TNPSC Thervupettagam

பனைமலைக் கோயில் ஓவியம்: முரண்படும் கருத்துகள்

August 13 , 2023 519 days 375 0
  • ஒளிரும் பல்லவ ஓவியம்’ (இந்து தமிழ் திசை, 6.8.2023) என்கிற தலைப்பிலான சு.தியடோர் பாஸ்கரனின் கட்டுரை படித்தேன். பனைமலைக் கோயில் விமானத்தின் வடக்குச் சாலைத் திருமுன்னிலுள்ள உமை, ஆடவல்லான் ஓவியங்களைப் பற்றிய கட்டுரை இது. அதில் சில கருத்து முரண்பாடுகள் உள்ளன.
  • 1. ‘ஓவியச் செந்நூல்’ பற்றி ‘சிலப்பதிகாரம்’ குறிப்பிடுகிறது என்று கட்டுரையாசிரியர் எழுதியுள்ளார். ஓவியச் செந்நூல் பற்றிக் குறிப்பிடும் இலக்கியம் மணிமேகலை. ஊர் அலர் உரைத்த காதையின் 30-31ஆம் அடிகளே ஓவியச் செந்நூலைக் குறிக்கின்றன. ‘நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த/ஓவியச் செந்நூல் உரைநூல் கிடக்கையும்’
  • 2. நடராஜர் ஓவியத்தைக் குறிக்கும் 2ஆம் பத்தியில், ‘சிவபெருமான் ஆடலைச் சந்தியாபாணி என்பர் வல்லுநர்’ என்று கட்டுரையாசிரியர் குறிப்பிடுகிறார். சிவபெருமானின் இந்த ஆடல் தோற்றம் பரதரின் நாட்டிய சாத்திரம்
  • பேசும் 108 கரணங்களுள் ஒன்றான குஞ்சிதமாகும். (Venkata Narayanaswami Naidu, Srinivasulu Naidu and Venkata Rangayya Pantulu, Tandava Lakshanam, 1980, pp.34 and 130.) இராஜசிம்மப் பல்லவரின் கோயில்களில் இக்கரணம் பல அளவுகளில் கோயிலின் பல பகுதிகளில் இடம்பெற்றுள்ளது.
  • 3. ஓவியத்தில் காணப்பெறும், ‘பார்வதியின் தலையை மஞ்சள் நிற கிரீடமகுடம் அணிசெய்கிறது’ என்கிறார் கட்டுரையாளர். பொதுவாகப் பெண் தெய்வங்களின் தலையில் கரண்டமகுடம் காட்டுவதே மரபு. இந்த ஓவியத்தில் உமையின் தலை ‘கேசபந்தம்’ என்ற தலையலங்கார அமைப்பில் உள்ளது (வை.கணபதி ஸ்தபதி, சிற்பச்
  • செந்நூல், ப. 82-83). பல்லவ சோமாஸ்கந்தர் தொகுதிகளிலும், பல்லவர் கோயில்களிலுள்ள ஊர்த்துவ தாண்டவர் தொகுதிகளிலும் இடம்பெறும் உமையின் சிற்பங்கள், இக்கேசபந்த அமைப்பையே பெற்றுள்ளன. இத்தலை அலங்காரத்தில் சடைத்திரள்கள் ஆங்காங்கே முடியப்பெற்று அடுக்குகளாய்க் கூம்பி உயரும். கிரீடமகுடம் முழுவதுமாகத் தலையை மறைப்பது. அதில் சடைத்திரள் தொகுப்புகள் இரா.
  • 4. கட்டுரையின் இறுதியில் ‘மாமல்லபுரம் தருமராஜ ரதம், எல்லோரா கைலாசர் குடைவரை, காஞ்சி கயிலாசநாதர் கோயில், கழுகுமலை வெட்டுவான் கோயில் ஆகிய எல்லாவற்றிலும் உள்ள ஒற்றுமையைப் பாருங்கள். விமானங்கள் ஒரே மாதிரி உள்ளன’ என்கிறார் ஆசிரியர். கீழிருந்து மேலான இறையகத்தின் முழுமையைச் சுட்டும் கலைச் சொல் விமானம். (‘The Shrine from upana to stupi - base to final is vimana’ K.R.Srinivasan, Cave Temples of the Pallavas, p. 189.) கட்டுரையில் குறிப்பிட்டுள்ள நான்கு கோயில்களுமே மாறுபட்ட விமான அமைப்பைக் கொண்டவை. மாமல்லபுரம் தருமராஜ ரதம் மூன்று தளங்களிலும் இறையகம் கொண்ட மாடிக்கோயில். எல்லோரா கயிலாசநாதர், குடைவரையன்று. அது முத்தள ஒருகல் தளி. காஞ்சிபுரம் கயிலாசநாதர், கருவறைச் சுவர்களுக்கு இடையில் உள்சுற்றுப் பெற்ற நாற்றளக் கலப்புத் திராவிட விமானம். விமானப் பத்திகள் முன்னிழுக்கப்பட்டு, ஏழு துணை விமானங்களாக இறையகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட புதுமைக் கட்டுமானம். இவ்வமைப்பை அங்காலயம் என்பர். கழுகுமலை வெட்டுவான் கோயில் நிறைவுறாத ஒருகல் தளி. சிகரம், கிரீவம், இரண்டாம் தளம், கீழ்த்தள ஆரம் மட்டுமே உருவான இவ்விமானம் இப்போதிருக்கும் நிலையில் இருதளக் கலப்புத் திராவிடமாக அறியப்படும்.
  • ஆசிரியர் குறிப்பிடும் நான்கில் ஒன்று மாடிக் கோயில். ஒன்று நிறைவுறாத விமானம். காஞ்சி கயிலாச நாதர் ஏழு துணை விமானங்கள், முதன்மை விமானத்துடன் இணையப் பெற்ற பெருங் கற்றளி. எல்லோரா கயிலாச நாதர் இவற்றினின்றும் மாறுபட்ட முத்தள ஒருகல் தளி. இந்நான்கிலும் உள்ள ஒரே ஒற்றுமை இவற்றின் திராவிடச் சிகர அமைப்புதான். எண்முகம் பெற்ற இச்சிகரமும் நான்கு விமானங்களிலும் மாறுபட்ட அழகூட்டல்களைப் பெற்றுள்ளது.
  • எனவே, இந்தியாவில் சிகரம் தொட்ட கோயில் கலையின் அடிப்படைகளை நன்கு தெளிந்து மக்களிடையே பகிர்வதே சிறப்பாகும்.

நன்றி: தி இந்து (13 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories