TNPSC Thervupettagam

பதக்க நம்பிக்கை அளிக்கும் டாப் 10 இந்திய வீரர்கள்

July 8 , 2024 145 days 355 0
  • 2024-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்தியாவுக்காக பதக்கங்கள் வென்று தரும் வாய்ப்புள்ள டாப் 10 வீரர்கள் யார் என்பதைப் பார்ப்போம்.

ஈட்டி எறிதல் - நீரஜ் சோப்ரா:

  • கடந்த டோக்கியோ ஒலிம்பிக் (2020) போட்டிகளில் தங்கம் வென்று இந்தியாவை நோக்கி உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நீரஜ் சோப்ரா இந்த முறையும் தங்கம் வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்படி வென்றால் தடகள பிரிவில் அடுத்தடுத்து 2 தங்கம் வென்ற ஒரே இந்திய வீரர் என்று முன்னோடியாகத் திகழ்வார்.
  • நீரஜ் சோப்ரா தங்கம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது. கடைசியாக பின்லாந்தில் அவர் கலந்து கொண்ட தொடரில் 85.97 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றார் என்பதே அதற்கு காரணம். கடந்த முறை ஒலிம்பிக்கில் 87.58 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார் நீரஜ். வேர்ல்ட் சாம்பியன்ஷிப்பில் 88.77 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்று அசத்தினார். அபினவ் பிந்த்ராவுக்கு பிறகு இந்தியாவுக்காக தனிநபர் தங்கப்பதக்கம் வென்று தந்தவர் நீரஜ். ஆகவே நீரஜ் சோப்ரா மீது இந்த முறையும் பெரிய கவனக்குவிப்பு விழுந்துள்ளது.

பாட்மிண்டன் - பி.வி.சிந்து:

  • உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு வெளியிட்ட இறுதி ‘பாரிஸ் தரவரிசைப் பட்டியல்களில்’ இடம்பெற்ற பிறகு, பி.வி.சிந்து இந்த ஆண்டு இறுதியில் பாரிஸில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் மூன்றாவது முறையாக தொடர்ச்சியாகத் தகுதி பெற்றுள்ளார். மே 1, 2023 முதல் ஏப்ரல் 30, 2024 வரை ஒவ்வொரு ஷட்லருக்கும் 10 சிறந்த முடிவுகளின் தரவரிசைப் புள்ளிகளின் அடிப்படையில் ‘பாரிஸ் தரவரிசைப் பட்டியல்கள்’ அமைகின்றன.
  • பெண்கள் ஒற்றையர் பிரிவில் பாரிஸுக்கு தானாகத் தகுதி பெற்ற முதல் 16 வீராங்கனைகளில் சிந்து 12-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் சீனாவின் ஹீ பிங் ஜியாவோவை 21-13, 21-15 என்ற செட்களில் தோற்கடித்து வெண்கலப் பதக்கம் வென்றார் சிந்து.

மல்யுத்தம் - வினேஷ் போகத்:

  • மாட்ரிட்டில் நடந்த கிராண்ட் பிரிக்ஸ் ஆஃப் ஸ்பெயின் 2024-ல் பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவில் வினேஷ் போகத் சமீபத்தில் வெற்றி பெற்றார். பெங்களூருவில் பயிற்சி மேற்கொண்டார். ஜூன் மாதம் நடந்த புடாபெஸ்ட் தரவரிசை தொடரில் அவர் கடைசியாக விளையாடினார்.
  • அங்கு அவர் 50 கிலோ காலிறுதியில் சீனாவின் ஜியாங் சூவிடம் 5-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தம் மகளிர் 50 கிலோ எடைப்பிரிவில் இந்த முறை இந்தியாவுக்காக பதக்கம் ஒன்றை வெல்வார் என்று இவர் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது.

குத்துச்சண்டை - நிகத் ஜரீன்:

  • நிகத் ஜரீன் ஏற்கெனவே இருமுறை உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்றவர். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் அவருக்கு முதல் ஒலிம்பிக் தொடர் ஆகும். கடைசியாக கடந்த மே மாதம் லோர்தா கோப்பையில் விளையாடி முதலிடம் பெற்றார். தற்போது இவரும் இவருடன் 5 குத்துச்சண்டை வீராங்கனைகளும் ஜெர்மனியில் பயிற்சி பெற்று வருகின்றனர். ஜூலை 22-ம் தேதி வரை நிகத் ஜரீன் ஜெர்மனியில் இருப்பார், பிறகு பாரிஸ் புறப்படுவார்.

பளுதூக்குதல் - மீராபாய் சானு:

  • இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். உலகக் கோப்பையில் பெண்களுக்கான 49 கிலோ குரூப்-பி பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்ததன் மூலம் 2024 பாரிஸ் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றார்.
  • மீராபாய் சானுவின் சிறப்பான ஆட்டத்தால் டோக்கியோ ஒலிம்பிக்கில் 49 கிலோ பளு தூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது. மணிப்பூரைச் சேர்ந்த 26 வயதான அவர், மொத்தம் 202 கிலோ எடையைத் தூக்கி, 210 கிலோ எடையுடன் தங்கம் வென்ற சீனாவின் ஹூ ஷிஹூயிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச் சுடுதல் - சிஃப்த் கவுர் சம்ரா:

  • ஆசியப் போட்டிகளில் தங்கம் வென்றவர் சிஃப்த் கவுர் சம்ரா. நான்கு கட்ட ஒலிம்பிக் தேர்வு சோதனைகளில் சிறப்பாக விளையாடிய பிறகு பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் தகுதி பெற்றார்.
  • கடந்த மாதம் முனிச் உலகக் கோப்பையில் அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றார். சீனாவின் ஹான் ஜியாயுவிடம் 0.1 புள்ளிகள் வித்தியாசத்தில் வெள்ளியை துரதிர்ஷ்டவசமாக இழந்தார்.

குத்துச்சண்டை - லோவ்லினா போர்கோஹைன்:

  • ஹாங்சோவில் நடைபெற்ற பெண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவில் லோவ்லினா போர்கோஹைன் இறுதிக்கு முன்னேறிய வகையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் தகுதி பெற்றார். அரையிறுதியில் 5-0 என்ற கணக்கில் தாய்லாந்தின் மனீகோன் பைசனை வீழ்த்தியது இவர் மீதான பதக்க நம்பிக்கைகளைக் கூட்டியுள்ளது.

பாட்மிண்டன் - சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி இணையர்:

  • சிங்கப்பூர் ஓபன் போட்டியில் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி மற்றும் ஷிராக் ஷெட்டி முதல் சுற்றில் தோல்வியடைந்த பிறகு வேறு போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதனால் தரவரிசையில் சரிவு ஏற்பட்டு 3-ம் இடத்துக்கு பின்னடைவு கண்டனர். கடந்த ஒலிம்பிக் போட்டியில் குரூப் போட்டிகள் மூன்றில் 2-ல் வெற்றி பெற்று காலிறுதி வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டனர். ஆனால், இந்த முறை பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக கடினமாகத் தயாராகியுள்ளனர். சர்வீஸில் புதிய வகைகளை பயிற்சி செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோல்ஃப் - அதிதி அசோக்:

  • ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் அதிதி மூன்றாவது முறையாக பங்கேற்கிறார். இந்த சீசனில் அவர் சிறந்த ஃபார்மில் இல்லை. டாப்-10 இடத்தைப் பெறத்தவறினார். டோக்கியோவில் ஆடிய அதே உத்வேகத்துடன் ஆடி இந்த முறை பதக்கத்தை வெல்ல ஒரு படி மேலே செல்வார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய ஆடவர் ஹாக்கி அணி:

  • ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆடவர் ஹாக்கி அணி தங்கப் பதக்கம் வென்று பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றது. குரூப் பிரிவில் 5 வெற்றிகள் பெற்று அசத்தி, தங்கப் பதக்கப் போட்டியில், ஜப்பான் மீது ஆதிக்கம் செலுத்திய இந்தியா, 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பெற்று, பாரிஸ் ஒலிம்பிக்கில் நேரடி தகுதி பெற்றது.
  • டோக்கியோ ஒலிம்பிக்கில் பரபரப்பாக நடைபெற்ற வெண்கலப் பதக்கப் போட்டியில் ஜெர்மனியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 41 ஆண்டுகளில் முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்று சாதித்தனர். இன்று வரை 12 ஒலிம்பிக் பதக்கங்களை ஹாக்கியில் மட்டும் வென்று சிறந்த அணிக்கான பெருமையைத் தக்க வைத்து வருகிறது.

பாரிஸ் ஒலிம்பிக்:

  • ஜூலை 26-ல் தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள், ஆகஸ்ட் 11-ம் தேதி முடிவடையும். இதில், 16 விளையாட்டுகளில் சுமார் 112 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள். கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் அடங்கிய ஏழு பதக்கங்களை இந்தியா வென்ற நிலையில், இம்முறை அதைவிட கூடுதல் பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (08 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories