. அதற்கு முன்புவரை ராணுவத்தின் மருத்துவம் சார்ந்த பணிகளில் மட்டுமே பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ராணுவ அதிகாரிகளாகச் சேர்க்கப்பட்ட பெண்கள் 10 ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற முடியும் என்கிற நிலை இருந்துவந்தது.
  • இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளில் 2020, 2021இல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள்தான் ராணுவத்தில் பெண்கள் நிரந்தரப் பணியைப் பெற வழிவகுத்தன.
  • ராணுவம் அல்லாத பிற பணிகளிலும் பெண்கள் பணிவாய்ப்புகளைப் பெறுவதும் பணிவாழ்க்கையில் முன்னேறிச் செல்வதும் சவாலானதாகவே உள்ளது. பணிகளுக்கான நேர்முகத்தின்போதே திருமணம், மகப்பேறு போன்றவை சார்ந்த அவர்களின் ‘எதிர்காலத் திட்டங்கள்’ குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டு, அதனடிப்படையில் பணி வழங்கப்படுகிறது.
  • பதவி உயர்வு, வெளிநாட்டுக்குச் செல்வது போன்ற வாய்ப்புகளைப் பெறுவதிலும் பெண்களின் குடும்ப வாழ்க்கை சார்ந்த முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தேசியப் புள்ளியியல் அலுவலகம் நடத்தும் தொழிலாளர் கணக்கீட்டுத் தரவுகளின்படி, 2023இல் இந்தியாவின் தொழிற்படையில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு 37%; இது முந்தைய ஆண்டைவிட 4.2% அதிகம் எனக் கடந்த அக்டோபரில் மத்திய அரசு அறிவித்தது.
  • பெண் குழந்தைகளுக்காகவும் பெண்களுக்காகவும் மத்திய அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கல்வி கற்பதற்கும் பணி வாய்ப்புகளைப் பெறுவதற்கும் பெண்களுக்கு உள்ள சமூக, கலாச்சாரத் தடைகள் தகர்க்கப்பட்டால் மட்டுமே அரசின் திட்டங்கள் முழுமையாகப் பயனளிக்கும்.
  • அதோடு, திருமணம் உள்ளிட்ட தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த முடிவுகளுக்காகப் பெண்களுக்குப் பணிவாய்ப்புகளை மறுப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்னும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைத்து நிறுவனங்களும் உணர்ந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நன்றி: தி இந்து (29 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories