- பார்த்தாலே பரவசப்படுத்தும் பனிப்பாறைக்குள் கொடிய வைரஸ், பாக்டீரியாக்கள் நூற்றாண்டுகளாக மறைந்து உள்ளன. புவிவெப்பமயமாதல் காரணமாக பனி உருகும்போது, இந்த வைரஸ் நோய் கிருமிகள் மனிதர்களை தாக்கும் அபாயம் உள்ளது.
- புவிவெப்பமயமாதலால் ஏற்படும் பருவநிலை மாற்றம் உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. தொழிற்சாலைகள், மோட்டார் வாகனங்கள், அணு மற்றும் அனல் மின் நிலையங்களில் இருந்து வெளிப்படும் 'கார்பன் டை ஆக்சைடு, 'கார்பன் மோனாக்சைடு', சல்பர்டை ஆக்சைடு' போன்றவாயுக்கள் 'ஓசோன்' படலத்தை பாதிப்பதால், பூமியின் வெப்பம் அதிகரிக்கிறது.
- பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தின்படி புவி வெப்ப அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்குக் குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால், புவி வெப்ப அதிகரிப்பு 3 டிகிரி செல்சியஸ் நோக்கி செல்வதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
புவி வெப்பமயமாதல்
- புவி வெப்பமயமாதல் தொடர்ந்தால், 2100ல் கடலின் நீர்மட்டம் 60 செ.மீ., என்ற அளவில் இருந்து 110 செ.மீ., வரை உயரும் அபாயம் உள்ளது. கடல் மட்டம் உயர்வதால் மணல் அரிப்பு ஏற்பட்டு நிலப்பகுதிகள் மூழ்கும். புவி வெப்பமடைவதால் வடதுருவம் மற்றும் தென்துருவத்தில் உள்ள ஆர்க்டிக், அன்டார்டிகா பகுதிகளில் படர்ந்துள்ள பனிப்பாறைகள்வேகமாக உருகுகின்றன.
- இதனால் கடல்வாழ் உயிரினங்கள் அழியக்கூடும். பென்குயின், பனிக்கரடிகளுக்கு பாதிப்பு ஏற்படும். கிரீன்லாந்தில் கடந்த ஆகஸ்ட்டில் வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 11 பில்லியன் டன் அளவுக்கு பனிப்படலங்கள் உருகின. ஐஸ்லாந்தில் ஒவ்வொரு ஆண்டும் 15 சதுரமைல் அளவுக்கு பனிப்பாறைகள் உருகுகின்றன.
- இந்த பனிப்பாறைகளுக்குள் நுாற்றாண்டுகள் முன், நோய் பாதிப்பால் மரணம் அடைந்த மனித, விலங்குகளின் உடல்கள் இன்னும் உள்ளன. இவற்றில் இருக்கும் வைரஸ் கிருமிகள் பனி உருகும் போது வெளிப்படலாம்.
75 ஆண்டுகளுக்கு முன்
- 'ஆந்த்ராக்ஸ்' தொற்று நோய் பாதிக்கப்பட்ட மான் ஒன்று சைபிரீயாவின் பனிப்பாறைகளில் சிக்கி இறந்தது. பின் 2016ல் அனல்காற்று வீச, பனி உருகியது. இறந்த மானின் உடலில் இருந்து 'ஆந்த்ராக்ஸ்' கிருமி அருகில் இருந்த நீர் நிலைகளில் கலந்தது. இதனை தொடர்ந்து 2,000 மான்கள் பாதிக்கப்பட்டன. அலாஸ்கா பனியில் புதைக்கப்பட்ட மனித உடலில் 'ஸ்பானிஷ் புளூ வைரஸ்' இருப்பது தெரியவந்தது.
- சைபிரீயாவில் பெரியம்மை, பிளேக் நோய் பாதிப்பில் இறந்தவர்கள் பனியில் புதைக்கப்பட்டனர். பனி உருகும் போது 18, 19ம் நுாற்றாண்டுகளில் புதைக்கப்பட்ட இது போன்ற உடல்களில் இருந்து நோய் கிருமிகள் வெளிப்படலாம்.
- இது, தற்போதைய மனித உயிருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனை உணர்ந்து புவிவெப்பமயமாதலை தடுக்க உறுதியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
கிரேட்டா சொன்னா கேட்டுக்கணும்
- பருவ நிலை மாற்றத்தின் பாதிப்புகளை வலியுறுத்தி ஓயாமல் போராடி வருகிறார் சுவீடன் சிறுமி கிரேட்டா தன்பர்க். வெள்ளிக்கிழமைகளில் பள்ளியைப் புறக்கணித்து, சுவீடன் பார்லிமென்ட் முன் போராட்டம் நடத்தினார். எதிர்காலத்துக்காக வெள்ளி' என்ற இயக்கத்தை தொடங்கினார்.
- இவரது ஆலோசனைப்படி வெள்ளிக்கிழமை அல்லது வாரத்தின் ஏதாவது ஒருநாளில் மோட்டார் வாகன பயன்பாட்டை குறைத்து, நடந்து செல்லலாம். பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தலாம். சைக்கிளில் பயணம் செய்யலாம். 'ஏசி', மின்சார பயன்பாட்டை குறைப்பது சுற்றுச்சூழலுக்கு நல்லது.
என்ன செய்யலாம் புவிவெப்பமயமாதலை தடுக்க...
- புதுப்பிக்க முடியாத நிலக்கரி உள்ளிட்ட எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்துவதை குறைத்தல்.
- தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் புகையை குறைக்க நடவடிக்கை எடுத்தல்.
- புதுப்பிக்கக்கூடிய சோலார் உள்ளிட்ட எரிசக்தி ஆதாரங்களை அதிகம் பயன்படுத்துதல்.
- மரங்களை பாதுகாத்தல், மரங்களை வளர்த்தல்.மக்கிப் போகாத பிளாஸ்டிக்கை தவிர்த்தல்.
- காடுகளை அழிவிலிருந்து காத்தல்.
- காற்று, ஒலி மாசு குறைத்தல்.
இமயம் தப்பாது
- இமயமலைக்கும் அச்சுறுத்தல் உள்ளது. இந்த பனிமலைகள் தான் கங்கை, சிந்து உள்ளிட்ட 10 நதிகளுக்கு ஆதாரமாக உள்ளன. 'கார்பன் டை ஆக்ஸைடு' உமிழ்வு நிறுத்தப்பட வில்லையெனில், இங்குள்ள பெரும்பாலான பனிமலைகள் உருகிவிடும். இது, நுாறு கோடிக்கும் அதிகமான மக்களின் குடிநீர், உணவு, சுத்தமான காற்று வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
- எனவே நம்மால் முடிந்ததை செய்வோம்.. நமக்காக மட்டுமல்ல, நம் எதிர்காலத்துக்காகவும்.
நன்றி: தினமணி(29-10-2019)