TNPSC Thervupettagam

பதின்பருவத்தின் சமகாலச் சிக்கல்கள்

February 2 , 2024 169 days 240 0
  • ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை பெற்றோர் எதிர்கொள்ளும் சிக்கல்களில் புதிதாக ஒன்றோ இரண்டோ கூடிக்கொண்டே இருக்கும். அது தொழில் நுட்ப வளர்ச்சியால் இருக்கலாம், சமூகச் சீர்கேட்டின் விளைவாக இருக்கலாம். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு சிக்கல்கள் முளைத்திருக்கின்றன.
  • முன்னெப்போதும் இல்லாத அளவு பெற்றோர்களைச் சந்திக்க வேண்டிய சூழல் ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாகப் பதின்பருவ மாணவர்களின் பெற்றோர்கள் பல்வேறு காரணங்களுக்காக ஆசிரியர்களைச் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.

சிறைப்படுத்தும் திறன்பேசிகள்

  • பெரும்பாலான பெற்றோர்கள் தாங்கள் மகிழ்ச்சியோடு இருப்பதாக வெளியுலகுக்குக் காட்டிக்கொண்டாலும், மனரீதியாகப் பெரும் அச்சத்திலும் குழப்பத்திலும்தான் இருக்கிறார்கள். தங்கள் குழந்தைகளின் கல்வியைப் பற்றி மட்டுமல்லாமல், அவர்களின் நடத்தை குறித்த பெரும் கவலைகளோடும் ஆசிரியர்களை அணுகுகிறார்கள்.
  • அவற்றுள் முதன்மையானது திறன்பேசிப் பயன்பாடுதான். “என் மகன்/மகள் எந்நேரமும் செல்போனில் மூழ்கியுள்ளனர். என்ன பார்க்கிறாய் என்று கேட்டால், வீட்டுப் பாடங்கள் குறித்து நண்பர்களிடம் சந்தேகம் கேட்பதாகச் சொல்கிறார்கள். அடுத்த நாள் வேறு காரணம் சொல்வார்கள்.
  • அவர்கள் சொல்லும் தொனியே அது உண்மையில்லை என்று உணர்த்திவிடுகிறது. எந்நேரமும் செல்போனுடன் இருப்பதையே விரும்புகிறார்கள். இன்னும் உடைத்துச்சொன்னால் செல்போனுக்கு அடிமையாகிவிட்டார்கள்” என்று சொல்லும் பெற்றோர்கள் அதிகரித்திருக்கிறார்கள். திறன்பேசியில் அப்படி என்னதான் பார்க்கிறார்கள்? ரீல்ஸ், இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக், வன்முறைக் காட்சிகள் நிறைந்த திரைப்படங்கள், துணுக்குகள் எனச் சமூக வலைதளங்களில் தங்களை முழுமையாகக் கரைத்துக்கொள்கிறார்கள்.

அதிரவைக்கும் உண்மைகள்

  • சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் 400க்கும் அதிகமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு கலந்துகொண்டனர். மிக வெளிப்படையான ஓர் உரையாடலைத் தொடங்கினோம். திறன்பேசியைப் பயன்படுத்துவது ஒன்றும் குற்றமில்லை. ஆனால், அதை எதற்கெல்லாம் பயன்படுத்துகிறோம் என்பதே நமக்கான சவால். இதுபற்றிய விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் பெற்றோர், பள்ளி-கல்லூரி நிர்வாகம், மாணவர்கள் என அனைவருக்குமே தேவை என்பதாகப் பேச்சு தொடங்கியது.
  • பெற்றோர்களுக்கு நிறையப் புகார்கள் இருந்தன. செல்போனைக் கொடுக்காவிட்டால் பெற்றோரின் கையை முறுக்கி, அறைக்குள் அடைத்துவிட்டு செல்போனை எடுத்துச்செல்வதாக ஒரு தாய் கூறினார். இந்த முரட்டுத்தனம் எங்கிருந்து வந்தது என அவருக்கு அதிர்ச்சி.
  • உரையாடலின் ஒருகட்டத்தில், இங்குள்ள மாணவர்களில் எத்தனை பேர் இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் இருக்கிறீர்கள் எனக் கேட்கப்பட்டபோது, மாணவர்களில் 90% பேர் கைகளை உயர்த்தினர். அதுவும் பெற்றோரின் திறன்பேசி வழியேதான் சமூக ஊடகங்களை மாணவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். ‘நம் பிள்ளைகள் அதில் எல்லாம் இருக்க மாட்டார்கள்’ என நினைத்த பெற்றோர்களுக்குக் கடும் அதிர்ச்சி.

பதின்பருவ மனது

  • மாணவர்கள், பெற்றோர்களிடத்திலே காட்டுகின்ற முகம் வேறு. பள்ளியிலும் சமூகத்திலும் காட்டுகின்ற முகம் வேறு. பதின்பருவத்துக் குழந்தைகளாக இருப்பதால், பல்வேறு முகங்கள் இருக்கத்தான் செய்யும். அதைப் புரிந்துகொள்ள ஒளிவுமறைவற்ற உரையாடலே அவசியம். ஏனெனில், மாணவர்கள் தங்கள் அதீதத் திறன்பேசி பயன்பாடுகள் குறித்த உண்மைகளை நம்மிடம் மறைப்பதில்லை. திறந்த மனதோடு உரையாடினால், தங்கள் பிரச்சினைகளை அவர்கள் முன்வைக்கத் தயங்க மாட்டார்கள்.
  • ஆனால், பல வீடுகளில் தங்களுடைய பேச்சைக் கேட்காத குழந்தைகளைத் திட்டுவது, அடிப்பது, வீட்டைவிட்டு வெளியேறச் சொல்வது போன்ற வன்முறைகள் நிகழ்கின்றன. பதின்பருவத்துக்கு முன்னும் பின்னும் குழந்தைகளின் போக்கில் ஏற்படும் மாற்றங்களை, அறிவியல் மனப்பான்மையுடன் ஆராய்ந்தால் குழந்தைகள் தரப்புத் தவறுகளைவிட, பெற்றோர்களிடம் இருக்கின்ற குறைகளே அதிகம்.

சிக்கலின் வேர்

  • குழந்தைகள் எட்டாம் வகுப்பு வரை அல்லது பதின்பருவத்தை எட்டுகிறவரை எந்த மாதிரி வளர்ப்பு முறையில் இருக்கிறார்கள் என்று உற்றுநோக்கினால், இந்தப் பிரச்சினைகளின் வேரைப் புரிந்துகொள்ள முடியும். குழந்தைப் பருவத்தில் குடும்பத்தினர் அனைவரும் அளவுக்கு அதிகமாகவே அன்பைச் செலுத்துகின்றனர்.
  • அன்பின் பெயரால், குழந்தை எதைக் கேட்டாலும் செய்து தருகிறார்கள். வாங்கிக் கொடுக்கிறார்கள். ஒருகட்டத்தில் ஏதோ ஒன்றை வாங்கிக் கொடுக்க முடியாதபோது குழந்தைகளால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை; தடுமாறுகிறார்கள்.
  • பெற்றோர்கள் தங்கள் வேலை தடைபடாமல் இருக்க, திறன்பேசி எனும் குட்டிச்சாத்தானிடம் குழந்தைகளை இரவல் தருகிறார்கள். குழந்தைகள், தொடக்கத்தில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளைத்தான் பார்க்கிறார்கள். அவர்களுடைய வயது, உடல் வளர்ச்சிக்கு ஏற்ப மனமும் மாறுகிறது. பிறகு உடலும் மனமும் எதையெல்லாம் விரும்புகிறதோ அதையெல்லாம் பார்க்கிறார்கள். நல்லவை, தீயவை என இரண்டையும் கற்றுக்கொள்கிறார்கள்.

பொய்யுலகில் குழந்தைகள்

  • ஒரு கட்டத்தில் வீடு, குடும்பம், உறவு, நேரில் பார்க்கும் நண்பர்கள் உள்ளிட்டவர்களிடம் இருந்து குழந்தைகள் வெகு தூரம் விலகிச் செல்கின்றனர். திறன்பேசி ஒன்றே அவர்கள் உலகமாகிப்போகிறது. இது பெற்றோர்களுக்குத் தெரிய வருகிறபோது வீடு அமைதியிழக்கிறது. சண்டை நடக்கிறது. சில வீடுகளில் வன்முறையும் நிகழ்கிறது. தங்களை அன்பாக வளர்த்த பெற்றோர்களையே ஒரு திறன்பேசிக்காகக் குழந்தைகள் அடிக்க முற்படுவதையும் பார்க்க முடிகிறது.
  • அப்போதுதான், குழந்தைகளைத் திறன்பேசியிடம் கொடுத்ததை நினைத்துப் பெற்றோர்கள் வருந்துகிறார்கள். பதின்பருவத்துக் குழந்தைகள் மனநல மருத்துவர்களைச் சந்திக்கச்செல்வது அதிகரித்திருப்பதாக எனது மருத்துவ நண்பர் ஒருவர் சொன்னது அதிர்ச்சியளித்தது. பல்வேறு குழந்தைகள் நல மருத்துவர்கள், மனநல நிபுணர்கள், உளவியல் அறிஞர்கள் தொடர்ந்து இதைப் பற்றிப் பேசியும் எழுதியும் போதிய விழிப்புணர்வு இல்லை.

பாதை மாற்றும் போதை

  • மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரித்துவருவது பெற்றோர் எதிர்கொள்ளும் இன்னொரு வேதனை. குழந்தைகளின் வாழ்க்கையையே முடக்கும் இந்த ஆபத்தான பழக்கத்திலிருந்து பிள்ளைகளை மீட்கும் வழி தெரியாமல் பெற்றோர்கள் புலம்புகின்றனர். அரசும் பல்வேறு நடவடிக்கைகளைக் காவல் துறை மூலமாக எடுத்துவருகிறது. ஆயினும் இந்தப் போதைப் பழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. இது மிகப்பெரிய சமூகத் தீங்கு.

என்னதான் தீர்வு?

  • நமது பிள்ளைகளுக்குச் சவால்களைச் சந்திக்கத் தெரியவில்லை. நன்றாகப் படிப்பது என்பது நல்ல மதிப்பெண்களைப் பெறுவது மட்டுமே என்றாகிவிட்டது. கல்வி முறையிலேயே மிகப்பெரிய மாற்றம் தேவை. கலை, இலக்கியம், வாசிப்பு, இசை, நல்ல சினிமா, குடும்பம் உறவு, சமூக உறவு... இப்படி நல்ல விஷயங்களைக் குழந்தைகளுக்குப் பழக்கத் தவறிவிட்டோம்.
  • சிறு வயதிலேயே நல்ல வாசிப்புப் பழக்கத்துக்கு உட்படுத்தப்பட்டால் அந்தக் குழந்தைகளின் மனம் வேறு விதத்தில் சிந்திக்கத் தொடங்கும். அறிஞர்களின் உரையைக் கேட்க, நூலகத்துக்கு அழைத்துச் செல்ல, நல்ல நூல்களை அறிமுகப்படுத்த, இசை கேட்க, நல்ல ஓவியத்தை ரசிக்கக் குழந்தைகளைப் பழக்கப்படுத்த வேண்டும். இங்கு பள்ளியின் செயல்பாடும் முக்கியமானது. பெற்றோர்களின் பங்களிப்பு கூடுதல் பயனைத் தரும்.
  • கலை இலக்கியத்தின் பரிச்சயம் குழந்தைகளின் பார்வையை விசாலப்படுத்தும். திறன்பேசியில்கூட எதைத் தேடலாம், தேடக் கூடாது என்கிற புரிதலையும் தரும். பெற்றோர்களுக்கு எவற்றுக்கெல்லாம் சம்மதிக்க வேண்டும், எவற்றுக்கெல்லாம் மறுப்பு சொல்ல வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்.
  • குழந்தைப் பருவத்திலிருந்தே பொது வாழ்க்கைக்குப் பழக்குவதும், பொது இடங்களுக்கு அழைத்து செல்வதும் நம்முடைய கடமை. அறிவு வேட்கை கொண்ட, தன்னலமற்ற, மனிதாபிமானம் மிக்க, சாதி, மத, பாலின, வேறுபாடின்றிச் சமூகப் பொறுப்புணர்வுடன் சக மனிதனை நேசிக்கின்ற நல்ல குடிமக்களை உருவாக்குவதே ஒரு பள்ளிக்கூடத்தின் தலையாய கடமை.

வாசிப்பு எனும் மாமருந்து

  • அதற்கு முதற்படியாக வாசிப்பை எடுத்துக்கொள்வோம். ஒரு குழந்தை வாசிக்க வேண்டும் என்றால், முதலில் பெற்றோர் வாசிக்க வேண்டும். வாசிப்பு வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். பள்ளி அதை வளர்த்தெடுக்க வேண்டும். பெற்றோர்கள், அனைவரையும் சமமாக நடத்துவதன் மூலம் குழந்தைகளையும் சமூகம் நோக்கி நகர்த்த முடியும். பள்ளிக்கூடம் அனைத்துக் குழந்தைகளையும் சமமாக நடத்துவதன் மூலம் ஒரு புதிய சமூகத்தைச் சமைக்க முடியும்.

நன்றி: தி இந்து (02 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories