TNPSC Thervupettagam

பதிவுத் துறை மேம்பட என்ன வழி

July 28 , 2023 404 days 282 0
  • இந்தியாவில் பத்திரப் பதிவுத் துறையில் சிறந்த நடைமுறைகளைச் செயல்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் சொத்துச் சான்றிதழையோ ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களையோ பெறுவதற்குப் பொதுமக்கள் எந்தவொரு துணைப் பதிவாளர் அலுவலகத்துக்கும் செல்ல வேண்டியதில்லை. 1975 ஜனவரி 1 முதலான வில்லங்கச் சான்றிதழ்களை டிஜிட்டல் கையொப்பத்துடன் தமிழ்நாட்டில் பெற முடியும்.
  • இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட அதிக ஆண்டுகளுக்கு உரிய வில்லங்கச் சான்றிதழ் கிடைப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான். அதேபோல், 158 ஆண்டுகளுக்கு (1865 முதல்) முன்பு பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களையும் டிஜிட்டல் கையொப்பத்துடன் இணையவழியில் இங்கு பெற முடியும்.
  • மோசடியான சொத்துப் பரிவர்த்தனை, உரிமைப் பத்திர ஆவணங்கள் ஆகியவற்றை ரத்துசெய்ய மாவட்டப் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கிய முதல் மாநிலம் தமிழ்நாடுதான். மகாராஷ்டிரத்துக்குப் பிறகு குறிப்பிட்ட வகை ஆவணங்களை இணையவழியாகப் பதிவுசெய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்திய இரண்டாவது மாநிலமும் தமிழ்நாடுதான். பத்திரப் பதிவுத் துறையில் தமிழ்நாடு சிறப்பான பல அம்சங்களைக் கொண்டிருந்தாலும், இத்துறையில் மேம்படுத்த வேண்டிய பணிகள் இன்னும் அதிகம் உள்ளன.

குறைந்தது வருமானம்: 

  • பத்திரப் பதிவுத் துறை மூலம் மகாராஷ்டிரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஈட்டிய வருவாய் முறையே ரூ.16,000 கோடி, ரூ.10,000 கோடி ஆகும். அப்போது இந்த இரண்டு மாநிலங்கள்தான் ரூ.10,000 கோடியைத் தாண்டியிருந்த மாநிலங்கள். அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளில் மகாராஷ்டிரத்தின் வருவாய் ஆண்டுக்கு ரூ.36,000 கோடியாக உயர்ந்து விட்டது.
  • ஆனால், தமிழ்நாட்டின் வருவாய் ரூ.17,600 கோடி என்னும் அளவில்தான் உயர்ந்துள்ளது. தற்போது உத்தரப் பிரதேசத்தின் பத்திரப் பதிவுத் துறை வருமானம் தமிழ்நாட்டைத் தாண்டி விட்டது. கர்நாடகம், தெலங்கானா, குஜராத், ஹரியாணா போன்ற மாநிலங்களும் பதிவுத் துறையில் ரூ.10,000 கோடிக்கும் அதிகமாக மாநிலக் கருவூலத்துக்கு அனுப்புகின்றன.
  • மகாராஷ்டிரத்துடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் ஆண்டு வருமானம் அதிகரிக்காமல் இருப்பதற்கு முக்கியக் காரணம், சந்தை வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்படாததுதான். தமிழ்நாட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வழிகாட்டி மதிப்பு மாற்றியமைக்கப் படுகிறது. ஆனால், பல மாநிலங்கள் வழிகாட்டி மதிப்பை ஒவ்வோர் ஆண்டும் மாற்றியமைக்கின்றன.
  • இரண்டாவது, தமிழ்நாட்டில் வழிகாட்டி மதிப்பு என்பது சர்வே எண்கள், தெருக்களின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இதில் பெரும் சிக்கல் உள்ளது. ஒரே தெருவில் இருந்தாலும் குடியிருப்புச் சொத்துகள், வணிகச் சொத்துகள் இரண்டுக்கும் ஒரே மதிப்பாகக் கணக்கிடப்படுகிறது. ஆனால், வெவ்வேறு வழிகாட்டி மதிப்பு கணக்கிடப்பட வேண்டும்.

ஷிப்ட்முறை தேவை: 

  • ஆந்திரப் பிரதேசத்திலும் கேரளத்திலும் எந்தப் பதிவுத் துறை துணைப் பதிவாளர் அலுவலகத்திலும் ஆவணங்களைப் பதிவுசெய்ய முடியும். அதாவது, ஒரு மாவட்டத்தில் வாங்கப்படும் சொத்துகளை இன்னொரு மாவட்டத்தில் பதிவுசெய்ய முடியும். தமிழகமும் இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • தொழில்நுட்ப வளர்ச்சியைப் பதிவுத் துறையிலும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் எந்த ஒரு சொத்தின் ஜிபிஎஸ் விவரங்களும் (அட்சரேகை, தீர்க்கரேகை) ஆவணங்களில் குறிப்பிடப்படுகின்றன. தமிழ்நாட்டிலும் இதை நடைமுறைப்படுத்துவது பற்றி அரசு யோசிக்க வேண்டும்.
  • குஜராத், மத்தியப் பிரதேசம், பிஹார், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, உத்தராகண்ட் போன்ற மாநிலங்கள் விற்பனைப் பத்திரத்தின் கீழ் வாங்கப்பட்ட சொத்தின் ஒளிப்படங்கள் விற்பனைப் பத்திரத்தில் இணைக்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் இந்த நடைமுறை இல்லை.
  • தெலங்கானா, கர்நாடகம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பதிவுத் துறைக்கெனத் தனியாகச் செயலி உள்ளது. திறன்பேசிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள இந்தக் காலகட்டத்தில், தமிழ்நாட்டில் இதுபோன்ற செயலி அறிமுகப்படுத்தப்படவில்லை.
  • மகாராஷ்டிரத்தில் மும்பை, புணே, தானேயில், குறிப்பிட்ட சில துணைப் பதிவாளர் அலுவலகங்களில் காலை 7.30 மணி முதல் மதியம் 3.15 வரையும், மதியம் 1.15 மணி முதல் இரவு 8.45 வரையிலும் ஷிப்ட்டுகள் உள்ளன. வழக்கமான ஷிப்ட் காலை 9.45 முதல் மாலை 6.15 வரையும் உண்டு. தமிழகத்திலும் கூட்ட நெரிசல் உள்ள துணைப் பதிவாளர் அலுவலகங்களில் ஷிப்ட் முறையைப் பரிசீலிக்கலாம்.

வருவாய்த் துறை கவனிக்க

  • பத்திரப் பதிவுத் துறை மட்டுமல்ல, வருவாய், வீட்டு வசதி ஆகிய துறைகளும் முக்கியமான ஒரு மாற்றத்தை முன்னெடுக்கலாம். ஆந்திரம், தெலங்கானாவில் வழங்கப்படும் கணினி மயமாக்கப்பட்ட பட்டா பாஸ்புக்கில் உரிமையாளரின் ஒளிப்படம் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வழங்கப்பட்ட கணினிமயமாக்கப்பட்ட பட்டா, டி.எஸ்.எல்.ஆரில் சொத்து உரிமையாளரின் ஒளிப்படம் இடம்பெறும் நடைமுறையைத் தமிழ்நாடு வருவாய்த் துறையும் தொடங்க வேண்டும்.
  • இது போலி ஆவணங்களைக் குறைப்பதற்கும் உதவும். மேலும் குஜராத், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜமாபந்தி சான்றிதழில் (வருவாய்ப் பதிவேடு) எந்தவொரு சொத்தின் தனிப்பட்ட சொத்துக் குறியீடும் குறிப்பிடப்படுகிறது. அத்தகைய நடைமுறையை இங்கும் கொண்டு வரலாம்.

எளிய நடைமுறைகள்: 

  • வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை/ டிடிசிபியைப் பொறுத்தவரை, இந்தியாவிலேயே தெலங்கானா எளிமைப்படுத்தப்பட்ட கட்டிட அனுமதி விதிமுறைகளைக் கொண்டுள்ளது. விண்ணப்பதாரரின் சுய சான்றிதழின் அடிப்படையிலேயே (500 சதுர மீட்டர் நிலத்தில் 10 மீட்டர் உயரம் வரை) கட்டிடங்கள் கட்டப்படுவதற்கு அனுமதிக்கப்படுகின்றன. மேலும், தெலங்கானாவில் 675 சதுர அடி, 7 மீட்டர் உயரம் வரை கட்டப்படும் கட்டிடங்களுக்கு அதிகாரபூர்வக் கட்டணமாக ரூ.1 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதுபோன்ற எளிய நடைமுறைகளைத் தமிழ்நாட்டிலும் அமல்படுத்துவது பற்றி அரசு யோசிக்க வேண்டும்.
  • ஆந்திரத்திலும் தெலங்கானாவிலும் 1923 முதல் வழங்கப்பட்ட டிடிசிபி லேஅவுட் ஒப்புதல்கள் இணையவழி சரிபார்ப்புக்காகப் பொதுத் தளத்தில் (Public Domain) கிடைக்கின்றன. இதேபோல தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக வழங்கப்பட்ட டிடிசிபி அங்கீகரிக்கப்பட்ட லேஅவுட்கள் முழுமையாக ஸ்கேன் செய்யப்பட்டு, ஆன்லைனில் கிடைக்கச் செய்யப்பட வேண்டும்.
  • புவனேஸ்வர் மேம்பாட்டு ஆணையம், பல்வேறு சிறிய அளவிலான ஃபிளாட், சாலை அகலத்துக்கென மிகவும் தனித்துவமான 104 கட்டிடத் திட்டங்களை (approved plans) இணையத்தில் பதிவேற்றியுள்ளது, இதில் சில நிபந்தனைகளுக்கு உள்பட்டு ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட 104 கட்டிடத் திட்டத்தின்படி அங்கீகரிக்கப்பட்ட நிலத்தில் கட்டுமானத்தை மேற்கொள்வதற்கு முன் அனுமதி தேவையில்லை. அத்தகைய நடைமுறையையும்கூடத் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தலாம்.
  • இவற்றையெல்லாம் செய்யும்பட்சத்தில் தமிழ்நாடு பத்திரப் பதிவுத் துறை, வருவாய்த் துறை, வீட்டு வசதித் துறை - நகர்ப்புற மேம்பாட்டுத் துறை மேம்பட்ட சேவையைப் பொதுமக்களுக்கு வழங்க முடியும்.

நன்றி:இந்துதமிழ் திசை (28– 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories